அப்துல்காதரின் குதிரை

அந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடித்த நிமிடத்திலிருந்து குதிரை ஒன்று மெல்ல மெல்லத் தனது குளம்புகளின் ஓசை எழும்புமாறு மனதிற்குள் ஓடத் தொடங்கிவிட்டது. குதிரைகள் பற்றிய எனது சிந்தனைகள் எல்லாம் கார்காலத்தில் திரளும் மேகங்களைப்போல மனதில் திரளத் தொடங்கின. என் பால்யத்தில் நான் குதிரைகளைக் கண்டிருக்கவில்லை. நான் அறிந்திருந்த குதிரைகள் எல்லாம், புத்தகங்களும் திரைப்படங்களும் அறிமுகப்படுத்தியவைதான். சாமி பவனி வரும் மரக்குதிரை ஒன்றும் எங்கள் ஊர்க் கோயிலில் கண்டதுண்டு. யானைகள்கூட அடிக்கடி எங்கள் ஊரைக் கடந்துபோகும். ஆனால், குதிரைகள் வந்துபோவதேயில்லை. குதிரைகளை நேரில்காணும் ஆர்வம் என்னுள் நாளுக்குநாள் மிகுந்து கொண்டிருந்தது.

பால்யத்திலிருந்து நான் வாலிபத்துக்குள் அடியெடுத்து வைத்த காலத்தில், கோவில்பட்டியில் நேஷனல் சர்க்கஸ் முகாமிட்டிருந்தது. அதில் குதிரைகளின் சாகசம் அற்புதமாயிருப்பதாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். நானும் ஆசையோடு சென்றேன். கம்பீரமாய் நடந்துவரும் குதிரைகளைவிட ஒய்யாரமாய் ஓடிவந்த குமரிகளின் பக்கம் என் கவனம் திரும்பியதற்கு நான் காரணமில்லை. அன்றைய தினத்திலும் நான் குதிரைகளைக் கவனிக்கத் தவறிவிட்டேன். அதன்பின், நான் வாசித்த நூல்களின் வழிதான் எனக்குள் குதிரை வந்துபோய்க் கொண்டிருந்தது. திருவனந்தபுரத்தில் தான் கண்டு வியந்த குதிரைகளைப் பற்றிய சு.ரா-வின் எழுத்துகளை வாசித்த பின்பு எனக்குள் நல்ல குதிரைகளைக் காணும் ஆவல் அதிகமானது. கனவுகளில் குதிரைகள் ஓடிக்கொண்டேயிருந்தன. என்னைவிட உயரமான குதிரைகளில் நான் துள்ளி ஏறி சவாரி செய்யும் சாகசங்கள் அவற்றில் அரங்கேறின. நிஜத்தில் வாழ்க்கை என்னை நகரத்தை நோக்கி நகர்த்திப்போகிற காலம் வந்தது. சென்னைக்கு நான் என் வாசத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. அப்பொழுது எனக்குத் தோன்றிய முதல் மகிழ்ச்சியான விசயம், சென்னையில் குதிரைகளைக் காணமுடியும் என்பதுதான். உயரமும், கம்பீரமும், பட்டுடலும் கொண்ட குதிரைகளை மனதில் கண்டபடி சென்னை வந்திறங்கினேன்.

சென்னைக்கு நான் வந்து சுமார் இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. வந்திறங்கிய முதல் கணத்திலேயே எனது கற்பனைகள் சென்னையின் யதார்த்த வெயிலில் வறண்டு போயின. இரயிலடியில் இறங்கி வெளிவந்ததும் நான் கண்டது குள்ளமும் ஒடிசலுமான குதிரை ஒன்று, வண்டி ஒன்றில் பூட்டப்பட்டிருந்ததைத்தான். அதற்கு முன்பாகக் கைப்பிடிக்கும் கொஞ்சம் அதிகமான புற்கள் வீசப்பட்டிருந்தன. அரைவட்டவடிவமான ஒரு கூண்டு அந்த வண்டியில் பொருத்தப்பட்டிருந்தது. அதன் அருகில் மற்றும் சில குதிரை வண்டிகள் இருந்தன. ஒரு குதிரை வண்டியில் நாலைந்துபேர் ஏறிக் கொள்ள அது புறப்பட்டுப் போனது. அந்தக் குதிரைகூடப் பரவாயில்லை. ஆனால், என்னருகே நின்ற குதிரையோ மிகவும் ஒல்லியாக இருந்தது. அது சிறு குழந்தையைச் சுமக்கக்கூடத் தகுதியற்றதோ என்று பட்டது. அதன் அருகே நின்று கொண்டிருந்தவர், தன்னைக் கடந்து சென்றவர்களிடம் “சார், குதிரை வண்டி… சார் குதிரை வண்டி“ என்று அழைத்துக் கொண்டிருந்தார். அவரும் குதிரையைப்போல் ஒடிசலாகத்தான் இருந்தார். அவர் ஒரு முஸ்லீம் என்பது தெரிந்தது. அவர் தலையில் ஒரு குல்லாவும், தாடியும் கொண்டவராயிருந்தார். நான் அவர் அருகே சென்றேன். அவர் “சார், குதிரை வண்டி” என்றார்.

