அமானுஷ்யன்- 97

டிஐஜி கேசவதாஸ் அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் உடையவர். எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து விட்டு மேலோட்டமாய் டிவி செய்திகளை ஐந்து நிமிடம் பார்த்து விட்டு அருகே இருக்கும் மைதானத்தில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடப்பது அவருடைய நீண்ட கால வழக்கம். அன்றும் அப்படித்தான் அதிகாலையில் மேலோட்டமாய் டிவி செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் ஐந்து நிமிடம் பார்ப்பது போய் அது அரை மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்டது. காரணம் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் போலீஸ் அதிகாரியை டிவி செய்தியில் பார்த்தது தான்.

சாந்தகுமார் யாதவ், நடிகை காமினி இருவருக்கிடையே நடக்க இருக்கும் ரகசியத் திருமணத்திற்கு பாதுகாப்பு தரத்தான் போலீஸ் படையே அங்கு கூடி உள்ளதா, இல்லை உண்மையாகவே தீவிரவாதியைப் பிடிக்க அங்கு போலீஸ் கூடியிருக்கிறதா என்ற கேள்வியை நிருபர்கள் எழுப்பி அவரிடம் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார். யாராவது உதவிக்கு வர மாட்டார்களா என்று அடிக்கடி பக்கவாட்டில் பார்த்துக் கொண்டு இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. உண்மையிலேயே அவருக்கு உதவ முடிந்த யாரோ அந்தப் பக்கம் இருக்கக் கூடும் என்றும் கேசவதாஸ் அனுமானித்தார்.

காமிரா கல்லூரிக்குச் செல்லும் வழியை மறித்துக் கொண்டு குறுக்காக நின்ற போலீஸ் வேன் மற்றும் போலீஸ்காரர்களை நிதானமாக வலம் வந்தது. கேசவதாஸிற்கு கோபம் பொங்கி வந்தது. அவருடைய துறையில் அவருக்குக் கீழே இருக்கும் அதிகாரிகள் தாங்களாகவே முடிவு எடுத்து அவருக்குத் தெரிவிக்காமல் இயங்குவது அவருக்கு சிறிதும் பிடிக்கவில்லை. அரசியல்வாதிகளின் கைகளில் பகடைக்காய்களாகவே போலீஸ் துறை பல நேரங்களில் செயல்படுகிறது என்றாலும் அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கே தகவல் தராமல் தான் தோன்றித் தனமாக அடுத்த நிலை அதிகாரிகளை வைத்து அதைச் செய்வது எல்லை மீறிய செயலாக அவர் நினைத்தார். கூடி இருக்கும் போலீஸ் பட்டாளத்தைப் பார்க்கையில் அவருக்கு அது அமானுஷ்யன் விவகாரமாகவே இருக்கும் என்று தோன்றியது. கையாலாகாத கோபத்துடன் நடப்பதை கூர்ந்து கவனித்தார்.

*********

மிஸ்டர் எக்ஸ் சொல்லிக் கொண்டிருந்தார். "….. பாதுகாப்பு காரணங்களாக சில கேள்விகளுக்கு நாங்கள் வெளிப்படையாக பதில் சொல்ல முடியாதவர்களாக இருக்கிறோம். சமூகப் பொறுப்புடன் இங்கிருந்து கலைந்து போகும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டது போல கண்டிப்பாக எம்.பி சாந்த குமார் யாதவ், நடிகை காமினி அவர்களுடைய திருமணம் இங்கு நடைபெறவில்லை. யாரோ உங்களைப் பொய் வதந்தி பரப்பி ஏமாற்றி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்….."

எது தீவிரமாக மறுக்கப்படுகிறதோ அது உண்மையாக இருக்கக்கூடும் என்ற அடிப்படை சந்தேகத்தின் காரணமாக நிருபர்கள் கலைகிற மனநிலையில் இருக்கவில்லை. நேரடி ஒளிபரப்பில் செய்தியைப் பார்த்து விட்டு அது வரை அங்கு வந்திராத நிருபர்கள் பல பத்திரிக்கைகளில் இருந்தும் டிவி சேனல்களில் இருந்தும் மேலும் வந்து குவிய ஆரம்பித்தார்கள்.

