அமானுஷ்யன்-111

வீரேந்திரநாத்தின் பிரதமர் பதவி வெறியையும் அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்ததையும் அக்‌ஷயிடம் சொன்ன தலிபான் தலைவன் தொடர்ந்து சொன்னான். "…. அதைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் தீர்மானித்தோம். முதலில் அவருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் மூலம் அவரைத் தொடர்பு கொண்டோம். பேசினோம். இந்தப் பிரதமர் கையாளாகாதவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் இன்னும் வலுப்படுகிற மாதிரி ஏதாவது செய்யுங்கள், உங்களுக்கு நானும் உதவுகிறேன் என்றார்…."

தலிபான் தலைவன் சொல்லிக் கொண்டே போனான். கேட்கும் போது அக்‌ஷயிற்கு பகீரென்றது. பதவிக்காக அரசியல்வாதிகள் எந்த அளவுக்குக் கேவலமாகப் போகிறார்கள் என்று நினைக்கையில் வருத்தமாக இருந்தது. கண நேரத்தில் முடிந்து விடக்கூடிய வாழ்க்கையில் மனிதன் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறான்….

"…..கடைசியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத் தாக்குதலால் வீர மரணம் அடைந்த நம் தோழன் அப்துல் ரஹ்மானின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் புதுடெல்லியைத் தாக்க திட்டமிட்டோம். நம் சக்தியை இந்தியா அன்று உணரப் போகிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே நாம் ஒரு பாடம் புகட்டப் போகிறோம்…."

சொல்லி விட்டு தலிபான் தலைவன் அக்‌ஷயை ‘இதற்கு என்ன சொல்கிறாய்?’ என்பது போலப் பார்த்தான்.

அக்‌ஷய் ஆழ்ந்து யோசிப்பதைப் போல பாவனை செய்து விட்டு சொன்னான். "…புதுடெல்லியில் நம் வேலையைக் காண்பிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அந்த கலாட்டாவில் குளிர்காய்ந்து வீரேந்திரநாத் பிரதமராகக் கூட முடியும். ஆனால் அதற்குப் பிறகு நடப்பது எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கும் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை…."

"ஏன் அப்படி சந்தேகப்படுகிறாய்?"

"அரசியல்வாதிகள் பதவிக்காக கண்ட வாக்குறுதிகள் எல்லாம் தந்து பதவிக்கு வந்த பிறகு அதை வசதியாக மறந்து பழகியவர்கள். அதனால் அரசியல்வாதியை நம்புவதற்கு முன்னால் ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும். இந்த வீரேந்திரநாத் பிரதமரான பிறகு நமக்கு உதவுவான் என்பது என்ன நிச்சயம்? அவர் வேலை முடிந்து விட்ட பின் மக்கள் மத்தியில் மிக உறுதியான பிரதமர் என்று காட்டிக் கொள்ள நம் ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் தேடிப்பிடித்து உள்ளே போட்டாலும் போடுவார்…."

தலிபான் தலைவன் சொன்னான். "நீ சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அந்த ஆளிற்கும் நமக்கும் வேண்டியவர்கள் அவர் இந்த விஷயத்தில் நம்மை ஏமாற்ற மாட்டார் என்கிறார்கள். நமக்கு அபிப்பிராயம் சொல்கிற அவர்கள் அவரை மிக நன்றாக அறிந்தவர்கள். நானும் உன்னைப் போலத் தான் சந்தேகப்பட்டேன். அதற்கு அவர்கள் நேரடியாகவே வீரேந்திரநாத்திடம் பேச நாளைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்…."

"வீரேந்திரநாத் ஆப்கானிஸ்தான் வருகிறாரா?"

"இல்லை ஜம்முவில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக அவர் வருகிறார். அதனால் அவரை இந்தியா சென்று ஜம்முவில் சந்திக்கப் போகிறோம். அவருக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் அங்கங்கே இருப்பதால் இந்தியாவிற்குள் நுழைவதோ, நம் மற்றைய காரியங்களைப் பார்ப்பதோ சிரமமில்லை"

அக்‌ஷய் தலையைக் கூட அசைக்காமல் சந்தேகத்தோடு பார்த்தான்.

