அனாடமிக் தெரபி (19)-நீரிழிவு நோய் (3)

சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய் – 3

நாம் குழந்தையாக இருக்கும்பொழுது நாம் சாப்பிடுகிற உணவு நல்லபடியாக ஜீரணம் ஆகிறது. ஏனென்றால், குழந்தைக்கு டென்சன், கோபம், பயம் ஏதும் கிடையாது. அதனால், நல்லபடியாக ஜீரணமாகி நல்ல சர்க்கரை மட்டுமே இரத்தத்தில் கலக்கிறது.

உதாரணமாக, ஒரு குழந்தை சாப்பிடுகிறது. அதில் 500 சர்க்கரை இரத்தத்தில் கலக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தை நல்லபடியாக ஜீரணம் செய்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, ஒழுங்காக ஜீரணமான 500 சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது. இந்த 500 நல்ல சர்க்கரையும் செல்லுக்குள் செல்வதற்கு முயற்சி செய்யும். ஆனால், என்னதான் நல்ல சர்க்கரையாக இருந்தாலும், இன்சுலின் இல்லையெனும் காரணத்தால் செல்லுக்குள் நுழைய முடியாது. இந்த 500 சர்க்கரையும் கணையத்திற்குச் செல்லும். கணையம் இந்த 500 சர்க்கரைகளையும் சோதித்துப் பார்த்து நல்ல சர்க்கரைகளாக இருப்பதால் 500 இன்சுலினைச் சுரக்கும். ஒரு சர்க்கரைக்கு ஒரு இன்சுலின்தான் கிடைக்கும். அதுவும் நல்ல சர்க்கரையாக இருந்தால் மட்டுமே. இந்த 500 சர்க்கரைகளும் நல்ல சர்க்கரைகளாக இருப்பதால், அனைத்திற்கும் இன்சுலின் கிடைத்து விட்டது. இப்பொழுது குழந்தையின் இரத்தத்தில் 500 நல்ல சர்க்கரைகள், இன்சுலின் என்ற சாவியுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

குழந்தையின் உடம்புக்கு 300 சர்க்கரை தேவைப்படுகிறது என வைத்துக் கொள்வோம். செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைகளைத் தனது வேலைக்காக, தேவைக்காக, நோயைக் குணப்படுத்துவதற்காக எடுத்துக் கொள்கின்றன. இப்பொழுது 300 சர்க்கரைகள் செல்களுக்குள் புகுந்து விட்டன. மீதமுள்ள 200 சர்க்கரைகள் இரத்தத்தில் மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வரும். செல்கள் தேவைக்கு அதிகமான பொருட்களை ஒருபொழுதும் உள்ளே எடுத்துக் கொள்ளாது. "இரத்தத்தில் 500 சர்க்கரை இருப்பதால் நாம் சேர்த்து வைத்துக் கொள்வோம்; பிறகு தேவைப்படு"மென்று செல்கள் எடுக்காது. இப்பொழுது, தேவையில்லாத ஆனால் நல்ல தரம் வாய்ந்த 200 சர்க்கரைகள் இரத்தத்தில் சுற்றிச் சுற்றி வருகின்றன. இந்தச் சர்க்கரைகள் என்னவாகும்?
நம் வீட்டிற்கு 500 ரூபாய் சம்பாதித்து எடுத்துப் போகிறோம். குடும்பச் செலவுக்கு 300 ரூபாய் தேவைப்படுகிறது. மீதமுள்ள 200 ரூபாயை அளவுக்கு அதிகமாகச் சம்பாதித்து விட்டோமென்று கிழித்துக் குப்பையில் போடுவோமா? என்ன செய்வோம்? பத்து, பத்து ரூபாயாக இருந்தால் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களாக மாற்றி பீரோவில் சேர்த்து வைப்போம். அதே போல், குழந்தை சம்பாதித்தது 500 சர்க்கரை, செலவு 300 சர்க்கரை. மீதமுள்ள 200 சர்க்கரையை, அதாவது குளுக்கோசை ஒன்று சேர்த்து ஒரு பொருளாக மாற்றும் நமது கல்லீரல். அதன் பெயர் கிளைகோஜன்.

