அனாடமிக் தெரபி (72)

படுத்தவுடன் யாருக்குத் தூக்கம் வரவில்லையோ அவர்கள் அந்த நாளை ஒழுங்காக வாழவில்லை என அர்த்தம். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை மனதிற்குப் பிடித்தாற்போல சந்தோஷமாக, ஆனந்தமாக வாழ்க்கையை வாழ்ந்தால் கண்டிப்பாகப் படுத்தவுடன் தூக்கம் வரும்!

நாம் புதிய விஷயங்களை இன்று எவ்வளவு கற்றுக்கொண்டிருக்கிறோமோ அந்த அளவுக்கு நமது தூக்கம் நன்றாக இருக்கும். எனவே, தினமும் ஏதாவது புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வதன் மூலமாகவும் நாம் நிம்மதியாகத் தூங்க முடியும்.
தூக்கம் வரவில்லை என்றால், இரவு கடைசியாக, எல்லாக் காரியத்தையும் முடித்துவிட்டு, தூங்குவதற்கு முன்பாக, சம்மணம் இட்டு அமர்ந்து முதுகை நேராக வைத்துக்கொண்டு, கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து சின் முத்திரையில் தொடைக்கு மேலே கைகளை வைத்துக்கொண்டு கண்களை மூடி நன்றாக மூச்சை உள்ளே இழுத்து ‘ம்’ என்ற அதிர்வில் மெதுவாக உங்கள் மூச்சுக்காற்றை மூக்கின் வழியாக வெளியே செலுத்துங்கள்! இப்படிச் செய்யும்பொழுது ‘ம்’ என்ற சப்தத்துடன் மெதுவாக உங்களால் எவ்வளவு நேரம் கஷ்டப்படாமல் சொல்ல முடியுமோ அவ்வளவு நேரம் உச்சரியுங்கள்.
எப்பொழுது காற்று முழுவதும் வெளியே சென்று விட்டதோ அப்பொழுது மீண்டும் மூச்சுக்காற்றை மெதுவாக உள்ளே இழுத்து மீண்டும் ‘ம்’ என்ற வார்த்தையை உச்சரித்தால் இந்த உச்சரிப்பு நேரடியாகத் தலைப்பகுதி முழுவதும் – குறிப்பாக, மூளைப்பகுதி முழுவதும் – சென்று அந்த அதிர்வு அங்கே உள்ள அனைத்து செல்களுக்கும் சிறந்த இரத்த ஓட்டத்தையும் பிராண சக்தியையும் கொடுத்து விரைவாக உங்கள் புத்தியையும், மனதையும் சரி செய்து ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவி செய்யும்.

இப்படி, குறைந்தது 50 முறை ‘ம்’ என்ற சப்தத்தைக் கொடுத்து தியானம் செய்து பின்னர் தூங்குவதால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்!
இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு நமது வாழ்க்கையில் நடந்த சாதாரண, சின்னச் சின்ன விஷயங்களை நினைத்துக்கொண்டு இருக்காமல் அவற்றைச் சற்று ஓரமாக வைத்துவிட்டு, ஆன்மிகப் புத்தகங்களை ஒரு கால் மணி நேரம் அல்லது அரைமணி நேரம் படித்துவிட்டுப் பின்னர் படுப்பதன் மூலமாக நிம்மதியான தூக்கம் தூங்கலாம்.

இரவு தூங்குவதற்கு முன்பு எந்த விஷயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டு தூங்குகின்றீர்களோ அதே விஷயத்தைப் பற்றிக் காலை எழுந்தவுடன் ஞாபகம் வந்தது என்றால், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்று அர்த்தம். இரவு யோசித்த விஷயம் இரவு முழுவதும் உங்கள் மூளையில் திரும்பத் திரும்ப வட்டமடித்துக் கொண்டிருந்ததால்தான் நீங்கள் காலை எழுந்தவுடன் அந்த விஷயம் ஞாபகம் வருகிறது. யார் யாரெல்லாம் இப்படி அரைகுறைத் தூக்கம் தூங்குகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் தூக்கம் சம்பந்தப்பட்ட வியாதி இருக்கிறது என்று அர்த்தம். மேலும், முடி கொட்டிவிடவும், மனரீதியான நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

நாம் ஆரோக்கியமாகத் தூங்கினோமா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், நாம் ஒவ்வொரு முறை காலை எழுந்திருக்கும்பொழுதும் "நான் யார்?… நான் எங்கே இருக்கிறேன்?… இன்று என்ன நாள், என்ன கிழமை?" என்றெல்லாம் நீங்கள் ஒரு சில நிமிடம் யோசித்தால் மட்டுமே அவை தெரியவேண்டும். அந்த அளவுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்பொழுது நமக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தினமும் 2 மணி அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை மூடி, குறைந்தது ஒரு நிமிடம் அல்லது 2 நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். அதாவது அமைதியாக சும்மா இருக்க வேண்டும். இப்படியிருந்தால் அந்த 2, 3 மணி நேரத்திற்கு முன்பாகக் கலைத்துப்போட்ட மனதையும், புத்தியையும் அந்த 2 நிமிடத்தில் நமது மனம் அடுக்கி வைத்துவிடும். இதனால்தான் பல ஆசிரமங்களில் ஒரு நாளில் குறிப்பிட்ட சில நேரங்களில் தியானம் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.

ஐந்து வேளை தொழும் ஒரு இஸ்லாமியர்க்குத் தூக்கம் கண்டிப்பாக நன்றாக வரும். அதே போல் பிரம்மகுமாரிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை ஒரு நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வார்கள். இவர்கள் அனைவரும் நன்றாகத் தூங்குகிறார்கள். இவர்களுக்கு மனதில், புத்தியில் எந்தக் குழப்பமும் இருக்காது. மிகவும் தெளிவாக இருப்பார்கள்.

எனவே உங்கள் மனதையும், புத்தியையும் தெளிவாக வைத்துக்கொள்ள, தேவைப்பட்டால் அருகில் உள்ள பிரம்மகுமாரிகள் அமைப்பிற்குச் சென்று சில பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்! இதன் மூலமாக நீங்கள் உங்கள் மனதையும், புத்தியையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author