அன்னம்

"தள்ளாமை ஜாஸ்தியாயிட்டுது. ரெண்டு கண்ணிலும் சாளேஸ்வரம். எட்டிவச்சும் பார்க்க முடியலே. கிட்ட வச்சும் படிக்க முடியலே. எதுக்கு இருக்கோம்னு தோணறது. நீ இருக்கியேடா, அதான் போய்ச்சேர மனசு வல்லே. எனக்கு நீ… நீ… நீதாண்டா எல்லாம்" புலம்பிக் கொண்டிருந்த தாத்தா ஞாபகம். மனசின் துடிப்பு கேட்டது.

அவர் பீஷ்மர் மாதிரி. பீஷ்மரைப் பார்த்ததில்லே. ஆனா இவர் மாதிரிதான் அவர் இருக்கனும். முன் ஜன்மத்தில் பீஷ்மராய் இருந்திருக்க வேண்டும். கண்கள் பளீரெனச் சொல்லும். நல்ல உசரம். நீளநீளமான கைகள்.

பிறப்பால் எல்லோரும் தாழ்ந்தவரே. வித்யா சித்தியால் மட்டுமே உயர்வடைகிறார்கள். உயர்வடைய படி…படி… என்று சதா படிக்கச் சொல்வார். சொல்லிக் கொடுப்பார். தன்னுள் இருந்ததை வெள்ளமாய்க் கொட்டிக் கொண்டிருப்பார். உலகத்தின் எல்லா ஞானங்களையும் போட்டு நிரப்பி இந்தப் பயலை ஞான சூரியனாக்கி விட வேண்டுமென்று விரதம் பூண்டவரைப்போல –

எவ்வளவு வித்யாசம் தாத்தாவிற்கும் அப்பாவிற்கும். படிச்சுக் கிழிச்சது போதும். உனக்கும் உங்கம்மா, உன் தாத்தா மாதிரி கோணல் புத்தி. இதவச்சுண்டு படிச்சு என்ன சாதிக்கப் போறே. எட்டு வருஷம், பத்து வருஷம்னு படிச்சு என்ன ஆகப்போறது. சாப்பாடே தண்டம்…" என்று ஒரு அப்பன் சொல்லிக் கேட்டதுண்டோ? கேட்டார். எல்லா அப்பாக்களாலும் இப்படி இருக்க முடியாது. கோடிகளில் புரளும் அவருக்கு திரும்பவும் திரும்பவும் கோடிகளைச் சேர்த்துக் குவிக்கவே வேகம். எனக்கு அப்பா புதிர். எந்த சட்டங்களிலும் எந்த அறங்களிலும் அடங்காத புதிர்.

அப்பா பெரிய மனுஷர். கம்பெனி முதலாளி. கால் வைக்காத தொழிலில்லை. ரசாயனம், இரும்பு, மோட்டார், ரப்பர் சினிமா என்று ஏகப்பட்ட பணம் காய்ச்சி சாம்ராஜ்யங்கள் – இவை விசாலமாக ஆக ஆக அவருக்கு தன் அப்பாவையும் மகனையும் பார்க்கவே நேரமில்லாது போயிற்று. அப்பாவைத் தேடி நிறைய பேர். ஹால் கொள்ளாத கூட்டம். புரியாத இங்லீஷ் வார்த்தைகளை இறைத்துக் கொண்டு எங்கும் கலகலப்பு. உசிரில்லாத சிரிப்பு. பணம் போலவே அர்த்தமற்ற விஷயங்கள் வீடு முழுவதும். ராப்பகல் வித்யாசமில்லாமல். ஆண் பெண், பேதமில்லாமல் தனியுலகமாய் விசித்திர உலகமாய் எங்கள் புத்திக்கு எட்டாத விஷயங்களைக் கொண்ட உலகமாய்…

"அவா கிடந்து சிரிக்கட்டும் கும்மாளம் போடட்டும். நீ சொல். ஆதித்ய ஹிருதயம் சொல், துர்க்கா சுக்தம் சொல், திருமந்திரம் சொல். பிரபந்தம் சொல் திருக்குறள் திருவாசகம் படி… இந்தக் குடும்பத்திற்குள் ஜீவக் காற்றை உலாவ விடு!" – தாத்தா சொல்வார்.

