அனாடமிக் தெரபி (50)

சாப்பிடும் பொழுது டி.வி பார்க்கக் கூடாது

நாம் சாப்பிடும் பொழுது டி.வி. பார்த்தால் அந்த உணவு சரியாக ஜீரணம் ஆகாது. கண்தானே டி.வி. பார்க்கிறது, வயிறு ஜீரணம் செய்ய வேண்டியதுதானே என்ற கேட்கலாம். நாம் கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சி நேராக மனதிற்கு சென்று மனது அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறது. அப்பொழுது அந்த விஷயம் சம்பந்தப்பட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கின்றன. மற்ற ஜீரண சுரப்பிகள் சுரப்பது இல்லை. டி.வி.யில் ஒரு நாடகத்தைப் பார்த்துக் கொண்டு கண்ணில் கண்ணீருடன் சோகமாக சாப்பிடும் நபருக்கு ஜீரண சுரப்பி சுரப்பதில்லை. கண்ணீர் சுரப்பி சுரக்கும் பொழுது ஜீரண சுரப்பி சுரக்காது.

நமது உடலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கும் பொழுது ஜீரண சுரப்பி சுரக்காது நமது உடலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கும். எனவே, தயவு செய்து டி.வி சீரியல் பார்த்து கொண்டு சாப்பிடாதீர்கள் டி.வி-யில் வரும் நாடகங்கள் கோபம், டென்ஷன், பயம், தில்லுமுல்லு, ஏமாற்று வேலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையே காட்டுகின்றன. இந்த கதைகளைப் பார்த்துக் கொண்டு சாப்பிடும்பொழுது உடலில் எதிர்மறை சுரப்பிகள் சுரக்கிறதே தவிர ஜீரண சுரப்பிகள் சுரப்பது இல்லை.

டி.வி.-யில் ஒரு படம் பார்த்துக் கொண்டு சாப்பிடுகிறீர்கள் என்றால் நாம் அந்தப் படத்தின் கதாபாத்திரங்களாகவே மாறிவிடுவோம். அப்பொழுது அந்தப் படத்தின் எந்த மாதிரி உணர்ச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் தெரிகிறதோ நமது உடலிலும் அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கும். எனவே, படம், சீரியல் போன்ற எதையும் பார்க்க வேண்டாம்.

மேலும், படம், சீரியல் மட்டுமல்ல, டி.வி. பார்த்துக் கொண்டு சாப்பிடவே கூடாது, ஏனென்றால் நமது கவனத்தை டி.வி.யில் வரும் காட்சிகள் சிதறடிக்கும். அப்படிப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சிகளில் தோன்றும் அருவருப்பான, கோரமான, சோகமான காட்சிகள் நமது மனதைப் பாதித்து ஜீரண சக்தியைக் கெடுக்கின்றன. நாம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டை பற்றி மட்டுமே கவனிக்க வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். எனவே, டி.வி. என்பது நமது கவனத்தைச் சிதறடிக்கும் ஒரு பொருள். எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது டி.வி. பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

சாப்பிடும் பொழுது புத்தகம் படிக்கக் கூடாது

சிலர் புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். இவர்களுக்கு ஜீரணம் ஒழுங்காக ஆகாது. ஏனென்றால், நாம் புத்தகம் படிக்கும் பொழுது நமது கண், மூளை,எண்ணம், மனம் அனைத்தும் புத்தகத்தில் நாம் படிக்கும் விஷயங்களிலேயே இருக்கும்.அப்பொழுது நமது மனம் ஜீரண சுரப்பிகளைச் சுரக்க வைப்பதற்குக் கட்டளையிடாது.சிலர் புத்தகத்தைப் படித்துக் கொண்டு சாப்பிடும்பொழுது திடீரென உணவைப் பார்த்து எங்கே இட்லியைக் காணோம் என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு நாம் எவ்வளவு சாப்பிட்டோம், எப்படி சாப்பிட்டோம் உதட்டை மூடிச் சாப்பிட்டோமா, சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தோமா என்று ஒன்றுமே தெரியாது. இப்படி புத்தகம் படித்துக் கொண்டு சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் எல்லாவித நோய்களும் வரும். எனவே
தயவு செய்து சாப்பிடும் பொழுது புத்தகம் படிக்காதீர்கள்.

