அமானுஷ்யன் 61

அக்‌ஷய் பெரியவனாக வளர ஆரம்பிக்கையில் நாகராஜன் செய்யும் தொழிலை வெறுத்தான். அவன் அதை எப்போதுமே அவரிடம் வாய் விட்டுச் சொன்னதில்லை. ஆனால் சோகம் நிரம்பிய விழிகளோடு சில சமயங்களில் அவர் செயல்களைக் கவனிப்பான். அதை அவரும் திலகவதியும் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அந்தத் தொழில் புலி மேல் செய்யும் பயணம் போலத் தான். பயணத்தை ஆரம்பித்த பின் பிடிக்கவில்லை என்றாலும் நடுவில் இறங்கி விட முடியாது. இதை அவன் ஒரு நாள் புரிந்து கொள்வான் என்று நாகராஜன் நினைத்தார்.

அக்‌ஷயிற்கு தந்தையின் தைரியம் குறித்தும் உடல் வலிமை குறித்தும் சிறு வயதில் இருந்தே பெருமிதம் உண்டு. ஒரு இக்கட்டான கட்டத்தில் ரயிலில் அந்த முரடனிடம் இருந்து அவனைக் காப்பாற்றிய அந்த வீரம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்து இருந்தது. எனவே அவனும் சிறு வயதில் இருந்தே உடல் வலிமையிலும், கராத்தே, குங்க்ஃபூ போன்ற சண்டைப் பயிற்சிகளிலும் அதிக ஆர்வம் காட்டினான்.

அதனால் அக்‌ஷய் படிப்பில் மட்டுமல்லாமல் பள்ளியில் கராத்தேயிலும் மிகத் தேர்ச்சி பெற்ற மாணவனாகத் திகழ்ந்தான். தனியாக குங்க்ஃபூ கற்றான். அதிலும் அவன் முதல் மாணவனாக இருந்தான். அவனுடைய குங்க்ஃபூ குரு நாகராஜனைத் தனியாக அழைத்து ஒரு முறை சொன்னார். "ஒரு நாள் இந்த குங்க்ஃபூ திறமைக்காக இவனை உலகமே பாராட்டும். அந்த அளவு திறமை இவனிடம் இருக்கிறது". அந்த குங்க்ஃபூ குரு சர்வ தேசப் போட்டிகளில் நீதிபதியாக அடிக்கடி செல்பவர். அவரிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்ட போது நாகராஜன் பூரித்துப் போனார்.

அவன் இப்ராஹிம் சேட்டின் மகன்களுடனும் சேர்ந்து விளையாடுவான். இஸ்மாயில், அமானுல்லா, அஸ்ரஃப் என்ற அந்த மூன்று பேரில் கடைசி மகன் அஸ்ரஃபிற்கு அக்‌ஷயின் வயது தான் இருக்கும். அவர்கள் அவனுடன் சீக்கிரமே நண்பர்களாகி விட்டார்கள். அவர்கள் குரான் படிக்கும் போது இவனும் அவர்களுடன் சேர்ந்து படிப்பான். இப்ராஹிம் சேட் குடும்பம் தொழுகைக்குச் செல்லும் போது அவனும் செல்வான். ஒரு ஓரமாக இருந்து அதே போல தொழுகை செய்வான். அதோடு நிறுத்தியிருந்தால் அவர்கள் நட்பு நீண்டு இருக்கும். ஆனால் அக்‌ஷய் ஒரு படி மேலேயே போனான்.

அவர்களில் ஒருவனாகவே ஆகி விட்ட அவன் குரான் பற்றி போட்டிகள் நடக்கும் போது அவர்களுடன் சேர்ந்து தானும் கலந்து கொள்வான். பெரும்பாலும் அவனுக்குத் தான் முதல் பரிசு கிடைக்கும். அவர்கள் ஒரு உருது ஆசிரியரிடம் உருது கற்ற போது அவர்களுடன் சேர்ந்து அவனும் உருது படித்தான். உருதுவிலும் அவன் தேர்ச்சி சிறப்பாக இருந்தது. ஒரு முறை ஒரு போட்டியில் அவன் உருதுவில் பேசியதைக் கேட்டு அசந்து போன ஒரு இஸ்லாமிய அறிஞர் "இந்தப் பையன் ஒரு ஹிந்து என்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று ஆச்சரியப்பட்டார்.

அக்‌ஷயின் திறமைகள் இப்ராஹிம் சேட்டிற்கும் மகிழ்ச்சியைத் தந்தாலும், கலந்து கொள்ளும் ஒவ்வொன்றிலும் அக்‌ஷய் வெற்றி பெற்றதும், எல்லோரும் அவனை அளவுக்கு அதிகமாக பாராட்டியதும் இப்ராஹிம் சேட்டின் மகன்கள் மனதில் பொறாமையை வளர்த்த ஆரம்பித்தது. அவனுடன் விளையாட்டு, சண்டை, படிப்பு என்று எதிலும் ஜெயிக்க முடியாமல் போன அவர்களுக்கு அவனை நண்பனாகத் தொடர்ந்து எண்ண முடியாமல் போயிற்று.