“அண்ணே, பஸ் வராதா?”

“என்னது பஸ்ஸா? இந்த ரூட்ல பஸ்ஸு ரெண்டவருக்கு ஒரு தபாதான். நீ எங்க போணும்?”

சொன்னேன்.

“ஏறிக் குந்து சார். இட்னு போறேன்.”

எனக்குத் தயக்கமாயிருந்தது. அவரோ, “ஒண்டியாயில்ல சார், நாலு பேரு சேரட்டும், போலாம்! ரெண்டு ரூபாதான்” என்றார்.
அவர் பதில் என் தயக்கத்திற்குப் பதில் சொல்வதாக இருந்தது. நான் பதில் சொல்லவில்லை. ஆனால், கையிலிருந்த பெட்டியை வண்டியில் வைத்தேன். குதிரை மெல்லத் தன்னை உலுக்கிக் கொண்டது. இந்தக் குதிரை என்னையும் இவரையுமே சுமக்குமா என்று சந்தேகமாயிருந்தது. ஓரிருவர் சேர்ந்தனர்.

“சரி போலாம், ஏறிக்க சார்!”

ஏறிக்கொண்டோம்.

உடன் வந்த மற்ற இருவரும் உள்ளூர்க்காரர்கள் போல. குதிரைக்காரரை அவர்கள் அறிந்திருந்தனர். அவர் பெயர் அப்துல்காதர் என்றும், அவரை அவர்கள் ’பாய்’ என்று அழைப்பது வழக்கம் என்றும் தெரிந்துகொண்டேன். நான் எதிர்பார்த்ததைவிடக் குதிரை வேகமாகச் சென்றது. நெருக்கடியாகத்தான் இருந்ததென்றாலும் சில நிமிடங்களில் நான் வந்து சேரவேண்டிய இடத்தில் என்னை இறக்கிவிட்டுவிட்டது குதிரை. ரெண்டு ரூபாயை அவரிடம் நீட்டினேன். அவர் பணத்தைப் பைக்குள் வைத்துக்கொள்ளும் நேரத்திற்குள் குதிரையை ஒருமுறை தொட்டுப் பார்த்தேன். அதன் தோல் மென்மையாக இருந்தது. குதிரை சிலிர்த்துக் கொண்டது. பாய் சினேகமாகப் பார்த்தார். பின்பு, குதிரையை விரட்டி ஓட்டினார். நான் அது சென்று மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதே சென்னையில்தான் நல்ல செழிப்பான குதிரைகளையும் பார்த்திருக்கிறேன். கிண்டி ரேஸ் கிளப் அருகே செல்கிற சமயங்களில் அவ்வப்போது தென்படும். அவை நல்ல உயரமும், அதற்கேற்ற எடையும் உடையதாக இருந்தன. அவற்றின் அருகில் நான் நின்றால் அவற்றின் முகம் மட்டும்கூட இருக்கமாட்டேன் என்று தோன்றியது. அதை ஓட்டிச் செல்லும் ஜாக்கிகள்கூடக் கம்பீரமாக இருந்தனர். இக்குதிரைகள் நினைத்தால் அவர்களைத் தூக்கியெறிந்துவிட்டுப் போய்விடலாம். ஆனாலும் அவை ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவைபோல அவர்களுடன் நடந்து சென்றன. நல்ல ஜாதிக்குதிரைகளைக் காணும் ஆவல் அந்த நாளில் ஈடேறியது என்றாலும், அவற்றைவிட பாய் வளர்க்கும் மெலிந்த குதிரைதான் என் மனதில் நிறைந்திருந்தது.

