அடுத்தவங்களை சந்தோஷப்படுத்துவதை விட பெரிய வேலை ஒன்றும் இல்ல..””

வாழ்க்கையில் சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்பது தான் எல்லோரும் பெரிதும் விரும்புவது. ஆனால் அடுத்தவர்களை எப்போதும் தன் நகைச்சுவையால் சந்தோஷப்படுத்திக் கொண்டே இருக்க முடிவதென்பது பெரிய வரம். அது காமெடி நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் அரிய வரம்.

மனோரமா, கோவை சரளா இவர்கள் வரிசையில் காமெடிக்கு அடுத்த வாரிசாக கலைஞர் டிவியில் "பாட்டு பத்து" நிகழ்ச்சியில் கலக்கும் கலைமாமணி ஆர்த்தி. இவர் இளம் வயதிலேயே கலைமாமணி விருது பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர். இவர் இருக்குமிடம் எப்போதும் சிரிப்பொலி இருந்து கொண்டே இருக்கும். எந்த சேனலை டியுன் பண்ணினாலும் ஆர்த்தியின் காமெடி டிராக் போய்க் கொண்டிருக்கிறது.

மெஹா டிவியில் வரும் "தினம் தினம் தீபாவளி" சீரியலின் 100 வது எபிசோட் சூட்டிங் கொண்டாட்டத்தில் ஜாலி ஹோலியாக இருந்தவரை நமக்காக சற்று ஓரங்கட்டினோம்.

"அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதை விட பெரிய வேலை வேறு எதுவும் இந்த உலகில் இருப்பதாக எனக்கு தெரியலங்க…" என்று தன் அரட்டையை நம்மிடம் ஆரம்பித்தார்.

ஆர்த்தியின் காமெடி பஜார் எப்போது ஆரம்பித்தது ?

நான் பிறந்தது குளுகுளு ஊட்டியில். அதனாலேயோ என்னவோ எப்போதும் கூலா சிரிச்சுக்கிட்டும், பிறரை சிரிக்க வச்சிகிட்டும் இருப்பேன். எனக்கு ஒரு அக்கா இருக்காங்க. அம்மாவுக்கு நான் ரொம்ப செல்லப் பிள்ளை. அம்மா, அப்பா இரண்டு பேருமே கலெக்டர் ஆபிஸ்ல வேலை பார்க்கிறாங்க.

மூணு வயசாகும் போது கோயம்பத்தூர்ல கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திய டான்ஸ் போட்டியில் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கினேன். அப்போது பாலசந்தர் சார் தான் எனக்கு பரிசு கொடுத்தார். நான் ரொம்ப துறுதுறுன்னு சின்னப் பிள்ளையில இருப்பேன். அவரோட ‘வண்ணக்கனவுகள்’ படத்தில என்னை நடிக்க வச்சார். அந்தப் படத்தோட 100 வது நாள் விழாவுல டி.ஆர் பார்த்துட்டு என்னை ஒரு வசனம் பேசச் சொன்னார். நான் அவர் வாய்ஸ்லேயே அந்த வசனத்தைப் பேசி காண்பிச்சேன் . அது பிடிச்சுப் போய் அவரோட ‘என் தங்கை கல்யாணி’ படத்தில நடிக்க வெச்சார். இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தின்னு கிட்டத்தட்ட 60 படங்கள் எட்டாவது படிக்கும் வரை நடிச்சேன். அதன் பிறகு எங்க வீட்டில படிப்பு தான்னு சொல்லிட்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுட்டாங்க.

மீண்டும் திரைப் பிரவேசம் காலேஜ் முதல் ஆண்டு படிக்கும்போது நடந்தது. "ஒரு கதையின் கதை" சீரியலுக்காக மீண்டும் என்னைக் கூப்பிட்டார்கள். காலேஜ் வந்தாச்சு. அதனால வீட்டிலேயும் திரும்ப நடிக்க கிரீன் சிக்னல். அதன் பிறகு எனக்கு பேர் வாங்கி கொடுத்தது சன் டிவி டாப் 10 நிகழ்ச்சி. சினிமாவில் என் ரீ-என்ட்ரி "அருள்" படம். இப்படி தினம் தினம் பிசியா போகுது வாழ்க்கை.

எப்படி உங்களால் எல்லா நடிகைகளையும் அப்படியே இமிடேட் பண்ண முடியுது ?