தலிபான் தலைவன் சொன்னான். "சரி நீயும் நாளைக்கு எங்களோடு வா. நேரில் பேசும் போது அந்த ஆளை நம்பலாமா வேண்டாமா என்பது உனக்கும் புரியும்."

அரைகுறை மனதோடு தலையசைப்பவன் போல அக்‌ஷய் தலையசைத்தான். அது சம்பந்தமான பேச்சு அத்தோடு நின்றது. அன்றிரவு அங்கேயே அனைவரும் தங்கினார்கள். வெளியே பார்ப்பதற்கு பாழடைந்த கட்டிடமாகத் தோன்றினாலும் அவர்கள் தங்கியிருந்த அந்த இடத்தின் உள்ளே சகல வசதிகளும் இருந்தன. பெரிய ஒரு ஹாலில் அனைவரும் படுக்க வசதி செய்திருந்தார்கள். அக்‌ஷய் அருகில் இருந்த படுக்கையில் அந்த தலிபான் தலைவன் படுத்தான்.

கண்களை மூடினாலும் அக்‌ஷயிற்கு உறக்கம் வரவில்லை. இனி என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் அவன் இருந்தான். திடீரென்று அருகே இருந்த தலிபான் தலைவனிடம் யாரோ வந்து தாழ்ந்த குரலில் பேசுவது கேட்டது. அக்‌ஷய் கண்களை மட்டும் லேசாகத் திறந்து பார்த்தான். அவனை சந்தேகக் கண்ணோடு ஆரம்பம் முதலே பார்த்த தலிபான் தலைவன் தான் அக்‌ஷய் அருகில் படுத்திருந்த தலிபான் தலைவனை எழுப்பிக் கொண்டிருந்தான். இவன் "என்ன?" என்று கேட்டதும் "வெளியே வா" என்று அவன் சொன்னதும் கேட்டது. இருவரும் அக்‌ஷயைப் பார்த்தார்கள். அக்‌ஷய் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல நடித்தான். இருவரும் வெளியே போனார்கள்.

அவர்கள் சென்றதும் அக்‌ஷய் மெல்ல எழுந்து சுற்றிலும் பார்த்தான். மற்றவர்கள் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். சத்தமில்லாமல் தானும் எழுந்து சென்று வெளியே எட்டிப் பார்த்தான். வெளியே நின்றிருந்த ஒரு ஜீப்பின் அந்தப் பக்கம் அதில் சாய்ந்து நின்றபடியே இருவரும் ஏதோ தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அக்‌ஷய் மின்னல் வேகத்தில் சென்று ஜீப்பின் இந்தப் பக்கம் குனிந்து ஒளிந்து கொண்டான். அவர்கள் குரலைத் தாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தது இப்போது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

"….. நீ அவன் அப்துல் அஜீஸ் தானா என்று ஏன் இன்னும் சந்தேகப்படுகிறாய் என்று எனக்குப் புரியவில்லை. தோற்றம், பேசும் தோரணை, உருதுக் கவிதை, சண்டைத் திறமை எல்லாம் சேர்ந்து பார்க்கையில் அவன் அப்துல் அஜீஸ் என்று உறுதியாய் தெரிகிறது. அப்படி சின்னச் சின்ன வித்தியாசம் தெரிகிறது என்றாலும் இதுவரை அவன் எப்போதும் ஒரு தடவை பார்த்தது போல் இன்னொரு தடவை பார்க்க இருப்பதில்லை. நீ இன்றைக்கு வந்திருந்த ஆட்களில் சிலர் மூலமாக அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாயே அது என்ன ஆயிற்று?"

"வந்தவர்களில் மூன்று பேருக்கு அவனை ஓரளவு தெரியும். அவர்களும் அவனுடன் வேலை செய்திருக்கிறார்கள். அவர்கள் அவன் நடை, உடை, பாவனைகள் எல்லாம் பார்க்கையில் அப்துல் அஜீஸ் மாதிரி தான் தெரிகிறான் என்றார்கள். மற்றபடி அவன் மனமிருந்தால் நன்றாகப் பேசுவான், மனமில்லா விட்டால் அவ்வளவாகப் பேச மாட்டான் என்பதால் அவர்களுக்கு அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை"

"சரி, இன்னும் உனக்கு என்ன சந்தேகம்?"

