பணமழை பொழியும் விம்பிள்டன்

ஒருவாறாக, இங்கிலாந்தின் 77 ஆண்டுக் காலக் காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. கிரான்ட் ஸ்லாம் என அழைக்கப்படும் பிரம்மாண்டமான டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டியில் பிரித்தானியர் ஒருவர் இந்தத் தடவை வெற்றிவாகை சூடியிருப்பது இந்த ஆண்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது!

7ஆவது தடவையாக எடுத்த முயற்சி, 7ஆந் திகதியில் எடுத்த முயற்சி, 77ஆவது ஆண்டில் எடுத்த முயற்சி வீண்போகவில்லை. ஸ்கொட்லாந்தின் டென்னிஸ் வீரரான அன்டி மரே, பிரித்தானியாவின் நீண்ட காலக் கனவை இந்தத் தடவை நனவாக்கி இருக்கிறார். 77 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், பிரித்தானியாவின் பிரம்மாண்டமான டென்னிஸ் விழாவில்வெற்றி பெற்று, முழுப் பிரித்தானியாவையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்.

விம்பிள்டன்!
1877இல் ஆரம்பித்த இந்த விம்பிள்டன் போட்டிகளில், முதலில் ஆண்கள் மாத்திரமே விளையாட அனுமதிக்கப்பட்டார்கள். முதல் 7 ஆண்டுகள் விம்பிள்டன் டென்னிஸில் ஆண்கள் ராஜ்யம்தான். 1884இல் ஆண்கள் இரட்டையர் மோதல் அறிமுகப்படுத்தப்பட்டபோதுதான், பெண்களுக்கும் விளையாட அனுமதி வழங்கப்பட்டது; பெண்கள் ஒற்றையர் மோதல் அறிமுகப்படுத்தப்பட்டது!

1877இல் ஆரம்பித்த இந்த ஆண்களுக்கான ஒற்றையர் மோதல் போட்டிகள், முதலாம், இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலங்களைத் தவிர, ஆண்டுதோறும் இன்றுவரையில் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன.

1936இல் இந்த வெள்ளிக் கேடயத்தை வென்றெடுத்த முதல் பிரித்தானியர் பிரெட் பெர்ரி (Fred Perry). இன்னொன்றை இங்கே சொல்லியாக வேண்டும், அரைக்காற்சட்டை அணிந்து இந்த மோதலை வென்ற முதல் பிரித்தானியர் என்று பார்த்தால் அது இந்த ஆண்டு வென்ற அன்டி மரேதான். காரணம், முன்பெல்லாம் ஆணோ பெண்ணோ, உடை விடயத்தில் கஞ்சத்தனம் காட்டவே முடியாது. நீண்ட காற்சட்டை அணிந்துதான் எல்லோரும் அன்று களத்தில் குதித்தார்கள். இன்று அரைக்காற்சட்டை அணிவது அனுமதிக்கப்பட்டாலும், வெள்ளை நிறத்தில்தான் மேலாடையும், அரைக் காற்சட்டையும் இருக்க வேண்டும் என்பது இங்கு அமலில் உள்ள கண்டிப்பான விதிமுறை.

ஏறத்தாழ, 150 ஆண்டுகளாகத் தொடரும் இந்த விம்பிள்டன் போட்டிகள்தான், பெரிய அளவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் மிகப் பழமையானவை. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் பெரிய அளவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளும் கிரான்ட் ஸ்லாம் என அழைக்கப்படும் தகுதியைப் பெற்றுள்ளன.

விளையாடும் வீரர்களின் உடை வெள்ளையாக இருக்க, இந்த விளையாட்டுக்குரிய நிறங்கள் கரும் பச்சையும், ஊதாவும் ஆகும். விளையாட்டுத் திடல் தொடங்கி வீரர்களுக்கு வழங்கப்படும் துவாய் வரை எல்லாமே ஊதா, பச்சை வர்ணங்கள்தான்!