மேலும் வளர்ந்து பெரிதான போது அவர்களுக்கு தந்தையின் தொழிலில் நல்ல ஈடுபாடு இருந்தது. சுலபமாக வந்து குவியும் பணம், எல்லோரும் காட்டும் பயம் கலந்த மரியாதை எல்லாம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. நாகராஜன் – இப்ராஹிம் சேட் உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தை அவர்கள் மேலும் மேலும் விரிவு படுத்திக் கொள்ள எண்ணினார்கள். அக்‌ஷயோ தந்தையின் தொழிலில் எந்தப் பங்கு வகிக்கவும் விரும்பவில்லை. எனவே சிறு வயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்கள் பெரியவர்களான போது அவனிடமிருந்து விலக ஆரம்பித்தார்கள்.

அக்‌ஷயிற்கு குங்க்ஃபூ கலையின் மேல்மட்டப் பயிற்சிகள் அளித்த சில புத்த பிக்குகள் உடல் வலிமைக்கும் மேலாக ஆன்ம வலிமை ஒன்று இருக்கிறது அது எல்லா வலில்மைகளுக்கும் மேலானது என்று சுட்டிக் காட்டினார்கள். அக்‌ஷய் பட்டப்படிப்பு முடிந்த பின் அவர்களுடைய மடாலயங்களில் பல நாட்கள் தங்க ஆரம்பித்தான். இமயமலையிலும், சீனாவிலும், திபெத்திலும் கூடப் போய் அவன் சண்டைப் பயிற்சியில் நுணுக்கமான பல வித்தைகள் கற்றான். அவனுடைய குருமார்கள் அவனைப் போன்ற ஒரு மாணவன் தங்களுக்கு அதுவரை கிடைத்ததில்லை என்று நினைத்தார்கள்.

அது போன்ற பயிற்சிகள் முடிந்து அக்‌ஷய் திரும்பவும் வீட்டுக்கு வரும் போதெல்லாம் வீட்டில் வந்து போய்க் கொண்டிருந்த ரௌடிகள், கள்ளக்கடத்தல் காரர்கள், சமூக விரோத சக்திகள் எல்லாம் அவனுக்கு மேலும் அருவருப்பை அளித்தார்கள். பெற்றோர் நினைவு வரும் போதெல்லாம் வீட்டுக்கு அவன் வருவான். ஒரு நாளுக்கு மேல் தங்காமல் மறுபடி போய் விடுவான்.

அவன் அப்படிப் போவது நாகராஜனுக்கும் திலகவதிக்கும் மிகவும் துக்கமாக இருந்தது. திலகவதி கணவனின் எந்த செயல்களையும் அது வரை கண்டித்தது இல்லை. விமரிசித்ததும் இல்லை. ஆனால் அகஷயின் பாரா முகம் பார்த்து ஒரு நாள் இரவு வருத்தத்துடன் கணவனிடம் சொன்னாள். "இத்தனை சம்பாதிப்பது யாருக்காக? அவன் பாசத்தை விட நமக்கு இந்த தொழில் முக்கியமா? எல்லாவற்றையும் சம்பாதித்து பிள்ளையைத் தொலைத்து விடப்போகிறோமோ என்று பயமாய் இருக்கிறது"

அன்று இரவு முழுவதும் நாகராஜன் உறங்கவில்லை. மனைவி சொன்னதில் இருந்த உண்மை அவருக்கு நன்றாகவே உறைத்தது. மகனுக்கு முன் வேறு எதுவும் முக்கியமில்லை என்று நினைத்த அவர் கடைசியில் தன் தொழிலிற்கு முழுக்குப் போட முடிவு செய்தார்.

மறு நாளே அவர் தன் முடிவை இப்ராஹிம் சேட்டிடம் தெரிவித்தார். "… அவனா இந்தத் தொழிலா என்று இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிற நிலையில் இருக்கிறேன் இப்ராஹிம். அதனால் எனக்கு வேறு வழியில்லை. நான் இந்த தொழிலில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்து விட்டேன். என் பங்கை தான தர்மம் செய்து விட்டு அவன் கூட அவனோட அப்பா அம்மாவாக மீதிக் காலம் நானும் திலகாவும் வாழ நினைக்கிறோம்."

இப்ராஹிம் சேட் இதை எதிர்பார்த்தது தான். மனித சுபாவத்தை எடை போடுவதில் வல்லவரான அவர் அக்‌ஷய் பெரியவனானவுடனேயே இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்தார். கணக்கு வழக்குகளை அவர் தான் பார்த்துக் கொண்டிருந்ததால் ஒரு வாரத்தில் கணக்கு பார்த்து நாகராஜனுக்கு சேர வேண்டியதைத் தந்து விடுவதாக வாக்களித்தார்.

அவர் வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொன்ன போது அவருடைய மூத்த பிள்ளைகள் இருவரும் அவரைக் கடுமையாக விமரிசனம் செய்தார்கள். "உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. அந்த ஆள் தான தர்மம் செய்வதற்காக யாராவது கோடிக்கணக்கில் பணத்தை திருப்பித் தருவார்களா?"

