துப்பாக்கி எடுத்துவிட்டான்

துப்பாக்கி எடுத்துவிட்டான் – இந்தியன்
துப்பாக்கி எடுத்துவிட்டான்
சுதந்திரம் இழந்து
புழுவாய்ப் பூச்சியாய்
அடிமையாய்க் கிடந்த நாட்களில்கூட
அகிம்சையைத்தான் கையில் எடுத்தான் – இந்தியன்
அகிம்சையைத்தான் கையில் எடுத்தான்

இன்றோ
துப்பாக்கி எடுத்துவிட்டான் – இந்தியன்
துப்பாக்கி எடுத்துவிட்டான்

அண்ணல் காந்தியின் அகிம்சா வேதங்களை
நொறுக்கிப் புதைத்து புதைத்த இடத்தில்
நெடுமரங்களே வளர்த்து விட்டான்
இந்தியன்
ஆனால்…
அமிதாப் அங்கேயும்
அஜித்குமார் இங்கேயும்
அரிதாரம் பூசிக்கொண்டு
பொய்த் திரையில் எடுத்ததை
நிஜமாகவே எடுத்துக்கொண்டான்

இந்தியன்
ஏன்தான் எடுத்தான்
துப்பாக்கி?

அன்னா அசாரேயின் உண்ணாவிரதம்
ஒன்றுக்கும் ஆகாது
துப்பாக்கி மட்டும்தான் துளைத்தெடுக்கும்
தேச ஊழலைக் கொன்றழிக்கும் என்று
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

அன்பளிப்பு என்ற அடைமொழிபோய்
இலவசம் என்ற புதுமொழியோடு
அரசியல் எருமைகள் இந்திய ஓடைகளைக்
கலக்கி எடுக்கின்றனவே என்று
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

சாதியும் சாகாது மதமும் இணங்காது
கலவரமும் தீராது
கொட்டும் ரத்தமும் நிற்காது என்று
கோபப்பட்டு இந்தியன்
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

நீர் என்றாலும் தகராறு
நிலமென்றாலும் தகராறு
மொழி என்றாலும் தகராறு
முதலீடு என்றாலும் தகராறு
என்று சினந்த இந்தியன்
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

வறுமைக்கு முற்றுப்புள்ளி இல்லை
விவசாயத்திற்கு வாழ்வில்லை
மக்கள் பெருக்கத்துக்குக் கட்டுப்பாடு இல்லை
சுகாதாரத்துக்கு வழியில்லை
என்று கொந்தளித்து
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

பிறகு
ஏன்தான் எடுத்தான்
துப்பாக்கி?

வீட்டின் முன் சிறுநீர் கழிக்காதே என்று
பதினேழு வயது பள்ளி மங்கை
இந்தியத் தலைநகர வீதியொன்றில்
கண்டித்தாள்
அவ்வளவுதான்….

எதற்குமே ரோசம் வராத அசல் இந்தியனுக்கு
அதிவேகமாய்ப் பொத்துக்கொண்டு
வந்துவிட்டது ரோசம்

எடுத்தான் துப்பாக்கியை
அடுக்கடுக்காய் எறிந்தான்
அநியாயக் குண்டுகளை

கொன்றழித்தான்
நியாயத்தின் குரலை

ஒழுக்கம் கேட்டதால் உயிரிழந்தாள்
வாழ்வின் நுழைவாயிலில்
பருவத்தோடும் கனவுகளோடும் நின்ற
அந்த அபலை

பாவம்….
சுதந்திர இந்தியாவில்
வாழ்நாள் கழிப்பதற்கு
சளைக்காத சகிப்புத் தன்மை
வேண்டும் என்று
அவளுக்குத் தெரியாமல் போயிற்று

நிர்வாணப்படுத்தி
நடுவீதி இடுவார்கள் குண்டர்கள்
புன்னகைக்க வேண்டும்

மலம் ஊட்டிவிட்டு மகிழ்வார்கள்
மேல் சாதி மைந்தர்கள்
வாய் திறக்க வேண்டும்

கற்பழித்துக் குதூகலிப்பார்கள்
கற்றைப்பண வாசிகள்
வசதியாக்கித் தரவேண்டும்

இதெல்லாவற்றுக்கும்
மேலாக….

ஓட்டுக் கேட்டு
வணக்கத்தோடு வருவார்கள்
வெள்ளைச் சட்டைக்காரர்கள்
பேசாமல் போட்டுவிட்டுப்
பொத்திக்கொண்டு போக வேண்டும்

இந்தியா
வல்லரசாகிவிட்டது உண்மைதான்

சிறுநீர் கழிக்கும் சுதந்திரமும்
பறிபோவதைப் பொறுக்கமாட்டாமல்
புறப்பட்டுவிட்டான்
பண்பாட்டு பாரதக் குடிமகன்
இன்று துப்பாக்கியோடு.

About The Author