அமானுஷ்யன் 85

ராஜாராம் ரெட்டி பயபக்தியுடன் நீட்டிய அந்த பிரசாதத்தை ஜெயின் பார்த்தார். பார்க்க பஞ்சாமிர்தமாகவும் இல்லாமல், அல்வா போலவும் இல்லாமல் இடைப்பட்ட ஒரு நிலையில் அந்த பிரசாதம் இருந்தது. வாங்கிய ஜெயின் காளிதேவியை நினைத்து வணங்கியபடி அந்த பிரசாதத்தை எடுத்து வாயில் கண்களை மூடிப் போட்டுக் கொண்டார். சுவை என்னவோ போல் இருப்பதை ஜெயின் உணர்ந்தார்.

அந்த சுவையால் ஜெயின் முகம் ஒரு மாதிரியாகப் போனதைக் கவனித்த ரெட்டி அவர் அதைத் துப்பி விடப் போகிறாரோ என்று பயந்தார். “இந்த பிரசாதம் சில பருப்புகளுடன் மூலிகைகளும் கலந்து தயாரித்ததாம். இதை சாப்பிட்டால் பல நாள்பட்ட வியாதிகளையும் குணமாக்குகிறது என்று கிராமத்து ஆட்கள் சொல்கிறார்கள்”

ஜெயின் தலையாட்டியபடியே அதை விழுங்கினார். ரெட்டி திருப்தியுடன் அவரைப் பார்த்தார். குறுந்தாடிக்காரன் சரியாக ஐந்து நிமிடங்களிலேயே அது தன் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்து விடும் என்று சொல்லி இருக்கிறான். பார்க்க வேண்டும்……..

ஜெயின் சொன்னார். “எனக்கு என்னவோ அந்த அமானுஷ்யனை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவன் கற்பனையல்ல நிஜம் என்று நேரில் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு தோணல்….”

ராஜாராம் ரெட்டியும் மனமார சொன்னார். “அந்த ஆசை எனக்கும் இருக்கிறது ஜெயின் சார். இத்தனை பேரை ஒரு கலக்கு கலக்கும் அவனைக் கண்டிப்பாக நான் பார்க்கத் தான் போகிறேன்…”

’பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று சொல்வதற்குப் பதிலாக ’பார்க்கத் தான் போகிறேன்’ என்று சொல்கிறார் ரெட்டி என்று ஜெயின் தனக்குள் சொல்லிக் கொண்டார். அவருக்குத் தொண்டையை என்னவோ செய்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டார். ஆனாலும் தொண்டை சரியாகவில்லை. அந்தப் பிரசாதம் தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று அவருக்குத் தோன்றியது. அவருக்கு லேசாகத் தலை சுற்றுவது போல் இருந்தது. அதை ரெட்டியிடம் அவர் சொல்ல நினைத்தார். ஆனால் வார்த்தைகள் வரவில்லை. கண்கள் சொருக அவர் அப்படியெ சாய்ந்தார்.

ராஜராம் ரெட்டி ஜெயினை மெல்ல அழைத்தார். “ஜெயின் சார் என்ன ஆயிற்று?”

ஜெயினிடம் இருந்து பதில் எதுவும் இல்லை. ரெட்டி நிதானமாக எழுந்து ஜெயின் பக்கத்தில் இருந்த ’அந்த மருந்து’ மடித்த பொட்டலத்தை எடுத்து தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டார். அறையை முழுவதும் நோட்டமிட்டார். ஜெயினின் டேபிள் மேல் டைரி இருந்ததைக் கவனித்தார். அதைப் பிரித்துப் பார்த்தார். ஜெயின் டைரியின் பக்கங்கள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. எழுதியிருந்த சில பக்கங்களில் கூட உறவினர்களின் பிறந்த நாள் தகவல்களும், இன்சூரன்ஸ் பிரிமியம் கட்ட வேண்டிய தகவல்களும் தான் இருந்தன.

அதை அப்படியே அங்கேயே வைத்து விட்டு அறைக்கதவைத் திறந்து வெளியே வருகையில் மட்டும் ஆள் மாறி இருந்தார். “மேடம்… மேடம்…” என்று பதட்டத்துடன் அழைத்தார். ஜெயினின் மனைவி வந்தவுடன், “சார் என்னிடம் பேசப் பேச திடீரென்று மயக்கமாகி அப்படியே சாய்ந்து விட்டார்” என்று கூறியவர் ஜெயினின் மனைவி அறைக்கு கலக்கத்துடன் போவதைப் பார்த்தபடியே ஆம்புலன்ஸிற்குப் போன் செய்தார்.

