அமானுஷ்யன்- 57

டெல்லி புறநகர்ப்பகுதியில் இருந்த ஒரு தோட்டத்திற்குள் அந்த மத்திய மந்திரியின் கார் மிக வேகமாக நுழைந்தது. அவர் காரிலிருந்து இறங்கும் போது குறுந்தாடிக்காரன் அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றான். தன் காருக்கு முன்னால் நின்றிருந்த ஆம்புலன்ஸைக் கவனித்த மந்திரி "பிணம் எங்கே?" என்று கேட்டார்.

"ஆம்புலன்ஸில் இருந்து இன்னும் எடுக்கவில்லை. உங்கள் போலீஸ்காரர்கள் நீங்களோ, போலீஸ் உயர் அதிகாரிகளோ வராமல் பிணத்தை நகர்த்தக் கூடாது என்று பிடிவாதமாக நிற்கிறார்கள். அரை மணி நேரமாகி விட்டது…."

அப்போதுதான் மாற்றுடையில் இருந்த சில போலீஸ்காரர்களை மந்திரி கவனித்தார். அவர்கள் அவருக்கு சல்யூட் அடிக்க அவர் தலையசைத்தார்.

குறுந்தாடி ரகசியமாக அவர் காதில் சொன்னான். "எங்கள் முக்கியமான ஆட்கள் இங்கே வந்து அவன் பிணத்தைப் பார்க்க வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்கள் போலீஸ்காரர்கள் இருக்கும் போது தலையைக் காட்ட தயக்கப்படுகிறார்கள்."

மந்திரி சொன்னார். "அவன் அமானுஷ்யன் தானா என்று ஒரு தடவை பார்த்து உறுதியாகி விட்டால் பின் நானும் போய் விடுகிறேன். அவர்களும் போய் விடுவார்கள். ஆமாம் அந்தப் பிணம் உங்களுக்கு எதற்கு?"

"அந்தப் பிணம் தான் எங்களுக்கு வீரப்பதக்கம் மாதிரி"

மந்திரி சொன்னார். "அந்தப் புத்தக சேல்ஸ்மேன் அமானுஷ்யனாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லையே. நீங்களாவது அவன் தானா என்று பிணத்தைப் பார்த்து உறுதி செய்து விட்டீர்களா?"

"இல்லை. நானும் இப்போது தான் வந்தேன். பஸ்ஸில் ஏறிய விதமும், இறங்கிய விதமும், டிமிக்கி கொடுத்து விட்டு ஓடிய விதமும் ஒரு அப்பாவி சேல்ஸ்மேனுடையதாக இருக்கவில்லை. கண்டிப்பாக அவன் அமானுஷ்யன் தான்"

மந்திரிக்கு அவன் சொன்னதில் அர்த்தம் இருப்பதாகப் பட்டது. "சரி சீக்கிரம் அவன் முகத்தையும் நாக மச்சத்தையும் காண்பியுங்கள். பார்த்து விட்டு நான் போய் விடுகிறேன். பிறகு நீங்கள் அந்தப் பிணத்தைக் கட்டி அழுங்கள்."

"நாங்கள் எப்போதும் பிணத்தைக் கட்டி அழுவதில்லை"

மந்திரி அவனுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை. "சரி பிணத்தைப் பார்க்கலாம்."

குறுந்தாடி தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான். "பிணத்தை வெளியே எடுத்து வையுங்கள்."

போலீஸ்காரர்கள் மந்திரியைப் பார்க்க மந்திரி தலையசைக்க அவர்கள் குறுக்கிடாமல் நின்றார்கள். குறுந்தாடி மனிதனின் ஆட்கள் ஆம்புலன்ஸில் இருந்து ஸ்ட்ரெச்சரோடு பிணத்தை வெளியே கொண்டு வந்தார்கள். மேலே வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது.

குறுந்தாடிக்காரன் அந்த வெள்ளைத் துணியை லேசாக விலக்கிப் பார்த்தான். பார்த்த அந்தக் கணமே அருவறுப்பில் முகத்தைத் திருப்பிக் கொண்டான். கன்னத்தில் துளைத்திருந்த துப்பாக்கி ரவை முகத்தை பார்க்கவே சகிக்காதபடி குரூரமாக ஆக்கி இருந்தது. முகத்தைப் பார்த்து அவனை அடையாளம் காண்பது முடியாத காரியமாகத் தோன்றியது.

"என்ன?" என்று கேட்டபடி அருகில் வந்த மந்திரி தானும் அந்த கோர முகத்தைக் கண்டு அருவறுப்புடன் பின்னால் நகர்ந்தார். "முகத்தை நீங்கள் பார்க்காதீர்கள். கழுத்திற்குக் கீழே நாக மச்சம் இருக்கிறதா என்று பாருங்கள்"

குறுந்தாடி சைகை காண்பிக்க அவனுடைய ஆள் ஒருவன் முன் வந்து பிணத்தைப் புரட்டிப் போட்டு விட்டு ரெயின் கோட்டையும், சட்டையையும் கீழிறக்கினான். கழுத்தும் முதுகும் துப்பாக்கி காயங்களுடன் ரத்தத்தால் நனைந்து சிவந்திருந்தது. ஒரு ஈரத்துணியால் அவன் துடைத்துக் காட்டினான். காயங்கள் இருந்தனவே ஒழிய நாக மச்சம் இருக்கவில்லை.

