அமானுஷ்யன்-101

சிறிது நேரத்தில் சேரியைத் தாண்டி ஒரு கடைத் தெருவிற்கு அமானுஷ்யன் போய் சேர்ந்தான். அவன் பின்னால் ஒருவன் தொடர்வது குறித்து சந்தேகம் ஏற்பட்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சலீமும் அவனை மிக ஜாக்கிரதையாகவே பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.

அக்‌ஷய் திடீரென்று ஒரு பொதுத் தொலைபேசி அருகே நின்று விட்டு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அதை உபயோகித்து ஆனந்திடம் பேசினான். "ஹலோ ஆனந்த் நான் அக்‌ஷய் பேசுகிறேன்"

ஆனந்த் திகைத்தான். ‘எந்தக் காரணத்தைக் கொண்டும் அக்‌ஷய் அவனுடைய செல்போனிற்குத் தொடர்பு கொள்ள மாட்டானே. அதை ஒட்டுக் கேட்க முடியும் என்பதை அவன் அறிவானே. பேசுவதாய் இருந்தால் மது அல்லது மகேந்திரன் அவர்களுக்குத் தெரிவித்தால் அவர்கள் நேரில் வந்து தகவல் தெரிவிப்பார்களே’ என்ற யோசனை அவனுக்கு வந்தது.

அதே நேரம் சலீம் லாட்ஜ் ஆசாமிக்கு அவசரமாகப் போன் செய்து அவர்கள் இருக்கும் இடத்தை விளக்கி விட்டு சொன்னான். "….அந்த போனில் இருந்து அவன் யாரிடமோ பேசுகிறான். உடனடியாக அந்த போன் நம்பரையும், அவன் யாரிடம் என்ன பேசுகிறான் என்பதையும் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யுங்கள்"

லாட்ஜில் இருந்த ஆசாமி சற்று திகைப்புடன் கேட்டான். "அப்படியானால் அந்த சைத்தான் அங்கே அவர்கள் பிடியில் இருந்து தப்பி விட்டானா?"

சலீம் சொன்னான். "ஆமாம். நான் சொன்னதை செய்து கிடைத்த தகவலை உடனடியாக எனக்குத் தெரிவியுங்கள்….." உடனடியாக அவன் பேச்சைத் துண்டித்து விட்டு அமானுஷ்யனைக் கவனிக்க ஆரம்பித்தான்.

அக்‌ஷய் போனில் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தான்.

"ஆனந்த் நீ அம்மா வருண் எல்லாம் நலம் தானே"

"உம்… பாதுகாப்பாக இருக்கிறோம்"

"சரி ஜாக்கிரதையாக இருங்கள். நானும் தப்பி விட்டேன். எனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்து விட்டன. நான் முக்கியமான தடயம் ஒன்றை ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு வர நான் அந்த ஊருக்குப் போகிறேன். நம்மிடம் நேரம் போதாது. அதை நான் எடுத்துக் கொண்டு வராவிட்டால் சில ஆபத்துகளை நாம் தடுக்க முடியாது. அதனால் நான் அங்கே போகிறேன். அப்புறமாய் போன் செய்கிறேன்."

அக்‌ஷய் போனை வைத்தான். மறுபடி நடக்க ஆரம்பித்தான். சலீம் பின் தொடர்ந்தான்.

**********

ராஜாராம் ரெட்டி கல்லூரிக்குச் செல்லாமலேயே ஆம்புலன்ஸிற்குப் போன் செய்து உடனடியாக வரவழைத்தார். அமானுஷ்யனிற்கு காவல் இருந்த வாத்து மடையர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை அறிய அவர் போய் பார்க்கத் தேவை இருக்கவில்லை. அவனுடைய பழைய வரலாறு தெரிந்த அவருக்கு அதை துல்லியமாக கணிக்க முடிந்தது. அவருக்குள் கிளம்பி இருந்த கோபமும், அவமான உணர்வும் அவருடைய சிந்திக்கும் திறனைக் குறைத்து விட்டிருக்கவில்லை. அவர் சிலருக்குப் போன் செய்து கல்லூரியின் பின் பக்கம் விரைந்து போகச் சொன்னார். அவனை சல்லடை போட்டு தேடச் சொன்னார்.

