ஊர்வசி

தேவர் சபையினில் கச்சைச் சிலம்பொலி
தாளம் பயின்றிடக் கானம் இழந்திட
பாவம் துலங்கிடும் பண்ணிசை பொங்கிடும்
பாடலுக் கேற்பநின் றாடிடும் ஊர்வசீ!

ஆடிடும் அலைபோல் அற்புத மாகநீ
ஆனந்த நாட்டியம் இட்டிடும் போதினில்
ஓடிடும் வானத்தில் உற்கைகள் பற்பல
உன்னொளிர் மேனியின் கண் ணிருந்து,

தன்னை மறந்துநீ கானப் பெருக்கினில்
தாளத் துடிப்புடன் நீந்திட, ஊர்வசி!
செந்நெற் கதிர்முடி மீதினிலே உந்தன்
சேலையி னோரம் உராய்ந்து விடும்

மோதும் அலைகடல் கீதம் நுகர்ந்திட்டே
முத்துப் படுக்கையில் உற்றனையோ முன்னர்!
பேதை பெதும்பையள் என்றுமிந் நாமங்கள்
பெற்றிலையோ? எரில் பொங்கிடும் ஊர்வசி!

மீட்டிய உள்ளத்து யாழதன் நாதத்தில்
மென்குரல் கூட்டிக் கவிஞன் இசைத்திட
மெட்டி ஒலித்திட மேனி நெளிந்திட
மின்னலைப் போலேனோ செய்து விட்டாய்?

About The Author