அரசியல் அலசல்

ஆபாசத்துக்கு அளவுகோல் இல்லை. இத்தனை இன்ச் வித்தியாசத்தில்தான் பாவாடை, ஜாக்கெட், ப்ரா அணியவேண்டும். இவ்வளவு தூரம்தான் இடுப்பு காட்டலாம் என்று எதுவும் கிடையாது – அமைச்சர் துரைமுருகன்.

(கலைஞர் டி.வியின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி பார்க்கும்போதே ஆபாசத்தின் அளவுகோலைப் புரிஞ்சுக்கிட்டோம். இப்போ நீங்க சொல்லிட்டீங்க!)

எம்.ஜி.ஆரை வைத்து அரசியல் லாபம் அடைய முயன்றால் அதைத் தடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது – அதிமுக தேர்தல் பிரிவுச் செயலர் பொள்ளாச்சி ஜெயராமன்.

இல்லேன்னா எங்க பொழைப்பு என்னாறது?

காங்கிரஸின் எதிர்காலம்

காங்கிரஸின் எதிர்காலம் பற்றி காந்திஜியின் கடைசி வாழ்நாள் கருத்து. (இந்து நிர்வாகம் வெளியிட்ட ஆங்கில மூல நூலிலிருந்து, ஜ.ப.ர.வின் தமிழாக்கம்.)

காங்கிரஸுக்காக அவர் வரைந்து தந்த தீர்மானம்:

"பிரசார இயந்திரமாகவும், பராளுமன்ற இயக்கமாகவும் காங்கிரஸ் செயல்பட்ட வேலைக்கு இப்போது உபயோகம் இல்லை. இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களுக்கும், பொருளாதார, சமூக, தார்மீக ரீதியான சுதந்திரம் கிடைத்து விட்டது. மத ரீதியான அமைப்புகளுடனும், அரசியல் கட்சிகளுடனும் ஆரோக்கியமற்ற போட்டியில் காங்கிரஸ் கட்சி ஈடுபடக் கூடாது. அ.இ.கா.கா இப்போதுள்ள காங்கிரஸ் அமைப்பைக் கலைத்து விடுவது என்று தீர்மானிக்கிறது. சூழ்நிலைக்கேற்றபடி மாற்றிக் கொள்ளும் அதிகாரத்துடன் விதிகளை அமைத்து லோக் சேவக் சங்கமாக மலர்வது என்று தீர்மானிக்கிறது."

மேலும் காந்திஜி எழுதுவது:

"ஐந்து வயது நிரம்பிய குடிமக்கள் அமைந்த கிராமப் பஞ்சாயத்து அமைய வேண்டும். இரண்டு அடுத்தடுத்த பஞ்சாயத்துகள் ஒரு காரியக் கமிட்டியாக அமைய வேண்டும். அவர்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நூறு பஞ்சாயத்துகள் சேர்ந்து, தங்களுக்குள் இருந்து 50 முதல் நிலைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இத்தகைய பஞ்சாயத்துக்குழுக்களால், ஒட்டு மொத்த இந்தியாவும் இணைக்கப் படும்.

நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஒவ்வொரு தலைவரும், தாமே நூற்ற கதரினாலான ஆடையைத் தரிக்க வேண்டும். அல்லது அகில இந்திய நூற்போர் சங்கம் அங்கீகரித்த நூலினால் தயாரித்த ஆடையை அணியலாம். மது, புகை, போதைப் பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும். இந்துவாக இருந்தால் தீண்டாமையை விலக்க வேண்டும். சர்வ சமய ஒற்றுமை, அனைத்து மதங்கள் மீதும் சமமான மரியாதையும் மதிப்பும் வைத்திருக்க வேண்டும். இனம், சாதி சமயம், பால் வேறுபாடு ஏதும் இன்றி அனைவருக்கும் சம அந்தஸ்தும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும். லோக் சேவா சங்கத்தின் நிர்மாண ஊழியர்கள், கிராம மக்களுடன் இடைவிடாத தொடர்பு வைத்திருக்க வேண்டும். மேலும் மேலும் அதிக அளவிலான தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

லோக் சேவக் சங்க ஊழியர்கள் விவசாயம், கைத்தொழில் மூலமாக கிராமங்கள் தன்னிறைவும், சுய சார்பும் பெறும் வகையில் இயங்க வேண்டும். சுகாதாரப் பயிற்சிகள் அளித்து கிராம மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அறிவுறுத்த வேண்டும். புதிய கல்வி என்ற (காந்தியக் கல்வி) முறையில் கிராமங்களில் கல்வி நடை பெற வேண்டும். கிராம மக்கள் அனைவரும் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளும்படி ஊக்கப் படுத்த வேண்டும்.

லோக் சேவக் சங்கத்தில் நூற்பாளர் சங்கம், கிராமக் கைத்தொழில் சங்கம், ஹிந்துஸ்தானி புதுக்கல்வி சங்கம், ஹரிஜன் சேவக் சங்கம், கோசேவக் சங்கம் இவை இணைந்திருக்கும். ஏழை மக்களின் சல்லிக்காசுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வசூலிக்கப்படும் தொகையே சங்கத்தின் நிதி ஆதாரமாக அமையும்."

(எல்லாம் சரிதான் பாபுஜி, இதனால் எல்லாம் ஓட்டுக் கிடைக்குமா? மந்திரி சபையில் இடம் கிடைக்குமா? காமராஜ் ஆட்சி அமையுமா?)

About The Author

1 Comment

  1. S. Krishnan

    Dear Editor,
    Really interesting topics you touch.
    I am a retired Military Personnel & also a senior citizen. I am interested to share my valuable experiences with small and simple lovely articles. As my Tamil knowledge is not up to writing to magazine standard, I can do it in English. I request you to convey your opinion in this regard through an e-mail message..
    Thank you,
    Regards,
    Krishnan S.
    Coimbatore.

Comments are closed.