அனாடமிக் தெரபி (59)

குடிதண்ணீர்!

1. தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக் கூடாது!

உலகத்தில் உள்ள அத்தனை மருத்துவர்களும் ஊடகங்கள் அனைத்தும் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்குமாறு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படி தண்ணீரை யார் யாரெல்லாம் கொதிக்க வைத்துக் குடிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பல நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது!

நீரில் நோய்க் கிருமிகள் உள்ளன, அதனால் உடலில் நோய் வரும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நாம் தண்ணீரைக் கொதிக்க வைக்கிறோம்.

சரி, ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு லிட்டர் நீர் அருந்துகிறோம்? இரண்டு அல்லது மூன்று லிட்டர். இந்த மூன்று லிட்டர் தண்ணீரில் எவ்வளவு நோய்க்கிருமிகள் இருக்கும்? ஆனால், நாம் மூக்கின் வழியாக ஒரு நிமிடத்திற்கு எட்டு லிட்டர் வீதமாக ஒரு நாளைக்கு 11,600 லிட்டர் காற்றைக் குடிக்கிறோம். காற்றில் நோய்க்கிருமிகள் இருக்காது என்று யாராவது கூற முடியுமா? நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள குப்பை, கூளம், தூசி போன்றவையும் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் நம்முள் செல்கின்றன. ஒரு நாளைக்குக் குடிக்கும் 2 லிட்டர் தண்ணீரில் நோய்க்கிருமி இருக்கும்; அதனால் நோய் வரும் என்று கூறுகிறார்களே? 11,600 லிட்டர் காற்றைக் குடிக்கிறோமே, இதன் மூலமாக நமக்கு நோய்கள் வராதா?

ஜப்பானில் உள்ள ஒரு நோய்க்கிருமி 10 நாட்களாகக் காற்றின் வழியாகப் பறந்து வந்து மூக்கின் வழியாக உங்கள் உடம்பிற்குள் செல்வதற்கு உங்களிடம் அனுமதி கேட்கிறதா? தண்ணீரில் நோய்க்கிருமிகள் இருக்கும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். காற்றில் நோய்க்கிருமிகள் இருக்கும் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? யார் யாரெல்லாம் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கிறீர்களோ, அவர்களெல்லாரும், இனிமேல் காற்றையும் கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டிய பிறகே குடிக்க வேண்டும் என்று சொன்னால் செய்ய முடியுமா?

தண்ணீரிலும் நோய்க்கிருமிகள் இருக்கும்; காற்றிலும் இருக்கும். 3 லிட்டர் தண்ணீரில் உள்ள நோய்க்கிருமிகள் நம் உடலில் நோயை உண்டு பண்ணும்போது 11,600 லிட்டர் காற்றில் உள்ள கிருமிகளும் கண்டிப்பாக நோயை உண்டு பண்ணும் அல்லவா? அந்தக் காற்றின் வழியாகச் செல்லும் நோய்க்கிருமியை உடம்பு என்ன செய்கிறது?

இந்தத் தொடரில் தடுப்பு ஊசி என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட விஷயங்ளை நீங்கள் படித்திருந்தால் உங்களுக்கு ஒன்று புரியும். உடலில் எந்த நோய்க்கிருமி சென்றாலும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்தன்மை அந்த நோய்க்கிருமியை அழித்து விடும். இதற்கு எந்த ஒரு மருந்து மாத்திரையும் தேவையில்லை. அப்படி இருக்கையில் காற்றின் வழியாக உள்ளே செல்லும் நோய்க்கிருமிகளை உடம்பு என்ன செய்கிறதோ, அதையேதான் நீரின் வழியாக உள்ளே செல்லும் நோய்க்கிருமிகளையும் செய்யும். எனவே நீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதில் எந்தப் பயனும் கிடையாது.

