அப்பா

அப்பா சிவலோகப் ப்ராப்தி அடைந்து ஒரு வருஷம் ஆகிறது.

விஷயம் அறிந்தவர்கள் சொன்னார்கள், "நாம் மனிதப் பிறவி எடுத்துச் செய்ய வேண்டிய கடமைகளில் முக்கியமானது, பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ரு யக்ஞமாம். அதாவது, அவர்கள் இறந்தபின் அவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகள் மற்றும் பூஜைகள். அதை சிரத்தையுடன் செய்ய வேண்டும், இல்லையென்றால் அவர்களின் சாபம் நம் சந்ததிகளையும் தாக்குமாம்."

கண்டிப்பாக செய்யத்தானே வேண்டும் இல்லையென்றால், மறைந்துபோன அப்பாவின் ஆத்மா எப்படி சாந்தி அடையும்?

சம்பிரதாயமாக சடங்குகளைச் செய்து வைக்கும் புரோகிதர்களைக் கேட்டபோது சொன்னார்கள்: "நீங்கள் எப்படி செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்படியே செய்துவிடலாம். எளிமையாகவும் செய்யலாம், அல்லது தானதருமங்கள் செய்து வைதிகர்களுக்கு அன்னமிட்டுத் தடபுடலாகவும் செய்யலாம்."

எதற்காக எளிமையாகச் செய்யவேண்டும்? அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டாமா? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, சாத்திர முறைப்படி எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.

அப்பாவின் ஆண்டுத் திதி தடபுடலாக நடந்தது. 12 பேருக்கு விருந்து. பசுக்கள், துணிமணிகள், வெள்ளி, தங்க நாணயம் தானங்கள் – வந்தவர்களுக்கு நிரம்பத் திருப்தி.

புரோகிதர்கள் சொன்னார்கள். "இவ்வளவு சிரத்தையாக சடங்குகளை செய்துவிட்டீர்கள் சார். உங்கள் தகப்பனாரின் ஆத்மா உங்களைக் கண்டிப்பாக வாழ்த்தும்" என்று புகழ்ந்தார்கள்.

விருந்து சாப்பிட்டவர்கள் "சாப்பாடு அருமையாக இருந்தது. மனதார உங்களை வாழ்த்துகிறோம்" என்றார்கள்.

எனக்கும் பரம திருப்தி, அப்பாவின் சடங்குகளை முறையாக செய்து முடித்ததில்.
இருக்காதா பின்னே?

சென்ற ஆண்டு முதியோர் இல்லத்திலிருந்து செத்துப்போன என் அப்பாவின் ஆத்மா என்னை வாழ்த்தாமலா இருக்கும்?

About The Author