குளுக்கோஸ் என்பது ஒற்றைச் சர்க்கரை. கிளைகோஜன் என்பது நிறையச் சர்க்கரைகளை ஒன்று சேர்த்தால் கிடைக்கும் ஒரு பொருள். நாம் எப்படி 10 ரூபாய் நோட்டை 100 ரூபாயாக மாற்றிச் சேமித்து வைக்கிறோமோ, அதே போல் தனித் தனிச் சர்க்கரைகளாக இருப்பவற்றை ஒன்று சேர்த்து கிளைகோஜன்னாக -அதாவது செறிவூட்டப்பட்ட சர்க்கரையாக- மாற்றிக் கல்லீரல், தசை நார்கள், மூளை ஆகிய இடங்களில் உடம்பு சேமித்து வைக்கிறது. இப்பொழுது அந்தக் குழந்தைக்குச் சர்க்கரை நோய் கிடையாது.

இந்தக் குழந்தையின் ஜீரணத்தை முதன் முதலில் கெடுப்பது அதன் அம்மாதான். மனதிற்குப் பிடித்தவாறு விளையாடிக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையை முதன் முதலில் நாம் பள்ளிக்கு அனுப்புகிறோம். "8 மணிக்கு ஸ்கூல் வேன் வந்து விடும்! உடனே தயாராகு!" என்று தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி, விருப்பமில்லாமல் குளிப்பாட்டி, விருப்பமில்லாமல் பசியில்லாமல் சாப்பாடு ஊட்டுகிறோம். தாய்மார்கள் சிலர் குழந்தை சாப்பிடவில்லையென்றால் அடிக்கிறார்கள். ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்து நடுநடுவே ஊற்றி ஊற்றி விழுங்க வைக்கிறார்கள்.

இது போலக் குழந்தைக்கு விருப்பமில்லாதபோது, பசியில்லாதபோது உணவு கொடுத்தால் அந்த உணவு ஒழுங்காக ஜீரணம் ஆவது கிடையாது. இப்பொழுது அந்தக் குழந்தைக்கு 300 சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகி 200 சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகவில்லை என்று வைத்துக் கொள்வோம். என்னாகும்? இரத்தத்தில் 300 நல்ல சர்க்கரையும், 200 கெட்ட சர்க்கரையும் உள்ளன. குழந்தையின் கணையம் 300 இன்சுலின் மட்டுமே சுரக்கும். கெட்ட சர்க்கரைகளுக்கு இன்சுலின் சுரக்காது. எனவே, கணையம் குறைவாக இன்சுலின் சுரப்பது கணையத்தின் தவறு கிடையாது. ஜீரணத்தின் குறைபாடே என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்!

இந்த இன்சுலின் பெற்றுக் கொண்ட 300 நல்ல சர்க்கரைகள் செல்லுக்குள் செல்லும். ஆனால், இன்சுலின் கிடைக்காத 200 கெட்ட சர்க்கரைகள் இரத்தத்தில் சுற்றிச் சுற்றி வரும். இவை செல்லுக்குள்ளும் நுழைய முடியாது. கிளைகோஜன்னாகவும் மாற முடியாது. எந்தக் கல்லீரல் அளவுக்கதிகமான நல்ல சர்க்கரைகளை பீரோவில் சேமிப்பது போல் ஆங்காங்கே கொண்டு சேர்த்ததோ, அதே கல்லீரல் இன்சுலின் இல்லாத சர்க்கரைகளை, ‘இவை கெட்ட சர்க்கரைகள்; இவற்றால் நம் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை’ என்று முடிவெடுத்து அவற்றைச் சிறுநீரகத்திற்கு அனுப்பி வைக்கும். சிறுநீரகம் இந்தக் கெட்ட சர்க்கரைகளை சிறுநீர்ப் பைக்கு அனுப்பி வைக்கும். கெட்ட சர்க்கரை சிறுநீராக வெளியேறும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாகச் சிறுநீர் செல்வதற்கும், அந்தச் சிறுநீரில் சர்க்கரை இருப்பதற்கும் காரணம் கணையமோ, கல்லீரலோ, சிறுநீரகமோ, சிறுநீர்ப் பையோ கிடையாது. ஒரு கம்பெனியில் தயாரிக்கப்படும் தரம் குறைந்த பொருட்களை எப்படி வெளியே வீசுகிறார்களோ அதே போல் உணவு ஒழுங்காக ஜீரணமாகாததால் கிடைத்த கெட்ட சர்க்கரையை நம் உடம்பு வேண்டாமென்று வெளியே கழிவாக அனுப்புகிறது.