                                                                              ***************
ஆனந்த் மஹாவீர் ஜெயினிற்கு இரண்டு முறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. மூன்றாவது தடவை அவன் போன் செய்த போது ஜெயினின் மனைவி போனை எடுத்துப் பேசினாள். “ஹலோ”

“மேடம், நான் ஆனந்த் பேசுகிறேன். ஜெயின் சாரிடம் பேச வேண்டுமே”

திருமதி ஜெயினின் குரல் உடைந்திருந்தது. “அவர்… அவர்…ஐசியூவில் இருக்கிறார்…”

ஆனந்த் அதிர்ச்சி அடைந்தான். “என்ன ஆயிற்று அவருக்கு?”

“அவர் காலையில் ரெட்டி சாருடன் பேசிக்கொண்டிருந்தார். பேசப் பேச அப்படியே மயக்கமாகி விட்டார். கோமாவில் இருக்கிறது போல இருக்கிறார்…. நல்லவேளை ரெட்டி சார் இருந்ததால் அவர் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு போன் செய்து ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டோம்…. இப்போதும் ரெட்டி சாரும் என் கூட தான் இருக்கிறார்…”

ஆனந்தின் அதிர்ச்சி இருமடங்காகியது.

“ஒரு நிமிஷம் இருங்கள். ரெட்டி சார் பேசுகிறார்” என்றாள் திருமதி ஜெயின்.

செல் போன் கை மாறியது. “ஹலோ ஆனந்த் நான் ரெட்டி பேசுகிறேன்”

ஆனந்த் தன்னை சுதாரித்துக் கொண்டான். அக்‌ஷய் அந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான். "ஒன்றுமே தெரியாதவன் போல பேசி அவனிடம் ஏதாவது தகவல் கறக்க முடிகிறதா என்று பார்” என்று சைகையுடன் வாய் அசைத்துச் சொன்னான்.

ஆனந்த் தலையசைத்தான். “சார் திடீரென்று ஜெயின் சாரிற்கு என்ன ஆயிற்று?”

“தெரியவில்லை ஆனந்த். என்னிடம் உன்னைப் பற்றியும், உன் தம்பியைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். உங்களுக்கு வந்திருக்கிற ஆபத்தைப் பற்றி சொன்னவர் எப்படியாவது உங்களுக்கு உதவ வேண்டும் என்று எல்லாம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார். பேசப் பேச அப்படியே சாய்ந்து விட்டார்”

“டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள் சார்?”

“இன்னும் எந்தப் பெரிய டாக்டரும் பேசக் கிடைக்கவில்லை. ஐசியூவிற்கு வெளியில் தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் ஆனந்த்… நீ இப்போது எங்கே இருக்கிறாய்?”

அவர் கேள்வி அவன் காதில் அபாயச் சங்கு ஊதியது. அவர் கேட்டது எங்கே தங்கி இருக்கிறாய் என்ற அர்த்தத்தில் என்றாலும் அது புரியாதவன் போல் ஆனந்த் சொன்னான். “வெளியில் இருந்து தான் பேசுகிறேன் சார்….”

“உன்னை நான் நேரில் பார்த்து நிறைய பேச வேண்டும் ஆனந்த். ஜெயின் சாருக்கு இப்படி ஆகி விட்டாலும் அவர் நினைத்த உதவிகளை நான் கண்டிப்பாக என்னால் முடிந்த வரையில் செய்வேன். வரும் போது உன் தம்பியையும் அழைத்துக் கொண்டு வா. அது ரகசியமாய் இருக்கும்படி நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் சேர்ந்து பேசி முடிவெடுப்போம்”

ஆனந்த் அக்‌ஷயைப் பார்த்துக் கொண்டே சொன்னான். “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சார்….. ஆனால் உங்களுக்கு ஏன் வீண் சிரமம் சார்?”

“இதில் சிரமம் எல்லாம் ஒன்றுமில்லை ஆனந்த். இதைக் கூட என்னால் செய்ய முடியவில்லை என்றால் நான் இன்னும் சிபிஐயில் இருந்து என்ன பயன் சொல் பார்க்கலாம்”

“ஆனால் நாங்கள் மோதுகிற இடம் பெரிய இடம் போல் தெரிகிறது. தேவையில்லாமல் உங்களை இதில் இழுத்து கஷ்டப்படுத்த மனம் வரவில்லை…. முதலிலேயே உங்களுக்கு ஒரு கசப்பான அனுபவம் இருக்கிறது”

“அது பரவாயில்லை. அதற்கு ஒரு பதிலடி தரத்தான் இப்போது நான் உதவ முன் வந்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளேன்”