அம்மா இருந்தபோது ஒண்டுக்குடித்தனமாம். ஓட்டு வீடாம் அம்மியும் ஆட்டுரலும் பிளாஸ்டிக் குடங்களும் கிழிந்த துணிகளுமாய் அப்பாவின் குமாஸ்தா வாழ்க்கைக்குத் தோதாய் அவல வாழ்க்கை. தரித்திரம் தரித்திரம் என மூச்சுக்கு மூச்சு வசை – தன்னையா அம்மாவையா தாத்தாவையா இல்லே எல்லோரையுமா எனப் புரியலே. தன் கிழிசல் வேட்டியை அது தெரியாமல் உடுத்திக் கொண்டு வசவே வாழ்க்கையாய் – நிஜம் தானோ. அம்மா போன பிறகு அம்மாவை விட நிறமாய் உசரமாய் பளீர்ச் சிரிப்போடு அம்மாவின் இடத்தில் ஒருத்தி வந்து சேர்ந்த பிறகு எல்லாமே தலைகீழாய் ஆயிற்று. குபீரென்று ஒரு தாவல். ஏகப்பட்ட உசரத்திற்குப் பாய்ச்சல். அவள் ஒரு துணை நடிகைன்னு யாரோ காதோடு கிசுகிசுத்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிர்வீட்டுக்காரர்கள் பயந்துகொண்டே காதோடு காதாக வம்பு பேசினார்கள். அவளை எப்படி அழைக்க வேண்டுமென்று யாரும் சொல்லித்தரவில்லை. அதற்கான அவசியமும் நேரவில்லை. அவள் அதிகம் பேசுவதில்லை. குறிப்பாக தாத்தாவோடும் என்னோடும், தன் அந்தஸ்துக்குக் குறைவு என்று நினைத்திருக்கலாம்.
நாங்கள் இடைஞ்சலாக உணரப்பட்டோம். பின்னறைக்கு கண்களில் படாதவாறு தள்ளப்பட்டோம். பிசினஸ் பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்கும். ஒத்துவராது. பொருத்தமாகவும் இருக்காது. வாய் விட்டே சொன்னார் அப்பா. அம்மா இடத்தில் வந்தவள் புகுந்த நேரமோ என்னவோ உசர உசரப் போனார். ஆகாயத்தைத் தொட்டார். அதையும் கிழித்துக் கொண்டு போக ஆசைப்பட்டார்.

தாத்தா "வேளை தவறாது சோறு கிடைக்கிறதே போதாதோ என்று பூஞ்சையாகச் சிரிப்பார். பள்ளிக்கூடம் போகாவிட்டால் என்னடா ராஜா, அந்தஸ்தும் தலைமையும் கிடைக்காவிட்டால் என்ன, சொந்தமும் பந்தமும் நைந்து போனால் என்ன, வேளா வேளைக்குச் சோறு." பூசணிப் பழம் மாதிரி இருந்த தாத்தா வற்றி உலர்ந்து சருகாய்ப் போனாலும் தாத்தாவின் சிரிப்பு மட்டும் பளீர் –

