நவ்வையடிக்காளி

பட்டமங்கலத்தில் மிகச்சிறப்பு வாய்ந்த காளி கோயில் இருக்கிறது. ‘நவ்வையடிக்காளி’ என்னும் சிறப்புப் பெயரை பெற்றவள் நம் உமையவள்தான். சிவனை நினைத்து தவம் செய்த பார்வதிக்கு அந்தப் பரமேஸ்வரனின் மூலம் சாப நிவர்த்தியும் கிட்டியது.

பார்வதிக்கு சாபம் ஏற்படக் காரணமென்ன? அவள் ஏன் காளியாக மாறினாள்? இதற்கு நாம் அதன் புராணக்கதையைப் பார்ப்போம்.

கார்த்திகைப் பெண்களுக்கு அஷ்டமாசித்திகளைக் கற்கவும், அவற்றில் தேர்ச்சியடையவும் ஆசை ஏற்பட்டது. ஆகையால், சிவபெருமானிடம் சென்று அஷ்டமாசித்திகளின் மந்திரங்களை உபதேசிக்குமாறு கேட்டுக்கொண்டனர். சிவனோ, அவர்கள் அதை அடையும் முதிர்ச்சி இன்னும் பெறவில்லை எனக் கூறி மறுத்தார். ஆனால் பார்வதி தேவி அவர்களுக்காகப் பெரிதும் பரிந்துரை செய்தாள். அதில் வெற்றியும் கண்டாள்.

சக்தியே வேண்டிக்கொண்டதால் சிவன் உபதேசிக்க ஆரம்பித்தார். உபதேசம் பெறும்போது, கார்த்திகைப் பெண்களோ வேறு கவனத்தில் இருக்க.. ஈசனுக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே, அவர்களைக் கல்லாகப் போகும்படி சபித்து, பட்டமங்கலத்தில் ஒரு ஆலமரத்தடியின் கீழ் விழும்படி செய்தார். உமையவளால்தான் இத்தனையும் நடந்ததென உமையவளுக்கும் சாபம் கொடுத்தார். அதே ஆலமரத்தின் கீழ் காளியாகப் போகுமாறு செய்தார்.

காளியாக மாறியபின்னும் தன் கவனமெல்லாம் சிவனின் மேலேயே இருக்க.. மகேசனை நினைத்துத் தவமியற்றினாள். சிவபெருமானும் அவள் தவத்தில் மனமகிழ்ந்து தரிசனம் தந்தார். பின் அவர் தட்சிணாமூர்த்தி வடிவில் வந்து கல்லான கார்த்திகைப் பெண்களுக்கும் சாப விமோசனம் அளித்தார்.

பட்டமங்கலத்தில் தக்ஷிணமூர்த்தியாக அருள் பாலிக்கும் சிவன் திருமணத் தடைகளை நீக்குகிறார். இது ஒரு பரிகார ஸ்தலமாக திகழ்கிறது. குருவிற்கு இங்கு தனிக் கோயில் இருக்கிறது. இவர் கிழக்குத் திசையை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

காளியான உமையவள் ‘நவ்வையடிக்காளி’ எனும் பெயரில் அருள்பாலிக்கிறாள்.

புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்கு சென்று வேண்டிக்கொண்டு தக்க பரிகாரம் செய்கின்றனர்.
திருமணம் நடக்க வேண்டுவோர் இங்கு வந்து இங்கிருக்கும் அஷ்டமாசித்திக்குளத்தில் குளித்து, அங்கு இருக்கும் மிகப்பழமையான ஆலமரத்தைப் பிரதட்சணமாக சுற்றி வர வேண்டும். பின் தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி மனமார வேண்டிக்கொள்ள கைமேல் பலன் கிடைத்துவிடும்.

பட்டமங்கலம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது.

About The Author