தந்தை என்றொரு தொந்தரவு (2)

வள்ளுவர் கோட்டம். ரவிக்காகக் காத்திருந்தான். அன்று கையில் மொபைல் இல்லாதது கையொடிந்தாற் போலிருந்தது. சுற்றிச் சுற்றி வந்தான். ஆங்காங்கே சில ஜோடிகள் திருவள்ளுவரையும் அவரின் குறட்பாக்களையும் கொஞ்சமும் லட்சியமே செய்யாமல் அர்த்தமற்ற பேச்சில் மூழ்கியிருந்தனர். திருவள்ளவர் இருந்திருந்தால், காமத்துப்பால் படித்து விட்டு காதலிக்கச் சொல்லி சட்டமே போட்டிருப்பாரோ. இப்படி நாம் என்று நம் ஜோடியோடு இங்கு வரப்போகிறோம் என்றும் விடலைத் தனமாகக் குமாருக்குத் தோன்றியது. அங்கு பொறிக்கப்பட்டிருந்த குறள்களில் எத்தனை தனக்குத் தெரிகிறது என்று படித்துப் படித்துப் பார்த்தான். பள்ளியில் படித்தவை சுமாராய் நினைவில் இருந்தததை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டான். புதிதாய் அன்று படித்த குறளில் ஒன்றிற்குகூட அவனால் பொருளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கொஞ்சநேரத்திலேயே மிகவும் போரடித்தது.

அப்போது தானே கடந்து போனோம். இந்த ரோஸ் சுடிதாரைப் பார்க்கவில்லையே. அங்கு தான் உட்கார்ந்துருந்தாளோ. நாம் தான் கவனிக்கவில்லையோ. ஜோடிக்கு தான் காத்திருக்கிறாளோ. ஏன் ரவிக்கு தான் காத்திருப்பதைப் போல அவளும் தோழிக்குத் காத்திருக்கக் கூடாதா என்ன? இருக்கலாம். நிறைய நேரமாகக் காத்திருப்பாளோ. முகத்தில் காத்திருந்ததன் அலுப்பு தெரிந்தது. கைத்தொலைபேசியில் யாரிடமோ ஒரு முறை பேசினாள். இல்லை, பேசவில்லை. காதில் வைத்துக் காத்திருந்து விட்டு, அணைத்தாள். தன் போக்கில் மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிட்டு அதே இடத்திற்கு வந்தான் குமார். மீண்டும் மொபைலில் அழுத்திக் கொண்டிருந்தாள். ‘எஸ் எம் எஸ்’ அனுப்புகிறாளோ. யாரைத் தொடர்பு கொள்ள இந்தத் தவிப்பு தவிக்கிறாள் என்று யோசித்தான்.

படித்த பெண்ணைப்போலத் தெரிந்தாள். உள்ளூர் போலவும் இல்லை. வேண்டுமா வேண்டாமா என்று லேசாக ஒரு புன்சிரிப்பை அவன் பக்கம் வீசிவிட்டு மீண்டும் ‘எஸ் எம் எஸ்’ அனுப்பினாள். ஒரு சிட்டுக் குருவியின் படபடக்கும் சின்னஞ்சிறு சிறகினைப்போல அவளின் வலைக்கை கட்டை விரல் இயங்கியது. மீண்டும் தலை நிமிர்த்தி ஒரு முறை பளிச்சென்று சிரித்தாள். குமாரும் சிரித்தான். "ஹாய்,..", என்று பேச ஆரம்பிப்பாள் என்று குமார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவலும் ஹலோ என்று சொல்லி வைத்தான். தொடர்ந்து, "யாருக்காவது காத்திருக்கீங்களா?", என்று கேட்டாள். "ஆமா, என் ப்ரெண்ட் வரேன்னான். மொபைலில்லாம கொஞ்சம் கஷ்டம் தான்,", என்றதும், "இந்தாங்க, பேசறதானாப் பேசுங்க", என்று நீட்டினாள்."இல்ல தேங்ஸ்ங்க. அவங்கிட்ட மொபைல் இல்ல. கிளம்பியிருப்பான். இந்நேரம் வந்திருக்கணும்", என்று சொல்லி மறுத்தான்.

