அடையாளம் தவிர்ப்பவன்

அடையாளங்களை அப்புறப்படுத்துவதே
அவனது தவிர்க்க இயலா பொழுதுபோக்கு.
பெயரினை விரிக்கிறான், சுருக்குகிறான்,
புதிய பெயர்களால் தன்னை அழைத்துக்கொண்டு
பழகியவர்களை பீதியுறச் செய்கிறான்.

எந்தவொரு அடையாளத்துடனும்
எவரும் தன்னை அடையாளப்படுத்துவதை
அவன் துரும்பளவும் விரும்பவில்லையென்பதாய்
தன் விநோதச் செயல்களுக்குக் காரணம் சொல்லி
பரிகாசத்தையும் பரிதாபத்தையும்
பரிசிலாய்ப் பெற்றுக்கொள்கிறான்.

சிகை அலங்காரம் முதல்
புகை பிடிக்கும் லாவகம் வரை
தனக்கென்று எதையும் தக்கவைப்பதில்லை.
அபாரம் என்னும் அடைமொழிகளை
அவன் ரசிப்பதுமில்லை,
சகிக்கவில்லையென்னும் முகச்சுளிப்பையும்
அவன் பொருட்படுத்துவதில்லை.

வானளாவிப் பறந்தாலும்,
வட்டமிட்டுக் கரணமடித்தாலும்,
பக்கமிருக்கும் மரக்கிளையில் சிக்கி,
கிழிபட்டுக் காற்றாடாதபோதும்
காற்றாடியென்றே குறிப்பிடுதல் போல்….

பெயரோ… தொழிலோ…
தோற்றமோ… தோரணையோ… ஏதோவொன்று
அத்தியாவசியமாய் தேவைப்படுகிறது எல்லோருக்கும்
அவனைக் குறிப்பதற்கு.

அடையாளங்களை அடியோடு வெறுத்தவன்,
இப்போது பரவலாக அறியப்படுகிறான்,
தனக்கெனவோர் அடையாளத்தைத்
தக்கவைத்துக்கொள்ளாதவன் என்னும்
நிரந்தர அடையாளக்குறிப்போடு.

About The Author

4 Comments

  1. கலையரசி

    அன்பு கீதா,
    ”வானளாவிப் பறந்தாலும்,
    வட்டமிட்டுக் கரணமடித்தாலும்,
    பக்கமிருக்கும் மரக்கிளையில் சிக்கி,
    கிழிபட்டுக் காற்றாடாதபோதும்
    காற்றாடியென்றே குறிப்பிடுதல் போல்….”

    இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன். அடையாளத்தை வெறுக்கும் அவனுக்கு அதுவே அடையாளக்குறியீடானது சோகத்திலும் சோகம் தான்! புதுமையான ஒரு கருவைக் கொண்ட நல்ல கவிதை. பாராட்டுக்கள் கீதா!

  2. கீதா

    ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு மினிக்கும், கலையரசி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Comments are closed.