அப்பாவிற்கு ஏராளமான முகங்கள். குறிப்பாக அடிக்கடி காட்டுவது இரண்டு முகங்களை – மேலை நாட்டிலிருந்து வந்தவர் மாதிரி பேசுவதும் பழகுவதும் நடத்தலும் சிரித்தலும் அம்மாவின் இடத்தில் வந்தவளோடு பகிரங்கமாய்க் கொஞ்சி முத்தமிடுவதும், இங்லீஷில் சிரித்துச் சிரித்து வியாபாரம் பேசுவதும் சாதுர்யமும் டேயப்பா ஆருக்கு வரும் இதெல்லாம்?
பீடாதிபதிகள் வந்தால் இங்குதான் தங்குவார்கள். பட்டனப் பிரவேசமோ பாதபூஜையோ எல்லாமே இங்குதான். அமர்க்களப்படும். புது பீடாதிபதி பரவாயில்லை. சிரிச்சுச் சிரிச்சு வந்தவாளை யெல்லாம் விசாரிச்சு தரிசனம் கொடுப்பார். அவருக்கு முன்னால் இருந்தவர் சிரிப்பதே அபூர்வம். அப்பா ஞானப்பழம் என்பார். தாத்தாவிற்கு இதில் அவ்வளவாக சுவாரசியமில்லை. அவர் பாட்டுக்கு எதையாவது படித்துக் கொண்டு பின் கட்டில் முடங்கிக் கிடப்பார். வாசல்லே ஸ்ரீமடத்துப் பெரியவா நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டு பஞ்சை பராரிகளுக்கும்கூட தரிசனம் தருவார். ஆசீர்வாதம் பண்ணுவார். பிரசாதம் தருவார். அம்மா இருந்த இடத்தில் வந்தவள்கூட ஒன்பது கஜம் புடவையில் ஜ்வலிப்பாள். பளிச்சென்று நெற்றியில் குங்குமம் துலங்கும்.

"ஸுந்தரேசய்யர்" என்று பெரியவா மெல்லக் கூப்பிட்டதும். அவர் முன்னால் போய் உடம்பை வில்லாய் வளைத்து வாய் பொத்தி தலையைப் பவ்யமாய் அசைத்து சேதி வாங்கறது அப்பாவா அது – மீசை சிரைத்து வெற்று மார்பில் பூணூ<ல் அலங்கரிக்க பஞ்சகச்சத்தில் இடுப்பில் சிவப்புப் பட்டுத் துண்டைக் கட்டிக் கொண்டு நெற்றியில் விபூதிப் பட்டை பிரகாசிக்க பெரிய குங்குமப்பொட்டு… மாறாத பணிவு கூட்டி ஸ்வாமிகளின் முன்னால் எல்லா லட்சங்களையும், கோடி களையும் விட்ட அனாதை மனுஷனைப்போல – அப்பாவால் எப்படி முடிகிறது?

"ஆரு இங்கே எட்டிப் பார்க்கறது…" பெரியவாளுக்கு தீட்சண்யமான பார்வை. கைகளை வேகவேகமாக ஆட்டிக் கொண்டே அழைத்தார்.

"என் பையன் தான்…"

கைகளைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணிட்டு என்னைப் பார்த்து சிரிப்பார். கையிலிருந்த தண்டத்தை ஆச்சரியத்தோடு ஒரு பார்வை – கீழே வைக்கக் கூடாதாமே எந்த சமயத்திலும் – எப்படி முடியும்?

"என்ன மருந்து மாயம்னு கொடுத்தாலும் உடம்பு தேற மாட்டேங்கறது பெரியவா ஆசியிலேதான் நன்னா ஆகனும். ஸ்ரீ சுக்தம் சொல்லிக்காமிடா. உள்ளேயிருந்து தாத்தா தலையாட்டினார். சொன்னேன்.

"பலே பலே… ஸ்பஷ்டமான உச்சரிப்பு. என்ன படிக்கறே…"

