அனாடமிக் தெரபி (55)

15. குளித்தால் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு சாப்பிட வேண்டும்; சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்கக் கூடாது.

நாம் பல பேர் குளித்தவுடன் சாப்பிடும் பழக்கம் வைத்திருக்கிறோம். இப்படிச் சாப்பிட்டால் ஒழுங்காக ஜீரணம் ஆகாது. குளித்த பின் குறைந்தது முக்கால் மணி நேரத்திற்குப் பிறகுதான் சாப்பிட வேண்டும். அதே போல், சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகுதான் குளிக்க வேண்டும்.

நமது உடல் 24 மணி நேரமும் 98.4 டிகிரி பாரென்ஹீட் வெப்ப நிலையில் இருக்கும். நாம் குளிர்ச்சியான நாட்டிற்குச் சென்று அங்கே -10 டிகிரி வெப்பநிலை இருந்தாலும் நமது உடலில் தெர்மாமீட்டர் வைத்து அளந்து பார்த்தால் 98.4 டிகிரிதான் இருக்கும். அதே போல் சூடான நாட்டிற்குச் சென்று அங்கே 50 டிகிரி 60 டிகிரி வெப்பம் நிலவினாலும் நமது உடல் வெப்பநிலை மாறாது. உலக நாடுகள் அனைத்துக்கும், மக்கள் அனைவருக்கும் இதே வெப்ப நிலைதான். நமது உடலில் உள்ள Triple Warmer என்ற உறுப்பு இப்படி நமது உடல் வெப்பத்தை எப்பொழுதும் சீராக வைப்பதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கும்.

நாம் குளிக்கும்பொழுது, அது சாதாரண தண்ணீர் அல்லது சுடு தண்ணீர் என எதுவாக இருந்தாலும், உடம்புக்கு மட்டுமோ அல்லது தலைக்கோ குளித்தாலும், ஆறு, குளம், குளியலறை என எங்கு குளித்தாலும், குளித்தால் நமது உடலின் வெப்பநிலை மாறுபடுகிறது. வெப்பநிலை மாறியவுடன் உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பானது உடனே வேலை செய்து நமது உடலில் மீண்டும் 98.4 டிகிரிக்குக் கொண்டு வருவதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கும். இப்படி உடல், வெப்ப நிலையைச் சரிசெய்து கொண்டிருக்கும்பொழுது நமது ஜீரண உறுப்புகளுக்கு சக்தி கிடைக்காது. எனவே, தயவு செய்து குளித்த உடனே சாப்பிடுவதைத் தவிருங்கள்! குளித்து முடித்தவுடன் ஒரு 45 நிமிடம் காத்திருந்து பிறகு சாப்பிடுங்கள். நீங்களே இதைச் சோதனை செய்யலாம். குளித்தவுடன் சாப்பிட்டுப் பாருங்கள்; அன்று வயிறு கடினமாகவும், அசௌகரியமாகவும் இருக்கும்.

இதே போல், சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மட்டுமே குளிக்க வேண்டும். ஏனென்றால், சாப்பிடுவது ஜீரணமாகி ரத்தமாக மாறுவதற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரம் ஆகிறது. ஒரு சிலருக்கு ஒரு மணி நேரத்திலேயே ஜீரணமாகும். ஒரு சிலருக்கு ஐந்து மணி நேரமாகும். சுமாராக, சராசரியாக இரண்டரை மணி நேரமாகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சாப்பிட்டவுடனே அரை மணி நேரத்தில் குளித்தால் உடனே உடலில் உள்ள வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு தன் வேலையைத் தொடங்கி விடும். அப்போது நமது உடலில் உள்ள எல்லா சக்தியும் இந்த உறுப்புக்கு மட்டும்தான் செலவாகுமே தவிர, ஜீரணச் சுரப்பிகளுக்குக் கிடைக்காது. இதையும் நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். சாப்பிட்ட உடனே ஒரு நாள் குளித்துப் பாருங்கள்; அன்று ஜீரணக் கோளாறு ஏற்படும். வயிறு மந்தமாக இருக்கும். தலைவலி வரும். எனவே, சாப்பிட்டால் தயவு செய்து இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்க வேண்டாம்!

