அப்பாவின் நினைவு தினம் (1)

அந்த நீண்ட ஹாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது.

எதிர் வரிசையில் முதல் மேஜையில் இவரைப் பார்ப்பது போல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இவன்.

"அப்பளம்… அப்பளம்… இன்னும் எனக்குப் போடலை… போடலை…" – கத்தினார் அந்தப் பெரியவர்.

"அய்யாவுக்கு இன்னொரு அப்பளம் கொண்டாப்பா…" – இவன் இலையில் அப்பளம் தீர்ந்து விட்டது கண்டு எதிரில் அமர்ந்திருந்தவர் உபசரித்தார்.

"எனக்கு வேண்டாம்… முதல்ல அந்தப் பெரியவருக்குப் போடுங்க…" என்றான் இவன்.

லேசாக அவரின் பார்வை இவனின் பக்கம் நிமிர்ந்து தாழ்ந்தது. அதில் ஏதோ ஒரு அதிருப்தி படர்ந்திருப்பதாகத் தோன்றியது. இவனுக்கு இதற்குள் அவரின் இலையில் பரிமாறுபவர் காய் வைக்கப் போக "வேண்டாம்" என்றவாறே குறுக்கே கையை நீட்டினார் அவர்.

புறங்கையில் காய்கள் கொட்ட, "பார்த்துப் போடுறதில்லை?" என்றவாறே சப்ளையரைப் பார்த்து முறைத்துக் கையை உதறினார்.

"நான் கவனமாப் பார்த்துத்தான் போடுறேன்… நீங்க கையைக் குறுக்கே நீட்டிட்டீங்க…" என்றான் அவன்.

"தெரியும் போய்யா…"

பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த இவனுக்கு அவரின் செய்கைகள் விசித்தரமாய்த் தோன்றின. இந்த வயதில், இந்த இடத்தில் இப்படி ஒருவரா?

"வேண்டாம்" என்று சட்டென்று அவர் சொன்ன விதம் நினைத்துச் சிரிக்க வைத்தது. ஏதோவொரு குழந்தைத்தனம் அல்லது அர்த்தமற்ற கோபம் அவரின் செயலில் ஒட்டிக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது.

சாப்பிடவென்று வந்து அமர்ந்தபோதே அவரின் சண்டை ஆரம்பமாகிவிட்டதை நினைத்துப் பார்த்துக் கொண்டான். வரிசையாகப் போட்டிருந்த இலைகள் ஒன்றில் வந்து அமர்ந்து விட்டு "உனக்கென்ன தெரியாதா?" அதிகப்பிரசங்கி எனக்கு இலையைப் போட்டு வச்சிருக்கே? என்னோட தட்டை எடுத்திட்டு வா…" என்று இரைந்தவாறே அந்த இலையை எடுத்துச் சுருட்டி விருட்டென்று மூலையில் எறிந்தார்.

வாய் பேசாமல் அவருக்கான தட்டை கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனான் சப்ளையர்.

தண்ணீர் கொண்டு வந்து வைத்த போது, குனிந்து, குனிந்து, உன்னிப்பாக டம்ளரில் இருந்த அந்தத் தண்ணியையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஏதேனும் தூசிகள் இருக்குமோ என்ற தேடலை விட அப்படி இருந்தால் சத்தமிட்டு விரட்டுவதற்குத் தோதாகுமே என்று தேடுவது போல் இருந்தது.

"எல்லோருக்கும் வணக்கம். இன்று நம் இல்லத்திற்கு வந்து, தன் தந்தையின் நினைவு தினத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டு அவர் ஆன்மா சாந்தியடையவும் அவர் நினைவினைப் போற்றிடவும் நம் எல்லாருக்கும் நல் விருந்தளித்து, நம்மோடு அமர்ந்து உண்டு மகிழ்ந்து மன சாந்தியும் சந்தோஷமும் நிறைவும் பெற்றிட வருகை தந்திருக்கும் திரு. ரமணன் அய்யா அவர்களுக்கு நம் எல்லாரின் சார்பான நமஸ்காரத்தையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வோமா. அவர் தந்தையாரின் ஆன்மா சாந்தி பெறுவதாக. ஓம் சாந்தி… சாந்தி… சாந்திஹி…"

முன்னே விரித்த இலையின் முன் அன்னமும், நெய்யும் பரவப்பட்டிருக்க கண்களை மூடி கைகளைக்கூப்பி, ஒரு நிமிடம் எல்லோரும் தன் தந்தைக்காகத் தியானம் செய்த அந்த வேளையில் மெய்சிலிர்த்துப் போனான். கண்களில் ஏனோ கட்டுப்படுத்த முடியாமல் நீர் பெருகியது.