அதற்கு நான் கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும். ஹீரோயினா இருந்திருந்தா குறிப்பிட்ட படத்தில மட்டும் தான் நடிச்சிருக்க முடியும். என்னால 60 களில் வந்த படத்துக்குக் கூட ஹீரோயினா நடிக்க முடியுது. இந்த நிகழ்ச்சி மூலமா எல்லா நடிகை மாதிரியும் நடிச்சிட்டேன். அந்த திருப்தி எனக்கு இருக்கு. நாங்க யாரையும் இந்த நிகழ்ச்சியில புண்படுத்துவதில்லை. ஒரு கேரக்டரை இமிடேட் பண்ணினா அந்த கேரக்டர் ‘ஹிட்’டுனு அர்த்தம். அதனால நிறைய பேர் என்னைப் பாராட்டி இருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்கு விஜய்,விக்ரம்,சுந்தர் சி மாதிரி நிறைய ரசிகர்கள். என் படத்தை இந்த வாரம் காமெடி பண்ணுங்கனு ஜோதிகா, ஸ்நேகா எல்லோரும் என்கிட்ட கேட்டிருக்காங்க. அது தாங்க, நான் மட்டுமல்ல.. எங்க டீம் ஜெயிச்சதுக்கு பெரிய பிளஸ்ஸா அமைஞ்சது. அதே போல் ரசிகர்களின் கைதட்டல் தான் என்னால ஒரு காமெடி ஆர்டிஸ்ட்னு இன்றைக்கு சொல்லிக்க முடியுது.

சினிமா இன்டஸ்ட்ரில பெண்களுக்கு காமெடி வராதுன்னு சொல்வாங்களே. ஆனா நீங்க எப்படி ஜெயிச்சீங்க ?

அதெல்லாம் ஆணாதிக்கம் உள்ளவர்கள் தான் அப்படி சொல்வார்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் காமெடி பண்ணுவார்கள். பெண்களை ஜெயிக்க விடக் கூடாதுன்னு நினைச்சிகிட்டு அப்பல்லாம் ஆண்களுக்கே காமெடி ஸ்கிரிப்ட் எழுதுவாங்க. அதையும் தாண்டி நம்ம மனோரமா ஆச்சி ஜெயிச்சிருக்காங்க. அவங்களைத் தான் என்னோட ரோல் மாடல்னு சொல்வேன்.

சமீபத்தில ஆச்சிக்குப் பிறகு ஆர்த்தி தான் காமெடிக்குனு என்னை ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சில கலா மாஸ்டரும், குஷ்பு மேடமும் சொன்னாங்க. எனக்கு 10 லட்ச ரூபாய் கிடைச்ச மாதிரி இருந்தது. இதை விட பெரிய பரிசு வேறு என்ன இருக்கப் போகிறது சொல்லுங்க. நானே ஸ்கிரிப்ட் எழுதி, டைரக்ஷனும் பண்ற நிகழ்ச்சி ஹா ஹா மாயா. குழந்தைகளுக்கான அந்த நிகழ்ச்சி மிஸ்டர் பீன் மாதிரி முழுசும் மைமிங் தான். டயலாக்கே கிடையாது.

எனக்கு கலைமாமணி கொடுக்க முடிவு செய்த போது நிறைய பேர் இன்டஸ்டிரில கேட்டார்கள்.. என்ன சாதித்துவிட்டார் என்று இந்த விருது கொடுக்கிறாங்கனு. இங்குள்ள டிரைக்டர்கள் தமிழ், மண் வாசம்னு பேசுவார்கள். படம் எடுப்பார்கள். ஆனால் ஒரு தமிழ்ப் பெண்ணை ஹீரோயினாக போட முன் வர மாட்டார்கள். நம் தமிழ்ப் பெண்களின் திறமை மீது ஏனோ இவர்களுக்கு நம்பிக்கை இருப்பதில்லை. அதையும் தாண்டி ஒருவர் முன்னுக்கு வந்தால் அதை ஏற்றுக் கொள்ள மனம் வருவதில்லை.

கலைஞர் ஐயாவுக்கு எப்போதும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன். சின்ன பொண்ணுனு பார்க்காம என் திறமையைப் பாராட்டி அந்த விருதை எனக்குக் கொடுத்தார். இந்த மாதிரி விருதுகள் தான் இன்னும் நல்லா பண்ணனும்னு உற்சாகப்படுத்துகிற எனர்ஜி டானிக்.

எல்லோருக்கும் உங்களை பிடிக்கும். உங்களுக்கு பிடித்தவர்; பாதிப்பு ஏற்படுத்தியவர் யார் ?

ஆச்சியையும், நாகேஷையும் எனக்கு பிடிக்கும். காமெடி ஆர்டிஸ்ட்ட்டா என்னைப் பாதித்த இரண்டு சம்பவங்களைச் சொல்லணும்.

