அரசியல் அலசல்

கபட நாடகம்

அரசியல் என்றாலே இப்படி அப்படித்தான் என்று தெரியும். ஆனால் கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது நமது அரசியல் இவ்வளவு தரம் கெட்டுப் போக வேண்டுமா என்று குமுறுகிறது. பா.ஜ.க.விற்கு ஆசை காட்டி, நாடகமாடி, பதவியில் அமர வைத்து, பின்னர் 12 நிபந்தனைகளுக்குப் பணிந்தால்தான் ஆதரவு என்று கவுடாவும் வாக்கு மாறும் சாமியும் சேர்ந்து ஆட்சியை ஏழே நாளில் கவிழ்த்தது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு களங்கம்.

சுரங்க இலாகாதான் அமைச்சரவையில் பெரிய சுரண்டல் இலாகா என்றும் அதனை மதச் சார்பற்ற ஜனதாதளத்துக்கு கொடுக்க மறுத்ததால்தான் ஆட்சிக் கவிழ்ப்பு என்றும் சொல்லப்படுகிறது.

அரியணையில் ஏறி எழே நாட்களில் இறங்கிய எட்யூரப்பாவிற்கு ஒரு இறங்கற்பா அனுப்பலாமோ?  

*****

பாராளுமன்றத் தொடர் தொடங்கும்போதே அதை எப்படியும் நடத்த விடக் கூடாது என்று எதிர்கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அதற்கு ஒரு காரணம் கிடைக்கும். இந்த முறை நந்திகிராம் பிரச்சினை. அத்தி பூத்ததைப்போல ஒரு நாள் சபை ஒத்தி வைக்கப்படாமல் நடக்கும் கன்றாவியைக் காண நேரிட்டது.
ஒரு உறுப்பினர் ஹைதராபாதில் நடந்த இரட்டைக்குண்டு வெடிப்பு பற்றியும் மத்திய மந்திரி சபை எடுத்த நடவடிக்கை பற்றியும் கேட்கிறார். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடிலோ இயந்திரத்தனமாக, இழந்த உயிர்களுக்கு ஒரு அனுதாபமும் இல்லாமல், சட்டம் ஒழுங்கு அந்தந்த மாநிலப் பிரச்சினை என்று சொல்கிறார். சட்டம் ஒழுங்கு சரி, தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அமைச்சரவைக்குப் பொறுப்பே இல்லையா? அரசு பதுகாப்பாக இருக்கும் என்றுதான் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துகிறார்கள்! ஆனால் அடுத்த தேர்தல் வரை அவர்களைத் திரும்பிப் பார்ப்பதேயில்லை!

இதற்குப் பிறகு குழப்பமும் கூச்சலும் தொடர, சபாநாயகர் தொண்டை வறளக் கத்த, பிறகு என்ன, வழக்கம் போல ஒத்திவைப்புதான்!  

*****

நந்திக்ராமில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, ஆனால் ஒன்றே ஒன்று தெரிகிறது, தங்களது தோலைக் காப்பாற்றிக் கொள்ள கம்யூனிஸ்டுகள் அணுசக்தி விஷயத்தில் ‘கண்டுக்காம’ இருக்கும் என்பதும் அதற்காக நந்திக்ராம் விவகாரத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு காங்கிரஸ் தோள் கொடுக்கும் என்ரும் தெரிகிறது. அரசியல் என்றாலே கொடுத்து வாங்குவதுதானே!

*****

தமிழக முதல்வர் கருணாநிதி அங்கீகாரம் பெற்ற எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதுகாப்புத் தரப்படும் என்று சொல்கிறார். உங்களுக்கு ஓட்டுப் போட்டு ஓய்ந்துபோன எங்களுக்கு எப்போது பாதுகப்புக் கொடுப்பீர்கள் என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறார் பொதுஜனம்.

ஒவ்வொரு ஆண்டும் கோவை மாநகர தி.மு.க. சார்பில் இலவசத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இந்த வருடமும் ஸ்டாலினின் பிறந்த நாளன்று 55 ஜோடிகளுக்குத் திருமணம். இதில் விசேஷம், அதற்காக அடிக்கப்பட்ட அழைப்பிதழ். மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என்று 212 பேர் திருமணத்திற்கு நல்வரவை விரும்பியிருந்தார்கள், மொத்தம் 14 பக்கம். மணமக்கள் பெயர்கள் இடம் பெற்றதா தெரியவில்லை.

*****

படப்பையில் உள்ள பாபா கோவிலுக்குச் செல்லுமாறு சரத்குமாருக்கு ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார் – செய்தி.

நாம்:- எப்படியாவது முதல் அமைச்சர் நாற்காலியைப் பிடித்து விட வேண்டும் என்ற ஆசையால் எழுந்த படபடப்பை அடக்குவதற்காக இருக்குமோ?

*****

ரமேஷ் நிரஞ்சன் உத்தராஞ்சல் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர். இப்போது வளையல் கடை வைத்துப் பிழைப்பு நடத்தி வருகிறார்.-செய்தி

நாம்:- கக்கன், காமராஜ் காலம் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். பிழைக்கத் தெரியாதவர்கள் இன்னும் இருக்கத்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது.

*****

சொன்னார்கள்:- அண்டை மாநிலம், பாலாற்றுக்குக் குறுக்கே அணை கட்டினால் நாம் என்ன செய்வது? யுத்தத்துக்குப் போகவா முடியும்? – துரைமுருகன்.

அதானே? முல்லைப் பெரியாறு, காவிரி நீர்ப் பிரச்சினை எல்லாம் இதே போலத்தான். நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? இயற்கையைப் பிரார்த்தித்துக் கொண்டு சும்மா இருப்போமே?

*****

About The Author

1 Comment

  1. nandhitha

    சென்னை தி நகர் கண்ணம்மா பேட்டையில் திரு கக்கன் அவர்களின் சமாதி இருக்கின்றது. எப்பொழுதெல்லாம் அங்கு போக நேர்கிறதோ அப்பொதெல்லாம் ஒரு வணக்கம் போட்டு விட்டு வருவது என் வழக்கம். ஏதோ என்னால் ஆன முடிந்தது.

Comments are closed.