குடிக்கும் நீரில் நீர்ப் பிராணன் உள்ளது; உயிர்சக்தி உள்ளது. இது கண்ணுக்குத் தெரியாது. மேலும், குடிக்கும் நீரில் பல தாதுப்பொருட்களும், விட்டமின்களும் உள்ளன. இது நமது உடலுக்கு அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படுகிறது. குடிக்கும் நீரில் தாதுப்பொருட்கள், உயிர்சக்தி, நோய்க்கிருமி இவை மூன்றும் இருக்கும். தண்ணீரைக் கொதிக்க வைப்பதால் நோய்க்கிருமி இறந்து விடுகிறது. ஆனால், அதே சமயத்தில் உயிர்சக்தியும் அழிந்து விடுகிறது. தண்ணீரில் இருக்கும் அனைத்து தாதுப்பொருட்களும், ஒன்று – ஆவியாகிப் போய் விடுகின்றன அல்லது பிணமாக மிதக்கின்றன.

இப்படி உயிருள்ள தண்ணீரை, தாதுப் பொருட்கள் உள்ள தண்ணீரை, கொதிக்க வைப்பதனால் நாம் சப்பைத் தண்ணீராக மாற்றுகிறோம். இப்படித் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதனால் அந்தத் தண்ணீரால் ஒரு மனித உடம்புக்கு எந்த ஒரு இலாபமும் கிடையாது.

நம் இரத்தத்தில் பல தாதுப் பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கக் காரணம் நாம் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதுதான். உங்களுக்கு இந்த விஷயம் ஆச்சரியமாக இருக்கலாம். இதை உறுதி செய்வதற்கு ஒரு சின்ன சோதனை செய்யுங்கள்! உங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியில், கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் மீனை விட்டுப் பாருங்கள்! மீன் அன்றே இறந்துவிடும். ஒரு மீன் வாழக் கூட வழியில்லாத, உயிர்சக்தி இல்லாத, பிராண சக்தி இல்லாத நீர்தான் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிய நீர். எனவே, தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக்கூடாது!

சுனாமி, வெள்ளம், கொள்ளை நோய்கள் வரும் காலக் கட்டங்களில் ஊரில் உள்ள நீர் அனைத்தும் மாசுபட்டிருக்கும். நீரில் ஆடு, மாடு இறந்து கிடக்கும்; மண்ணாக இருக்கும்; ஒரு சில நேரத்தில் மனித சடலங்கள் கூடக் கிடக்கலாம். இது போன்ற தருணங்களில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிதான் குடிக்க வேண்டும். இது இப்படிப்பட்ட நேரத்தில் மட்டுமே செல்லுபடியாகும். மற்றபடி, சாதாரண வாழ்க்கையில் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அந்த அழுக்குத் தண்ணீரைக் குடிப்பதால் நோய் வரும் என்பதற்காகக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிக் குடியுங்கள் என்று என்றோ யாரோ ஒருநாள் பிரச்சாரம் செய்த விஷயத்தை நாம் நல்ல விஷயம் என்று தினமும் பயன்படுத்துவது உடலுக்கு நோயை உண்டு பண்ணும்.

நம் உடலுக்கு இரண்டு வகையில் தாதுப்பொருட்களும், உயிர்சத்துப் பொருட்களும் செல்கின்றன. ஒன்று, நீரின் வழியாக; மற்றொன்று உணவின் வழியாக. நீரைக் கொதிக்க வைப்பதன் மூலமாக அவற்றை விரட்டியடிக்கிறோம். உணவைச் சமைப்பது மூலமாக, குறிப்பாகச் சமைப்பான் (cooker), காந்த அடுப்பு (induction stove), நுண்ணலைச் சமைப்பான் (microwave oven) போன்றவற்றில் சமைப்பது மூலமாக அந்த உணவில் உள்ள சத்துப் பொருட்கள் அனைத்தையும் நாம் வெளியேற்றி விடுகிறோம்.

உடலில் இரத்தப் பரிசோதனை செய்து பார்க்கும்பொழுது அந்தத் தாதுப்பொருள் இல்லை, இந்தத் தாதுப்பொருள் குறைவாக இருக்கிறது என்றெல்லாம் கூறப்படுவதற்குக் காரணம், தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதும், வேகவைத்த உணவுகளைச் சாப்பிடுவதும்தான். எனவே, இது போன்ற விஷயங்களை தவிர்த்து, நாம் வாழ்வோம் ஆரோக்கியமாக!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்

About The Author