இந்தச் சிறுநீரைச் சோதித்து அதில் இருக்கும் சர்க்கரையின் அளவை வைத்து உங்களைச் சர்க்கரை நோயாளி என்று கூறுகிறார்கள். இது ஒரு தவறான கருத்தாகும். சிறுநீராகச் செல்லும் சர்க்கரை அனைத்தும் தேவையில்லாத சர்க்கரையென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! நம் உடலுக்கு அறிவுள்ளது என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். சிறுநீரகமும், சிறுநீர்ப் பையும் அறிவு கெட்டத்தனமாக நல்ல சர்க்கரையை என்றுமே வெளியேற்றுவதில்லை. கிளைகோஜன்னாக மாறும் அனைத்தும் நல்ல சர்க்கரைகள். சிறுநீராக வெளியேறும் அனைத்தும் கெட்ட சர்க்கரைகள். எனவே, சிறுநீரில் சர்க்கரை வருகிறதென்று தயவு செய்து பயப்படாதீர்கள்! அது சாக்கடைக்குச் செல்ல வேண்டிய சர்க்கரை.

ஆனால், இப்பொழுதும் இந்தக் குழந்தைக்குச் சர்க்கரை நோய் கிடையாது. இந்தக் குழந்தை படித்துப் பெரிய ஆளாகி ஒரு நிறுவனத்திற்குத் தலைவராகிறது என்று வைத்துக் கொள்வோம். முதலாளிகள் என்றுமே காலையில் ஒழுங்காகச் சாப்பிட மாட்டார்கள். மதியம் பசியெடுக்கும்பொழுது சாப்பிடாமல் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இரவு 11 மணி, 12 மணிக்குப் போல வீட்டுக்கு வந்து தேவையில்லாமல் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவார்கள். இப்படித் தவறான உணவுப் பழக்க வழக்கம் ஏற்படும்பொழுது ஜீரணம் ஒழுங்காக ஆகாமல் கெட்ட சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

உதாரணமாக, ஒருவருக்கு 300 கெட்ட சர்க்கரையும், 200 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறதென்று வைத்துக் கொள்வோம். 200 நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் கிடைத்தவுடன், செல்லுக்குள் புகுந்து விடும். 300 சர்க்கரை இன்சுலின் கிடைக்காததால் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். ஆனால், அவருக்கு இன்று உடலுக்கு 300 சர்க்கரை தேவைப்படுகிறது. 200 மட்டுமே உள்ளே சென்றுள்ளது. 100 பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உடல் என்ன செய்யும்?