குறுந்தாடியும், மந்திரியும் பேயறைந்தது போல ஆனார்கள். இருவருக்கும் பேச வார்த்தைகள் எழவில்லை. கடைசியில் பேச முடிந்தது மந்திரியால் தான். "இவன் அவன் அல்ல" அவர் குரல் பலவீனமாக ஒலித்தது.

குறுந்தாடி முகத்தில் அடக்க முடியாத கோபம் தெரிந்தது. அவன் அமானுஷ்யனைப் பின் தொடர்ந்த தன் ஆட்களைப் பார்த்தான். அவர்கள் இருவரும் வந்து பிணத்தை மறுபடி மல்லாக்காகப் படுக்க வைத்து பார்த்தார்கள். ஈரத்துணியால் பிணத்தின் கழுத்து, முதுகுப் பகுதியைத் துடைத்தவன் முகத்தில் சிதிலமாகாத பகுதியின் ரத்தக்கறையையும் துடைத்துக் காட்டினான்.

அவர்கள் மெதுவாகச் சொன்னார்கள். "நாங்கள் பின் தொடர்ந்த ஆள் இவன் அல்ல"

அமானுஷ்யனைப் பின் தொடர்ந்த போலீஸ்காரர்கள் இருவர்களும் திகைப்புடன் முன் வந்து பிணத்தைப் பார்த்து அதையே சொன்னார்கள்.

குறுந்தாடி கத்தினான். "அந்த சூட்கேஸைக் கொண்டு வாருங்கள்"

இருவர் அந்த சூட்கேஸைக் கொண்டு வந்து திறந்து காட்டினார்கள். அதனுள் யோகா புத்தகங்கள் இருந்தன.

அதற்குள் மந்திரி போன் செய்து சிபிஐ மனிதனிடம் சோகச் செய்தியைச் சொன்னார். சிபிஐ மனிதன் சொன்னான். "அவர்கள் பின் தொடர்ந்தது அமானுஷ்யனைத் தான். அந்தச் சுரங்கப்பாதைக்குள் அவன் போகும் வரை சரியாகத் தான் பின் தொடர்ந்திருக்கிறார்கள். ஆனால் உள்ளே போனவன் மறைந்து விட்டான். அவனுடைய சூட்கேஸோடு சுரங்கப்பாதையின் மறுபக்கம் ஓடி வந்தவன் வேறு யாரோ. அப்படியானால் அமானுஷ்யன் இந்த ஆளை நம் ஆட்கள் கொண்டு வந்த பிறகு நிதானமாய் அந்த சுரங்கப்பாதையை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும்"

மந்திரி சொன்னார். "அவனுக்கு அமானுஷ்யன்னு பெயர் வைத்தவன் வாயிற்கு சர்க்கரை போட வேண்டும்.". இதைக் கேட்டு குறுந்தாடி மந்திரியை முறைத்தான்.

சிபிஐ மனிதன் சொன்னான். "முதலில் இப்போது செத்தவன் யார் என்று கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள். அவன் பாக்கெட்டுகளில் என்ன எல்லாம் இருக்கின்றன என்பதை நம் போலீசாரை விட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்." போனை வைத்த சிபிஐ மனிதன் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான்.

*****

அக்‌ஷய் அன்றைய நிகழ்ச்சிகளை எப்படி ஆனந்திடம் தெரிவிப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்த போதுதான் பவன்குமார் அவனிடம் வந்து ஆனந்த் தந்த உறையைத் தந்தான். அவனைப் பார்த்தவுடனேயே அவன் ஆனந்த் தங்கி இருக்கும் ஓட்டலில் வேலை செய்யும் ரூம்பாய் என்று அக்‌ஷய் அடையாளம் கண்டு கொண்டான். உறையைத் தந்து விட்டு திரும்பிப் போக யத்தனித்த பவன்குமாரிடம் அக்‌ஷய் சொன்னான். "ஐந்து நிமிடம் இருந்து விட்டுப் போகிறாயா?"

பவன் குமார் சரியென்று தலையசைக்க அக்‌ஷய் அவனை அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் சொல்லி விட்டு உறையைப் பிரித்துப் பார்த்தான்.

ஆனந்த் எழுதியிருந்ததைப் படித்த அக்‌ஷய் உள்ளே பரபரப்படைந்தாலும் வெளியே அமைதி மாறாமல் இருந்தான். ஒரு கணம் யோசித்து விட்டு பவன்குமாரிடம் அவன் கேட்டான். "உன் வீடு எங்கிருக்கின்றது? விலாசம் தர முடியுமா? நான் ஆனந்திற்கு ஏதாவது தெரிவிக்க வேண்டி வந்தால் உன் வீட்டிற்கு வந்து தருகிறேன்."

பவன்குமார் தன் வீட்டு விலாசம் சொன்னான். அக்‌ஷய் அவன் வீட்டில் இருக்கக் கூட்டிய நேரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். பின் அவனும் ஒரு நூறு ரூபாய் தாளைத் தர பவன்குமார் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. "நன்றி சார்" என்று கூறி அவன் விடை பெற்றான்.

அக்‌ஷய் அவன் போய் கால் மணி நேரம் கழித்து வெளியே போய் ஒரு எஸ்டிடி பூத்தில் இருந்து ஆனந்த் எழுதியிருந்த மும்பை எண்ணிற்குப் போன் செய்தான்.

அந்த எண்ணிற்கு டெல்லியில் இருந்து கால் வருவது அறிந்தவுடன் மும்பை டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் ஒரு மனிதன் பரபரப்பானான். இனி பேசப்போகும் பேச்சை டேப் செய்யத் தயாரானான்.

(தொடரும்)

About The Author

1 Comment

Comments are closed.