பொதுவாக, இரயில்நிலைய அடியில் இறங்கியதும் பேருந்துகளை யாரும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களை ஏற்றிச் செல்லக் குதிரைவண்டிகளோ, ரிக்‌ஷாக்களோ இருந்தன. நான் குதிரைவண்டிப் பயணங்களை மிகவும் விரும்பினேன். ஒருமுறை வண்டி சென்றுவிட்டிருந்தால், அது திரும்ப வர அரைமணி நேரமாவது ஆகும். ஆனாலும் நான் காத்திருந்து பாய் வண்டியில் பயணிக்கலானேன். பாய் ரொம்ப நெருக்கமான மனிதராகிவிட்டார். அவர் மட்டுமல்ல, அந்த இரயிலடியில் கடை வைத்திருக்கும் வேறு சிலரும்கூடப் பழக்கமானார்கள். பாய் வண்டி வரும்வரை அங்கு பூ கட்டிக் கொண்டிருக்கும் பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் அங்கு வரும் பிச்சைக்காரி ஒருத்தி என்னிடம் ஐம்பது பைசா கேட்பாள். அவள் பார்ப்பதற்கு ஒரு பைத்தியக்காரியைப் போல இருந்தாள். அவள் மேல் சட்டை, கைப்பகுதியில் கிழிந்திருந்தது. அவள் ஒரு வற்றிப்போன மரத்தைபோல இருந்தாள். அவளுக்காக நான் ஐம்பது பைசா நாணயங்களை எடுத்து வைத்திருப்பேன். அவள் எல்லோரிடமும் கை நீட்டுவதில்லை. பூக்காரம்மாகூட, “அவளுக்கு உன்னக் கண்டாத்தான் மவராசனாத் தோணுது போல” என்று கிண்டல் செய்வாள்.

அவள் சில மாலை வேளைகளில் பூக்காரியிடம் கேட்டுக் கொஞ்சம் பூக்களை வாங்கித் தலையில் வைத்துக்கொள்வாள். அங்கிருக்கும் கடைக்காரர்கள் யாரும் அவளுக்கு எதையும் இல்லை என்று சொல்வதில்லை. எனக்கு, அவளுக்கு ஒரு மேல்சட்டையைத் தந்தால் நல்லது என்று பட்டது. என்னிடம் இருக்கும் சட்டைகளில் சுமாரான ஒன்றை அவளுக்குத் தரலாம் என்று எடுத்து வைத்திருந்தேன். ஆனால் கொடுக்க ஏதோ தயக்கமாகவேயிருந்தது.

