அமானுஷ்யன்-95

ராஜாராம் ரெட்டியின் செல் போன் சமய சந்தர்ப்பம் தெரியாமல் இசைத்தது. இந்த நேரத்தில் யார் என்று யோசித்தபடி செல்லை எடுத்துப் பார்த்தார். இரண்டு நிமிஷங்களுக்கு முன்னால் அவர் அக்‌ஷயின் தாயைக் கடத்த கட்டளை இட்ட வேன்காரன் தான். ‘இவ்வளவு தெளிவாகச் சொன்னோமே இன்னும் என்ன சந்தேகம் இவனுக்கு’ என்று எண்ணியவராக பேசினார். "ஹலோ. என்ன?"

"சார். ஆறேழு கார், வேன்களில் பத்திரிக்கைக்காரர்களும், டிவிக்காரர்களும் எங்களுக்கு முன்னால் அங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் எங்களைக் கடந்தார்கள்…"

ராஜாராம் ரெட்டிக்கு எதுவும் விளங்கவில்லை. "என்ன உளறுகிறாய்?"

"உளறவில்லை சார். நிஜமாகவே தான்… நாங்கள் என்ன செய்யட்டும்?"

"நீங்களும் அவர்களுடனே வந்து கொண்டிருங்கள். உங்கள் வேலையை அவர்கள் கண்ணில் படாமல் செய்ய முடிகிறதா என்று பாருங்கள்"

ராஜாராம் ரெட்டி குழப்பத்துடன் இணைப்பைத் துண்டித்தார். மறுபடி போன் இசைத்தது. அந்த சாலையில் அவர் நிறுத்தியிருந்த இன்னொருவன் அதே செய்தியைச் சொன்னான். தொடர்ந்து மேலும் இரண்டு ஆட்கள் இதையே போன் செய்து சொன்னார்கள். யார் கண்ணிலும் படாமல் மறைந்து இருக்க அவர்களுக்குக் கட்டளையிட்ட ராஜாராம் ரெட்டி உடனடியாக எக்ஸிற்குப் போன் செய்தார்.

"அந்த சைத்தான் இன்னும் உங்கள் பிடியில் தானே இருக்கிறான்?"

"ஆமாம் சார். கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறோம். காரில் அவனுக்கு இரண்டு பக்கமும் இரண்டு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு பிரச்னையும் இல்லை. ஏன் சார் கேட்கிறீர்கள்?"

"பிரச்னை அங்கே இல்லை. இப்போது தான் வந்து கொண்டிருக்கிறது. நிறைய பத்திரிக்கைக்காரர்களும், டிவிக்காரர்களும் இங்கே வந்து கொண்டு இருக்கிறார்களாம். முதலில் அவனைப் பத்திரப்படுத்துங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனைத் தப்பிக்க விடாதீர்கள். அவனை யார் கண்ணிலும் காட்டி விடாதீர்கள்"

எக்ஸ் திகைத்துப் போனார். "அவர்கள் எதற்கு இங்கே வருகிறார்கள்?"

ரெட்டி எரிச்சலுடன் சொன்னார். "அவர்கள் அதை இன்னும் எனக்குத் தெரிவிக்கவில்லை…. முதலில் அந்தக் காரை பின்னால் கொண்டு வந்து இருட்டில் ஜீப்பிற்கும் பின்புறம் நிறுத்துங்கள். நீங்கள் முன்னால் போய் என்ன என்று பாருங்கள்… போலீஸ் ஜீப் பக்கம் யாரும் வந்து விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். நான் யார் கண்ணிலும் பட விரும்பவில்லை." சொன்ன ரெட்டி போலீஸ் ஜீப்பில் ஒரு ஓரத்தில் மறைவாக நகர்ந்து உட்கார்ந்தார்.

போலீஸ் சீருடையிலேயே இருந்த உயர் அதிகாரியான மிஸ்டர் எக்ஸ் கார் டிரைவருக்கு அப்படியே கட்டளை இட்டார். அமானுஷ்யன் முகத்தைப் பார்த்தார். ‘இவன் வேலையாக இருக்குமோ?’ அவன் முகத்தில் சலனமே இல்லை. அமைதியாக இருந்தான். அவனை மேலும் இருவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.