"அப்துல் அஜீஸின் ஒரு பிரதான குணாதிசயம் வந்திருப்பவனிடம் இல்லை."

"அது என்ன?"

"அப்துல் அஜீஸ் நிறையவே உணர்ச்சி வசப்படுவான். சில நேரங்களில் வெறி பிடித்தவன் போல் கொந்தளிப்பான். சில சமயங்களில் மென்மையின் உச்சத்திற்கே போவான். சில சமயங்களில் உருதுவில் கவிதை சொல்கையில் கண்கலங்குவான். கவிதை கலந்து பேசப் பேசத் திடீரென்று தீப்பொறி பறக்க ஆக்ரோஷமாய் பேசுவான். ஆனால் வந்தவன் பேசும் போது நான் நன்றாகவே கவனித்து வருகிறேன். எப்போதுமே அவன் நிதானம் தவறினதை நான் பார்க்கவில்லை. இன்றைக்கே உருதுவில் கவிதை கலந்து தான் அருமையாகப் பேசினான். தீப்பொறி பறக்கத் தான் பேசினான். ஆனால் அத்தனைக்குப் பின்னாலுமே ஒரு சீரான தெளிவும், அலட்டிக் கொள்ளாத தன்மையும் தெரிகிறது. இது என்றைக்குமே அப்துல் அஜீஸிடம் இருந்தது இல்லை. அது தான் சந்தேகமாக இருக்கிறது …."

மற்றவன் ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை. சொன்ன விஷயத்தில் உண்மை இருக்கிறது என்று அவனும் யோசித்த மாதிரி இருந்தது.

"அப்படியானால் அவன் ஒரு ஒற்றனாக இருக்கும் என்று நினைக்கிறாயா? அமெரிக்காவோ, இந்தியாவோ அனுப்பியவனாக இருக்குமோ?"

"இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனாலும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது"

"என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்?"

"சில சமயம் அவனுடன் கூட்டாக சில காரியங்கள் செய்திருக்கிறோம். அதில் சில விஷயங்கள் அப்துல் அஜீஸிற்கும், நமக்கும் மட்டும் தான் தெரியும்…"

"நான் நாளை இரவு வீரேந்திரநாத்திடம் பேசப் போகும் போது அவனையும் கூட்டிக் கொண்டு போகலாம் என்று நினைத்து அவனிடம் அதைச் சொல்லியும் இருக்கிறேன்… எதற்கும் நீ சொன்னதை நான் அலட்சியப்படுத்த விரும்பவில்லை. நாளை காலையில் முதல் வேலையாக அதைப் பற்றி அவனிடம் பேசி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்…."

அவர்கள் முடிவெடுத்து விட்ட தொனியில் பேச்சை நிறுத்திய போது அக்‌ஷய் வந்த அதே மின்னல் வேகத்தில் உள்ளே பறந்தான். தலிபான் தலைவர்கள் உள்ளே நுழைந்த போது அக்‌ஷயை விட்டுச் சென்ற அதே நிலையில்-ஆழ்ந்த உறக்கத்தில்-பார்த்தார்கள்.

அக்‌ஷய் மனநிலையோ புறத்தோற்றத்திற்கு எதிர்மாறாக இருந்தது. அப்துல் அஜீஸ் பற்றிய எத்தனையோ விவரங்கள் அவனுக்குத் தெரியும். அதே போல அந்த தலிபான் தலைவர்கள் மூவர் பற்றியும் அவன் வேண்டுமளவு அறிந்திருந்தான். ஆனால் அந்த மூவரும், அப்துல் அஜீஸும் கூட்டாகச் சேர்ந்து செய்த இரண்டு தீவிரவாதச் செயல்கள் பற்றி மேலோட்டமாக மட்டுமே அவன் அறிவான். ஒன்று பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகத்தின் முன்னே குண்டு வெடிக்கச் செய்தது, இன்னொன்று இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு பத்திரிக்கையாளர்களை சாகசமாகப் பிடித்து குரூரமாகக் கொன்றது. இரண்டிலுமே தலிபான் தலைவர்களுக்கும், அப்துல் அஜீஸிற்கும் இடையே ஏதாவது தனிப்பட்ட சுவாரசிய நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தால் அதை அவன் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதைப் பற்றி ஏதாவது கேட்டு அவன் அறியவில்லை என்று தெரிந்தால் பிரச்னை தான்.

