கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

அரவிந்தரின் புனித நினைவில்

15.08.09 – பகவான் ஸ்ரீஅரவிந்தரின் 137ஆம் பிறந்த நாள். இந்தியாவின் 62வது சுதந்திர நாளோடு இணைகிறது. அரவிந்தர் பன்முகம் படைத்த ஒரு மகா புருஷர்; ஒரு ஞானி; வேதாந்தி; யோகி. நாட்டின் விடுதலைப் போராட்டதில் முக்கிய பங்கு வகித்தவர். சாவித்திரி போன்ற மகாகாவியங்களைப் படைத்தவர். பூரண யோகம் என்ற ஆன்மீக சக்தியை உணர்த்தியவர். அவரது புனித நினைவிற்கு அஞ்சலியாக சில பகிர்தல்கள்:

எது உண்மையான சுதந்திர தினம்?

ஒரு நாட்டின் சுதந்திர தினம் என்பது நிர்வாகத்தில் வெறும் வெளிமாற்றங்கள் ஏற்படும் நாள் அல்ல. அது அதன் ஆன்மாவில் தான் விடுதலை பெற்றுவிட்டோம் என்று உண்மையாக உணருகின்ற, புரிந்து கொள்கிற நாள்தான்! (அரவிந்தர் – வந்தேமாதரம் – ஆகஸ்ட் 1907 இதழ்)

1947ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று அரவிந்தரின் 75வது பிறந்த தினம். அன்று அவர் ஆற்றிய உரையில் ஒரு பகுதி:

“இந்தியா இன்று சுதந்திரம் அடைந்து விட்டது. ஆனால் இன்னும் ஒற்றுமை அடைவதற்கு எதையும் சாதிக்கவில்லை. இந்து-முஸ்லீம் மத உறவுகளில் இருந்த ஒரு விரிசல் இப்போது கடினமாகி தேசத்தில் ஒரு அரசியல் பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தற்காலிகமானது. இந்தப் பிரிவினை ஒரு நிரந்தரமான தீர்வாக இருக்காதென்று நம்புவோமாக. ஏனெனில் இது நீடித்தால் இந்தியா பலவீனமாகி விடும். இந்தப் பிரிவினை விரைவில் முடிய வேண்டும். இது இயற்கையாகவே நடந்து விடுமென்று நம்புவோம். இந்தியாவின் எதிர்காலத்திற்கு, அதன் பெருமைக்கு இது அவசியமானது.”
(டாக்டர் டி.வெங்கடேஸ்வர ராவ் அவர்களின் ஒரு கட்டுரையிலிருந்து நன்றியுடன்)

1914 ம் ஆண்டு ஹிந்து பத்திரிகையின் நிருபருக்கு அரவிந்தர் அளித்த பேட்டியில் சில பகுதிகள்:

“பாரத நாடு என்ற கருத்து மக்கள் மனதில் வேறூன்றிவிட்டது மட்டுமன்றி அது ஐரோப்பிவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. அரசாங்கத்தாலும் ஆளும் இனத்தாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. இப்பொழுது நாம் பின்பற்ற வேண்டிய கருத்து என்னவென்றால் நாம் நமது தேசத்தின் தனித்தன்மையை மனித இனத்தின் பொது முன்னேற்றத்திலிருந்து பிரிந்து நின்று அடையாமல் சுய முன்னேற்றத்துடன் இணைந்து செல்ல வேண்டும். இந்தியா தனது தேசிய வாழ்வையும் ஒருமைப்பாட்டையும் சிந்தித்த பிறகும் உலக நாடுகளை ஒன்று படுத்தும் பணியில் தன் பங்கைச் செய்ய வேண்டும்.”

“ஆனால் இந்தியர்களாகிய நாம் மனித இனத்தின் பொது வாழ்வில் இந்தியச் சிந்தனை, இந்திய மூளை, இந்திய தேசியத்தன்மை, இந்திய ஆன்மீகம், இந்தியப் பண்பாடு இவை நிறைவேற்ற வேண்டிய பங்கு எதுவென்று ஆழ்ந்த அக்கறையுடன் சிந்திக்க வேண்டும். மனித இனம் மென்மேலும் வளர்ந்து கொண்டே போகும். நாம் அவ்வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் அதில் பங்கு பெறவும் வேண்டும் …. “

“விலகி நிற்கும் மனப்பான்மையோ, நம்மிடம் உள்ளதை இழந்து விடுவோமோ என்று அஞ்சி தற்காப்பு நோக்குக் கொள்ளவோ செய்யாது நமது பலத்தை உணர்ந்து நமது உன்னதமான எதிர்காலத்திலும், மனித இனத்தின் எதிர்காலத்தில் நாம் பெரும் பங்கு எடுக்கப் போகிறோம் என்ற நம்பிக்கை வைத்து சகோதர உணர்வோடு தாராள மனத்துடன் போடியிட வேண்டும். இதுவே உண்மையான இந்திய மனப்பான்மை…”

“ ஆன்மீக விழிப்பே, நமது உண்மையான ஆன்மாவை மீண்டும் கண்டுகொள்வதே, நாம் உயர் நிலை அடைவதற்கு மிக முக்கியமான நிபந்தனை என்பது என் திடநம்பிக்கை. நீண்ட நாட்களாகவே எனக்கு இந்த நம்பிக்கை உண்டு. இறைவனில் எல்லா மனிதரும் ஒன்று என்ற மிக உயர்ந்த இந்தியக் கருத்தும் இக்கருத்தை அக வாழ்விலும், புற வாழ்விலும் உண்மையாக்குவதும், படிப்படியாக சமூக உறவுகளிலும் சமூக அமைப்பிலும் அதைக் கொண்டு வருவதும் மனித இனத்தின் வளச்சிக்கு இன்றியமையாதது என்று நான் நம்புகிறேன். இந்தியா விழித்தெழுந்தால் அதனால் உலகிற்கு வழிகாட்ட முடியும்…”

“இந்தியாவின் சிந்தனை ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து வெளிவந்து வாழ்க்கையோடு மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டும். இந்தியாவின் ஆன்மீக வாழ்வு மலைக் குகைகளிலிருந்தும், கோயில்களிலிருந்தும் வெளி வந்து புதிய உருவங்களுக்கேற்பத் தன்னை சரி செய்துகொண்டு உலகைக் கைப்பற்ற வேண்டும். இது அதி முக்கியமானது…”

மனித இனம் புதிய ஞானம், புதிய சக்தி, புதிய திறமைகள் மூலம் தனது எல்லைகளை விரிவாக்கப் போகின்றது என்றும், அது மனித வாழ்வில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கப் போகிறதென்றும் நம்புகிறேன். இங்கும் கூட இந்தியாவின் பண்டை ஞானத்தில் பயன்படுத்தாமலும், சிறிது துருப்பிடித்துப் போயும் இருந்தாலும் மனித இனத்தின் எதிர்காலத்தின் திறவுகோல் உள்ளது”

About The Author