அகநானுற்று தாய் கூற்றுப் பாடல்களில் உவமை (2)

இல்லத்தின் காவல் மிகுதி

இல்லத்தின் கடுமை மிக்க காவலையும் கடந்து, தலைவி உடன் போயினள் எனத்தாய் சுட்டும் நிலையில் அக்கடுமைக்கு ஒப்பாக நன்னனது பாழி எனும் நகரமும், பாண்டியனது மதுரை நகரமும் கூறப்பட்டுள்ளது. அதனை,

"சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி அன்ன கடிடைவியல் நகர்
பெரும் பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியல்நகர்" (அகம் பா-15)

எனும் அடிகள் உணர்த்துகின்றன. பகைவர் சூழாவண்ணம் காக்கும் பெரும் அரண்களையும் சிறந்த காவல் வீரர்களையும் உடையவனாக அரசர்களின் நகரங்கள் விளங்கும். அத்தகைய நகரங்களின் காவல் தன்மையை தன் இல்லின் காவலுக்கு தாய் ஒப்பிட்டுக் கூறுகின்றாள் எனில் அக்காவலின் கடுமையை உணரலாம். இத்தகைய கடுமையான காவலைக் கடந்து தன்மகள் எவ்வாறு தான் உடன்போக்கு மேற்கொண்டாளோ எனும் தாயின் ஆற்றாமை கலந்த வியப்பு இதில் வெளிப்படுகின்றது.

இல்லத்தின் அமைப்பு

தலைவியின் இல்லம் குளிர்ச்சி பொருந்தியது என்பதைச் சுட்ட தாய் நிழலின்கண் இருக்கும் குளத்திற்கு இல்லத்தை ஒப்பிடுகின்றாள்.

"நிழற் கயத்தன்னநீர் நகர் வரைப்பின்" (அகம் பா-105)

என்ற அடி இவ்வுவமையைச் சுட்டுகின்றது. தாய் இவ்வாறு சுட்டிக்கூறுவதற்குக் காரணம், வெயிலின் தன்மையறியாது இத்தகைய குளிர்ச்சி பொருந்திய இல்லத்தின் கண்இருந்த தலைவி காட்டு வழியில் எவ்வாறு நடந்து செல்வாள் என அஞ்சப்படுவதாக உள்ளது. தலைவியின் மென்மைத்தன்மையையும், சுரத்தில் செல்வதால் அவள் அடையும் துன்பங்களையும் எடுத்துக்கூறுவதற்குத் தாய் இவ்வுவமையைக் கையாண்டுள்ளாள். இவ்வாறு தாய் கூற்றில் இல்லத்திற்கு கூறப்பட்டுள்ள உவமைகள் அனைத்தும், அகநானுற்றில் குறிப்பிடப்பட்டவை என்பது சிறப்பிற்குரியதாகும்.

தலைமக்களின் அழகும் செயல்பாடுகளும்

தலைவியின் சாயல், கூந்தல், பற்கள், வாய், நடை, கண் தலைவனின் தோற்றம் மற்றும் தலைமக்கள் இல்லறம் கூறுகையில் அவ்விருவரும் புதல்வனோடு இருந்தநிலை போன்றவற்றிற்குத் தாய் கூற்றில் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
தலைவியின் உடலழகை உவமைகளின் வழியாக வெளிப்படுத்துவர் சங்கப்புலவர்கள். தலைவியின் கூந்தலை,

"துஞ்சா கோவற் கோமான்
நெடுந்தேர்க் கண்டு கொடுங்கால் முன்துறை
பெண்ணெ அம்பேரியற்று நுண்அறல் கடுக்கும்
நெறிஇருங் கதுப்பின் என்பேதைக்கு"(அகம் பா-35)

எனும் பாடலடிகள் தலைவியின் கூந்தலுக்குக் கூறப்பட்டுள்ள உவமையை உணர்த்துகின்றது. இடைவிடாது முழவு ஒலிக்கும் திருக்கோவலூர்க்குத் தலைவனுக்கு நீண்ட தேரினையுடைவனுமான காரியின் கொடுங்கால் எனும் ஊரின்கண் இருக்கும் பென்னையாற்றின், முன்துறையில் காணப்படும் நுண்ணிய கருமணல் போன்ற நெறிந்த கருங்கூந்தலையுடைய எம்மகள் என்று தாய் அவ்வுவமையில் சுட்டுகின்றாள்.

தலைவன் பற்றிய உவமை

தாய் கூற்றில் தலைவனின் வலிமைக்கும் வீரத்திற்கும் உவமை கூறப்பட்டுள்ளது. தலைவனின் வலிமையை,

"வயக் களிற்று அன்ன காளை"(அகம் பா-55)

"மிளி முன்பின் காளை"( அகம் பா-397)

"துணிந் தோன் மன்ற துணை வெங்காளை"(ஐங்குநூறு,பா-374)

எனும் அடிகளில் ஆண் யானை, எமன் விரைந்தோடும் காளை ஆகியன அவனது வலிமைக்கு உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன.