கார் போலீஸ் ஜீப்பையும் கடந்து இருட்டில் மறைந்து நின்றது. மிஸ்டர் எக்ஸ் சிறிது தூரம் முன்னுக்கு வந்து நடுத்தெருவில் நின்று கொண்டார். இரண்டே நிமிடங்களில் அவரை நெருங்கிய வாகனங்கள் நின்றன. அவற்றிலிருந்து தடதடவென்று இறங்கிய பத்திரிக்கையாளர்கள், டிவிக்காரர்களும் அவரை மைக்குகளுடனும், காமிராக்களுடனும் நெருங்கினார்கள்.

"சார் நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?"

"என்ன கேள்விப்பட்டீர்கள்?" எக்ஸிற்கு பதட்டமாக இருந்தது.

சரமாரியாக கேள்விகள் அவரை சூழ்ந்து நின்ற நிருபர்களிடமிருந்து வர ஆரம்பித்தன. "எம்.பி சாந்தகுமார் யாதவிற்கும் நடிகை காமினிக்கும் இன்று அவர் வீட்டில் ரகசியத் திருமணம் அவர் வீட்டில் இன்று அதிகாலையில் நடக்கிறது என்பது உண்மையா?"

"அவர் முன்கூட்டியே பாதுகாப்பிற்காக உங்களை அழைத்து தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்களா?"

"திருமணத்திற்கு இரண்டு பேருடைய குடும்பத்தார்களும் வந்திருக்கிறார்களா? இரண்டு பேர் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடைபெறுகிறதா?"

மிஸ்டர் எக்ஸிற்கு ஒரு விதத்தில் தங்கள் தகிடுதத்தம் தெரிந்து இவர்கள் வந்து விடவில்லை என்று நிம்மதியாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் தலை சுற்றியது. "இது என்ன புதிய தலைவலி"

அதே எண்ணம் தான் ராஜாராம் ரெட்டியின் ஆளான வேன்காரனுக்கும் ஏற்பட்டது. சில வாகனங்கள் அவனை முந்திச் சென்றன. சில பின்னால் வந்து கொண்டிருந்தன. முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஏனோ சற்று இடைவெளி விட்டே போய்க் கொண்டிருந்தன. பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு வாகனம் மட்டும் மிக அருகில் வந்து கொண்டிருந்தாலும் அதன் பின் வந்து கொண்டிருந்த வாகனங்களும் ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டே வந்து கொண்டிருந்தன. ஒரு வேளை ஆனந்த் தன் தாயை அழைத்துக் கொண்டு எதிரில் வந்தாலும் இறங்கி அவன் தாயை அவர்கள் அறியாமல் பிடித்து வேனில் போட்டுக் கொள்ள முடியாது. மேலும் வண்டியைத் திருப்புவதற்கும் இந்த சூழ்நிலையில் முடியாது. அவர்கள் வந்தால் என்ன செய்வதென்று எண்ணுகையில் நிஜமாகவே எதிரே ஆனந்த், சாரதா, வருண் வந்து கொண்டிருந்தார்கள்.

வேன்காரன் தன் சகாக்களைப் பார்த்தான். அவர்கள் அவனைப் பார்த்தார்கள். இதற்குள் எதிரில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அதே இடைவெளியைத் தக்க வைத்துக் கொண்டு நின்றன. வேன்காரனும் தன் வேனை நிறுத்தினான். பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்களும் அப்படியே நின்றன. அந்த வாகனங்களின் விளக்குகள் சொல்லி வைத்தாற் போல அணைக்கப்பட்டன. வேன்காரன் மட்டும் தான் விளக்குகளை அணைக்கவில்லை. வாகனங்களில் இருந்து இறங்கி பல நிருபர்கள் மைக்குகள், காமிராக்களோடு முன்னோக்கி ஓடினார்கள். அந்த நேரத்தில் தான் ஆனந்தும், சாரதாவும், வருணும் அவர்களைக் கடந்தார்கள்.

ராஜாராமிடம் பேசிய வேன்காரன் தலையை வெளியே நீட்டி பார்த்தான். என்ன நடக்கிறது என்பதே அவனுக்கு விளங்கவில்லை. குழப்பத்துடன் அவன் இருக்கையில் ஆனந்தும், சாரதாவும், வருணும் பின்னால் இருந்த இருட்டில் மறைந்தார்கள்.