8. சாப்பிடும் பொழுது பேசக் கூடாது

சாப்பிடும் பொழுது நம்மில் பலர் பேசிக் கொண்டே சாப்பிடுகிறோம். இதனால் அந்தச் சாப்பாடு சரியாக ஜீரணமாகாமல் தரம் குறைந்த சர்க்கரை, தரம் குறைந்த கொழுப்பு போன்ற பொருட்களை உருவாக்குகிறது. சாப்பிடும்பொழுது பேசினால் என்ன தவறு என்று கேட்டால் பேசுவதற்காக வாயைத் திறக்கும்பொழுது வாய்க்குள் காற்று நுழைந்து விடுகிறது. உணவு எச்சில் இரண்டும் ஒன்று சேர்ந்து ஜீரண வேலையைச் செய்து கொண்டிருக்கும்பொழுது காற்று உள்ளே செல்வதால் ஜீரண வேலை கெடுகிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்குக் காற்று எதிரி. சாப்பிடும் பொழுது உதட்டை மூடி மெல்ல வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். சாப்பிடும் பொழுது நாம் பேசினால் அந்த விதிமுறையை நாம் கடைப்பிடிக்க முடியாது.

மேலும், நாம் பொதுவாகச் சாப்பிடும் பொழுது என்ன விஷயம் பேசுகிறோம்.குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், வியாபாரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கோபம்,வருத்தம், டென்ஷன், பயம் போன்ற தேவையில்லாத விஷயங்களைப் பற்றித்தான் அதிகமாக பேசுகிறோம்.

இப்படிச் சாப்பிடும்பொழுது தேவையில்லாத விஷயங்களை யோசிக்கும்பொழுது நமது உடலில் சில வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஜீரண வேலை தடைபடுகிறது. உடனே நல்ல விஷயங்களைப் பேசிக் கொண்டு சாப்பிடலாமா என்று கேட்கக் கூடாது. ஏனென்றால் சாப்பிடும் பொழுது பேசினால் உதடு பிரியும் பொழுது காற்று உள்ளே செல்கிறது. எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள்.

நமது வீட்டில் யாராவது விருந்தாளி வந்தால் உடனே அவர்களுக்குப் பலகாரம்,டீ, காபி, கூல்டிரிங்ஸ் போன்றவற்றைச் சாப்பிட கொடுத்து அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறோம். விருந்தாளிகள் நம் வீட்டில் அரை மணி நேரம் இருந்தால் அந்த அரைமணி நேரமும் அவர்கள் வாயில் ஏதாவது மென்று கொண்டே நம்மிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லையே! எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும்பொழுது சாப்பிடாதீர்கள். யார் யாரெல்லாம் பேசிக் கொண்டே சாப்பிடுகிறார்களோ அவர்களுக்குப் பலவிதமான நோய்கள் இருக்கும்.

இன்றைய காலத்தில் யாராவது இருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சிறிது நேரம் பேச வேண்டும் என்றால் இருவர் நடுவில் சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு நொறுக்குத் தீனி இருக்கும். அதைச் சாப்பிட்டுக் கொண்டேதான் பேசுகிறார்கள். வியாபாரிகள் சிலர் மதியம் உணவிற்கு ஓட்டலுக்கு அழைத்து அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பல இலட்சம் ரூபாய் வியாபாரம் பேசுகிறார்கள். பல இலட்சம் ரூபாய் வியாபாரம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நமது கவனம் உணவில் இருக்குமா? அந்த உணவு விஷமாகத்தானே மாறும். எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள்.

பேசும் பொழுது சாப்பிடாதீர்கள். ஒருவேளை சாப்பிடும்பொழுது அத்தியாவசியமாக, அவசியமாக ஏதாவது பேச வேண்டும் என்றால் வாயில் உள்ள உணவைப் பற்களால் நன்றாக மென்று கூழ் போல் செய்து விழுங்கியபிறகு அடுத்த வாய் உணவு வாயிற்குள் அனுப்புவதற்கு நடுவில் பேசிக் கொள்ளலாம். முடிந்தவரை சாப்பிட ஆரம்பித்து முடியும் வரை எதுவும் பேசாமல் சாப்பிட்டால் மிக மிக நல்லது.

சரி மற்றவர்கள் பேசுவதையாவது கேட்கலாமா என்றால் அதுவும் கூடாது. ஏனென்றால் நாம் சாப்பிடும் பொழுது மற்றவர்கள் நம்மிடம் பேசிக் கொண்டிருந்தால் நமது எண்ணம் அவர் பேசும் அந்த வார்த்தையில் இருக்குமே தவிர உணவில் இருக்காது. அப்பொழுதும் ஜீரணமாகாது. எந்த வீட்டிற்குச் சென்றாலும், எந்த ஓட்டலுக்குச் சென்றாலும், சற்று வேடிக்கைப் பாருங்கள். அனைவரும் சாப்பிடும் பொழுதுதான் எல்லா விஷயத்தைப் பற்றியும் பேசுகிறார்கள். தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும் பொழுது சாப்பிடாதீர்கள். நாம் பேசாமல் சாப்பிட்டால்தான் நம் கவனம் முழுவதும் உணவில் இருக்கும். கவனம் உணவில் இருந்தால் மட்டுமே ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் சுரந்து நமது உணவை நல்ல பொருள்களாக மாற்றி இரத்தத்தில் கலக்க முடியும்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author