"ஸ்கூல்லே சேர்க்கலே. ஆத்திலேயே இருந்து என் தோப்பனார்ட்ட வேதம் சொல்லிக்கறான் -"
பெரியவாளின் கண்கள் அகல விரிந்தன. உலகத்தையே ஜெயித்த மாதிரி மந்தகாசம் செய்கிறார். ஸுந்தரேசா. சந்தோஷமா இருக்கு. கேழ்க்கறதுக்கே இதமா இருக்கு. கோடிகோடியா சம்பாதிச்சாலும் பையனை வேதம் படிக்க வைக்கனும்னு உன் மனசிலே பகவான்தான் சொல்லியிருக்கார். அவா அவா அமெரிக்கா, ஜெர்மனின்னு பசங்களை அனுப்பிப் படிக்க வைக்கிற காலத்திலே ஸ்வமதத்தை ஸ்வதர்மத்த காப்பாத்தற படிப்பிலே விடறதுக்கு என்ன மாதிரி உசந்த மனசு உனக்கு. இந்த ஸநாதன தர்மத்த யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது" என்று பூரிப்போடு சொல்லி அட்சதை கொடுத்தார். ஆசீர்வாதம் செய்தார். ஒவ்வொரு தடவையும் மந்தகாசத்தோடு சிரிக்கும்போது உடம்புச் சதைகள் குலுங்குவது வேடிக்கையாக இருக்கும்.

எவ்வளவோ பேர் வந்தார்கள். போனார்கள். அத்தனை நாட்களும் அப்பா எப்படி சிகரெட்டை மறந்தார். ஆபீசை மறந்தார் வியாபாரத்தை மறந்தார்? இங்லீசை மறந்தார். தமிழைக்கூட சமஸ்கிருதம் மாதிரி பேசினார்.

"ஸுந்தரேசா… இன்னிக்கு மத்யானம். ரெடியா இரு. டெல்லிலேருந்து சீப்-செக்ரட்டரி ராமசுப்பன் வரான். உன் லைசன்ஸ் விஷயமா பேசிட்டேன். நீயும் ஒரு வார்த்தை காதிலே போட்டுடு…" என்று சிரித்தவாறே அப்பாவை ஆசீர்வாதம் பண்ணினார். "ஸ்வாமி கிருபை" என்று அப்பா பவ்யமாக நமஸ்காரம் பண்ணினார்.

அலுக்காம சலிக்காம அத்தனை பேருக்கும் ஆசி. அப்புறம் உபதேசம். அவர் பேசும்போது கண்களை மூடிக் கொண்டிருந்தது விநோதமாக இருந்தது.

தாத்தா ஒரு நாள் அவுட் ஹவுஸில் அடங்கிப்போனார். வெகுநேரம் பார்க்கவில்லை. தோட்டக்காரன் ராமுதான் அவசர அவசரமாகக் கூப்பிட்டான். வாய் மட்டும் லேசாகத் திறந்திருந்தது. கடைசியா என்ன சொன்னாரோ தாத்தாவின் மூக்கின் மேல் மூன்று ஈக்கள் பிடிவாதமாக உட்கார்ந்திருந்தன. எதிர் வீடுகளிலிருந்து பக்கத்து வீடுகளிலிருந்து நிறைய பேர் கூடிவிட்டனர். அப்பாவிற்கு யாரோ போன் போட்டுச் சொன்னார்கள்." கமிட்டி மீட்டிங் இருக்கு. நாலு மணிக்கு வந்துடறேன். பணம் குடுத்தனுப்பியிருக்கேன். எதிலேயும் கொறவக்கப்படாது…

எல்லோரும் பொறுமையாகக் காத்திருந்தார்கள். வெகுநேரம் கழித்து அப்பா வந்தார். போட்டிருந்த சூட் கோட்டைக் கூட கழற்ற முடியவில்லை. உடம்பு தள்ளாடியது. தட்டுத்தடுமாறி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். தாத்தா நீண்டு கிடந்ததை பார்த்ததாகத் தெரியவில்லை. விசாரிக்க வந்தவர்களை அலட்சியமாகத் தள்ளினார்.
அப்பாவால் நடக்க முடியவில்லை. பாதி வழியிலேயே தடுமாறினார். கார் கொண்டு வரச் சொல்லி வீடு திரும்பினார். எல்லாத்தையும் நீங்களே பார்த்துச் செய்யுங்கோ… என்னாலே முடிலே…"

தாத்தா இந்நேரம் எரிந்து போயிருப்பார்.எங்கே வந்திருக்கிறேன் தெரியலே. இருட்டு. எங்கேடா போனே என்று தேடுவார் யாருமில்லே. அப்பா தூங்குவார். அம்மாவின் இடத்திற்கு வந்தவள் ஏதாவது ஹோட்டலில் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பாள். கால்களைப் போலவே கண்களும் பலமிழந்து போயிருந்தன. பூமியின் சுழற்சி புலப்பட்டது. நேரம் – பகலா இரவா புரிபடவில்லை. எங்கும் இருட்டு.