கனவான்களின் விளையாட்டு எனக் கருதப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றிவாகை சூடுவோருக்குப் பரிசுப் பணம் அளிக்கும் வழமை முதல் தடவையாக 1968இல்தான் ஆரம்பித்தது. 2007க்கு முன்பு வரை, விம்பிள்டன் – பாரிஸ் போட்டிகளில், பெண்களை விட ஆண்களுக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகை அதிகமாக இருந்தது. இதை 2007இல் மாற்றியமைத்தது விம்பிள்டன் நிர்வாகக் குழு! ஆணுக்குப் பெண் நிகர் என்கிற அடிப்படையில், இருவருக்குமே சமப் பரிசு அளிக்கும் முடிவை 2007இல் அமலுக்குக் கொண்டு வந்தது விம்பிள்டன் நிர்வாகம். ஆனால், பெண்கள் போட்டியில், மொத்தம் 3 மோதல்களிலேயே வெற்றி வீராங்கனை நிச்சயிக்கப்பட்டு விடுவார். ஆண்களோ அதிக நேரம் விளையாடினால்தான் வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் செல்ல முடியும் என்பதால் விம்பிள்டன் நிர்வாகத்தின் இந்த முடிவு சர்ச்சையைக் கிளப்பியது!

உயர்ந்து கொண்டே வரும் பரிசுத்தொகை!
2009இல் விம்பிள்டன் வெற்றி வீரர்கள் பெற்ற தொகை எவ்வளவு தெரியுமா? 1,25,00,000 பவுண்டுகள். இத்தொகையில் ஒற்றையர் ஆட்ட வாகையராகத் (champion) தெரிவாகும் வீரருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பணம் மட்டும் 8,50,000 பவுண்டுகள்!

2008இல் இத்தொகை 13.3 விழுக்காடு உயர்ந்தது. 2010இல் ஒற்றையர் ஆட்ட வாகையர் பெற்ற தொகை 10,00,000 பவுண்டுகள்! 2011இல் மொத்தப் பரிசுத் தொகை 1,60,60,000 ஆக எகிறிக் குதித்தது! 2011இன் தொகையை விட இது 10 விழுக்காடு அதிகம்! ஒவ்வொரு சுற்றிலும் தோற்று வெளியேறுபவருக்கு ஏதோ ஒரு தொகை கிடைப்பது நிச்சயம்.

இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது இந்த ஆண்டுப் பரிசுத்தொகை! டென்னிஸ் சுற்றுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவில், விம்பிள்டன் தனது பரிசுத்தொகையைக் கடந்த ஆண்டை விட 40 விழுக்காடு உயர்த்தி அறிவித்தது! மொத்தப் பரிசுத் தொகை 2,25,60,000 பவுண்டுகள்! ஆம்! இங்கே டென்னிஸ் பந்துகள் மாத்திரமல்ல, பணமும் மழையாகப் பொழிகிறது! தோற்றவர்களும் கைநிறையப் பணம் கொண்டு செல்லும் வாய்ப்பை இந்த ஆண்டு விம்பிள்டன் நிர்வாகம் வழங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது! இந்த ஆண்டுப் பரிசுத்தொகையின் முழு விவரத்தை ஒரு தடவை பாருங்களேன்!

2013 விம்பிள்டன் வாகையர் பரிசுத்தொகை (ஒற்றையர்)[62]

முடிவுபரிசுத்தொகை2012ஐ விட

வாகையர்£1,600,00039%

இறுதிச் சுற்று தகுதியாளர்£800,00039%

அரையிறுதிச் சுற்று தகுதியாயாளர்கள்£400,00039%

காலிறுதிச் சுற்று தகுதியாளர்கள்£205,00041%

நான்காம் சுற்றில் தோற்றவர்கள்£105,00040%

மூன்றாம் சுற்றில் தோற்றவர்கள்£63,00062%

இரண்டாம் சுற்றில் தோற்றவர்கள்£38,00064%

முதல் சுற்றில் தோற்றவர்கள்£23,50062%

ஆனால், இந்த முடிவு தங்கள் மண்ணில் உள்ள ஒருவருக்கே பெருஞ் சாதகமாக அமையும் என்று நிர்வாகிகள் நினைத்திருக்கவே மாட்டார்கள்! இந்த ஆண்டு பிரித்தானியர் ஒருவரே வெற்றியைத் தட்டிச் சென்றதைத்தான் குறிப்பிடுகிறேன்.

