அமானுஷ்யன்-100

அக்‌ஷய் கண்களை மூடி அடுத்த மின்னல் வேக நடவடிக்கைக்குத் தயாரானான். அவனுடைய குருவின் வார்த்தைகள் அவன் காதில் இன்னமும் ஒலித்தன. "எந்த முக்கிய செயலுக்கும் முன்னால் முதலில் ஆழ்ந்த அமைதிக்குப் போ. அந்த அமைதி தான் அந்த முக்கிய செயலுக்கு சக்தியை சேகரித்துக் கொடுக்கிறது. பல்லியைப் பார்… சிங்கத்தைப் பார்…. அது தன் இரையைத் தாக்குவதற்கு முன் எப்போதுமே ஒரு கணம் அசையாமல் அமைதியாக தன் சக்தியைச் சேகரித்து வைத்துக் கொண்டே பின் இயங்க ஆரம்பிக்கிறது. அது தேவை இல்லாமல் தன் சக்தியை வீணடிப்பதில்லை. ஒரே சக்தி வாய்ந்த தாக்குதலில் இரையைப் பிடித்து சக்தியற்றதாக்கி விடுகிறது…. தான் தாக்கப் போவதை எந்த விதத்திலும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. எல்லா ரகசியங்களும் உன்னை சுற்றி உள்ள இயற்கையிலும், இயற்கை படைத்த உயிர்களிலும் பொதிந்து கிடக்கின்றன. நீ கவனிக்க மட்டும் செய்தால் போதும். உன்னால் கற்றுக் கொள்ள முடியும்….."

கற்றுக் கொள்வது என்றுமே சுலபமாக இருந்ததில்லை. மாதக்கணக்கில் சரியான அளவான உணவு உண்டு, தொடர்ச்சியான பயிற்சிகள் செய்து ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து கற்ற வித்தைகள் அவை. ஆனால் ஒவ்வொன்றையும் கற்று தேர்ந்து அந்த குருவின் கண்களில் வார்த்தை இல்லாத ஒரு பெருமிதம் தெரிகையில் கிடைத்த சந்தோஷம் எல்லை இல்லாதது.

அவன் குரு எப்போதும் சொல்வார். "நீ சொன்னபடி உன் உடல் கேட்க வேண்டும். அதுவே அது உன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு அறிகுறி….. உன் உடல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் போதே அதை நன்றாக பாதுகாத்து பலப்படுத்திக் கொள். அது உன் கவனக்குறைவுகளால் சக்தி இழக்குமானால் அதை விடப் பெரிய சாபக்கேடு உனக்கு வேறு இருக்க முடியாது. அப்படி சீர்குலையுமானால் அதைத் தவிர வேறு எதை நினைக்கவும் உனக்கு நேரமிருக்காது."

அக்‌ஷய் அந்த அறிவுரையை என்றுமே மறந்ததில்லை. அவன் உடல் அவனுக்கு என்றுமே ஒரு வரப்பிரசாதமான ஆயுதமாகத் தான் இருந்திருக்கிறது. திபெத்திலும் சீனாவிலும் அவன் பயிற்சி பெற்ற காலங்கள் அவனால் மறக்க முடியாத காலங்கள். உடலின் உண்மையான சக்தி உரம் படைத்த உடலில் இல்லை, நினைத்த விதத்தில் வளையவோ, வேகமாக நகரவோ முடிந்த திறனில் தான் இருக்கிறது என்ற பாடம் கற்றது அவனுக்கு பிற்காலத்தில் பேருதவிகளைச் செய்திருக்கின்றது. இன்றும் செய்யப் போகிறது…

அடிக்கடி அரைத்தூக்கத்தில் ஆழ்வதும், பின் கண் திறந்து பார்ர்பதுமாக இருந்த அக்‌ஷய் என்ற அந்த இளைஞனை அந்த போலீஸ்காரர்கள் சட்டை செய்வதை நிறுத்தி இருந்தார்கள். பார்க்க பலசாலியாகவும் தெரியவில்லை. ஒல்லியாக இருந்தான். இரண்டு போலீஸ் அடியைக் கூட அவன் தாங்குவானா என்பது சந்தேகமே. ஆனால் உயர் அதிகாரிகள் எச்சரித்ததன் காரணமாக அவன் மீது ஒரு கண்ணை எப்போதும் அவர்கள் வைத்திருந்தார்கள். இரண்டு கைகளையும் பின்னுக்கு வேறு கட்டி இருக்கிறார்கள். அவனிடம் ஆயுதமும் இல்லை. அவர்களோ துப்பாக்கிகளோடு இருக்கிறார்கள். அவனோ ஒருவன், அவர்களோ பலர். இதெல்லாம் அவர்களுக்கு நேரம் செல்ல செல்ல ஒருவித அலட்சியத்தைத் தந்திருந்தது. வெளியே காவலுக்கு இருந்த போலீஸ்காரர்கள் அங்கிருந்த பெஞ்சில் சாவகாசமாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தார்கள்….

