அரச கட்டளையும், ஆண்டவன் கட்டளையும்

மஹாராஜாவிடமிருந்து திடீரென்று வந்த அந்த அறிவிப்பு, குடிமக்களெல்லோரையும் ஆச்சர்யத்திலும் பீதியிலும் ஆழ்த்தியது.

எல்லோரையுமா?

இல்லை!. ஒரு சில விதிவிலக்குகள் இருந்தன.

முதன்மையான விதிவிலக்கு, சுவாமி ஜல்சானந்தா.

மன்னருடைய அறிவிப்பைத் தனக்குப் பிரயோஜனப்படுகிற மாதிரி சாதமாக்கிக் கொள்வது எப்படி? என்று யோசித்தார் ஜல்சானந்தா.

தலைநகரின் பிராதான இடங்களிலெல்லாம் கொட்டை எழுத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்த அரச கட்டளையைத் திரும்ப ஒரு முறை வாசித்துப் பார்த்தார்.

இதனால் சகல பிரஜைகளுக்கும் அறிவிப்பது என்னவென்றால், நம்முடைய அரசரை, பிரஜைகள் யாரும் அரசரென்றோ, மன்னரென்றோ, மஹாராஜா என்றோ விளிப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. (மறந்து போய் அந்த வார்த்தைகளை உபயோகிப்பவர்கள், அகழியில் குடியிருக்கிற அசுர முதலைகள் பசியாற பயன்படுத்தப்படுவார்கள்). ஏனென்றால், நம்முடைய மஹாராஜா வெறும் மன்னர் இல்லை. இன்று முதல் அவர்தான் நம்மையெல்லாம் காத்துப் பரிபாலிக்கிற கடவுள். சர்வ வல்லமை படைத்த இறைவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆண்டவன். தெய்வ ஆலயங்களிளெல்லாம் நம்முடைய புதிய கடவுளின் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்பட வேண்டும். வீடுகளில் இருக்கிற போட்டிக் கடவுள் படங்கள் அகற்றப்பட்டு நம்முடைய உண்மையான கடவுளின் படங்கள் மாட்டப்பட்டு வணங்கப்பட வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் பர்மிஷன் வாங்கிக் கொண்டு ஜல்சானந்தா புதிய கடவுளை, அதாவது மாஜி மஹாராஜாவை தரிசிக்கச் சென்றவர், சாஷ்டாங்கமாய் விழுந்தார் "கடவுளின்" காலடியில்.

"இறைவா, என்னை ரட்சித்து ஆட்கொள்ள வேண்டும். இத்தனை நாள் அந்தப் போலிக் கடவுளுக்குப் பணிவிடை செய்து என்னுடைய வாழ் நாளை வீணாக்கிவிட்டேன். இன்றைக்குத்தான் உண்மையான கடவுளை இனங்கண்டு கொண்டேன். என் தெய்வமே, உங்களுக்கு அருகிலிருந்து இறைவழிபாடு செய்ய இந்த அடியேனுக்கு அருள் பாலிக்க வேண்டும்."

மாஜி மஹாராஜாவுக்கு ஜல்சானந்தாவைப் போல ஒரு காவிச்சாமியார் தேவைப்பட்டார், தன்னுடைய கடவுள் தன்மையை மக்களிடம் பரப்புவதற்கு. ஆகவே உடனடியாய் ஜல்சானந்தாவை ஆட்கொண்டார்.

"உன்னுடைய பக்தியை மெச்சினேன் மகனே, எழுந்திரு. என்ன வரம் வேண்டும் கேள். தங்கக் காசுகள் வேண்டுமா? புறம் போக்குக்குப் பட்டா வேண்டுமா? தனியார் மயமாக்கப்படப்போகிற அரசுத் தேர்களுக்கு ரூட் பர்மிட் வேண்டுமா? அந்தப்புரத்தில் என்னுடைய கஸ்டடியில் இருக்கிற 1348 அழகிகளில் ரெண்டு மூணை உனக்குத் தாரை வார்த்துத் தரட்டுமா? என்ன வேண்டும் கேள்."

ஜல்சானந்தா தலையைச் சொறிந்து கொண்டு நின்றார்.

"என் இறைவனே, இதையெல்லாம் எனக்கு அருளுவதற்கு ஓர் அரசன் போதும். ஆண்டவன் தேவையில்லை."

மாஜி மன்னர் தொண்டையைச் செருமிக்கொண்டார்.

"சரி சரி, குதர்க்கமான பேச்சு வேண்டாம். இந்தக் கடவுளிடம் நீ என்ன யாசிக்கிறாய், சொல்."