அங்கிருந்து தப்பிப்பது அவனுக்குப் பெரிய விஷயமில்லை. அவனுக்குத் தெரிந்திருந்த பல சூட்சும வித்தைகள் மூலம் அவர்களிடம் பிடிபடாமல் தப்பித்து விடலாம். ஆனால் அவர்கள் மந்திரி வீரேந்திரநாத்துடன் சேர்ந்து தீட்டும் சதித் திட்டங்களை அவன் அறிந்து கொள்ள வேண்டுமானால் அவன் அவர்கள் கூட இருந்தாக வேண்டும். நாளை அவர்களுடன் செல்ல வேண்டும். அப்போது தான் அவன் அந்த சதித்திட்டங்களை வெளிப்படுத்தி தன் தாய்நாட்டுக்கு ஏதாவது சேவை செய்தது போல் ஆகும். எத்தனையோ அப்பாவி ஜனங்களை அவன் காப்பாற்ற முடியும். தலிபான் தலைவர்களை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையே அவன் எண்ணமெல்லாம் நிறைந்திருந்தது. அவன் உறங்கவேயில்லை…

********

அமானுஷ்யனின் பொய்த் தாடியைப் பார்த்தவுடன் அவன் அந்த வழியாகத் தான் போயிருப்பான் என்பதை சலீம் தெரிந்து கொண்டான். அதன் பின் அவன் யோசிக்கவில்லை. அந்த வழியாக வேகமாக நடந்து சென்றான். வழியில் யாரும் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவர்களிடம் விசாரித்திருக்கலாம் என்று நினைத்தாலும் அமானுஷ்யன் இந்த வழியாகத் தான் போயிருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை. அதனால் நடந்தான். சில நிமிடங்களில் தூரத்தில் ஒரு புத்த விஹாரம் அவனுக்குத் தெரிந்தது. கண்டிப்பாக அமானுஷ்யன் அதனுள்ளே தான் இருப்பான் என்று எண்ணிய போது அவனுக்கு ஒரு விதத்தில் ஆச்சரியமும் ஏற்படாமல் இல்லை. மசூதிக்கும் போகிறான், புத்த விஹாரத்திற்கும் போகிறான், போகிற இடங்களில் எல்லாம் இவனுக்கு வேண்டிய ஆட்கள் இருக்கிறார்கள், என்ன மனிதனிவன்? இத்தனைக்கும் இவன் முஸ்லீமும் அல்ல, புத்த மதத்தவனும் அல்ல!

ஆச்சரியத்தை அடுத்த கணமே ஒதுக்கி விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சலீம் யோசித்தான். அமானுஷ்யனைக் கொன்றால் தான் அவனையே அவன் மதிக்க முடியும். இத்தனை நாட்களில் தீர்த்துக் கட்டிய மனிதர்கள் எல்லாம் உலகப்புகழ் பெற்ற ஆட்களாக இருக்கலாம். பெரிய பாதுகாப்பு வளையத்தில் இருந்தவர்கள் ஆக இருக்கலாம். ஆனால் எந்தப் பாதுகாப்பு வளையமுமே இல்லாத அமானுஷ்யன் அபாயகரமானவன். அவன் திறமைகளே அவனுக்குப் பாதுகாப்பு. அவன் அறிவே அவனுக்கு ஆயுதம். அவனைக் கொன்றால் மட்டுமே உண்மையான வெற்றி மகுடம் சூட்டியது போல. இப்படி எண்ண எண்ண அவன் நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறின.

(தொடரும்)”

About The Author