அன்டி மரேயின் மதிப்பை 32 மில்லியன் பவுண்டுகள் எனக் கணிக்கும் அதே நேரம், இந்த மகத்தான வெற்றி, இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு 20 மில்லியன் பவுண்டுகள் தொகையை மேலதிகமாகச் சம்பாதிக்கும் வாய்ப்பை அவருக்கு அளிக்கும் எனச் சொல்லப்படுகிறது. இது விளம்பரதாரர்கள் பொழியும் பணமழை! பிரித்தானிய விளையாட்டு வீரர்கள் வரலாற்றிலேயே டேவிட் பெக்கம் (David Beckham), லென்னாக்ஸ் லியூஸ் (Lennox Lews) ஆகியோருக்குப் பின்னர், மிக அதிக அளவில் சம்பாதிக்கும் வீரர் என்கிற பெருமையைப் பெறுகிறார் அன்டி மரே எனும் இந்த 26 வயது இளம் டென்னிஸ் புயல்!

அன்டி மரே 32 மில்லியன் பவுண்டுகள் தொகைக்குச் சொந்தக்காரர் என்று முன்பே குறிப்பிட்டோம் இல்லையா? இதில் அரைவாசித் தொகைக்கு மேற்பட்ட தொகை, டென்னிஸ் விளையாட்டுகளில் கிடைத்த சம்பாத்தியந்தான்! ஆக்ஸ்ஷாட் சர்ரே (Oxshott Surrey) என்கிற இடத்தில் 5.6 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஓர் ஆடம்பர மாளிகை இவருக்கு இருக்கிறது. இவரது சொந்த இடமான டன்பிளேனில் (Dunblane) 2 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியுடைய விடுதி ஒன்றையும் இவர் வாங்கியிருக்கிறார். இதை 5 நட்சத்திர விடுதியாக்கவும் திட்டமிட்டு வருகிறார். இவருக்கு ஆண்டுக்குப் 15 மில்லியன் பவுண்டுகளை அள்ளித் தரும், ஆடிடாஸ் (Adidas) நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014இலிருந்து மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்றும் சொல்லப்படுகிறது.

இவருக்கு முன், விம்பிள்டன் வாகையர் பட்டம் வென்றவர்களும் பணமழையில் நனைவதில் குறைந்தவர்கள் இல்லை. பலமுறை இந்தப் பெருந்தொகையைத் தட்டிக்கொண்டு சென்ற சுவிஸ் வீரரான றோஜர் பெடரர், இந்தத் தடவை இரண்டாவது சுற்றிலேயே வெளியேற்றப்பட்டு விட்டாலும், உலகிலேயே அதிகமாகச் சம்பாதிக்கும் இரண்டாவது விளையாட்டு வீரர் என்கிற நிலையில் இருக்கிறார். 31 வயதான இந்த வீரர், டென்னிஸ் உலகில் தன் உச்ச நிலையைக் கடந்து விட்டாலும் கடந்த 12 மாதங்களில் 48 மில்லியன் பவுண்டுகள் தொகையைச் சம்பாதித்து விட்ட கில்லாடி!

ஆனால், சற்றே வயதாகி, வீரியம் குன்றிவிட்ட றோஜர் பெடரரும் அடிக்கடிக் காயப்படும் ஸ்பானிய வீரர் நடாலும் இனித் தன் பாதையில் குறுக்கிடுவது குறைந்து விடும் என்கிற நம்பிக்கை, டென்னிஸ் உலகின் முதலிடத்தைப் பிடிக்க அன்டி மரேயை ஊக்குவிக்கும். இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் அவர் முதலிடத்தைப் பிடிப்பார் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

அப்படி நடந்து விட்டால், இப்போதே இவரை மொய்க்கும் பல பிரபல நிறுவனங்கள், இவரை மேலும் வரலாறு காணாத பணமழையில் தெப்பமாய் நனைத்துவிடுவார்கள் என்பது நிச்சயம்!

About The Author