திடீரென்று அக்‌ஷய் எழுந்து நின்றான். மின்னல் வேகத்தில் அந்த வகுப்பறையில் நாற்காலி, மேசைகள் இல்லாத பக்கவாட்டு இடத்திற்குக் குதித்தான். ஒரு வட்டம் போல உடலை வளைத்து பந்து போல அங்கு உருண்டான். அவன் கால் விரல்களும் கை விரல்கள் போலவே அனாயாசமாக இயங்கின. கைகளின் கட்டுகளை அவிழ்த்து விட்டன். அந்த போலீஸ்காரர்கள் திகைத்துப் போய் செயலிழந்து நின்றார்கள். அவர்கள் இது போன்ற காட்சியை இது வரை எங்கும் கண்டதில்லை. அவர்கள் சுதாரிப்பதற்குள் அவன் அவர்களை நெருங்கினான். என்ன செய்கிறான் என்று அவர்கள் உணர்வதற்குள், துப்பாக்கியை இயக்க முனைவதற்குள் அவர்கள் நால்வரையும் செயலிழக்க வைத்தான். நான்கு பேரும் கைகால்களை அசைப்பதற்கோ, குரல் எழுப்புவதற்கோ முடியாமல் அப்படியே சிலை போல நின்றிருந்தார்கள்.

வகுப்பறைக்கு வெளியே தங்களுக்குள் அரசியல் பேசிக் கொண்டிருந்த நான்கு போலீஸ்காரர்கள் பேச்சு சுவாரசியத்தில் உள்ளே நடப்பதை அறியாமல் இருந்தார்கள். அடுத்த முப்பது வினாடிகளில் அந்த நான்கு பேர் நிலையும் உள்ளே இருந்தவர்களின் நிலை போலவே ஆயிற்று. உள்ளேயும், வெளியேயும் இருந்த அந்த போலீஸ்காரர்களின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியையும், பீதியையும் கவனித்த அக்‌ஷய் அந்த வகுப்பறையின் கரும்பலகையில் சாக்பீசால் எழுதினான். "கவலைப்படாதீர்கள். டாக்டர்கள் சரி செய்யும் அளவில் தான் நீங்கள் இருக்கிறீர்கள்"

அறையிலிருந்து வேகமாக வெளியேறிய அக்‌ஷய் பதுங்கிப் பதுங்கி கல்லூரியின் பின்புறம் சென்றான். அந்த மிகப்பெரிய சுவர் அவனுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.

**********

மிஸ்டர் எக்ஸிற்கு கேசவதாஸின் போன் வந்தது. "என்ன நடக்கிறது?"

"தீவிரவாதிகள் அந்த கல்லூரியில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் வந்து இங்கே வந்திருக்கிறோம் சார். நம் ஆட்கள் அங்கே தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் ….."

"எத்தனை நேரமாகத் தேடுவார்கள். உடனடியாக ஏதாவது செய்யுங்கள். சில பத்திரிக்கைக்காரர்கள் எனக்கு நேரடியாக போன் செய்து நிலவரம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். என்னால் இங்கு உட்கார முடியவில்லை….."

செல் போனை மறுபடி சட்டைப் பையில் வைத்த மிஸ்டர் எக்ஸ் ரெட்டியை பரிதாபமாகப் பார்த்தார்.

ரெட்டி கேட்டார். "என்னவாம்?"

எக்ஸ் கேசவதாஸ் சொன்னதைச் சொல்லி விட்டு தொடர்ந்தார். "சார். இந்த நிருபர்களை இனியும் நிறைய நேரம் சமாளிக்க முடியும் என்று எனக்கும் தோன்றவில்லை. என்ன செய்யலாம்?"

"வேறு வழியில்லை. அவனை எப்படியாவது இங்கிருந்து கூட்டிக் கொண்டு போவது தான் நல்லது. கையை மட்டுமல்ல, காலையும், வாயையும் கட்டி தூக்கிக் கொண்டு போக தயாராக வைக்க சொல்லலாம்…" என்று சிறிது தாமதமாக முடிவுக்கு வந்த ராஜாராம் ரெட்டி அக்‌ஷயைப் பிடித்து வைத்திருந்த ஆட்களில் ஒருவனுக்கு போன் செய்தார். மணி அடித்துக் கொண்டே இருந்தது. அவன் எடுப்பதாகத் தெரியவில்லை. ராஜாராம் ரெட்டியின் முகம் வெளிற ஆரம்பித்தது. போனை எடுக்காததற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும்…..