குதிரைவண்டிகள் குறைந்து மோட்டார் ரிக்‌ஷாக்களும், ஆட்டோக்களும் வரத் துவங்கிவிட்ட காலமது. பெரும்பாலானவர்கள் அவற்றையே விரும்பினர். பாய் அலுத்துக்கொள்வார். அந்த இரயிலடியில் பாய் மட்டும்தான் குதிரைவண்டி ஓட்டிக்கொண்டிருந்தார். மற்றவர்கள் குதிரைகளை விற்றுவிட்டு ஆட்டோக்களுக்கு மாறியிருந்தனர். பாய் மட்டும் காத்திருந்து தனது வாடிக்கையாளர்களைக் கெஞ்சிப் பிழைத்துக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு ஒருநாள் ஐந்து பேருக்குமேல் காத்திருந்தனர். பாய் எல்லோரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டார். என்னை முன்புறம், அவர் இருக்கைக்கு அருகில் அமர்ந்துகொள்ளச் சொன்னார். பாரம் அதிகம் எனப்பட்டது. ஆனாலும் மறுப்பின்றி குதிரை, வண்டியை இழுக்க ஆரம்பித்தது. என் கால் குதிரையின் பிருஷ்டத்தில் இடித்தபடியிருந்தது. சமீபத்தில் பெய்த மழையில் சாலை என்று ஒன்று அங்கு இல்லாமலிருந்தது. குதிரை கவனமாய்ப் பார்த்து நடந்தது. வண்டியின் ஆட்டத்தில் நான் முன்புறம்போய் விழுந்துவிடுவேனோ என்று பட்டது. எங்களுக்குப் பின்புறம் வந்துகொண்டிருந்த ஒரு கார் வழிவிடுமாறு தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. பாய் வண்டியை ஓரமாக ஓட்ட, கார் எங்களைக் கடக்க முயன்றது. அதைக் கவனிக்காது கார் ஏறி வர, எதிர்ப்புறம் ஒரு வேன் வேகமாக வர, இரண்டும் மோதிக்கொள்ளும் நிலை. விபத்தினைத் தவிர்க்கக் கார்க்காரன் ப்ரேக் பிடிக்க, அவன் கார் வேகத்தில் தலைகீழாகத் திரும்பிக் கொண்டுவிட்டது. திரும்பிய கார் சரியாக எங்கள் வண்டியின்மீது மோதியது. வண்டி சரிந்து விழுந்தது. வண்டியின் கூடை உடைந்துபோனது. குதிரை கால்மடங்கி விழ, நாங்கள் அனைவரும் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டோம். அக்கம்பக்கத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் ஓடிவந்து எங்களைத் தூக்கிவிட்டனர். ஓரிருவருக்கு பலத்த அடி. அவர்கள் மருத்துவமனைக்கு வேறு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டனர். எனக்குப் பெரிய அடி ஒன்றும் இல்லை. நானே எழுந்துகொண்டேன். விழுந்துகிடந்த குதிரை அருகே சென்றேன். வண்டிக்கூண்டு அதன் மேல் ஒடிந்துகிடந்தது. பாய், பைத்தியம் பிடித்தவரைப்போல அதன் அருகிலேயே அமர்ந்திருந்தார். நானும் இன்னொருவரும் சேர்ந்து அந்தக் கூண்டை அப்புறப்படுத்தினோம். குதிரை எழுந்து கொள்ளவில்லை. அதன் ஒருகால் இரண்டாக உடைந்து கிடந்தது. பாய் எழுந்து, அழுதபடி அதன் காலைத் தன்னிடமிருந்த துணியால் கட்டினார். ஒரு லோடு வண்டியை வரச்சொல்லிக் குதிரையைத் தூக்கிப்போட்டுக்கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு ஓடினார். இதுநாள் வரை ஓடிக்கொண்டிருந்தது குதிரையின் கால்கள் மட்டுமல்ல, பாயின் குடும்பமும்தானே!

அதன் பின்பு சில நாட்கள், பாயைக் காணவில்லை. பின்பு, பாய் ஒருநாள் ஒரு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்தார்.

“என்ன பாய், யார் ஆட்டோ இது?”

“இன்ஸ்பெக்டரோடது, வாடகைக்கு எடுத்து ஓட்டுறேன்.”

“சரி, குதிரை என்னாச்சு?”

“அதையேன்பா கேக்குற! அது காலு ஒடிஞ்சுபோச்சு. என்ன கட்டுக் கட்டியும் சேரலை. வேற யாருக்கும் விக்க மனசு வர்ல. வித்தாலும் இனி எவன் வாங்குவான்? அதான் அதைக் கழட்டி வுட்டுட்டேன்.”

எனக்கு வருத்தமாயிருந்தது. பாய் குதிரையைத் தடவிவிடும் அழகைக் காணும்போதெல்லாம் அவர் அதைத் தன் குழந்தையாகத்தான் பாவிக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால், இன்று பாய் அந்தக் குதிரையைக் கழட்டிவிட்டுவிட்டதாகச் சொல்கிறார். பாவம், அவரும்தான் என்ன செய்வார்! ஏற்கெனவே அவருக்குப் பெரிய குடும்பம் என்று சொல்லியிருக்கிறார். இதில் குதிரையைப் போஷிப்பது அவருக்குக் கடினமாகப்பட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த நாளில் நான் அந்தக் குதிரையைக் கண்டேன். ஒரு காலை நொண்டிக்கொண்டு அங்கிருந்த பேப்பர்களைக் கிளறி உணவைத் தேடிக்கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தேன். அதற்குப் பார்வையும் சரியாகத் தெரியவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தது. மீண்டும் சுதாரித்துக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தது. எனக்குக் குதிரையை என்னுடனேயே அழைத்துப்போய் வைத்துக்கொள்ள வேண்டும்போல்பட்டது. பேச்சிலர் ரூம்களில் குதிரை வளர்க்க அனுமதிக்கும் வழக்கம் இருக்கிறதா என்ன? சென்னையில் தாங்கள் வளர்க்கும் பசுக்களையும், எருமைகளையுமே வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதில்லை. கறந்துவிட்டுப் பின்பு சாலைகளுக்கே அவற்றைத் துரத்திவிடும் ஊர் இது. அந்தக் குதிரை நான் பார்க்கும்படிக்கு அப்பகுதியில் பல நாட்கள் சாவைத் தன் வாலில் கட்டிக்கொண்டு சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.