ஆம்புலன்ஸைப் பார்த்த நிருபர்கள் "தீவிரவாதியை விசாரணைக்கு முன்பே சுட்டு விட்டீர்களா?" என்று வேறு கேட்டு அவருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள். மிஸ்டர் எக்ஸ் அவர் காதில் மெல்ல கேட்டார். "பேசாமல் இந்த சனியன்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி விடலாமா?"

"உள்ளூர் சேனலில் தெரிந்தது உலகம் பூராவும் தெரிய வேண்டுமா?" என்று முறைத்த ராஜாராம் ரெட்டி நிருபர்களிடம் சொன்னார்." இன்னும் சிறிது நேரத்தில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறோம். உங்களை அந்தக் கல்லூரிக்குச் சென்று பார்வையிடவும் அனுமதி அளிக்கின்றோம். அது வரை தயவு செய்து பொறுமையாக இருங்கள். உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடாமல் உள்ளதை மட்டுமே வெளியிட உங்களிடம் வேண்டிக் கொள்கிறோம்"

அவர் செல் போன் இசைத்தது. ஆனந்திடம் அமானுஷ்யன் பேசியதை டேப் எடுத்திருக்கிறோம் என்ற தகவலை அவரிடம் தெரிவித்தார்கள். ராஜாராம் ரெட்டி இனி அங்கே நிருபர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டு நிற்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்து அவர்களை சமாளிக்கும் பொறுப்பை எக்ஸ் தலையிலேயே போட்டு விட்டு அங்கிருந்து அவசரமாக இடம் பெயர்ந்தார்.

மந்திரி அவருக்காகக் காத்திருந்தார். அவர் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளால் நொந்து போயிருந்தது அவர் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. "நான் நீங்களும் இப்படி கோட்டை விடுவீர்கள் என்று நினைக்கவேயில்லை" என்று குத்தலாக அங்கலாய்த்துக் கொண்டார்.

ராஜாராம் ரெட்டி அரசியல்வாதிகளின் சகவாசம் அற்பத்தனமானது என்று நினைத்தார். ஆனாலும் பொறுமையாக நடந்ததை விவரித்து விட்டுச் சொன்னார். "….அவனைப் பிடித்து வைத்திருந்த ஆட்களிடம் நான் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி வைத்திருந்தேன். அவன் ஒரு ஜகதலப் பிரதாபன், கவனமாக இருங்கள், கவனமாக இருங்கள் என்று சொல்லியும் கோட்டை விட்டால் நான் என்ன தான் செய்ய முடியும்."

"அவன் எப்படி தான் தப்பித்தானாம்?"

"அவர்கள் பேசுகிற நிலையில் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்…. சரி நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். முதலில் அவன் ஆனந்திடம் என்ன பேசினான் என்பதைக் கேட்கலாம்"

அமானுஷ்யன் ஆனந்திடம் பேசியதைக் கேட்ட போது மந்திரியின் முகம் வெளுத்தது. "அந்த தீவிரவாதக் கூட்டம் முதலில் யாரை சாகடிக்கும் என்று தெரியவில்லை. இந்த சைத்தான் சொல்கிறபடி செய்தான் என்றால் சர்வநாசம் தான்…." நினைக்கையிலேயே அவருக்கு உடல் லேசாக நடுங்கியது.

ராஜாராம் ரெட்டி எதுவும் சொல்லாமல் யோசித்தார். இந்த போன் பேச்சு அவருக்கு ஒரு புதிராக இருந்தது. ஆனந்த் போனை அவர்கள் ஒட்டுக் கேட்க ஆரம்பித்ததில் இருந்து இது நாள் வரை அமானுஷ்யன் ஆனந்திடம் செல் போனில் பேசியதில்லை. அவர்கள் ஒட்டுக் கேட்க வாய்ப்பு இருக்கிறது என்ற காரணமாகக் கூட இருக்கலாம். வேண்டுமென்றே பேசினானா, இல்லை தெரிந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு பேசினானா, இல்லை….

அவரால் உடனடியாக அவன் எண்ணத்தைத் தீர்மானிக்க முடியவில்லை.

வேறொரு எண்ணம் அவர் மூளையில் பளிச்சிட அவர் அவசரமாக செல் போனை எடுத்து எண்களை அழுத்தினார். "ஹலோ… அந்த ஆனந்த் செல் போனில் சிறிது நேரத்திற்கு முன் பேசியதை வைத்து அவன் எந்த பகுதியில் இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதிக்கு ஆட்களை அனுப்புங்கள்".