லேசாக விடியவும் ஆரம்பித்து விட்டது. அந்தத் தெரு நெடுக நின்று கொண்டிருந்த வாகனங்களைக் கண்ட ராஜாராம் ரெட்டி கோபத்தில் பற்களைக் கடித்தார். அமானுஷ்யனின் தாயையும், டிவிக்காரி மகனையும் தவற விட்டது வேறு அவருடைய கணக்கிடும் திறமைக்கு ஒரு கரும்புள்ளியாக இருந்தது. இனி மற்றவர்கள் கண்களில் இருந்து மறைந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதையும் உணர்ந்த அவர் கடைசியாக வந்த மற்ற நிருபர்களைப் போலவே தானும் கடைசியாக செய்தி அறிந்து என்ன நடக்கிறது என்று பார்த்துப் போக வந்தது போல நடிக்க தீர்மானித்தார்.

மற்றவர்கள் கண்களுக்குப் படுவதற்கு முன் மீண்டும் அமானுஷ்யனுடன் இருப்பவர்களில் ஒருவனுக்குப் போன் செய்தார். "அவன் என்ன செய்கிறான்?"

"உட்கார்ந்து கொண்டிருக்கிறான் சார். ஏதோ தியானம் செய்கிற மாதிரி கண்களை மூடிக்கொண்டிருக்கிறான்."

"அவன் கைகளின் கட்டு சரியாக இருக்கிறதா என்று பார்த்தீர்களா?"

"இருக்கிறது சார். அவன் எங்கள் பிடியில் இருந்து தப்பிப்பது கனவிலும் முடியாத காரியம்"

ராஜாராம் ரெட்டிக்கு அவன் பேச்சில் இருந்த கர்வம் எரிச்சலைத் தந்தது. "அவன் பார்ப்பதைப் போல அல்ல. அழுத்தக்காரன். மும்பையில் பல தாதாக்களுக்கு தண்ணீர் காட்டியவன். அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஏமாந்து விடாதீர்கள். அவன் மீது எப்போதும் உங்கள் இரண்டு கண்ணும் இருக்கட்டும்"

"சரி சார்" என்று சொல்லி விட்டு போனை வைத்த ஆளிற்கு ராஜாராம் ரெட்டியைப் போன்ற பெரிய ஆள் இந்த அளவுக்கு பயம் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அக்‌ஷயைக் கூர்ந்து பார்த்தான். அக்‌ஷய் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த அந்த நிலையிலும் எந்த அசௌகரியத்தையும் வெளிக்காட்டாமல் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான். அவனை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு சுற்றிலும் அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்களில் இருவர் துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டியபடி இருந்தார்கள்.

ராஜாராம் ரெட்டியிடம் பேசியவனிடம் அவனுடைய சகா கேட்டான். "என்னவாம்?"

அவன் அலட்சியமாக ரெட்டி சொன்னதைச் சொல்லி விட்டு சிரித்தான். அவனுடைய சகாவும் சிரித்தான். "இவன் என்ன சூப்பர் மேனா இல்லை தமிழ் சினிமா ஹீரோவா?" கேட்டு மற்றவர்களும் சிரித்தார்கள். அவர்கள் அக்‌ஷயின் பூர்வீகக் கதையை அறியாதவர்கள்.

அக்‌ஷய் அமைதியாக அவர்கள் சிரிப்பைக் கேட்டுக் கொண்டிருந்தான். எதிரியைப் பற்றி முழுமையாக அறியாமல் இருப்பது ஒரு பலவீனம் என்றால் அவனை விட பலம் வாய்ந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே எண்ணிக் கொள்வது அதை விடப் பெரிய பலவீனம். இது போன்ற பலவீனங்கள் ஒரு மனிதனை அஜாக்கிரதையாக இருக்க வைக்கும். அக்‌ஷய் கண்களைத் திறந்தான்.

