அயன் – இசை விமர்சனம்

சூர்யாவிற்கும் ஹாரிஸ் ஜெயராஜிற்கும் எத்தனை பொருத்தம்! இருவரும் இணையும் ஆயிரத்தியெட்டாவது படம் போன்ற உணர்வு! இம்முறை சூர்யாவை இயக்குவது புகழ் பெற்ற கேமராமேன் கே.வி.ஆனந்த். "கனா கண்டேன்" என்ற திரைப்படத்திற்குப் பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. தமன்னா பாட்டியா, பிரபு, கருணாஸ் போன்றவர்கள் சூர்யாவுடன் இணைந்து நடிக்க, இத்திரைப்படம் மார்ச் மாதக் கடைசியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் அயன் என்றால் ‘ப்ரம்மா’ என்று பொருளாம். இது தமிழ்ப் பெயரா, வரி விதிவிலக்கு உண்டா என்றேல்லாம் ஆராய்வது வீண் வேலையாதலால் சூர்யா-ஹாரிஸ் ஜெயராஜ் ‘கெமிஸ்ட்ரி’ எப்படி வேலை செய்திருக்கின்றது என்று பார்ப்போம்.

பள பளக்குற

தாளம் போட வைக்கும் ட்ரம்பெட் இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலை நா.முத்துகுமார் எழுதியுள்ளார். பாடல் முழுவதும் அழகாக வேதாந்தம் பேசியிருக்கின்றார். ஆனால் உற்றுக் கவனித்தால்தான் வரிகள் புரியும். இருந்தும் காதுகளை வாத்தியங்கள் அடைக்கவில்லை! இசையமைப்பாளர் அடக்கியே வாசித்திருக்கிறார். நச்சென பொருந்தியிருக்கின்றது ஹரிஹரனின் குரல்.

நெஞ்சே நெஞ்சே

‘ஆஹா ம்ஹிம்’ என்று மஹதியின் முணுமுணுத்தலோடு ஆரம்பிக்கின்றது ‘நெஞ்சே நெஞ்சே’ என்ற பாடல். ஹரிஷ் ராகவேந்திரா அழகாய் சேர்ந்து கொள்ள, ‘இதோ ஒரு அற்புதமான மெலடி’ என்று இசையமைப்பாளர் சொல்வது போன்ற உணர்வு. அழகான காதல் டூயட். கீழ் ஸ்தாயிலேயே மஹதியின் குரலை மிக அற்புதமாக பயன்படுத்தியிருக்கின்றார் ஹாரிஸ் – நன்று! பாடல் பத்திகளுக்கு நடுவே மட்டும்தான் இசை வருகின்றது – எவ்வளவு நாளாகிவிட்டது இப்படி எல்லாம் பாடல்களைக் கேட்டு! ஏன் என்று சரியாகத் தெரியவில்லை, இவ்வளவு நன்றாக பாட்டு இருப்பதனாலோ என்னவோ, பாடலை வேறெங்கோ இதற்கு முன்பு கேட்டது போலவே இருக்கிறது. ஹாரிஸ்-ஹரிஷ் இணையும் பழைய பாடல்களே நினைவிற்கு வருகின்றன.

ஹனி ஹனி

சயனொரா ஃபிலிப்பின் குரலில் தங்கிலிஷில் ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். ரொம்பவும் வித்தியாசமான முயற்சி. யாரோ எழுதி வைத்து படிப்பது போலவே இருக்கின்றது! போதாதற்கு அங்கங்கு ராப் வேறு! பா.விஜய் பாடலுக்கேற்ப வரிகளைத் தந்திருக்கின்றார். பாடகர் தேவனின் குரலை இப்படி பிரயோகிக்க முடியுமா! புதிதாக இசையமைக்க நினைத்ததற்கே பாராட்டுக்கள்.

விழி மூடி

காதல் ஏக்கத்தில் ஒரு பாடல். இதுதான் பாடலின் ‘மூட்’ என்றால் ஹாரிஸ் உடனே கார்த்திக்கை அழைத்துவிடுவார் போல. இருவருக்கும் அத்தனை பொருத்தம். "அவள் உலக அழகியே", "அஞ்சல" வரிசையில் "விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே" பாடல். நா.முத்துகுமார் தன் வரிகளால் கலக்கியிருக்கின்றார். ஹாரிஸ் ஜெயராஜிற்கு மௌத் ஆர்கன் என்றால் ரொம்பவும் பிரியம் போல – இது போன்ற பாடல்களில் மீண்டும் மீண்டும் பிரயோகிக்கின்றார்! இன்னும் ஒரு அற்புதமான மெலடி. இருந்தும்… இருந்தும்… பாடலை இதற்கு முன்பு எங்கேயோ கேட்டது போலவேதான் இருக்கின்றது!

தூவும் பூமழை!

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆல்பம் என்றால் – கும்பலாய்ப் பாடும் ஒரு பாடல் இருக்க வேண்டுமே! இதோ வந்துவிட்டது – ஹரிசரண், பென்னி தயாள், சின்மயி இணைந்து பாடும் பாடல். சின்மயியா அது!? சமீபகாலமாக விதவிதமான குரல்களில் பாடி அசத்திக் கொண்டிருக்கிறார். தாளம் போடவைக்கும் பீட்ஸ். பா.விஜய் ரொமாண்டிக் வரிகளை அள்ளித் தந்திருக்கிறார்.

சமீப காலங்களில், பாடல்களைக் குறைத்துவிட்டு திரைக்கதையில் இயக்குனர்கள் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றனர். ஒரு திரைப்படம் என்றால் ‘ஆறு பாடல்கள்’ என்று இருந்த நிலை மாறி "ஐந்து பாடல்கள் போதும்!" என்ற நிலைமை வந்துவிட்டது. அந்த ஐந்து பாடல்களை தரத்துடன் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்றார்கள் இசையமைப்பாளர்கள். நல்ல முன்னேற்றம்தான். காதை அடைக்காத இசை, நல்ல மெலடிகள், தாளம் போட வைக்கும் பாடல்கள் என்று ஒரு ஃபார்முலாவுக்கு வந்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்! "இதற்கு முன்பு கேட்டது போலவே இருக்கின்றது" என்ற உணர்வை மட்டும் நீக்க மனிதர் பாடுபட்டால், எங்கேயோ போய்விடுவார்!”

About The Author

3 Comments

  1. benasir

    னெஜ்செ நெஜ்செ சொங் சுப்ரெ இ லிகெ சொ முச்.

  2. jena

    விழி முடி சொங் வெர்ய் வெர்ய் சுபர்.

Comments are closed.