நம் வீட்டில் 500 ரூபாய் சம்பாதித்து வருகிறோம். அதில் 300 ரூபாய் கள்ள நோட்டு, 200 ரூபாய் நல்ல நோட்டு. 200 ரூபாயைக் குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துவோம். 300 ரூபாயை, அவை கள்ள நோட்டுகள் எனத் தெரிந்தவுடன் கிழித்துக் குப்பையில் போடுவோம். அதே போல், எப்பொழுது கள்ளச் சர்க்கரை உடலுக்குள் செல்கிறதோ, உடல் சிறுநீராக வெளியில் அனுப்புகிறது. ஆனால், உங்கள் குடும்பத்துக்கு 300 ரூபாய் பணம் தேவைப்படுகிறது. 200 ரூபாய் மட்டுமே நல்ல நோட்டாக இருந்ததால் பயன்படுத்த முடிந்தது. இப்பொழுது 100 ரூபாய் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. இப்பொழுது என்ன செய்வீர்கள்? ஏற்கெனவே சம்பாதித்து வைத்த 100 ரூபாயை பீரோவிலிருந்து எடுத்து வந்து செலவு செய்வீர்கள் இல்லையா? அதே போல், எப்பொழுது செல்களுக்கு நல்ல சர்க்கரை இரத்தத்தில் இல்லையோ இரு புருவங்களுக்கு இடையிலிருக்கும் பிட்யூட்டரி சுரப்பி ACTH என்ற நீரைச் சுரக்க ஆரம்பிக்கும். இந்த நீர் சிறுநீரகத்துக்கு மேலே அட்ரினல் சுரப்பியை (தொப்பி சுரப்பி) வேலை செய்ய வைக்கும். இந்த அட்ரினல் சுரப்பி ஏற்கெனவே கிளைகோஜன்னாக மாற்றிக் கல்லீரல், தசை நார்கள், மூளை ஆகிய பகுதிகளில் சேமிக்கப்பட்ட சர்க்கரைகளை எடுத்து வந்து செலவு செய்யும். இப்படிச் சிறு வயது முதல் நாம் நிறையச் சர்க்கரையைச் சம்பாதிக்கும்பொழுது பீரோவில் சேர்த்து வைக்கிறோம். சர்க்கரைப் பற்றாக்குறை ஏற்படும்போது பீரோவிலிருந்து எடுத்துச் செலவு செய்கிறோம்.

எனவே, ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்! லோ சுகரால் உலகத்தில் யாருக்கும் மயக்கம் வராது. சர்க்கரையின் அளவு குறைந்த உடனே சேமித்து வைத்த சர்க்கரையை எடுத்துச் செலவு செய்யும் இப்படியோர் அமைப்பு நம் உடம்பில் இருக்கும் பொழுது லோ சுகரால் மயக்கம் வரும் என்பது ஒரு தவறான கருத்தாகும். உடலில் கிளைகோஜன் இருக்கும் வரை யாருக்கும் மயக்கம் வரவே வராது!

ஒரு காலக்கட்டத்தில் நம் உடம்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிளைகோஜனும் தீர்ந்து விடும். அப்பொழுது, பெட்ரோல் தீர்ந்த கார் போல, மின்சாரம் இழந்த காற்றாடி போல உடனே நம் இயக்கம் நின்று போகும். ஆக, சர்க்கரை நோயாளிகளுக்கு மயக்கம் வருவதற்குக் காரணம் சர்க்கரை அதிகமாக இருப்பதோ, குறைவாக இருப்பதோ கிடையவே கிடையாது. சர்க்கரைப் பற்றாக்குறை ஏற்படும்பொழுது, சேமித்து வைக்கப்பட்ட கிளைக்கோஜனும் இல்லாவிட்டால் மட்டுமே மனிதனுக்கு மயக்கம் வரும். சர்க்கரை நோயாளிகள் மயக்கம் போடுவது கணையத்தின் குறைபாடும் கிடையாது. சர்க்கரை நோயும் கிடையாது. உடலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரை தீர்ந்து விட்டதென்று மட்டுமே அதற்கு அர்த்தம்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

அடுத்த அமர்வில் சந்திப்போம்…

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author

1 Comment

  1. Panneer Selvam.R

    அனைத்து அம்மாக்களும் படிக்க வேண்டிய கட்டுரை.

Comments are closed.