இப்பொழுதெல்லாம் இரயிலடியில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நாட்கள் குறைவாகிவிட்டன. அடுத்தடுத்து ஆட்டோக்கள் வந்து பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருக்கின்றன. நான் இரயிலடிக்கு வந்ததும் எல்லோரையும்போலப் பறப்பது இல்லை. அங்கேயே நின்று நிகழும் மாற்றங்களைக் கண்டுகொண்டிருப்பேன். பூக்காரம்மாவிடம் பேசுவேன். ஐம்பது பைசா கேட்கும் பிச்சைக்காரிக்காகக் காத்திருந்து ஐம்பது பைசாவைக் கொடுத்துவிட்டுப் பின் நகர்வேன். இதற்கிடையில் பாய் அவசரப்படுத்தி “சார்! வர்றியா? டைம் ஆகுது” என்றால் “நீங்க போங்க பாய், நான் வர லேட்டாகும்” என்று அனுப்பிவிடுவேன்.

ஒருமுறை இரண்டு நாட்களாக அந்தப் பிச்சைகாரியைக் காணவில்லை. பூக்காரம்மாவிடம் கேட்டேன்.

“அதுவா சார்? அதுக்கு மேலுக்கு சரியில்ல. செம ஜுரம். அந்தப் படிக்கட்டுப் பின்னாடியே படுத்துக்கிடக்கு. நீ பாக்கலியா?”

“இல்லை.”

“பாவம் சார் அது! இந்த ஊரிலேயே ரொம்ப இஸ்டைலா வாழ்ந்த பொம்பள சார் அது. இந்த ஊர் சேர்மன்னு சொல்லிக்கினு திரியறானே ஒரு சோமாரி? அவன் இவள ரொம்ப வருசம் வச்சிகினு இருந்தான். இவளுக்கு வூடு நிலமெல்லாம் எழுதி வச்சான். அந்த ஆளுக்கு வயசாகிப்போச்சு, அவன் பசங்க இவள மிரட்டி வூடு, சொத்தெல்லாம் திரும்ப வாங்கிகினானுங்க. அதுல ஒருத்தன் இவள நான் வச்சிக்கிறேன் வர்ரியான்னு கேட்டான். இது காரித் துப்பிருச்சு. அந்தக் கோபத்துல ஒரு ராடு எடுத்து மண்டைய ஒடச்சுப்புட்டான். அதுல இருந்து இது கிறுக்குப்புடிச்சு இங்கிட்டுத்தான் சுத்திகினு திரியுது. இதோ போயிக்கினு இருக்குற பலபேரு அவ நல்லாயிருந்த காலத்துல அவ பின்னாடித் திரிஞ்சவனுகதான். இன்னைக்கு இவனுங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கானுங்க. ஆனா, ஒரு பய பத்து பைசா போட மாட்டானுங்க. அவ கத முடிஞ்சிரும் சார் சீக்கிரம். நீ கிளம்பு சார்! மழ வர்ரதுக்குள்ள வூட்டுக்குப்போ” என்றாள்.

அவள் வாய்முகூர்த்தம் போலவே மறுநாள் அந்தப் பைத்தியம் செத்துக் கிடந்தாள். போலீஸுக்குச் சொல்லிவிட்டதாகச் சொன்னார்கள். போன மாதம் நான் கொடுத்த சட்டையைப் போடாமலேயே வைத்திருந்தவள், சாகுமுன்பு அதைப் போட்டுக்கொண்டு செத்திருக்கிறாள்! அங்கிருந்து வேகமாகக் கிளம்பிவிட வேண்டும் போலிருந்தது. நடக்க ஆரம்பித்தேன். இந்த ஊரைத் தூக்கிச் சுமந்ததும் பயனற்றுப் போனதும் வீசியெறியப்பட்டதுமான ஓர் உடலைக் கண்டுவிட்டேன். மற்றுமோர் உடல் சீக்கிரம் கண்ணில் படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நான் நினைத்தபடி அந்தக் குதிரையை மீண்டும் உயிரோடோ பிணமாகவோ நான் பார்க்கவேயில்லை இதுவரைக்கும்.

About The Author