அமானுஷ்யன் – 75

ஆனந்த் சென்ற போது மஹாவீர் ஜெயின் அவனுக்காக நிலை கொள்ளாமல் காத்திருந்தார். அவனுடைய தாயும் கடத்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அவரை நிறையவே உலுக்கி இருந்தது. இந்த நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது என்ற கேள்வி அவருக்குள்ளே பிரதானமாக எழுந்து நின்றது. அவன் வந்தவுடன் அவனைத் தன் தனியறைக்கு அழைத்துக் கொண்டு போனார்.

"உட்காருங்கள் ஆனந்த். உங்கள் அம்மாவை எப்போது கடத்தினார்கள்? எப்படி கடத்தினார்கள்? போலீசில் புகார் செய்தீர்களா? யார் கடத்தினார்கள் என்று ஏதாவது தகவல் கிடைத்ததா?"

அவரிடம் இருந்து சரமாரியாகக் கேள்விகள் வந்தன.

ஆனந்த் சொன்னான். "இந்த விசாரணையில் நான் உங்களிடம் எல்லாமே சொல்லி விடவில்லை சார். அதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். என் நிலைமை அது போல் அமைந்து விட்டது….."

ஆனந்த் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்தான். அவனுடைய தம்பி சிறு வயதில் காணாமல் போனதில் இருந்து ஆரம்பித்தவன் எல்லாவற்றையும் விடாமல் சொன்னான். பல திருப்பங்களுடன் நடந்த சம்பவங்கள் ஏதோ நாவல் படிப்பதைப் போன்ற ஒரு பிரமையை ஜெயினிடம் ஏற்படுத்தின. அவன் முடித்த போது அவருக்கு சிறிது நேரம் எதுவும் பேசத் தோன்றவில்லை.

கடைசியில் அவர் கேட்டார். "சரி இப்போது உங்கள் அம்மாவைக் கடத்தியவர்கள் ஏன் உங்களிடம் இன்னும் பேசவில்லை என்று நினைக்கிறீர்கள்…"

"நாம் சில சமயங்களில் விசாரிக்க வேண்டிய ஆளை வரவழைத்து விட்டு அவனிடம் கேள்வியைக் கேட்க ஆரம்பிக்கவே அதிக தாமதம் ஏன் சார் செய்கிறோம்?… அவன் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் உடைத்து விட்டு என்னவோ, ஏதோ என்று பயப்பட வைக்கத் தானே? அதையே அவர்கள் செய்கிறார்கள் போலத் தெரிகிறது. அவர்கள் போன் வரும் போது நான் பயந்து உடைந்து, அவர்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டுகிற நிலைக்கு ஆளாகி இருப்பேன் என்று அவர்கள் நம்புகிறார்கள்…."

ஜெயின் அவனை இரக்கத்துடன் பார்த்தார். அவர்கள் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை என்பது அவருக்குத் தெரிந்தது. அவருடைய குடும்ப நபர்களைக் கடத்திக் கொண்டு போயிருந்தால் அவரும் கூட அவன் நிலைமைக்குத் தான் சென்று இருப்பார். அந்த சிக்கலான நிகழ்வுகளுக்கு நடுவிலும் அமானுஷ்யன் என்று எதிரிகளால் அழைக்கப்படும் ஆனந்தின் தம்பி பற்றிய விவரங்கள் தெரிய வந்த போது ஒருவித சுவாரசியமான பரபரப்பு அவருக்கு ஏற்பட்டது. அவனைப் பற்றி ஆனந்திடம் இன்னும் விரிவாகக் கேட்க நினைத்தாலும் இப்போதைய நிலையில் அதைக் கேட்பது தன் தகுதிக்கு உகந்ததல்ல என்று தோன்ற அவர் வேறு கேள்வி கேட்டார்.

"நம் எதிரிகள் யாராக இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகப் படுகிறீர்கள்"

"அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருக்கிறவர்கள் யாரோ இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் சார். அவர்களுடன் நம் டிபார்ட்மெண்ட் ஆட்களும் சேர்ந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.."