அவர்கள் எச்சரிக்கையானார்கள். அவர்களுடைய துப்பாக்கிகள் உஷாராயின. அவன் அமைதியாக ஜன்னல் வழியே பார்த்தான். ஜன்னல் வழியே கல்லூரி வாசல் தெரிந்தது. அங்கு இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. முன்பு அங்கிருந்த போலீஸ் வேன் இப்போது இல்லை.

‘அருகில் நான்கு பேர், அறைக்கு வெளியே நான்கு பேர் என்று மொத்தம் எட்டு பேர்’ என்று கணக்கு போட்டான். மறுபடி கண்களை மூடினான். இவர்களை சமாளித்து தப்பிக்க முடியுமா என்று அவன் கவலைப்படவில்லை. அம்மாவையும் வருணையும் ஆனந்த் பத்திரமாகக் கூட்டிக் கொண்டு போயிருப்பானா என்ற கேள்வி தான் மனதில் முக்கியமாக இருந்தது.

அவன் கண்களை மூடியவுடன் கூட சிறிது நேரம் அவர்கள் துப்பாக்கியை அவன் மீது குறி வைத்ததை விலக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவன் சிறிது நேரத்தில் சிலை போல ஆனான். பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே அசையாமல் உட்கார்ந்து இருந்த அவனை அவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ‘என்ன மனிதனிவன்? சாமியார் போல உட்கார்ந்திருக்கிற இந்த ஆளுக்குப் போய் இவ்வளவு பயப்படுகிறார்களே?’ என்று நினைத்தார்கள்.

************

கேசவதாஸைப் போலவே டெல்லி லாட்ஜில் அமர்ந்திருந்த அந்த மனிதனும் டிவி காட்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். மிஸ்டர் எக்ஸ் நிருபர்களிடம் பரிதாபமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவன் முகத்தில் அருவருப்பு படர்ந்தது. எழுந்து போய் மேசை மீது இருந்த மூன்று செல்போன்களில் ஒன்றை எடுத்து எண்களை அழுத்தினான்.

"என்ன நிலவரம்?"

"அந்தக் கிழவியும் பொடியனும் தப்பி விட்டார்கள்"

"அந்த சைத்தான்?"

"அவனை கல்லூரிக்குள் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். ஒரு அறைக்குள் அவனை நான்கு பேர் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள். அறைக்கு வெளியே நான்கு பேர் காவல் இருக்கிறார்கள்…."

"என்ன? அவ்வளவு தானா?"

"அவன் கைகளைக் கட்டி இருக்கிறார்கள் சார். அவனுடைய எல்லா வித்தையும் அவன் கைகளில் தான் இருக்கிறது சார். கைகளைக் கட்டிப் போட்ட பிறகு அவனால் அங்கிருந்து தப்பிக்க முடிகிறது சாதாரணமான விஷயம் இல்லை சார்"

‘அவனும் சாதாரணமான மனிதனில்லை’ என்று நினைத்தவன் அடுத்த சந்தேகத்தைக் கேட்டான். "அந்த நிருபர்கள் கல்லூரிக்குப் போக போலீஸ் விடுமா?"

"என்ன ஆனாலும் அவர்களை விட மாட்டார்கள் போலத் தான் இருக்கிறது. அந்த சிபிஐ ஆள் கறாராய் சொல்லி இருக்கிறார்."