********

ஒருவேளை அமானுஷ்யன் தப்பிப்பதாக இருந்தால் பின் பக்கமாகத் தான் தப்பிக்க முயற்சிப்பான் என்று சலீம் கணக்குப் போட்டது பொய்க்கவில்லை. மறைவாக இருந்தபடி அவன் அமானுஷ்யன் வரவிற்காகக் காத்திருந்தான். அவன் அரை மணி நேரம் காத்திருந்த பிறகு அமானுஷ்யன் அந்தக் கல்லூரியின் சுவரின் உச்சியில் தெரிந்தான்.

அவனைப் பற்றி எத்தனையோ படித்தும், அவன் வீடியோக்களை அதிகம் பார்த்தும் இருந்தாலும் அறியாத சில விஷயங்களை அவனை நேரில் பார்க்கையில் தன்னால் அறிந்து கொள்ள முடியும் என்று சலீம் உறுதியாக நம்பினான். அவனுடைய தொழிலில் எதிரியைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதை அவன் கச்சிதமாகச் செய்யாமல் இருந்ததில்லை. எனவே அமானுஷ்யனை அவன் கூர்மையாக கவனித்தான்.

அமானுஷ்யன் அனாயாசமாக மேலிருந்து கீழே குதித்தான். குதித்தவன் தன் உடலை வித்தியாசமாக வளைத்து மிதந்து வருவது போல் வந்து தரையை அடைந்தான். அந்த முள் புதர்களுக்கிடையே உடலை சிராய்த்துக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தான். அமானுஷ்யன் நகர்ந்த விதத்தில் வேகம் இருந்தது. ஆனால் அவசரமோ, பதட்டமோ சிறிதும் இருக்கவில்லை.

பார்த்துக் கொண்டிருந்த சலீம் முடிந்த வரையில் அவனைப் போலவே செல்ல முயற்சி செய்தான். ஆனால் முள் புதர்களிடையே அமானுஷ்யன் அளவுக்கு வேகமாகச் செல்வதில் அவனுக்கு சிரமம் இருந்தது. இருந்த போதிலும் அவன் சமாளித்தபடி மறைவாகப் பின் தொடர்ந்தான். ஒரே அளவு இடைவெளியை தக்க வைத்துக் கொண்டு சத்தமில்லாமல் சலீம் பின் தொடர்ந்தான்.

அக்‌ஷயிற்கு தான் பின் தொடரப்படுவது ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது. வழக்கமாக வரும் நபர்கள் அல்ல என்பதும் அவனுக்குப் புரிந்தது. அவனைப் பின் தொடர்பவன் இது போன்ற வேலையில் கைதேர்ந்தவன் என்பது சில அடிகள் நகர்ந்தவுடனேயே அவன் உணர்ந்தான். இன்னொரு தகவலும் பின் தொடர்பவன் சாதாரணமானவன் அல்ல என்பதை அவனுக்கு உணர்த்தியது. அவன் கல்லூரிக்குப் பின்புறம் தான் தப்பிக்க முயல்வான் என்பதைக் கணக்குப் போட்டு அவனுக்காகக் காத்திருக்கும் அளவு அனுமானிக்க முடிந்தவன் கண்டிப்பாக சாதாரணமானவனாக இருக்க முடியாது. கொல்ல நினைப்பவனுக்கு இந்த இடத்தைப் போல ஆள் நடமாட்டமே இல்லாத முட்புதர் நிறைந்த பகுதியைப் போல கச்சிதமான இடம் வேறு கிடைப்பது கஷ்டம். எனவே பின் தொடர்பவன் உடனடியாகக் கொல்லும் எண்ணமுடையவனாக இருந்தால் ஆரம்பத்திலேயே துப்பாக்கியை உபயோகப்படுத்தி இருக்க முடியும் என்றாலும் அப்படிச் செய்யாமல் இருப்பது அவன் வேறு ஏதோ திட்டத்துடன் இருப்பதை உணர்த்தியது.