"உங்க புண்ணியத்துல, எல்லாருக்கும் நல்ல ருசியான விருந்துச் சாப்பாடு இன்னைக்கு. சாதம், சாம்பார், ரெண்டு கறி, ஒரு கூட்டு, ரசம், அப்பளம், மோர், ஊறுகாய்… சரிதானே சார்… திருப்தியா?"

"மேடம் வடையும் பாயாசமும் விட்டுட்டீங்களே? அத்தோட சாம்பார் சாதத்துக்கு நெய்யும் போட்ருங்க…" இவன் ஆர்வமாய்க் கூற.

"அச்சச்சோ… அதெல்லாம் வேண்டாம் சார்… எல்லாரும் வயசானவங்க… இனிப்பெல்லாம் ஒத்துக்காது…" என்றார்கள் அவர்கள்.

"ஒரு நாளைக்கு சாப்பிடுறதுல என்ன வந்துடப் போகுது… எனக்காகச் செய்யுங்க மேடம். அப்பா நினைவு தினத்தை திருப்தியா நிறைவாகக் கொண்டாடணும்… தயவு செய்து, மறுக்காதீங்க… எல்லாத்தோடவும் ஒரு வாழைப்பழம் இலைல வச்சிடுங்க… எக்ஸ்ட்ராவா என்ன உண்டோ அதை நான் பே பண்ணிடுறேன்… அதைப்பத்தி நீங்க ஒண்ணும் நினைக்க வேண்டாம்…" இவன் முகத்தையே கூர்ந்து நோக்கினார்கள் அவர்கள்.

"ஓ.கே. சார்… ரொம்ப ஆசையோட கேட்கிறீங்க… தவிர்க்க முடியாம இதுக்கு ஒத்துக்கிறேன். சரிதானா?"

"ரொம்ப நன்றி மேடம்…"

திருப்தியோடு பேச்சைத் தொடர்ந்தான் இவன்.

"இந்தமாதிரி சாப்பாடு, டிபன், இதுதான் இங்கே ஏற்பாடா? இல்ல வேற மாதிரி ஏதேனும் உண்டா மேடம்?"

"உண்டு சார்… உங்க விருப்பத்தைப் பொறுத்தது அதெல்லாம்… இந்த விடுதியைப் பதினைஞ்சு வருஷமா நடத்திட்டு வர்றேன் நான். அரசாங்கம் இடம் கொடுத்து… கட்டடமும் கட்டிக் கொடுத்தாங்க… மிகக் குறைவான நிதி ஆதாரத்தோட தான் ஆரம்பச்சது இந்த விடுதி. ஆனா இன்னைக்கு உங்களை மாதிரி சிலர் புண்ணியத்துலே நல்லபடியாகவே போயிட்டிருக்கு. இங்கேயிருக்கிற டேபிள் சேர், பீரோ, டி.வி., கட்டில், மெத்தை, ஃபேன் – இப்படி எல்லாமே நன்கொடையா வந்தது தான். சிலர் பணமாவே கொடுத்திட்டுப் போயிடுவாங்க… எது விருப்பமோ அதன்படி செய்யலாம்…"

"இங்கே எத்தனை பேர் இருக்காங்க?"

"போனவாரம் வரைக்கும் இருபத்தஞ்சு பேர் இருந்தாங்க. மொத்தம் முப்பது கட்டில் படுக்கை இருக்கு. இங்கே… சமயங்களில் முப்பதும் நிறைஞ்சு மேற்கொண்டு நாலஞ்சு பேர் வந்திடுவாங்க. கீழே விரிப்பு விரிச்சு இடம் பண்ணிக் கொடுப்பேன்… பத்து மெத்தை, படுக்கை எக்ஸ்ட்ராவா வச்சிருக்கேன். எல்லாம் நன்கொடையா வந்தது தான். இன்றைய தேதிக்கு இருபத்திரெண்டு தான் இருக்கு. மூணு பேர் போன ஒரு வாரத்துலே காலமாயிட்டாங்க…"

"அப்படியா?" – அதிர்ச்சியோடு கேட்டான் இவன்.