"கல்லூரிக்குப் பின் பக்கம் என்ன இருக்கிறது"

"பாதை எதுவும் இல்லை. பெரிய மதில் சுவருக்குப் பின்னால் சுமார் பதினைந்து ஏக்கரில் பெரிய முள் காடு தான் இருக்கிறது. அந்த முள்காடு தாண்டி ஒரு பெரிய சாக்கடை இருக்கிறது. அது வழியாக யார் வருவதும், போவதும் கஷ்டம் தான் சார்"

அவன் சொன்னதை மனதில் அசை போட்டு அந்த மனிதன் நிறைய யோசித்தான். இந்த எதிர்பாராத சம்பவங்கள் எதில் கொண்டு போய் முடியும் என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை. அவர்களுடைய திட்ட நாள் வேறு மிக அருகில் இருக்கிறது…. தலைமையிடம் தற்போதைய நிலைமையைத் தெரிவிப்பது உசிதம் என்று நினைத்தவனாய் வெளிநாட்டில் இருக்கும் தன் தலைவனுக்கு போன் செய்தான். தற்போதைய நிலைமையை விவரித்தான். கடைசியில் சொன்னான். "….இப்போதும் அவனை உடனடியாகக் கொல்வதை விட்டு விட்டு அவனிடம் ஏதோ உண்மையை வரவழைக்க எண்ணி இருக்கிறார்கள். அதற்குள் அவன் தப்பி விடுவான் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது"

அவன் சொன்னதை எல்லாம் இடைமறிக்காமல் கேட்டு விட்டு மறு பக்கத்தில் இருந்து பதில் வந்தது. "அவனைக் கொல்வதற்கு முன் அவனிடம் இருந்து சில விவரங்களை வரவழைக்கும் அவசியம் இப்போது நமக்கும் வந்திருக்கிறது"

"என்ன சொல்கிறீர்கள்"

"அவன் நம் கூட்டங்களை மட்டுமல்ல நம் ரகசிய இடங்கள் அனைத்தையும் கூட வீடியோ எடுத்திருக்கிறான் என்று தகவல் வந்திருக்கிறது."

"இருக்க வாய்ப்பில்லையே. ஆச்சாரியாவிற்கு அவன் அனுப்பிய எல்லா தகவல்களையும் கம்ப்யூட்டரில் பார்த்து விட்டு தானே அழித்து இருக்கிறோம்"

"அவன் ஆச்சாரியாவிற்கு அனுப்பாத தகவல்களும் அவனிடம் இருக்கின்றன என்கிறார்கள். அந்த தகவல்களை அவன் எங்கேயோ பத்திரமாய் ஒழித்து வைத்திருக்கிறான். அதைக் கண்டுபிடித்து அழித்து விடாவிட்டால் அவனைக் கொன்றாலும் நமக்கு என்றைக்கானாலும் ஆபத்து தான்."

"அப்படியானால் என்ன செய்வது?"

"உடனடியாக மந்திரிக்குத் தகவல் அனுப்புங்கள். அவனை நாமும் விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று சொல்லுங்கள். நம் ஆட்களையும் கூட்டத்தோடு கூட்டமாய் அங்கே அனுப்பி வையுங்கள்…."

"ஒருவேளை இந்த கலாட்டாவில் அவன் தப்பி விடவும் வாய்ப்பு இருக்கிறது"

"இந்த சந்தேகம் எனக்கு முதலிலேயே இருந்ததால் தான் சலீமை நான் முதலிலேயே இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். பத்து நிமிடத்தில் உங்களை வந்து பார்ப்பான். இப்போதைய நிலவரத்தை அவனிடம் சொல்லுங்கள். மீதியை அவன் பார்த்துக் கொள்வான்…"

"சலீம் இப்போது……?"

"டெல்லியில் தான் இருக்கிறான்……"

"ஒரு சர்வதேச வாடகைக் கொலையாளியைப் பயன்படுத்தித் தான் அந்த சைத்தானைக் கொல்ல வேண்டுமா? நம்மில் யாருமே தகுந்த ஆட்கள் இல்லையா?"

"ஆட்கள் இருக்கலாம். ஆனால் நம்மிடம் இப்போது நேரம் அதிகம் இல்லை. இருக்கிற நேரத்தில் வேலையை முடிக்க அவனால் தான் முடியும்"

(தொடரும்)”

About The Author

2 Comments

  1. Priya

    உங்கள் கதை மிக அருமையாக நகர்கிறது. ஒவ்வொரு வார முடிச்சும் மிக தெளிவாக அவிழ்கிறது.

Comments are closed.