*********

சலீம் அக்‌ஷயைப் பின் தொடர்ந்து சரியாக மூன்று நிமிடங்கள் போயிருப்பான். அக்‌ஷய் தெருவை குறுக்காகக் கடந்தான். அவனைப் பின் தொடர்ந்த சலீம் இடையே வந்த லாரிக்காக சில வினாடிகள் காக்க வேண்டி வந்தது. லாரி கடந்த பின் அக்‌ஷய் சலீம் கண்களுக்குத் தென்படவில்லை. சலீம் திகைத்துப் போனான். சரியாக மூன்று வினாடிகள் தான் அந்த லாரி அவனை மறைத்திருக்கும். அதற்குள் எங்கே போனான் என்று கூர்மையாக தெருவின் எதிர்புறம் பார்வையைச் செலுத்தினான். தெருவோரக் கடைக்காரர்களையும். அந்தக் கடைகளில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்த சில ஆட்களையும் கூர்மையாக கவனித்தான். அவர்களில் ஒருவனாக அந்த அமானுஷ்யன் இருக்க முடியுமா என்று பார்த்தான். அவர்களில் அமானுஷ்யன் இல்லை.

அந்தக் கடைகளைத் தாண்டி ஒரு சிறிய சந்து இருந்ததை அப்போது தான் சலீம் கவனித்தான். வேகமாகத் தெருவைக் கடந்து அந்த சந்தை அடைந்தான். அந்த சந்து அடுத்த தெருவைச் சென்றடைந்தது. அதன் வழியே சென்று அடுத்த தெருவை அடைந்தான். அந்தத் தெருவிலும் அமானுஷ்யனைக் காணவில்லை. அந்தத் தெருவிலும் குறுக்குத் தெருக்கள் நிறைய இருந்தன. எதன் வழியாகப் போயிருக்கிறானோ!

அவன் பின் தொடரப்படுவதைக் கண்டுபிடித்து விட்டான் என்றே சலீமிற்குத் தோன்றியது. அதனால் தான் ஒரு லாரி குறுக்கிட்ட அந்த சொற்ப சமயத்தில் அவன் வாயு வேகத்தில் சென்று மறைந்து விட்டிருக்கிறான். அகில உலக அளவில் வெற்றிகரமாக இயங்கி வரும் சலீமிற்கு அவனைக் கோட்டை விட்டது அவமானமாக இருந்தது. ஆனால் அதை மனதில் ஓரந்தள்ளி விட்டு தன் செல் போனை எடுத்து லாட்ஜ் ஆசாமியிடம் பேசினான்.

"அவன் என்ன பேசினான், யாரிடம் பேசினான் என்று தெரிந்ததா?"

லாட்ஜ் ஆசாமி அமானுஷ்யனிற்கும் ஆனந்திற்கும் இடையே நடந்த உரையாடலை அப்படியே சொன்னான். சொல்லி விட்டு "இனி என்ன செய்யப் போகிறாய்?"

"அவனை உயிரோடவோ, பிணமாகவோ உங்களிடம் ஒப்படைக்கப் போகிறேன்"

அவன் குரலில் தெரிந்த உறுதி லாட்ஜ் ஆசாமிக்குப் பிடித்திருந்தது. "அதை எப்படி செய்யப் போகிறாய்?"

"அது உங்களுக்கு அனாவசியம்" என்று சலீம் பேச்சை முடித்துக் கொண்டான்.

இந்தத் திமிர் லாட்ஜ் ஆசாமிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சலீம் அமானுஷ்யனை ‘அந்த’ ஊரில் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணியபடியே நடந்தான்.

அக்‌ஷய் அவன சற்று தூரத்தில் இருந்தே பின் தொடர ஆரம்பித்தான்.