"இப்போதைக்கு உங்களுக்கு நம் டிபார்ட்மெண்டில் யார் மேல் சந்தேகம்?"

"மகேந்திரன் மேல் சந்தேகம் இருக்கிறது சார்…. ஆனால் ஆதாரம் எதுவும் நம் கையில் இல்லை.."

மகேந்திரன் மேல் ஆரம்பத்தில் எழுந்த சந்தேகம் இது வரை நீடிப்பதில் அவருக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மகேந்திரனுடைய நடவடிக்கைகள் எப்போதும் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவே இருந்திருக்கின்றன. அவனுக்கு அரசியல் வட்டாரத்திலும் செல்வாக்கு இருப்பதும் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

"இனி என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் ஆனந்த்.."

"இப்போதைக்கு அவர்கள் போன் வரும் வரை காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை சார்…"

"அமானுஷ்யன்… அதாவது உங்கள் தம்பி என்ன சொல்கிறார்?"

"அவர்கள் போன் செய்தால் என்ன சொன்னாலும் மறுத்துப் பேசாமல் ஒத்துக் கொள்ள சொல்கிறான்…." சொல்கையில் ஆனந்திற்கு குரல் கரகரத்தது.

அவன் நிலைமை அவருக்குப் புரிந்தது. என்றோ காணாமல் போன தம்பி இந்த நிலையிலும், இந்த சூழ்நிலையிலுமா அவனுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று இரக்கப்பட்டவருக்கு இன்னொரு உண்மையை உணராமல் இருக்க முடியவில்லை. ஆனந்த் அவரிடம் இத்தனை நாட்கள் அமானுஷ்யன் (அவருக்கு அக்‌ஷய் என்ற பெயரை விட அமானுஷ்யன் என்ற பெயர் தான் மிகவும் பிடித்திருந்தது) பற்றிய விவரங்கள் எதையும் கூறாமல் மறைத்ததற்குக் காரணம் அவர் மீதும் அவனுக்கு முழு நம்பிக்கை இல்லாமல் இருந்தது தான்… தன்னைக் கூட அவன் சந்தேகப்பட்டு விட்டானே என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் யோசித்துப் பார்த்த போது அவனை அவரால் குற்றம் சொல்ல முடியவில்லை. இப்போது யாரையும் நம்பும் நிலைமையில் யாரும் இல்லை. ஆச்சார்யா கொலை, ஆனந்தின் அம்மா கடத்தல் இதெல்லாம் ஜீரணிக்க முடியாத விஷயங்களாக அவருக்கு இருந்தன. எதிர்த்து எதுவும் செய்ய முடிந்த அளவு பண பலமும், அதிகார பலமும் பெற்று அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்கள் தான் எத்தனை? சிபிஐ போன்ற பெரிய அமைப்பில் இருந்து கூட தங்கள் ஊழியர்களுக்கே ஏற்படும் அக்கிரமங்களை தவிர்க்க முடியவில்லையே என்று அவர் மனம் வெந்தார்.

"ஆனந்த் நான் இது பற்றி கேசவதாஸிடம் தனிப்பட்ட முறையில் வெளிப்படையாகப் பேசினால் என்ன? "

"எதற்கும் அக்‌ஷய் பேசி விட்டு வந்த பிறகு யோசிப்போம் சார்"

*********

இரவு அநியாயத்திற்கு நீண்டது. சஹானாவால் உறங்க முடியவில்லை. மகன் என்ன செய்கிறான், எப்படி இருக்கிறான், கடத்தியவர்கள் அவனை உபத்திரவிக்கிறார்களா என்பது போன்ற கேள்விகள் அவள் மனதில் பூதாகரமாக எழுந்தன. கற்பனையும் பயமுமாகச் சேர்ந்து மனதில் எழுந்த பதில்களோ அவளை கிட்டத்தட்ட பைத்தியமாக்கின.

