அபலையின் பிரார்த்தனை

கங்குல் திரையே! காரிருள் நிசியே!
காவிரி நதியே! காரிகை அபலை;
பொங்கும் இளமைப் புத்தெழில் போர்த்துப்
பொலியும் பருவம் எய்தியவுடனே
எங்கும் பெற்றோர் வரனைத் தேடி
எதுவும் குதிரா தேக்கம் உற்றனர்;
அங்கும் இங்கும் பற்பல பேசினர்;
அண்டை அயலார் அனைவரும் ஏசினர்!

கொஞ்சிடும் மழலைக் குழந்தை வயதில்
குளிர்ந்தே உள்ளம் குலவினர் பெற்றோர்;
விஞ்சிடும் வனப்பு; வீசிளந் தென்றல்;
விரைந்திடுங் காலம்; விழுமிய பெண்மை;
நஞ்சுடன் அமுதை நளினம் பின்னும்
நயன மிரண்டும் நனைந்தன நீரால்;
பஞ்சைகள் பற்பலர் – பழமையின் புழுக்கள்
பார்த்தெனை மறுத்தனர்,
பணத்தின் பித்தால்

எழுத்தறி விப்பவர் எந்தை பேதை
ஏய்க்கப்பட்டே ஏழ்மையில் உழல்பவர்;
கழுத்தை அமுக்கும் கவலைப் பாரம்
காரிகை என்னால் கலக்கம் துயரம்;
உழைத்துடல் கெட்டு, உறக்கம் இன்றி,
உளைத்திடும் நெஞ்சில் உறுதியுந்தளர,
மழைத்துளி காணா மாநிலம் போல
மகிழ்ச்சி வறண்டது மகளாம் என்னால்!

சுமையின் பளுவால் சுருண்டனர் பெற்றோர்;
சுட்டுப் பொசுக்கும் வறுமை வெயிலாம்!
குமையும் சிதையோ குருத்துடற் பெண்மை?
கோழைகள் சமுகம் குழறிடும் லட்சியம்;
உமையே! தாயே! உலகம் போதும்
உயிரைத் தந்தேன் உனதடி தஞ்சம்
அமைதி இல்வாழ்வை அடையப்பெற்றிலை;
அணைந்தருள் செய்வாய்! அம்மா, சரணம்!!

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    முதிர் கன்னியரின் மனக்குமுறலை வெளிப்படுத்தும் முத்திரைக் கவிதை!

Comments are closed.