சத்யத்தின் கதை (1)

1. அடடா, என்ன அதிவேக வளர்ச்சி!

53 வயதான ராமலிங்க ராஜு சென்ற ஆண்டு இறுதி வரை இளைஞர்களுக்கு ஓர் உதாரண புருஷர். உழைப்பால் உயர்ந்தவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புப் படித்த அவர், இன்று தலை குனிந்து நிற்க வேண்டியதாகியிருக்கிறது. காரணமென்ன? கேளுங்கள் கதையை.

1980களில் ராமலிங்க ராஜு சத்யம் நூற்பாலையை ஆரம்பித்தார். உலக சந்தை நிலவரங்களை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்த அவர், தகவல் தொழில் நுட்பத்துறை அபரிமித வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டார். இதில் இந்தியா உயரிய பங்காற்ற முடியும் என்பதையும் உணர்ந்தார். அந்தத் துறை பற்றி அவருக்கு அப்போது ஒன்றுமே தெரியாது என்றாலும், “உ.மு.த” (உன்னால் முடியும் தம்பி) தத்துவத்தை நம்பி, 1987 ஜூன் 24 அன்று செக்கந்தராபாதில் ஒரு சிறிய வீட்டில் சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் கம்பெனியை ஆரம்பித்து விட்டார். அன்று முதல் ஏறுமுகம்தான். இந்தியாவிலேயே நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற தகுதி, உலகெங்கிலும் 55 நாடுகளில் அலுவலகங்கள், 53000 பணியாளர்கள், நியூயார்க் பங்குச் சந்தையில் பதிவு, 600 வாடிக்கையாளர்கள். அதுவும் அவர்களெல்லாம் சாதாரணமானவர்களா? மைக்ரோசா•ப்ட், ஜெனரல் எலெக்ட்ரிக்கல்ஸ், நிஸ்ஸான், போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள். 2006ஆம் ஆண்டில் எர்னெஸ்ட் & யங் கம்பெனி அளித்த சாதனையாளர் விருது, செப்டம்பர் 2008ல் லண்டன் அமைப்பின் அதி உன்னத கார்ப்பரேட் என்பதற்காக தங்க மயில் விருது (திரும்ப வாங்கிக் கொள்ளப்பட்டு விட்டது!) அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் ஒரே மேடையில் பங்கு கொண்ட பெருமை – இத்தனையும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின. 2008 டிசம்பர் 16ம் தேதி சரிவு ஆரம்பித்தது.

2. பாதை மாற்றிய போர்டு மீட்டிங்

2008 டிசம்பர் 16ம்தேதி அன்றுதான் அந்த பாதை மாற்றிய போர்டு மீட்டிங் நடந்தது. இதில் எல்லா போர்டு மெம்பர்களும் கலந்து கொண்டார்கள். டைரக்டர்கள் யாரும் சாதாரண ஆசாமி இல்லை. அவர்கள் யார் யாரென்று பார்ப்போமே..

1. எம்.ராம்மோகன் ராவ். – இவர் இந்தியன் பிசினஸ் ஸ்கூலில் பேராசிரியர்.
2. டாக்டர். மங்களம் ஸ்ரீனிவாசன் – இவர் அமெரிக்கா வாழ் கல்வியாளர்.
3. டி.ஆர்.பிரசாத் – இந்திய அரசாங்க நிர்வாகத்தின் மிக உயர்ந்த பதவியான கேபினட் செக்ரட்டரி பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.
4. பேராசிரியர் வி.எஸ்.ராஜு – சென்னை ஐ.ஐ.டியின் முன்னாள் டீன்.
5. ஜி.கிருஷ்ண பலேலு – ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் பேராசிரியர்.
6. வினோத் கே.தாம் – “பெண்டியம் சிப்பின் தந்தை” என்று அகில உலகப் புகழ் பெற்றவர்.

(யாரும் ‘கைப்புள்ள’ இல்லை என்பதை இங்கே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!)

கடைசி இருவரும் டெலிகான் முறையில் (தொலைபெசி மூலம்) அமெரிக்காவிலிருந்து பங்கு கொண்டார்கள்.

தவிரவும், முழு நேர டைரக்டரான ராம் மைனபுளியும் (முதன்மை நிர்வாக அதிகாரி), முதன்மை நிதி அதிகாரியான ஸ்ரீனிவாஸ் மற்றும் பல அதிகாரிகள் இந்த மீட்டிங்கில் கலந்துகொண்டார்கள். விவாதிக்கப்படப் போகிற விஷயம் சேர்மன் குடும்பத்துக்குச் சம்பந்தமானது என்பதால் சேர்மன் ராமலிங்க ராஜுவும், அவர் சகோதரரான ராம ராஜுவும் (நிர்வாக இயக்குனர்), விவாதத்திலும் வோட்டெடுப்பிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. சுயேச்சை டைரக்டரும் கம்பெனியின் ஆடிட் கமிட்டி சேர்மனுமான ராம்மோகன் ராவ் தலைமை வகித்தார்.