வேன்காரன் உடனே முடிவெடுத்தான். ஒருவனிடம் முன்னால் போய் என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொன்னான். வேறு மூன்று பேரிடம் ஆனந்தைத் தொடரச் சொன்னான். சந்தர்ப்பம் கிடைக்கையில் அவனை அடித்துப் போட்டு அவன் தாயைப் பிடித்துக் கொண்டு எங்காவது ஒளிந்து நிற்கச் சொன்னான்.

அவன் சொன்னது போல அவர்களும் இறங்கி முன்னுக்கு ஒருவனும், பின்னுக்கு மூன்று பேரும் ஓடினார்கள். பின்னுக்கு ஓடியவர்களில் ஒருவன் முன்னோக்கி வந்து கொண்டிருந்த ஒரு குண்டான நிருபர் மேல் மோதி கீழே விழுந்தான். அந்த நிருபர் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டு முன்னுக்கு சென்றார். எதிர்பாராத இந்த மோதலில் கீழே விழுந்த சகாவை எழுப்பி நிறுத்தி விட்டு அவர்கள் மூவரும் முன்னுக்கு ஓடினார்கள். ஆனால் ஆனந்தோ, அவன் தாயோ, அந்த சிறுவனோ தென்படவில்லை.

"எங்கே போனார்கள்?" என்று ஒருவன் கேட்டான்.

"நிறைய தூரம் போயிருக்க வழியில்லை. ஓரத்தில் எங்காவது ஒளிந்திருக்கிறார்களா என்று பார்" என்றான் இன்னொருவன். சிறிது நேரம் சாலை ஓரத்தில் இருந்த மரங்களின் பின்னால் இருக்கிறார்களா என்று மூவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் கடைசியில் இருந்த கார் ஒன்று வேகமாக வந்த வழியே திரும்பிப் போய்க் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் மிஸ்டர் எக்ஸ் அந்த நிருபர்களை சமாளித்துக் கொண்டு இருந்தார். "….யாரோ உங்களுக்குத் தவறான தகவலைக் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சாந்த குமார் யாதவின் வீட்டில் இப்போது யாருமே இல்லை. அதனால் அவர் இங்கே காமினியை ரகசியத் திருமணம் செய்து கொள்ள வந்திருக்கிறார் என்று சொல்வது வெறும் வதந்தி தானே ஒழிய அதில் உண்மை இல்லை"

ராஜாராம் ரெட்டி இந்த திடீர் அமளி தங்கள் திட்டத்திற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்தார். அவர் பயந்தது போலவே வேன்காரன் போன் செய்து அவர்களைக் காணவில்லை என்றும் கடைசியில் வந்து கொண்டிருந்த ஒரு கார் திரும்பிச் சென்றதைப் பார்த்ததாகவும் சொன்னான்.

ராஜாராம் ரெட்டி உடனடியாக அக்‌ஷய் இருந்த காரில் ஒருவனுக்கு போன் செய்தார். "உடனடியாக காரை கல்லூரிக்குள் எடுத்துச் செல்லுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனை தப்ப விடாதீர்கள். அவன் ஒருவேளை தப்பினால் கடுமையான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இப்போது எதிரே உள்ள கார்கள் சீக்கிரம் முன்னேறி வரும். அவர்கள் அந்த எம்.பி வீடு இருக்கும் குறுக்குத் தெரு தாண்டி வர மாட்டார்கள். ஆனால் அந்தத் தெருக்கு அவர்கள் வருவதற்குள் தெருவைத் தாண்டி கல்லூரிக்குள்ளே போய் பாதுகாப்பாய் இருங்கள். சீக்கிரம்…"

அக்‌ஷய் இருந்த கார் வேகமாக கல்லூரியை நோக்கி முன்னேறியது.

ராஜாராம் ரெட்டி எதற்கும் இருக்கட்டும் என்று அவசரத் தேவைக்கு ஒரு போலீஸ் வேனையே கல்லூரியில் நிறுத்தி வைத்திருந்தார். கூப்பிட்டவுடன் மின்னலாக வந்து சேர வேண்டும் என்ற கட்டளையையும் பிறப்பித்திருந்தார்.
அவர்களுக்குப் போன் செய்தார். "இப்போது நம் கார் ஒன்று கல்லூரிக்கு வரும்.அந்தக் காரை உள்ளே விட்டு காவலுக்கு கல்லூரி வாசலில் இரண்டு போலீஸ்காரர்களை நிறுத்தி விட்டு முன்னுக்கு வாருங்கள். அந்த எம்.பி வீடு இருக்கும் தெருவையும் தாண்டி எந்த மனிதனோ, வாகனமோ கல்லூரியின் பக்கம் சென்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்"

