நீர் வளம் காப்போம்! (4)

நீர் சேமிக்கும் வழிகள்:

1. ஒரு பெரிய பேரல் அல்லது சிறியளவுள்ள குளம் அமைத்து அதன் மேல் சிறு சிறு ஓட்டையுள்ள துணியை விரித்துவிடுங்கள். உங்கள் வீட்டின் மழைநீர் விழும் இடத்தில் இவ்வாறு அமைப்பதால் குப்பைகள் மேலேயே தங்கி நீரை மட்டும் கீழே அனுப்பும். உங்களுக்குப் பயன்பாடாத துணிக்கு இப்படியோர் உபயோகம் இருப்பதுடன் பாலிதீன் கவர் பயன்படுத்தப்படுவதும் குறையும். இவ்வாறு சேமிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட நீரை வண்டிகள் கழுவ, செடிகளுக்கு என பயன்படுத்தலாம்.

2. மேலும் அம்மழை நீரை புதியதாக வாங்கிய மரச்சாமான்களை கழுவப் பயன்படுத்தலாம். மழைநீரில் குளோரின் இல்லாததால் செடியின் வளர்ச்சியைத் தூண்டும். மறக்காமல் மழைநீர்த் தொட்டி அல்லது குளத்தை மூடி வைப்பதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கலாம்.

3. மழைநீர் சேகரிப்பு மற்றும் குறைவான நீர் பயன்பாட்டு முறைகளை உங்களால் முடிந்தளவு நண்பர்கள், உறவினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

4. உங்கள் அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளின் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

5. அருகிலுள்ள நர்சரியில் குறைவான நீர் தேவைப்படும் செடிகளைப் பற்றிக் கேட்டு அவற்றை வளருங்கள். அலங்காரச் செடிகளைவிட துளசி போன்ற மூலிகைச் செடிகளை வளர்ப்பதால் அதிகளவு ஆக்ஸிஜன் வெளியிடப்பட்டு சுற்றுசுழல் பாதுகாக்கப்படும். உங்களின் பத்தடி பால்கனியில் கூட துளசியை வளர்க்க முடியும்.

6. உங்களின் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் பணியின் போது முடிந்தளவு நீர் மற்றும் மின்னாற்றலை சேமிக்கும் வழிமுறைகளை கூறிப் பயன்பெறுங்கள்.

7. உங்கள் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப் பாருங்கள்.

8. விடுமுறையில் உங்கள் அருகிலுள்ள குளம் மற்றும் ஏரிகளை தன்னார்வலர்கள் மூலம் தூர் வாரி ஆழப்படுத்துங்கள். வெட்டுக் குத்து, பழியுணர்ச்சி எனக் காட்டும் குறுந்தொடர்கள், சினிமா போன்றவற்றுக்குச் செலவழிக்கும் நேரத்தில் ஒரு மரக் கன்றை உங்கள் அருகிலுள்ள சாலையில் வைத்து வளருங்கள்.

9. வீட்டிற்கு ஒரு மரம் என்னும் வேதாந்தம் முடிந்து போய் இப்போதுள்ள நிலையில் கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் குறைவான நீர் எடுத்துக் கொள்ளும் துளசி, வேம்பு, குமிழ் போன்றவற்றை வளர்த்து, மழைநீர் ஆதாரத்தைப் பெருக்குங்கள்.

10. ஹோட்டலில் தங்கியிருக்கும் போது, 24 மணி நேர தண்ணீர் வசதி என்பதற்காய் இஷ்டத்திற்கு பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

11. தினமும் ஒரு சில துளிகளாவது தண்ணீரை சேமியுங்கள். சிறுதுளியே பெரும் வெள்ளமாகும் விரைவில்.

நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முறைகள்:

உங்களின் சிறுசெயலும் சுற்றுப்புறத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பாலிதீன் கவர்களால் ஏற்படும் தீமையை சென்னையின் மழைக்காலம் உங்களுக்கு உணர்த்தியிருக்கும். நீர் வடிகால் பகுதிகளில் சேரும் குப்பைகளில் பெரும்பகுதி பாலிதீன் கவர்களே. கடையில் இலவசமாய்த் தருகிறார்கள் என்பதற்காக அவற்றை வாங்கிக் குவித்து மாசு ஏற்படுத்தாதீர்கள். தோளில் மாட்டும் பையை எடுத்துச் சென்றால் அனைத்தையும் ஒரே பையில் கொண்டு வந்துவிடலாம். பருப்பு போன்றவற்றை வாங்கும் போது அவை அடைக்கப்பட்ட கவரைத் திருப்பி அதில் காய்கறிகளை வைத்து குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தலாம். நீங்கள் ஏதேனும் கடை வைத்திருப்பவராய் இருந்தால் வாடிக்கையாளருக்குத் திரும்ப பயன்படுத்தும்படியான பைகளை ஒரு சிறுவிலை வைத்து பாலிதீன் கவர்களுக்குப் பதில் தரலாம்.

1. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பாஸ்பேட் இல்லாத துவைக்கும் சோப்புகள், டாய்லெட் கிளீனரை அதுவும் தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். சோடா உப்பு, எலுமிச்சை, வினிகர் போன்ற இயற்கையான பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்துங்கள்.

2. சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெய், மீதமான கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை சிங்கில் போட்டு தண்ணீரை மாசுபடுத்தாமல் குப்பையில் போடுங்கள்.

3. விஷமுள்ள பொருட்களை சிங்க் மற்றும் நீர் வடிகால் பகுதிகளில் கொட்டாதீர்கள்.

4. ஒரு லிட்டர் கார் ஆயில் 9,500 லிட்டர் நீரை மாசுபடுத்துவதுடன் நீர் மறுசுழற்சி மெஷினையும் பழுதடையச் செய்யும். Hazard waste center-ல் உங்களுக்குத் தேவைப்படாத பெயிண்ட், கார் ஆயில் போன்றவற்றைக் கொடுங்கள்.

5. உங்களுக்குப் பயன்படாத மாத்திரை, டானிக் போன்றவற்றை மருந்துகடைகளில் திரும்பக் கொடுங்கள்.

அதிகப்படியான நீர் பாய்ச்சுதல்:

உங்களின் நிலத்தடி மண் எப்போதும் சிறிதளவு ஈரமாகவும், இலைகள் எளிதாக உடையக் கூடியவகையில் இருந்தாலும் அதிகளவு பூஞ்சை காளான்கள் வளர்ந்தாலும் அதிகப்படியான நீரை நீங்கள் செடிகளுக்குத் தருவதாக அர்த்தம். மேற்சொன்னவற்றைக் கவனித்து சரியான அளவில் நீரை பயன்படுத்துங்கள்.

(அடுத்த இதழில் முடியும்)

About The Author

2 Comments

Comments are closed.