"ஆமா சார்… ரொம்ப வயசானவங்க… எண்பதைத் தாண்டினவங்க… தொடர்ந்து ஒரு வாரமா க்ளைமேட்டே சரியில்லை பாருங்க… ஒரே குளிரு… வாடைக்காத்து. மழை வேறே ஊத்தித் தள்ளிடுச்சி… அது தாங்கலை… ஒருத்தருக்கு ஆஸ்துமா… ஒருத்தருக்கு திடீர் நெஞ்சுவலி… ஒருத்தர் தூங்கினமேனிக்கே அப்படியே போய்ச் சேர்ந்திட்டாரு… ரொம்பப் பாவம் சார்… அதவிட நாங்க தான் பாவம்னு சொல்லணும்… பாடியை வாங்கிக்கக்கூட யாரும் வரலை… நீங்களே எரிச்சிடுங்க மேடம்னு போன்ல சொல்றாங்க சார்… என்ன மனுஷங்க சார்…? குறைஞ்சது ரெண்டாயிரமாவது வேணும்… ஒருத்தர் காரியங்களை முடிக்கிறதுக்கு… திடீர்னு ரெண்டு மூணு பேர் போயிட்டா? முழிச்சுப் போனேன் சார் நானு… ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன்…"

அப்படியே அமைதியாகிப் போனான் இவன். எவ்வளவு பொறுப்பான சேவை…

முதியோர் இல்லங்கள் என்று அடிக்கடி படிக்க நேரும் செய்திகள் ஏற்கெனவே சிந்திக்க வைத்திருந்த நிலையில் இந்த நேரடி அனுபவம் மனதை மேலும் உலுக்குவதாக இருந்தது.

அப்படியே திரும்பி இருபக்கமும் வரிசையாகப் போட்டிருந்த மெத்தை கட்டில்களில் படுத்திருக்கும் பெரியவர்களை நோட்டமிட்டான்.

யாரையும் பார்க்கவே இஷ்டமில்லை என்பதைப் போல் ஒருவர் வெளியே ஜன்னல் வழியாகத் தெரிந்த விரிந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு முதியவர் நிமிர்ந்து பார்த்தமேனிக்கு உத்திரத்தை பார்த்தவாறே இமை கொட்டாமல் கிடந்தார். ஒருமுறை கூட இமைக்காமல் அவர் அப்படி வெறித்துக் கிடந்தது இவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இன்னும் சற்று கூர்ந்து கவனிக்க முனைந்தான்.

கண்களிலிருந்து கோடாய் நீர் வழிந்து கொண்டிருந்தது. அதைத் துடைக்கக்கூட உணர்வின்றி அவர் கிடப்பதும், உதடுகள் லேசாய்த் துடிப்பது போலவும்…

என்னென்ன நினைவுகளோ மனதில்? பெற்ற பிள்ளை வைத்துக் காப்பாற்றாமல் இப்படிக் கொண்டு வந்து அநாதையாய் விட்டுவிட்டுப் போய்விட்டானே, என்று நினைப்பாரோ?

மனைவியும் பிள்ளையோடு சேர்ந்து கொண்டு, தன்னை இப்படி விரட்டி விட்டாளே என்று குமுறுகிறாரோ?

மனைவியின் அழகில் மயங்கி, அவள் பேச்சைக் கேட்டு காமத்தின் வயப்பட்டுத் தன்னை இப்படிக் கழித்துக் கட்டிவிட்டானே பாவி… என்று வேதனை கொள்கிறாரோ?

என் பிள்ளையை, பிள்ளைகளை வளர்க்க என்ன பாடுபட்டிருப்பேன்? எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்திருப்பேன்? எப்படிப் பாடுபட்டு உழைத்தேன்? எங்கெல்லாம் கடன் வாங்கிச் சீரழிந்தேன்? என் சொந்தத் தேவைகளை எங்ஙனமெல்லாம் குறைத்துக் கொண்டேன்? ஒரு வார்த்தை என்றேனும் என் இழப்புகளைப் பற்றிப் பேசியிருப்பேனா? முடியலை என்று படுத்திருப்பேனா? அவர்களைப் படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்பிவிட்டுத் தான் ஓய்வது என்று இருந்தேனே? அந்த வைராக்கியம் உணரப்படவில்லையே?

அந்த உழைப்பு அறியப்படவில்லையே? என்ன உலகம் இது? – இப்படித் தவிக்கிறாரோ?

(தொடரும்)

(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author

1 Comment

  1. Madipakkam Ravi

    உஷா தீபன்,

    இதயத்தை தொட்ட மிக அற்புதமான கதை. மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். அந்த சோகத்தை அப்படியே உணர்ந்தேன் நான். வாழத்துக்கள் உஷா தீபன்.

Comments are closed.