அக்‌ஷய் இருந்த கார் மின்னல் வேகத்தில் கல்லூரிக்குள் நுழைய போலீஸ் வேன் அதே வேகத்தில் வெளியே வந்தது. கல்லூரியின் வெளிக்கதவை சாத்தி விட்டு இரண்டு போலீஸ்காரர்கள் துப்பாக்கியோடு நின்று கொண்டார்கள். போலீஸ் வேன் முன்னேறி எம்.பி வீட்டுத் தெரு அருகே நின்றது. நாலைந்து போலீஸ்காரர்கள் இறங்கி கல்லூரிக்குத் தொடர்ந்து செல்லும் சாலையை மறித்த படி நின்று கொண்டார்கள்.

அதே நேரத்தில் மிஸ்டர் எக்ஸிடம் ஒரு பெண் நிருபர் கேட்டார். "இந்த அகால நேரத்தில் நீங்கள் இங்கே அவர் வீட்டுக்குப் போகும் பாதையில் நின்று கொண்டிருப்பது எதற்கு என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?"

ரெட்டி உடனடியாக எக்ஸிற்கு போன் செய்தார்.

மிஸ்டர் எக்ஸ் "மன்னிக்கவும்.." என்று நிருபர்களிடம் சொல்லி விட்டு செல் போனை எடுத்தார்.

ரெட்டி போனில் தான் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகளைச் சொன்னார். அவர்களை சமாளிக்க என்ன சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லி விட்டுக் கடைசியில் சொன்னார். "எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த வண்டியையும் முன்னேற விடாதீர்கள். ஏற்கெனவே ஆனந்த் அந்தக் கிழவி, பையனைக் கூட்டிக் கொண்டு ஒரு வண்டியில் தப்பிச் சென்று விட்டான்…"

மிஸ்டர் எக்ஸ் செல் போனை திரும்பவும் சட்டைப் பையில் வைத்து விட்டு கைக்குட்டை எடுத்து வழிய ஆரம்பித்த வியர்வையைத் துடைத்துக் கொண்டார். பின் நிருபர்களிடம் சொன்னார். "யாரோ எங்களுக்கு ஒரு தீவிரவாதி ஒளிந்து கொண்டிருப்பதாக போன் செய்ததால் நாங்கள் இங்கே வந்தோம். உங்களுக்கு வந்திருக்கிற இந்த தவறான தகவலைப் பார்த்தால் எங்களுக்கு வந்த அந்த தீவிரவாதி குறித்த தகவலும் பொய்யாய் இருக்க வாய்ப்பிருக்கிறது…."

ஒரு வயதான நிருபர் சக நிருபர்களிடம் சொன்னார். "எதற்கும் எம்.பி யாதவ் வீட்டுக்குப் போய் பார்த்து விட்டால் நமக்கு விஷயம் தெளிவாக விளங்கி விடும்"

மிஸ்டர் எக்ஸ் உறுதியாகச் சொன்னார். "தீவிரவாதி குறித்த அச்சுறுத்தல் கிட்டத்தட்ட இதே இடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதால் எந்த வண்டியும் முன்னேற அனுமதி தர முடியாது. நீங்களும் போகாமல் இருப்பது என்று நினைக்கிறேன்"

மிஸ்டர் எக்ஸ் தெருவின் நடுவில் நின்றதால் வாகனங்களில் அவரைக் கடக்க முடியாது என்பதை உணர்ந்த அவர்கள் மிஸ்டர் எக்ஸையும் கால்நடையாகவே தாண்டியபடியே சொன்னார்கள். "ஒருவேளை தீவிரவாதி இருந்தால் நாங்களே கண்டுபிடித்துத் தருகிறோம். கவலைப்படாதீர்கள். திருமணமானாலும், தீவிரவாதி ஆனாலும் உண்மையை சிறிதே நேரத்தில் கண்டுபிடித்து விடுகிறோம்…"

மிஸ்டர் எக்ஸ் வேறு வழியில்லாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

(தொடரும்)

About The Author

4 Comments

  1. madhu

    Ha..ha.. anand have escaped. Akshay is a great brilliant so obviously he will also can escape.

  2. Minmini

    ரொம்ப பழைய ட்ரிக். இதுக்கு இவ்வளவு பில்டப். 95 எபிசோட்.

Comments are closed.