வேகுவேகுவென்று ரவி ஓடிவந்தான். "ஏண்டா இவ்ளோ லேட்டு?"என்று கேட்ட குமாரைப் பார்க்காமல் திவ்யாவைப் பார்த்துக் கொண்டே, "பஸ் கெடைக்கல்லடா", என்றான். திவ்யா அவனையும் பார்த்து ஹலோ சொன்னாள். அசட்டுச் சிரிப்போடு குமாரைத் திரும்பிப் பார்த்து, "இவங்க,..?", என்று தயங்கினான். கற்பனையை ஓடவிட்டுவிடப் போகிறானே என்று அவசரமாக, "இவங்கள இங்க தான், இதோ இப்பதாண்டா பார்த்தேன். ரெண்டு வார்த்தை பேசினாங்க. அதுக்குள்ள நீயே வந்திட்ட. யாருக்கோ வெயிட் பண்றாங்க,..", என்ற குமாரை இடைமறித்து, "இல்லங்க நா யாருக்கும் வெயிட் பண்ணல்லங்க. ஒரு வேலைக்கி இண்டர்வ்யூ இருந்துச்சு. ரெண்டு நாள் முன்னாடிதான் தஞ்சாவூர்லயிருந்து வந்தேன் எங்க பெரியப்பா வீட்டுக்கு. இங்கதான் கிட்ட இருக்கு வீடு. வெளிய போயிட்டு திரும்பினா,. அவங்க வீட்ல யாரும் இல்ல. அதான் இங்க வந்து காத்திகிட்டிருக்கேன். வீட்டு போனுக்கு தான் பண்ணிட்டே இருந்தேன்", என்று படபடவென்று சொன்னாள்.

முன்பின் தெரியாத ஒரு பெண் அவ்வளவு பேசுவாளா என்று ரவிக்கும் குமாருக்கும் ஆச்சரியமாகிப் போனது. ரவியுடன் குமார் பேச நினைத்ததெல்லாம் அப்போதைக்கு மறந்து போனது. திவ்யா இருவருக்கும் அருகில் நின்றிருந்தாள். மீண்டும் வீட்டுக்கு போன் அடித்ததும் கிடைத்த மகிழ்ச்சியில், "எங்க பெரியம்மா வந்துட்டாங்க வீட்டுக்கு. நா வீட்டுக்குப் போறேன்", என்றதும் ரவி, "உங்க பேர் என்னங்க? நாங்க வேணா வீடு வரைக்கும் வரவா?", என்றான்.

களுக்கென்று சிரித்துவிட்டு, "இல்லங்க. நானே போயிடுவேன். இன்னும் இருட்டக்கூட இல்ல. சென்னை எனக்குப் பழக்கம் தான்", என்றாள். மிகவும் சகஜமாகத் தன் மொபைல் எண்ணை எழுதிக் கொடுத்து விட்டு இருவரின் மின்மடல்களையும் கேட்டு வாங்கி கொண்டாள். பரபரவென்று இறங்கிச் சென்றுவிட்டாள்.

***

அத்துடன் குமார் திவ்யாவை மறந்திருந்தான். ஒரு முறை "கால் செண்டர்ரில் வேலைக்குப் போகறாப்ல படிக்கிறேன்", என்று மின்மடலிட்டிருந்தாள். அந்த வேலையெல்லாம் பாதுகாப்பு இல்லை என்று எல்லாம் தெரிந்தவனைப் போல பதில் போட்டதும் அவளும், "நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்", என்று மடலில் சொல்லியிருந்தாள். ‘மெயின் பிரேம்’ படிக்கச் சொன்னான் குமார். மகிழ்ச்சியுடன் சரியென்றாள். அதுக்காக சில யோசனைகளையும் குமார் விரிவாக எழுதினான்.

ஏற்கனவே ராதாவின் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு துரோகம் என்றால் எப்படியிருக்கும் என்று அனுபவித்திருந்தவன் குமார். அவன் அதை துரோகம் என்று நினைத்துக்கொண்டதால் அதை ஒரு பாடமாகக் கொண்டதாக நம்பினான். ஏழாம் வகுப்புப் பெண் பத்தாம் வகுப்புப் பையனிடம் ஏற்படும் ஈர்ப்பினை வருடங்கள் கடந்தும் ஆழமான நட்பாகவும் பிறகு திடமான காதலாகவும் வளர்த்துக்கொள்வாள் என்று எதிர்பார்ப்பதில் இருக்கும் அபத்தங்கள் எல்லாம் குமாருக்குப் புரிந்ததேயில்லை.