நாங்க துபாய் ஷோவிற்கு போய்ட்டு பிளைட்டுக்காக ஏர்போர்ட்டில ஒரு நாள் முழுதும் காத்துக் கிடந்தோம். அங்கு சுத்தம் பண்ணிக் கொண்டு ஒரு ஆள் இருந்தார். அவர் பக்கத்திலேயே அவர்களைக் கண்காணிக்கும் ஆள் இடுப்பில் சங்கிலியோடு இவர்களை எல்லாம் வேலை வாங்கிக் கொண்டு இருந்தார். கொஞ்ச நேரம் அவர் எங்கோ போய் விட்டார்.

அவர் போனதும் அந்த சுத்தம் செய்து கொண்டிருந்தவர் என்னிடம் வந்து "மேடம்.. நீங்க டிவில நடிக்கிறவங்க தானே. நான் தமிழ்நாடு தான். உங்க நிகழ்ச்சி எல்லாம் பார்த்திருக்கேன். உங்களைப் பார்த்ததும் எனக்கு பயங்கர சந்தோஷமா இருக்கு. என் குடும்பத்தைப் பார்த்த சந்தோஷம். என்னிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டு இங்கு கொண்டு வந்து விட்டார்கள். இங்கு பயங்கரமா கொடுமைப் படுத்துறாங்க. ஆனா உங்களைப் பார்த்ததும் எனக்கு உங்க நிகழ்ச்சி நினைவுக்கு வருது. கூடவே சிரிப்பும் வருது" என்று கண்களில் நீர் கசிய அவர் என்னைப் பார்த்து சிரித்தார். அந்த அழுகையையும், சிரிப்பையும் கண்டிப்பா சிவாஜியால கூட நடிச்சிருக்க முடியாது. அது என்னை ரொம்ப பாதிச்சது.

நம்ம தமிழர்கள் எப்படி எல்லாம் வெளிநாட்டுல கஷ்டப்படறாங்க! ஒட்டகம் மேய்க்கிறவங்க நிறைய பேர் தமிழர்கள் தான். அதே மாதிரி மேக்கப்மேன் ஒருவருடைய மனைவி இறந்ததற்காக அவர்கள் வீட்டுக்குப் போனேன். அங்கு அழுது கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சாவு வீடு அது என்பதையும் மறந்து எல்லோரும் என்னிடம் என் நிகழ்ச்சி பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள். என்னோட உண்மையான சோகத்தை வெளியில் காட்ட முடியாத நிர்பந்தம். அவர்களுக்கு நம்மால் சங்கடம் ஏற்பட்டுவிடுமோனு பயந்துகிட்டு உடனே கிளம்பி வந்துட்டேன். இது இரண்டுமே எதிர்பாராதவிதமா நடந்த சம்பவங்கள்தான். இதைவிட பெரிய பாதிப்பு வேறு என்ன இருக்கிறது?

ஆர்த்தி நிஜ வாழ்க்கையில் எப்படி?

ஸ்கிரினுக்கு முன்னாடி எப்படியோ அப்படியே தான். எனக்கு வெளியில் சுத்துவது பிடிக்காது. எப்போதும் என் லேப்டாப்பில் ஏதாவது செய்து கொண்டு இருப்பேன். நிறைய படம் பார்ப்பேன். எம்பிஏ முடிச்சிட்டேன். அடுத்து ஐ.ஏ.எஸ் கோச்சிங் போயிட்டுருக்கேன். எனக்கு கலெக்டராக னும் என்பது தான் ஆசை. எங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ரிட்டயர்டு ஆகும் போது நான் தான் கையெழுத்து போடனும் என்பது ஆசை. எனக்கு இயல்பாகவே சமூக அக்கறை நிறைய உண்டு. லியோ கிளப்ல மெம்பரா இருப்பதால் இரத்த தானம் போன்றவை கிளப்பில உள்ளவங்க கூட சேர்ந்து செய்றோம். எனக்கு இப்போது ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சில ஜெயிக்கணும் என்பது தான் சமீபத்திய கனவு.

வரும் காலத்தில முழு காமெடி படம் ஒன்னு நானே டைரக்ட் பண்ணனும். திறமை இருக்கிற புது முகங்களுக்கு வாய்ப்பு தரனும். இன்னும் எத்தைனையோ பேர் ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் போகக் கூட முடியாமல் இருக்கிறார்கள். கேமரா முன்னாடி நிக்கிற எல்லோரும் வாழ்க்கையில் ஜெயிச்ச கலைஞர்கள்தான். அவங்களுக்குள்ள இருக்கிற எல்லா சந்தோஷம், துக்கம் எல்லாத்தையும் ஓரம் கட்டிட்டு கேரக்டருக்கு மட்டும் உணர்ச்சி கொடுத்து நிற்கும் எல்லோருமே மகா கலைஞர்கள் தான்.

கனவுகள் மெய்ப்படத் தானே எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறோம். இவரது கனவுகள் மெய்ப்பட வாழ்த்திவிட்டு வந்தோம்.

(நன்றி : தினமலர்)”

About The Author