சிலர் “நான் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். நான் எப்படி குளித்த பிறகு 45 நிமிடம் காத்திருப்பது” என்று கேட்கிறார்கள். நமக்குத் தேவை என்றால் நாம் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்று உங்கள் உடம்பிற்குத் தெரியாது. நீங்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அது உடலுக்குத் தெரியாது. உடலுக்கு என்று சில விதிமுறைகள் உண்டு. எனவே, தயவு செய்து எந்தக் காரணத்தையும் கூறாமல் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே யோசியுங்கள்!

16. பசி ஏப்பம், ஜீரண ஏப்பம், அஜீரண ஏப்பம்.

பசி நேரத்திலும் ஏப்பம் வரும். ஏனென்றால், பசி எடுக்கும்பொழுது வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலத்திற்கு ஏதாவது சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அது நீர்த்துப்போக ஆரம்பிக்கும். நீர்த்துப் போய் அது ஏப்பமாக வெளி வரும். இதுவே பசி ஏப்பம் ஆகும். எனவே, பசி எடுக்கும்பொழுது ஏப்பம் வந்தால் நம் வயிறு நம்மை எச்சரிக்கிறது, உடனே சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது எனப் புரிந்து கொள்ள வேண்டும். உடனே சாப்பிட முடியாதவர்கள் ஏதாவது பழங்களைச் சாப்பிட்டு விட்டுச் சிறிது நேரத்திற்குப் பசியைத் தள்ளிப் போடலாம். ஒருவேளை இரண்டு மணி நேரத்திற்கு நம்மால் சாப்பிட முடியாது என்ற நிலை இருந்தால் அரை லிட்டர் செம்பு தண்ணீரைக் குடித்து அந்த அமிலத்தை நாமே அணைத்து விட்டால் அல்சர் (வயிற்றுப்புண்) வருவதை ஓரளவு தடுக்கலாம்.

சாப்பிடும்பொழுதும் ஏப்பம் வரும். இதற்கு ஒழுங்காக ஜீரணம் ஆகிறது என்று பொருள். நம் உடலில், வயிற்றின் மேலே ஒரு கதவும் கீழே ஒரு கதவும் இருக்கும். வாயில் சாப்பிடும் சாப்பாடு உணவுக்குழாய் வழியாக வயிற்றின் உள்ளே நுழைவதற்கு ஒரு கதவு இருக்கும். உணவு உள்ளே சென்றவுடன் இந்தக் கதவு மூடி விடும். சாப்பிட்ட பின் தலைகீழாக நின்றாலும் உணவு வாய் வழியாக வெளியே வராமல் இருப்பதற்கு இந்தக் கதவுதான் காரணம். இது உணவை உள்ளே செல்ல மட்டுமே வழிவிடும். வெளியே செல்லத் திறக்காது. சில ஆபத்துக் காலங்களில் வாந்தி வரும்பொழுது மட்டுமே திறக்கும்.

அதே போல் வயிற்றுக்குக் கீழே முடிவில், வயிற்றிலிருந்து சிறுகுடலுக்குச் செல்ல ஒரு கதவு உள்ளது. இந்தக் கதவும் உணவு கீழ் நோக்கிச் செல்ல மட்டுமே திறக்கும். மேல் நோக்கித் திரும்ப அனுமதிக்காது.

சிலருக்குச் சாப்பிடும்பொழுதே ஏப்பம் வரும். இதன் காரணம் வயிற்றின் கீழே உள்ள கதவு திறந்து நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாக ஜீரணமாகிய பிறகு அது வயிற்றிலிருந்து சிறுகுடலுக்குத் தள்ளப்படும்பொழுது வயிற்றில் ஒரு காலியிடம் உருவாகும்; இந்தக் காலியிடத்தை நிரப்புவதற்காக வயிற்றுக்குக் காற்றுத் தேவைப்படும். அந்தக் காற்றை வாய் வழியாக உறிஞ்சுவதற்காக வயிற்றின் மேற்பக்க கதவு திறந்து காற்றை உள் வாங்கும். இந்த சப்தம்தான் இந்த ஏப்பம்.