அவன் சற்று முன் லாரி குறுக்கிட்ட போது அருகே இருந்த சந்தில் ஒரு கடைக்குள் சென்று அந்தக் கடையின் மூலையில் இருந்த ஒரு பொருளை வாங்கும் சாக்கில் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். வேகமாக சந்தில் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்ட போது அவன் எதிர்பார்த்தபடியே அந்த சந்தில் சலீம் தான் ஓடி வருகிறான் என்பது புரிந்தது. அவன் கடந்த பிறகு கடையில் இருந்து வெளியே வந்த அக்‌ஷய் சந்தின் கோடியில் சலீம் செல் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து காத்திருந்தான். பேசி முடிந்த பின் சலீம் அந்த சந்தை விட்டு தெருவில் நடக்க ஆரம்பித்ததைப் பார்த்து ரகசியமாக அவனைப் பின் தொடர்ந்தான். சாதாரண சமயங்களில் தான் பின் தொடரப்படுவது கண்டிப்பாக சலீமிற்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை. ஆனால் பரபரப்புடன் அவன் இருந்த மனநிலையில், அதுவும் அமானுஷ்யனே தன்னைப் பின் தொடர்வான் என்ற சந்தேகம் எழாத நிலையில், அவன் அதை அறியவில்லை.

சலீம் சிறிது தூரம் சென்ற பின் எதிரே ஒரு டிராவல் ஏஜென்சி கடை இருப்பதைக் கவனித்தான். அதன் பெயர் பலகையில் ரயில் விமான டிக்கெட்டுகள் தரும் அதிகாரபூர்வ நிறுவனம் என்றும் எழுதி இருந்ததைப் பார்த்தான். அமானுஷ்யன் இந்த வழியாகச் சென்றிருந்தால் உடனடியாக ‘அங்கே’ போவதற்கு இங்கே டிக்கெட் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றியது. அவசரமாகப் போக நினைப்பவர்கள் அருகில் இருக்கும் சந்தர்ப்பத்தைத் தான் உடனே பயன்படுத்துபவர்கள். அந்த எண்ணம் தோன்றியவுடனேயே அதனுள்ளே சென்று முன்னால் இருந்த பெண்ணிடம் கேட்டான். "இப்போது ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் யாராவது வந்து டிக்கெட் கேட்டார்களா?"

அந்தப் பெண் அவனை பார்த்து நெற்றியை சுருக்கியபடி கேட்டாள். "ஏன் கேட்கிறீர்கள்?"

"இல்லை என் நண்பன் எனக்காக இங்கே வந்து டிக்கெட் செய்வதாகச் சொன்னான். சற்று நேரம் முன்னால் இப்படி வருவதைப் பார்த்தேன். பிறகு பார்த்தால் ஆளைக் காணவில்லை. அதனால் தான் கேட்டேன்."

"பத்து நிமிடங்களுக்கு முன் ஒரு வயதான அம்மாள் தான் வந்து ஹைதராபாதிற்கு விமான டிக்கெட் வாங்கிக் கொண்டு போனார்கள். உங்களுக்கு எங்காவது போக டிக்கெட் வேண்டுமா?"

சலீம் யோசித்தான். எப்படியும் அங்கே அமானுஷ்யன் போய் சேர்வான் என்பதால் உடனடியாக அங்கே போய் அவனைப் பிடிக்க முயற்சி செய்வது உத்தமம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனாய் "ஜம்முவிற்கு ஒரு விமான டிக்கெட் வேண்டும். அடுத்த விமானத்திற்கே கிடைத்தால் பரவாயில்லை…"

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவன் டிக்கெட்டை சட்டைப் பையில் போட்டபடியே வெளியே வந்தான். அவன் போய் சிறிது காத்து விட்டு அக்‌ஷய் உள்ளே நுழைந்தான். அந்தப் பெண்ணிடம் கேட்டான். "இப்போது ஒருவன் வந்து போனானே அவன் எங்கு டிக்கெட் வாங்கினான்."

அந்தப் பெண் சற்று முன் வந்தவன் கேட்டது இவனையாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தாள். நண்பர்கள் கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள் என்று நினைத்து புன்னகை செய்தவளாய் சொன்னாள். "ஜம்முவிற்கு அடுத்த விமானத்தில் டிக்கெட் செய்தார். ஏன் உங்களுக்கும் அதில் டிக்கெட் வேண்டுமா?"

அக்‌ஷய் அவளைப் பார்த்து புன்னகை செய்தபடி சொன்னான். "எனக்கும் ஜம்முவிற்கு போக வேண்டும். ஆனால் அவன் போகும் விமானத்திற்கு அடுத்த விமானத்தில் கிடைத்தால் போதும்"

(தொடரும்)

About The Author

2 Comments

  1. madhu

    wowww akshay is really great… amazing to read this charater… Ganesan sir, please dont finish this story soon…. Extend this for few more months.. Thanks

Comments are closed.