அந்த ஏழு நாட்கள்

ஏகநாதர் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே இவரது உள்ளத்தில் பக்தி கனல் விட்டு எரிந்தது. இல்வாழ்வில் ஈடுபட்வர். அனைவரிடமும் எல்லையற்ற அன்புடையவர். கண்ணனை அனைத்திலும் கண்டவர். பாண்டுரங்கனின் தீவிர பக்தர், சிறந்த நெறியாளர், பெரிய ஞானி.

ஒருமுறை அவரிடம் ஒரு குடும்பத்தலைவர் வந்து, "நான் பாவம் செய்யவே வேண்டாம் என்றுதான் முடிவெடுக்கிறேன், முயல்கிறேன். ஆனால் என்னையும் மீறிப் பாவங்கள் செய்துவிடுகிறேன். பாவம் செய்வதிலிருந்து என்னை நீங்கள்தான் காக்க வேண்டும்" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்

ஏகநாதர் அவரிடம், "என்ன பாவங்கள் நீங்கள் செய்தாலும் இன்னும் ஏழே ஏழு நாட்களுக்குதானே! அதற்கு மேல் நீங்கள் பாவம் செய்யப்போவதில்லையே!" என்றார்.

குடும்பத்தலைவர் "ஒன்றும் புரியவில்லையே சுவாமி!" என்றார் பயந்து கொண்டே.

ஏகநாதர் சொன்னார், "உங்களுக்கு ஆயுள் இன்னும் ஏழுநாட்கள்தானே!" என்று.

மனம் துவண்டு வீடு திரும்பிய குடும்பத்தலைவர்,

"என் வாழ்நாள் இன்னும் ஏழுநாட்கள்தானே! நான் என்ன செய்வேன்?" என்று புலம்பிய வண்ண்ம் இறைவனைத் தியானம் செய்யத் துவங்கினார்.

ஆறு நாட்களும் இடைவிடாது கடவுளைத் தியானம் செய்துகொண்டே இருந்தார். வேறு எந்த நினைவும் செயலும் இல்லாமல். ஏழாம் நாள் காலையில் ஏகநாதர் அவரைத் தேடி வந்தார். அன்புடன் "எப்படி இருக்கிறீர்கள்?" என்று வினவினார்.

"இன்றுதானே என் வாழ்வின் கடைசி நாள்! அதனால் இறைவனுடைய நினைவாகவே இருக்கிறேன். வேறு எந்தச் சிந்தனையும் இல்லை" என்றார் அந்தக் குடும்பத்தலைவர்.

ஏகநாதர் கேட்டார் "இந்த ஏழு நாட்களில் எத்தனை பாவங்கள் செய்திருப்பீர்கள்?" என்று.

"நான் இறைவனுடைய இடைவிடாத தியானத்தில் இருக்கும்போது எப்படிப் பாவங்கள் செய்ய முடியும்?" என்றார் அவர்.

ஏகநாதர் சொன்னார் "மரணம் நெருங்கி விட்டது என்ற பயம் வந்தவுடன் இறைவனின் நினைவு நமக்கு வருகிறது. அதனால்தான் உங்களுடைய ஆயுள் ஒரு வாரத்தில் முடியுமென்று சொன்னேன். மரணம் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்ற பயம் மனிதனுக்கு இருந்தால் அவன் ஒருபோதும் பாவச் செயல்களில் ஈடுபட மாட்டான்."

ஏகநாதர் பற்றி இன்னொரு செய்தி அவரை அவமானப்படுத்த நினைத்து அவர் மீது எச்சில் துப்பினான் ஒரு மூர்க்கன். அவர் அமைதியாய்ச் சென்று நதியில் நீராடி வந்தார். மீண்டும் எச்சில் துப்பினான். ஒருமுறை, இருமுறையல்ல, மீண்டும் மீண்டும் 108 முறை அவன் அவ்வாறு செய்தும் அவர் பொறுமையுடன் 108 முறை நீராடி வந்தார். அவரது பொறுமை அம் மூர்க்கனிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அவரது சீடனாகவே மாறிவிட்டான்.

About The Author

1 Comment

  1. raj

    கடைசி செய்தியில் ஒரு விளக்கம். 108 முறை குளித்தபின்னும், அந்த மூர்க்கன் அவரிடம் இத்தனை முறை நான் உன் மீது எச்சில் துப்பினேனே, என் மீது கோபம் வரவில்லையா என்று கேட்டான். அதற்கு அவர், உன்னால் தானே எனக்கு இந்த நதியில் 108 முறை புனித நீராடும் வாய்ப்பு ஒரே நாளில் கிடைத்தது. இல்லையென்றால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காதே. எனவே நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர ஏன் உன் மேல் கோபப்பட வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட அவன் மனம் வருந்தி திருந்தினான்.

Comments are closed.