“நன்றி சார். என் தம்பி இப்போது வெளியே போயிருக்கிறான் சார். அவன் வந்த பிறகு அவனிடம் கலந்தாலோசித்து உங்களிடம் பேசுகிறேன்”

“சரி ஆனந்த்.. ஆனால் சீக்கிரமே பேசு. நாம் இனியும் காலம் தாழ்த்துவது சரியல்ல”

ஆனந்த் மறுபடி நன்றி சொல்லி இணைப்பைத் துண்டித்து விட்டு தம்பியிடம் சொன்னான். “அக்‌ஷய். ஜெயின் சார் திடகாத்திரமாய் இருந்தவர். அனாவசியமாய் டென்ஷன் எடுத்துக் கொள்ளும் பேர்வழியும் அல்ல. தினமும் யோகா செய்பவர். அவர் இப்படி கோமாவில் போகக் காரணம் ஏதோ ஒரு விதத்தில் இந்த ரெட்டி தான் என்று எனக்கும் சந்தேகம் வருகிறது அக்‌ஷய். அதுவும் அவர் நம் இரண்டு பேரையும் நேரில் வரச் சொன்ன விதம், அவர் சொன்ன விதத்தில் இருந்த அவசரம் என் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.. ஆனால் இப்போதும் கூட அவர் மாதிரி ஒரு ஆள் நேர்மாறாக மாறுவார் என்பதை ஜீரணிக்கவும் என் மனதின் ஒரு பகுதிக்கு கஷ்டமாகத் தான் இருக்கிறது…”

அக்‌ஷய் சொன்னான். “நல்லவன் நல்லவனாகவே கடைசி வரை இருந்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், கெட்டவன் கடைசி வரை கெட்டவனாகவே இருந்து விடுவான் என்று சந்தேகப்படுவதும் முட்டாள்தனம்”

தம்பியின் வார்த்தைகளில் இருந்த யதார்த்த உண்மையை அங்கீகரித்தவனாகி தலையசைத்த ஆனந்த் கேட்டான். “எனக்குத் தெரிந்தவரை ஒரு கணத்தில் ஒரு மனிதனைக் கோமா நிலைக்குக் கொண்டு போக முடிந்த ஒரே ஆள் நீ தான். இந்த ரெட்டியும் அப்படித்தான் செய்து ஜெயினை கோமா நிலைக்கு அனுப்பி இருப்பாரா?”

“அந்த ஆள் எல்லாம் அதைக் கற்றுக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை….” என்று சொல்லச் சொல்ல அக்‌ஷயின் தலைக்குள்ளே ஏதோ பொறி தட்டியது. யாரோ எங்கேயோ சொன்ன வாசகங்கள் தெளிவாகக் கேட்டன. “…இந்த மருந்தை நம் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி நான்கு வருட பரிசோதனைக்குப் பிறகு வெற்றிகரமாக கண்டுபிடித்து இருக்கிறார். இது சாப்பிட்ட ஐந்து நிமிடங்களிலேயே ஒருவனை கோமாவுக்கு கொண்டு போய் விட்டு விடும். இதில் ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால் அரை மணி நேரம் கழித்து உடலை எந்த பரிசோதனை செய்தாலும் இந்த மருந்தின் தடயமே உடலில் இருக்காது….. சாப்பிட்ட ஆள் வருடக்கணக்கில் கோமாவில் இருப்பானே ஒழிய அவன் குணமாவது முடியாது…. ”

அந்த வாசகங்களைத் தொடர்ந்து பல கைதட்டல்கள் கேட்டன.

அக்‌ஷய் கண்களை மூடிக் கொண்டு அசையாமல் நின்றான். தம்பி திடீரென்று வேறு உலகிற்கே போய் விட்டது போலத் தோன்றவே ஆனந்த் திகைப்போடு அவனைப் பார்த்தான்.

(தொடரும்)

About The Author

5 Comments

  1. mini

    Ganesan sir, konjam update alava increase panungalen. kanna mudi kanna thiriakirathu kulla mudinchu poi viduthu. Pavam Jainku en ippadi?

  2. sakthi

    “நல்லவன் நல்லவனாகவே கடைசி வரை இருந்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், கெட்டவன் கடைசி வரை கெட்டவனாகவே இருந்து விடுவான் என்று சந்தேகப்படுவதும் முட்டாள்தனம்”

  3. N Ganeshan

    இன்னும் இரண்டு வாரங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கண்டிப்பாக அத்தியாயத்தில் அதிகமாக எழுதுகிறேன். தங்களது தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி.

  4. srividya

    ரொம்ப நன்றி . கொஞம் அதிகமா எழுதனும். கதை ரொம்ப அருமை

Comments are closed.