தலைமகள் பற்றிய உவமை

தலைமக்களின் மனையறம் காணச் சென்ற செவிலித்தாய், அவர்கள் தான் பெற்ற புதல்வனோடு இருக்கும் இன்ப நிலையினைக் கண்டு,

"மறிஇடைப் படுத்த மான்கினை போல" (அகம் பா-397)

என்று குறிப்பிடுகிறாள். இதில் புதல்வனை நடுவாகக் கொண்டு தலைவனும், தலைவியும் படுத்திருக்கும் காட்சி மான்குட்டி இடையே படுத்திருக்க அதன் இருபக்கங்களிலும், ஆண் மானும், பெண் மானும் படுத்திருப்பதற்கு உவமையாக இங்குக் கூறப்பட்டுள்ளது.

உடன்போக்கில் தலைவி

உடன்போன தலைவியைத் தேடிச்சென்று, பார்க்காமல் திரும்பி வந்த தாய்,

"அந்தக் கள்வர் ஆதொரு அறுத்தென
பிற்படு பூசலின் வழிவழிஓடி
மெய்த் தலைப்படதல் செல்லேன்" (அகம் பா-7)

என்று கூறுகின்றார். தங்களது தொழுவங்களிலிருந்து பசுக்களைக் கவர்ந்து செல்லும் ஆறலை கள்வரின் பின்னே, அப்பசுக்களுக்குரியவர்கள் எவ்வாறு மீட்பதற்காக ஓடுவார்களோ, அது போன்று நானும் அம்மனநிலைக்குரியவளாய் அவளை மீட்டுவர ஓடினேன் என்கிறாள். தலைவி உடன்போக்கினை மேற்கொள்வாள் என்பதை அறிந்திருந்தால் தாய் பாதுகாத்து இருப்பாள் என்ற நிகழ்வினை,

"செல்வுழிச் செல்அழி மெய்நிழல் போல"(அகம் பா-44)

என்ற பாடலடியின் உவமை நயம்படக்கூறுவதை அறிய முடிகிறது.

உடன்போக்கில் வரலாற்றுச் செய்தி

தலைவி உடன்போன பின்பும், உலகப்பற்றினால் என் உயிர் என்னை விட்டுப் போகாதிருக்கின்றது எனத் தன் உயிர் குறித்து தாய் கூறும் பொழுது,

"கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொழுது புண் நாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென
இன்னா இன்உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனோடு செலீஇயர்
பெரும் பிறிது ஆகியாங்கு" (அகம் பா-30)

என்று சுட்டுகிறார். இப்பாடல் அடியில் வரலாற்றுச் செய்தி உவமையாகக் கூறப்படுகிறது.

வெண்ணிப் போர்க்களத்தில், கரிகால்வளவனுக்கும், பெருஞ்சேரலாதனுக்கும் போர் நடந்தது. அப்போரில் புறப்புண்பட்டதற்கு நாணியவனாய் பெருஞ்சேரலாதன் வாளொடு வடக்கிருந்து உயிர்விட்டான். இதனைக் கேட்ட சான்றோர் அவனோடு தாமும் துறக்கம் செல்லுதற்பொருட்டு தமது உயிரை விட்டனர். அப்படி என் உயிரும் போகவில்லையே எனத் தாய் வருந்தி உரைக்கின்றாள்.

சேரலாதனுக்காகச் சான்றோர் உயிர்விட்டது போல, தலைவி சென்ற பின்னர் தமது உயிரும் போகவில்லை என்பதன் வழி சான்றோரின் உயிருக்குத் தமது உயிரினை உவமித்துக் கூறுகிறாள். இவ்வாறான நிலைகளில் உவமைகள் அகநானுற்றுப் பாடல்களில் கையாளப்பட்டுள்ளன.

தொகுப்பு

உலக உயிர்கள் அனைத்திற்கும் தாய் என்பவளே முதன்மையானவள். ‘அன்னையே முன்னறி தெய்வம்" என்றும் ‘தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை’ என்றும் சான்றோர்கள் கூறுவதிலிருந்து தாயின் சிறப்பை அறிய முடிகிறது.

இலக்கியங்களிலும் தாய்களை புலவர்கள் புறப்பாடல்களில் வீரத்தாயாகவும், அகப் பாடல்களில் அன்பும், அருளும் உடையவர்களாகவும் படைத்துக் காட்டுகின்றனர். இலக்கியத்தில் வரும் உத்திகளில் உவமை என்னும் உத்தி சிறப்பு பெறுகின்றது.

அகநானுற்று பாடல்களில் தாய்கூற்று பாடல்கள் வாயிலாகச் சொல்லப்படும் உவமைகளிலிருந்து, தலைவியின் இல்லச்சிறப்பு, இல்லக்காவலின் கடுமை, தலைமக்களின் நிலை, பாலை வழித்தன்மையின் நிலை ஆகியவை சிறப்பாக உவமித்துச் சொல்லப்பட்டுள்ளன.

தலைவியின் கூந்தல் சிறப்பை கருமணலோடு உவமித்து நயம்படவும், வரலாற்றுச்செய்திகளை சிறப்பு தரும் விதமாகவும் தாய் கூற்றுப்பாடல்களின் வழி புலவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இச்செய்திகள் அனைத்தும் மேன்மைபெற உவமைகளே காரணிகளாக அமைகின்றன என்பது இங்கு ஆய்ந்து அறியப்பட்டவையாகும்.

About The Author