மது சற்று முன் வந்து அக்‌ஷய் சொன்னதை எல்லாம் சொல்லி விட்டுப் போனது அவளை மேலும் துக்கப்படுத்தின. அவன் மேல் அவளுக்கு ஏற்பட்டிருந்த உணர்வுகள் இன்னும் ரகசியமாய் அவள் மனதில் பூத்தபடியே இருக்கின்றன. அவன் அவள் மனதில் அந்த ரகசிய மூலையில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டிருந்தான்.

"சஹானாவிடம் சொல். என் உயிரைக் கொடுத்தாவது நான் வருணை அவளிடம் சேர்த்து விடுவேன்….." என்று அவன் சொல்லி இருந்தானாம்.

இதயத்தின் கனம் தாள முடியாமல் போன போது அது கண்ணீராய் வெளியே வர ஆரம்பித்தது. அவள் அழ ஆரம்பித்தாள். அவள் அழுவதையே சிறிது நேரம் துக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மரகதம் தன் தயக்கத்தை ஒதுக்கி விட்டு அவளருகே வந்து சொன்னாள். "அழாதே சஹானா. அவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்றும் ஆகாது…"

சஹானா திகைப்புடன் தலை நிமிர்ந்தாள். அவளுக்கு இரண்டு பெரிய ஆச்சரியங்கள். முதலாவது அவளுடைய மாமியார் என்றுமே இது வரை அவளுடைய சோதனைக் காலங்களில் அவளுக்கு ஆறுதல் சொன்னதில்லை. அவள் என்றுமே பார்வையாளராகத் தான் இது வரை இருந்திருக்கிறாள். அவளுடைய கணவன் அவளை வார்த்தைகளால் காயப்படுத்திய போது எல்லாம், அவள் அவன் முன் அமைதியாக இருந்து அவன் இல்லாத போது அழுது துக்கித்த போது எல்லாம் மரகதம் அவளை எட்ட நின்று வேடிக்கை தான் பார்த்திருக்கிறாள். ஒரு முறை கூட மரகதம் தன் மகனைக் கண்டித்ததோ, மருமகளுக்கு ஆறுதல் சொன்னதோ இல்லை.

இரண்டாவது ஆச்சரியம், சஹானா அழுவது அக்‌ஷயிற்காகவும் தான் என்பதை மரகதம் கண்டுபிடித்து ‘இரண்டு பேருக்கும்’ ஒன்றும் ஆகாது என்று அழுத்தி சொன்னது தான். சஹானா தான் காண்பது கனவா நனவா என்று திகைத்தாள். அருகில் வந்து அமர்ந்த மரகதத்தின் முகத்தில் தெரிந்த கனிவு இது நனவு தான் என்பதை உறுதிப்படுத்தியது.

அந்த கனிவும், ஆறுதலான வார்த்தைகளும் அவள் அழுகையை மேலும் அதிகப்படுத்த, மரகதத்தின் தோளில் சாய்ந்து சஹானா அழுதாள். மரகதம் ஒரு தாயாக அவளைத் தேற்றினாள். கண்டிப்பாக வருணுக்கும், அக்‌ஷயிற்கும் ஒன்றும் ஆகாது என்று தனக்கு உள்மனது சொல்வதாகவும், இது வரை அவளுடைய உள்மனது பொய்த்தது இல்லை என்றும் சொன்னாள். மாமியாருக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியுமா என்று சஹானா அந்த துக்கத்தினிடையேயும் வியந்தாள். ஆனால் சிறு வயதிலேயே தன் தாயை இழந்திருந்த அவளுக்கு இந்தப் பாசம் மிக மிக இதமாக இருந்தது.

நடு இரவு வரை இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு அவர்கள் வாழ்க்கையைப் பற்றியதாக இருந்தது. மரகதம் மனம் விட்டு அவளுடன் பேசினாள். தன் சிறு வயதில் இருந்து அடக்கப்பட்டு வாழ்ந்த விதத்தைப் பற்றி சொன்னாள். அவளுடைய தந்தை, கணவன், மகன் எல்லோருமே அவளை அப்படி ஒரு நிலையிலேயே வைத்திருந்தார்கள் என்பதைச் சொன்னாள். வாய் திறந்தால் ஏதாவது பேச்சுக் குற்றமாகி விடும், பின் பிரச்னையாகி விடும் என்று பயந்து மௌனமாகவே வாழ்ந்து வந்ததைச் சொன்னாள். அவளுடைய மௌன அரணை அக்‌ஷய் எப்படி உடைத்து பாசத்தோடு பழகினான் என்பதைச் சொன்னாள்.