"தம்பி… தம்பி…" என்று யாரோ அழைப்பது மட்டும் லேசாகக் கேட்டது. "யாரு பெத்த புள்ளையோ இப்படிக் கெடக்கே… அனாதையாட்டம்."

சுற்றிலும் ஏகப்பட்ட நாய்கள் பலமாகக் குரைத்துக் கொண்டிருப்பது கேட்டது. அப்பாவிடமிருந்து வெகுதூரம் வந்துவிட்டதாக உணர முடிந்தது.

"தம்பி… தம்பி… கண்ணு முளிச்சுப்பாரேன்" ஒரு கொத்து குளிர்ந்த தண்ணீர் ‘சளப்’பென முகத்தில் அறைந்தது. ஒரு மடக்கு குடிக்கவும் முடிந்தது.

"போடி… வேடிக்கையா பாக்க வந்தே… ஊட்லேருந்து ஏதாச்சும் இருந்தா சீக்கிரம் கொண்டா… பசி மயக்கம் புள்ளைக்கு… சீக்கிரம்…"

கண்களுக்கு கொஞ்சம் வலு கூடியிருந்தாற் போலிருந்தது. மனிதர்கள் மத்தியில் இருப்பதே தெம்பு. நீல ஆகாசத்தில் கோடி கோடியாய் நட்சத்திரங்கள் – அந்நிய வாசனையை மோப்பம் பிடித்த நாய்கள் குரைத்தன. தாடியும் மீசையும் பரட்டைத் தலையுமாயிருந்த முதியவர் தன் மார்பில் சாய்த்து வைத்துக் கொண்டிருந்தார். மார்பு ரோமங்கள் முள்ளாய்க் குத்தின. "ஆரு தாத்தாவா. செத்துப் போனவரா…"

அந்தப் பெண்மணி அளவான உருண்டையாகப் பிடித்து சாதத்தை வாஞ்சையோடு ஊட்டினாள். விழுங்குவது சிரமமாக இருந்தாலும் பசி வயிறு வாங்கிக் கொண்டது.

"ப்ராணாய…ஸ்வாக…"

இன்னொரு கவளம். அமிர்தம்போல் இறங்கியது.

"அபாநாய ஸ்வாக…"

மற்றொரு கவளம். "பாவம்… நல்ல பசிபோல…"

வியாநாய ஸ்வாக… சிந்தாமல் சிதறாமல் தாயின் பரிவோடு – பரவசம்தான்.
அய்ய… அய்யர் வீட்டுப்புள்ள…" அச்சத்தோடு கவளத்தை நீட்டிய கை சட்டென்று இழுத்துக் கொண்டது. அதைச் சட்டெனப் பிடித்து இழுத்து அகோரப் பசி யுடையவனாய் வாயில் திணித்துக் கொள்ள அவள் மிரண்டு போனாள். "உதாநாய… ஸ்வாக…"

"சாப்பிட்டு எத்தினி நாளாச்சோ. பாவம்… இன்னொரு கவளம்."

"ப்ரம்மணே ஸ்வாக…"

பசி முற்றிலுமாகப் போயிருந்தது. சுற்றிலும் ஒரு கூட்டமே உட்கார்ந்திருந்தது புரிந்தது. அன்னம் கடவுள்…. அன்னம் பிரம்மம்… அன்னமே ஆனந்தம்… அன்னமே சர்வம்… அன்னத்தின் முதலாய் மட்டுமே அனைத்து தேடல்களும் சாத்தியம். அதை அளிப்பவன் கடவுள்… சர்வேச்வரன்…

தாத்தா சிரிப்பது போலிருந்தது.

About The Author