பளிச்சென்று கண்ணில் பட்டுக் கருத்தைக் கவர்ந்த பெண்களையெல்லாம் தன்னுடன் ஜோடிசேர்த்துக் கற்பனையில் திளைக்கும் ஆவல் தொடர்ந்தது. சினிமா நாயகிகளின் முகங்களைப் படங்களிலிருந்து வெட்டித் தன் புகைப்படத்தில் சேர்த்துப் பார்த்து மகிழ்வதும், அவற்றை வாழ்த்து மின் அட்டையாக அனுப்பும் விடலைத் தனமும் இன்னமும் குமாரை விடவில்லை. தென்னிந்தியக் களையுடன் இருக்கும் நந்திதா தாஸிலிருந்து கோபிகாவரை அவனின் ஈடுபாடு மாறியபடியே இருந்தது.

திவ்யாவைப்பற்றி சீரியஸாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அடிக்கடி சாதாரண ஒரு நட்பு என்பதை தனக்குள்ளே சொல்லி நினைவு படுத்திக்கொண்டான். திவ்யாவிற்கு பிரெண்ட்ஷிப் கார்ட் அனுப்பினான். மின்மடலில் தொலைபேசி எண் கொடுத்தான். அவளும் கொடுத்தாள். ஒரே ஒரு முறை போன் செய்தான். திவ்யாவும் அவர்கள் வீட்டினரும் பேசினார்கள். அதன்பிறகு, தொடர்பு ஒரு வருடத்தில் ஒரே ஒரு மின்மடல் என்ற அளவிற்குத் தேய்பிறையாகத் தேய்ந்திருந்தது.

சிங்கப்பூருக்கு வந்தபிறகும் ஒரே ஒரு முறை தொலைபேசினான் திவ்யாவுடன். பிறகு ஒரு கடிதம் எழுதினான். ஓரிரு முறை திவ்யா மின்மடலிட்டபோது பதில் போட்டதும் உண்டு. இப்போது ஊருக்குப் போகும் விஷயத்தை ரவி சொல்லிவிட்டான் போலும். வீட்டுக்கு வரச்சொல்லி எழுதியிருந்தாள். "மீனாம்பாக்கத்திலிருந்து அப்படியே வாடகைக் காரில் ஏறி ஊருக்குப் போய் விடப்போவதால், சிங்கப்பூர் திரும்பும் முன் ஒருநடை முடிந்தால் தஞ்சாவூருக்கு வருகிறேன்", என்ற முக்கிய செய்தியை எழுதி பதிலும் போட்டு விட நினைத்து தாளை எடுத்தான்.

"ஆமா, நூல்வெளீட்டுவிழா ஏற்பாடெல்லாம் எப்டியிருக்கு?", என்று குமார் கேட்பதற்காகவே காத்திருந்தாற்போல, "ம், ஜோராப்போகுது. போனவாரமே சென்னையிலிருந்து புக்ஸ் வந்துடுச்சி. நலங்கிள்ளி வெளியிட்டு சிறப்புரை குடுக்க ஒத்துகிட்டாரு. குழந்தைசாமி ஆய்வுரை. நாம நெனக்கறதவிட சுவாரஸியமா இருக்கப் போகுது. பாத்துகிட்டே இரேன், குமார் ஒனக்கு ரொம்பப் பிடிக்கும். மறக்க முடியாத விழாவா இருக்கப்போகுது நீ வேணாப் பாரேன். இன்னிக்கி கூட அது விஷயமா மாலாவோட வெளிய போப்போறேன். வரியா?", என்று உற்சாகமாகச் சொன்னான். "இல்லப்பா, ஆளவிடு. எனக்கு பேகிங்க் வேலையிருக்கு", என்றபடி குமார் தன் அறைக்குள்ளே சென்று விட்டான். லீவெடுத்ததே மாலாவிற்காகவோ என்று தோன்றியது அவனுக்கு. அப்படித்தான் இருக்கவேண்டும். அப்படியெல்லாம் சட்டென்று எதற்கெடுத்தாலும் லீவெடுத்து விடக்கூடியவனும் இல்லை அவன். ‘பய போறபோக்குல என்னவோ மாத்தமிருக்கே’ என்று நினைத்துக் கொண்டான். செந்திலின் வழக்கமான வேகங்களுக்கிடையில் சமீபமாய் ஒரு பரிதவிப்பும் குமாரால் உணரக்கூடியதாக இருந்தது. வேலை தேடுதலும் கிடைக்காததும் மட்டும் தான் காரணமா?!

*****

(நெய்தல் -மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author