வேகமாக நடந்த அக்‌ஷய் பெரிய சாக்கடைக் கால்வாய் அருகே வந்து சேர்ந்தான். அகலமான சாக்கடைக் கால்வாயை மின்னல் வேகத்தில் அனாயாசமாக அவன் கடந்தான். கடந்தவன் வேகமாக தூரத்தில் இருந்த ஒரு சேரியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சலீம் அவனை அதிசயமாகப் பார்த்தான். வரும் பொழுது அவனும் அந்த சாக்கடையைத் தாண்டி வந்தவன் தான் என்றாலும் தாண்டிய பிறகு அவன் மூச்சு வாங்கியபடி ஒரு நிமிடம் இளைப்பாற வேண்டி இருந்தது. ஆனால் எந்த வித இளைப்பாறுதலும் இல்லாமல் நடந்து சென்ற அமானுஷ்யன் அவனைத் திகைக்க வைத்தான்.
சலீமும் வேகமாக அந்த சாக்கடைக் கால்வாயை நீளத் தாண்டினான்.

அவன் கடந்து விட்ட போது அமானுஷ்யனைக் காணவில்லை. எங்கே மாயமாக மறைந்தான் என்று தெரியவில்லை. சாக்கடையைத் தாண்டும் போது சில வினாடிகள் தான் அவன் கண்ணை மூடினான். அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் எங்கே சென்றான் என்பது தெரியவில்லை.

அதே நேரத்தில் அக்‌ஷய் சேரியின் ஒரு குடிசையின் பின்பக்கத்தில் இருந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்தான். மந்திரியோ அந்த தீவிரவாத இயக்கமோ ஒரு கைதேர்ந்த வாடகைக் கொலையாளியைத் தன் பின்னே அனுப்பி இருக்கிறது என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது. கூட்டாளி யாரும் இல்லாமல் தனியாக அந்த மனிதன் வந்ததும், பின் பக்கம் தான் அவன் வருவான் என்பதைக் கணித்ததும், அந்த அகலமான சாக்கடைக் கால்வாயை ஒரேயடியாகத் தாண்டியதும் அறிவும், திறமையும் உள்ள ஒரு ஆள் தான் அவன் என்பதை நிச்சயமாகச் சொல்லியது. அக்‌ஷயைப் பற்றி எல்லா உண்மையையும் அறிந்தவனாக இருந்தால் தான் அவன் என்ன செய்வான் என்று ஊகிக்க முடிந்திருக்கும். எனவே அவனைக் கொல்லவோ, பிடித்துத் தரவோ அனுப்பப்பட்ட அந்த ஆள் அவனைப் பற்றிய எல்லா விவரமும் தெரிந்தவனாகத் தான் இருக்க வேண்டும். அப்படியானால் தப்பித்தவன் அடுத்ததாக எங்கே செல்வான் என்பதை அவன் ஊகிக்க முடிந்தவனாகவும் இருக்க வேண்டும். அந்த கணிப்பு அக்‌ஷய் உதடுகளில் ஒரு புன்முறுவலைத் தருவித்தது. ஏனென்றால் அடுத்ததாக எங்கே போவது என்று அவனுக்கு இன்னும் தெரியவில்லை….

சலீம் ஒருவித ஏமாற்றத்துடன் தன்னை சுற்றிலும் பார்த்தான். அந்த சேரி மக்களுக்கு அரசாங்கம் வேறொரு இடத்தில் இடம் தந்திருந்ததால் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்திருந்தனர். ஏதோ ஒரு சில குடிசைகளில் தான் ஆட்கள் ஒரு சிலர் இருந்தார்கள். அவன் ஏதாவது ஒரு குடிசைக்குள் போய் விட்டானா இல்லை சேரியிலேயே வேறு ஏதாவது பாதையில் சென்று கொண்டிருக்கிறானா? வேகமாக அங்கும் இங்கும் ஓடி ஏதாவது பாதையில் தெரிகிறானா என்று பார்த்தான். எங்கும் காணவில்லை.

சலீமிற்கு வலது காலில் முள் கீறி இருந்தது. இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. இந்த இரண்டுமே அமானுஷ்யனுக்கு ஆகி இருக்காது என்று நினைக்கையில் அவனுக்கு அவமானமாக இருந்தது. அவன் எங்கே போய் இருப்பான் என்று ஒரு நிமிடம் நின்று ஆலோசித்தான். அமானுஷ்யன் நிலைமையில் இருந்து சலீம் ஆலோசித்தான். "அடுத்தபடியாக அவன் போகுமிடம் எதுவாக இருக்கும்?". யோசித்தபடி அவன் நடக்க ஆரம்பித்தான்.

அவன் சிறிது தூரம் சென்று வலப்பக்கமாக ஒரு சந்தில் திரும்புகையில் அமானுஷ்யன் தூரத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். சலீமிற்கு மீண்டும் புத்துணர்ச்சி வந்தது. அவன் அமானுஷ்யனை மீண்டும் பின் தொடர ஆரம்பித்தான்.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. Sundar

    அருமை. பரபரப்பாக போகிறது. வாழ்த்துகள்.

Comments are closed.