கம்பெனியின் செயல்பாடுகளைப் பரவலாக்க வேண்டுவதன் அவசியத்தை அதிகாரிகள் எடுத்துரைத்தார்கள். 95% சதவீத அளவுக்கு தகவல் தொழில் நுட்ப வணிகத்துக்கு வளர்ந்த நாடுகளை நம்ப வேண்டியுள்ளது. அவையோ பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அரசாங்கத்தின் போக்கு, பணிகளை outsourcing செய்வதற்கு சாதகமாக இல்லை. அன்னிய செலாவணியில் அடிக்கடி பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது ஒரு பாதிப்பு. இப்போது கட்டமைப்புத் தொழில்தான் வளர்ச்சிக்கு உகந்த தொழிலாகக் காணப்படுகிறது. இந்தத் துறைக்கும் நம் செயல்பாடுகளை விரிவுபடுத்தினால் நல்ல லாபம் காணலாம். இரு துறைகளிலும் தலைமை எய்தலாம்.

இந்தக் காரணங்களுக்காக, (Maytas Capitals, Maytas Infras. (Satyam என்பதைத் திருப்பிப் போட்டால் Maytas) ஆகிய இரு கம்பெனிகளையும் ஒட்டு மொத்தமாக வாங்கி விடலாம். (இந்தக் கம்பெனிகளை முதலிட்டு நிர்வகிப்பவர்கள் ராமலிங்க ராஜுவின் புதல்வர்கள்)

Maytas Capitals ஐ ரூ.6523 கோடி மதிப்புள்ளது என்று எர்னெஸ்ட் & யங் கம்பெனியினர் மதிப்பிட்டுக் கொடுத்துள்ளனர். MaitAs Infra, செபி என்ற செக்யூரிடி எக்ஸ்சேஞ்ச் போர்ட் விதிமுறைகளின்படி மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திடம் 6800 ஏக்கர் நிலம் உள்ளது. Maytas Capitalsக்கு ரூ.6410 கோடியும் (எப்படி? குறைந்த விலைதானே?) Infraவுக்கு 1510 கோடி ரூபாயும் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். மொத்தத் தொகை ரூ.7920 கோடி. (கணக்கு சரியா பார்த்துக் கொள்ளுங்கள்!) இதில் 75% கையிருப்பிலிருந்தும், மீதியை வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியும் கொடுத்து விடலாம் என்பது முன்மொழிவு. (ரொம்பவும் எளிமைப்படுத்தி விட்டோம். டெக்னிகல் அபிமானிகள் மன்னிக்க வேண்டும்.) இந்த 75% தொகை என்ன வருகிறது? 5940 கோடி ரூபாய். இது ஒரு மேஜிக் நம்பர். இதை மறந்து விடாதீர்கள். பின்னால் வரும் தகவல்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள உதவும்.

இந்தத் தீர்மானம் குறித்து மீட்டிங்கில் விரிவான விவாதங்கள் நடந்துள்ளன. மங்களம் ஸ்ரீநிவாசன் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் முடிவெடுக்க வேண்டுவதற்கான அக, புறக் காரணங்கள் எவையேனும் உள்ளனவா என்று வினவியுள்ளார். தவிரவும், இத்தகைய விஷயங்களில் டைரக்டர்களை ஆரம்பம் முதலே ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்தான் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படும் என்றும் சொல்லியுள்ளார்.

மற்றும், நிர்வாகிகள் தொடர்புடைய கம்பெனியில் முதலீடு, முற்றிலும் சம்பந்தமே இல்லாத புதிய துறைக்குத் தாவுவது ஆகியவை குறித்து பங்குதாரர்களுக்கும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பங்குதாரின் சம்மதம் வேண்டுமா என்ற ஒரு கேள்விக்கு ‘அவசியமில்லை’ என்று அதிகாரிகள் பதில் சொல்ல, “இது நல்ல தெம்பூட்டும் விஷயம்” என்று மங்களம் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். (இதென்னது?)

கொள்கை அளவில் இந்த முன்மொழிவை அனைத்து போர்டு மெம்பர்களும் ஏற்றுக் கொண்டு ஏகமனதாக தீர்மானம் போட்டாலும் மதிப்பீடு சம்பந்தமாக ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது, பின்வரும் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும்:

1. நடந்து முடிந்த வேலைகளுக்கு உள்ளபடியே செலவான தொகை.
2. நடந்து கொண்டிருக்கும் வேலைகளுக்கு மார்க்கெட் நிலவரப்படியுள்ள விலை.
3. வெறுமனே இருக்கும் நிலங்களுக்கு, அரசு நெறிமுறைகளின்படி நிர்ணயித்துள்ள சந்தை விலை.

இவை மூன்றின் கூட்டுத் தொகையை விட, மதிப்பீட்டுத் தொகை அதிகமாக இருக்குமானால், போர்ட் திருப்தி அடையும் வரையில் விளக்கம் தர வேண்டும்.

இந்த நிபந்தனையைக் கண்டு கொண்டாரா ராமலிங்க ராஜு? என்ன செய்தார்? பின்னால் என்ன ஆயிற்று?

(தொடரும்)

About The Author

2 Comments

  1. Jothi

    ஆழ்ந்த தகவல்கள்.. அடுத்த வாரம் வரைக் காத்திருக்க வேண்டுமா?

  2. Dr. S. Subramanian

    5940, 5940, 5940, 5490 அட மூளி தப்பு, 5940, 5940, 5940
    ஆ இப்போது நினைவு வைத்திருக்கிறேன்.
    அடுத்த வாரம் இந்த நம்பரை இங்கே போட மறக்க வேன்டாம், என்ன?

Comments are closed.