சஹானாவிற்கு மாமியாரின் யதார்த்த நிலை அப்போது தான் விளங்கியது. அவள் ஏன் இது வரை மௌனமாகவும், எட்ட நின்றும் பழகி இருக்கிறாள் என்பது புரிந்தது. அவளை மனுஷியாகவே மதிக்காத அந்த உறவுகளுக்கு இடையே எப்படி கைதியாக வாழ்ந்திருக்கிறாள் என்று நினைக்கையில் தன்னுடைய இந்த நிலையையும் மறந்து மாமியாருக்காக இரக்கப்பட்டாள்.

சஹானாவும் மரகதத்திடம் மனம் விட்டுப் பேசினாள். அவள் தன் தந்தையைப் பற்றியும், அண்ணனைப் பற்றியும், மதுவைப் பற்றியும் சொன்னாள். பல வருடங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த அந்த இருவரும் முதல் முதலாக உண்மையாக ஒருவருக்கொருவர் பரிச்சயப்பட்டார்கள். துக்கம் பகிர்ந்து கொள்ளப்படும் போது அது துக்கத்தை வெகுவாகக் குறைக்கிறது என்பதை உணர்ந்தார்கள்.

*******

மந்திரி சிபிஐ மனிதனுக்கு போன் செய்தார்.

"என்னை அந்த சைத்தான்கள் வேலை பார்க்க விடமாட்டேன்கிறார்கள். அவன் பிணம் எப்போது கையில் கிடைக்கும் என்று கேட்கிறார்கள். ஏதோ ஆர்டர் செய்த பொருள் எப்போது கிடைக்கும் என்கிற மாதிரி இருக்கிறது. அந்த ஆனந்திற்கு போன் செய்து அமானுஷ்யனை சீக்கிரம் ஒப்படைக்கச் சொல்வது நல்லது என்று நினைக்கிறேன்…."

சிபிஐ மனிதன் சொன்னான். "தயிர் திரண்டு வரும் போது பானையை உடைத்து விட வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள்…"

"அந்த காட்டான்கள் பழமொழி கேட்கிற மனநிலையில் இல்லை. அந்த நாள் நெருங்குகிற போது அவன் உயிருடன் இருப்பது தலைக்கு மேல் இருக்கும் கத்தி என்று நினைக்கிறார்கள். வேண்டுமானால் இன்னும் சில கோடிகள் அதிகமாகத் தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள்…"

சிபிஐ மனிதன் மௌனமாக இருந்தான்.

உடனே அந்த மௌனத்தின் பொருளைப் புரிந்து கொண்ட மந்திரி "அவர்கள் கூடுதலாகத் தரும் கோடிகளை அப்படியே உங்கள் ஸ்விஸ் அக்கௌண்டில் போட்டு விடுகிறேன். எனக்கு அந்த நாசமாய் போனவனை ஒழித்து விட்டால் போதும்…."

சிபிஐ மனிதன் சொன்னான். "என் அனுமானம் சரியானால் அமானுஷ்யன் டிஐஜி கேசவதாஸை சீக்கிரமே சந்திப்பான். அவனை அங்கேயே சுட்டுத் தள்ளப் பார்ப்போம். அப்படி இல்லா விட்டால் உடனடியாக ஆனந்திற்குப் போன் செய்வோம். அதிகபட்சமாய் இரண்டு நாளுக்கு மேல் அவன் உயிரோடு இருக்க மாட்டான். அது உறுதி. அதற்கு முதல் கட்டமாய் கேசவதாஸைத் தயார் நிலையில் இருக்கச் செய்வோம் …."

(தொடரும்)

About The Author