சாப்பிடும்பொழுது சாப்பிடச் சாப்பிட ஏப்பம் வந்தால். நாம் நன்றாக ஒழுங்காக முறையாகச் சாப்பிடுகிறோம் என்று பொருள். சிலர் அளவு தெரியாமலே சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஒரு சின்ன விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறோம்!

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது ஏப்பம் வந்தால் சாப்பாடு போதும் என்று வயிறு சொல்வதாகப் பொருள். எனவே, உணவை அத்துடன் நிறுத்தி விடலாம். ஆனால், முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடுவதில் சிறிய சிக்கல் ஏற்படுகிறது. சிலருக்குக் குறைந்த அளவு சாப்பிட்டவுடனேயே ஏப்பம் வந்து விடுகிறது. அதனால், மீண்டும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்குப் பசி ஏற்படுகிறது. ஆனால், அவர்கள் அப்பொழுது மறுபடியும் சாப்பிடுவது கிடையாது. நமது சிகிச்சையில் முதல் ஏப்பம் வந்தால் உணவை நிறுத்தி விட வேண்டும் என்றும் பசி எடுத்தால் சாப்பிட வேண்டும் என்றும் இரண்டு விதிகள் உள்ளன. முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பாட்டை நிறுத்தி விட்டால், மீண்டும் பசிக்கும்பொழுது கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும். ஆனால் பலர் அப்படிச் சாப்பிடுவது கிடையாது.

எனவே, முதல் ஏப்பம் வந்தால் உடனே நிறுத்தி விட வேண்டும் என்ற விதியை வீட்டிலேயே இருக்கிற, நினைத்தால் உடனே சாப்பிடக்கூடிய சூழ்நிலை உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்துங்கள்! ஒரு சிலர், வேலைக்குச் செல்பவர்கள் காலை எட்டு மணிக்கு இரண்டு இட்லி சாப்பிட்டவுடன் ஏப்பம் வந்துவிடும். உடனே நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் 12 மணிக்கு நன்றாகப் பசிக்கும். ஆனால், அவர்களுக்கு 2 மணிக்குத்தான் உணவு இடைவேளை கொடுப்பார்கள். இந்த நிலையில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அப்படிப்பட்டவர்கள் ஏப்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஏப்பம் வந்தாலும் உணவை நிறுத்தாமல் உங்கள் மனதிற்குப் பிடித்தது போல ஆசை தீரச் சாப்பிடுங்கள். ஆனால், அடுத்த வேளை உணவை மறுபடியும் பசி எடுக்கும் வரை காத்திருந்து சாப்பிட வேண்டும்!

சிலருக்குச் சாப்பிட்ட பின், ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து ஏப்பம் வரும். இதற்குக் காரணம் அஜீரணம்! அதாவது, வயிற்றுக்குச் சென்ற உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் பல மணி நேரங்களாக வயிற்றில் இருந்து, புளித்துக் கெட்டுப் போய் அதிலிருந்து வரும் கெட்ட காற்றுதான் இந்த ஏப்பத்திற்கான காரணம். இது புளித்த ஏப்பம். எனவே, யாருக்குப் புளித்த ஏப்பம் வருகிறதோ அவர்கள் உணவை ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்பதைப் புரிந்து கொண்டு இனிமேல் முறையாகச் சாப்பிடக் கற்றுக்கொண்டு அதை முயற்சி செய்யுங்கள்! வாழ்வோம் ஆரோக்கியமாக!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author

1 Comment

  1. ரவிச்சந்திரன்

    ரவிச்சந்திரன்

    மிக மிக நல்ல விஷயம். பாராட்ட வேண்டிய கருத்து. பலரருக்கும் மிகவும் பயனுள்ள கருத்து

Comments are closed.