"நாகராஜன் எனக்கு நண்பன் மட்டுமல்ல ஒரு சகோதரன் மாதிரி. அவனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவன் இடத்தில் நான் இருந்தாலும் இப்படித் தான் செய்திருப்பேன். இருப்பது ஒரே மகன். அவனுக்கு இந்தத் தொழில் பிடிக்கவில்லை என்றால் நாகராஜன் என்ன செய்ய முடியும். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் அக்‌ஷய் ஓத்துக் கொள்ள மாட்டான். அதனால் தான் நாகராஜன் இந்த முடிவெடுத்து இருக்கிறான். ஒரேயடியாக இல்லா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பணத்தை அவனுக்கு திருப்பிக் கொடுத்து விடுவது தான் முறை"

"அந்த பையன் அவரோட சொந்த மகனா. யாரோ ஒரு அனாதை. அந்த அனாதைக்காக இவ்வளவு நாள் நீங்கள் இரண்டு பேரும் கூட்டாக சேர்த்ததில் பாதி வாங்கி அந்த ஆள் தானம் தந்து விடுவாராம். அதற்கு நீங்கள் ஒத்துக் கொள்வீர்களாம். நன்றாக இருக்கிறது கதை"

வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. கடைசியில் இப்ராஹிம் சேட் மகன்களிடம் கேட்டார். "கடைசியில் என்ன தான் சொல்கிறீர்கள்? நான் எப்படி அவனிடம் போய் உனக்குச் சேர வேண்டியதைத் தர மாட்டேன் என்று சொல்ல முடியும்? யோசித்துப் பாருங்கள்"

அவரது மூத்த மகன் இஸ்மாயில் சொன்னான். "ஒன்றும் சொல்ல வேண்டும். அந்த ஆளையே தீர்த்துக் கட்டுவது தான் புத்திசாலித்தனம்"

இப்ராஹிம் சேட் ஆடிப் போனார். "இஸ்மாயில். சைத்தானைப் போல் பேசாதே…."

இஸ்மாயிலும், அமானுல்லாவும் சேர்ந்து அவருக்கு மூளைச்சலவை செய்தார்கள். "நீங்கள் யோசித்துப் பாருங்கள். இது மாதிரியான தொழிலில் இருந்து ஒருவன் விலகுவது சாகும் போது தான். உயிருடன் இருக்கும் போது விலகினால் அவன் கண்டிப்பாக நமக்கு எதிரியாகத் தான் இருக்க முடியும்….."

"கோடிக்கணக்கான பணத்தை அவரும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றால் அதை எல்லாம் நாமே வைத்துக் கொள்ளலாமே…."

"இந்தத் தொழிலில் தாக்குப் பிடிப்பது தான் தர்மம். விட்டு விட்டு ஓடுபவன் கோழை. அப்படிப்பட்ட கோழையை விட்டு வைப்பது இன்றைக்கு இல்லா விட்டாலும் என்றைக்கும் அபாயம் தான். நாளைக்கே அக்‌ஷய் சொல்லி அந்த ஆள் போலீசில் அப்ரூவர் ஆகி விட்டால்….?"

பல விதங்களில் அவரிடம் பேசி இஸ்மாயிலும் அமானுல்லாவும் இப்ராஹிம் சேட்டை வாயடைத்து விட்டார்கள். "இனி எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பேசாமல் இருந்தால் போதும்…"

தொழிலில் இருந்து விலக முடிவெடுத்த நண்பனையும், அவனுடைய சாமியார் மகனையும் ஆதரித்து இனி ஒன்றும் ஆகப் போவதில்லை, நாகராஜனுடைய பங்கை விட்டு தன் பங்கை மட்டும் மூன்று மகன்களுக்குப் பிரித்தால் அவர்களுக்குப் பெரிதாக ஒன்றும் கிடைத்து விடப்போவதில்லை என்றெல்லாம் கணக்குப் போட்ட இப்ராஹிம் சேட்டின் மனசாட்சி லாபநஷ்டக்கணக்கு பார்த்து அடங்கிப் போனது.

இப்ராஹிம் சேட் கடைசியாக ஒரே ஒரு அறிவுரை தந்தார். "நம் ஆட்கள் யாரையும் இதில் ஈடுபடுத்தாதீர்கள்."

நாகராஜன் மறு நாளே தன்னிடம் இருந்த அடியாட்களுக்கு எல்லாம் கைநிறைய பணம் தந்து அனுப்பி விட்டார். வீட்டில் பலகாலமாய் வேலை செய்து கொண்டிருந்த பீம்சிங் என்ற வேலைக்காரனைத் தவிர வேறு வேலையாட்களோ, அடியாட்களோ இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு இஸ்மாயிலும் அமானுல்லாவும் திட்டம் போட்டு செயலில் இறங்கினர். வேறு கும்பல்களில் இருந்து முதலிலேயே நாகராஜன் மீது பகைமை உள்ள ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

அந்தக் கும்பல் ஒரு நாள் இரவு நாகராஜனுடைய வீட்டுக்கு வந்து அவரையும், தடுக்க வந்த அவர் மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளி விட்டு ஓடினார்கள்.

(தொடரும்)

About The Author