"கடவுளே, எனக்கு எழுபத்தெட்டு வயதாகிறது. நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் போலிக் கடவுளையே பூஜித்து வந்திருக்கிறேன். எழுபது வருஷம் என்று கொள்ளலாம். இன்னும் எனக்கு ஆயுள் எத்தனை வருஷமோ தெரியாது. உண்மையான கடவுளான தங்களைப் பூஜிக்க எனக்கு ஆயுள் வேண்டும். இன்னும் எண்பது வருஷமாவது தங்களைப் பூஜித்தால்தான் என்னுடைய எழுபது வருஷப் பாவத்துக்குப் பிராயச்சித்தம் கிட்டும். ஆகையால் இன்னும் எண்பது வருஷங்கள் என் ஆயுளை நீட்டித்துத் தந்தருள வேண்டும். அதாவது, 158 வயதுக்கு முன்னால் எனக்கு மரணம் நேரக்கூடாது. 158 வருஷம் உயிர் வாழ்ந்து, கின்னஸ் சாதனை நிகழ்த்த ஆண்டவராகிய தாங்கள் எனக்கு அருள் பாலிக்க வேண்டும்."

"ஆண்டவர்" கொஞ்சம் அசந்து போனார்.

இவனை முதலைகளுக்கு ஆகாரமாய் அகழியில் தூக்கிப்போடு என்கிற ஒரே உத்தரவில் விஷயத்தை முடித்து விடலாமா? என்று யோசனை வந்தது. வேண்டாம். மானிடப் பிறவிகளைப் போல தானும் உணர்ச்சி வசப்பட்டு விடக்கூடாது. ஒரு சாதாரண அடியானை சமாளிக்க ஆண்டவனான தன்னால் முடியாதா என்ன?

"சரி பக்தனே, வேறு யாருமாயிருந்தால் இந்தக் கோரிக்கையை நிராகரித்திருப்பேன். ஆயுள் வரம் நான் யாருக்கும் வழங்குவது கிடையாது. நீ காலமெல்லாம் கடவுள் சேவையில் கழிக்கப் பிரியப்படுவதால் உனக்கு ஆயுள் வரம் தருவதைப் பரிசீலிக்கிறேன். இன்று போய் நாளை வா."

"அதோடு ஒரு கொசுறு வரமும் வேண்டும் ஆண்டவரே" என்றார் ஜல்சானந்தா.

வேறு ஏதாவது எக்குத்தப்பாய்க் கேட்டு வைக்கப் போகிறானோ பாவி என்று மாஜி மன்னர் யோசித்தாலும், தன்னுடைய செருக்கை விட்டுக் கொடுக்க மனசில்லாமல் "கேள் பக்தனே" என்று கட்டளையிட்டார்.

"ஒண்ணுமில்லை ஆண்டவரே, முதலைத் தோல் மேல் உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. அகழியில் எக்கச்சக்கமாய்க் கிடக்கிற முதலைகளில் ஒன்றேயொன்றைத் தாங்கள் கசாப்புப் போட்டீர்களானால், எனக்குத் தோல் கிடைக்க வாய்ப்புக் கிட்டும்."

"ஆண்டவருக்கு" அப்பாடா என்றிருந்தது.

இது சிம்ப்பிளான வரம் தான்.

ரெண்டு வரம் கேட்டிருக்கிறான். அதில் பின்னதை இவனுக்கு அருளிவிட்டு முன்னதுக்கு ஏதாவது சால்ஜாப்பு சொல்லி ஏமாற்றிவிடலாம்.

ஜல்சானந்தா ஜாலியாய்க் கிளம்பினார்.

அந்தப்புரத்திலிருக்கிற 1348 பற்றிய சிந்தனையிலேயே இரவைக் கிழித்து விட்டுக் காலையில் எழுந்து அரண்மனைக்குப் புறப்பட்டார்.

நேற்று மன்னரின் கடவுள் போஸ்டர் ஒட்டியிருந்ததன் மேல் வேறொரு போஸ்டர் இன்றைக்கு ஒட்டப் பட்டிருந்தது.

நேற்று கடவுளாய் அவதாரமெடுத்த நம் மஹாராஜா, ராத்திரி மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நள்ளிரவு, மந்திரி சபையின் அவசரக் கூட்டத்தில் முடிவெடுத்தபடி, நம்முடைய “ஒரு நாள் கடவுளின்” பாவ உடல், பகல் 12 மணிக்கு, கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் பசித்திருக்கிற முதலைகளுக்கு உணவாய்ப் போடப்படும். முதலைகள் இரையெடுக்கிற இலவசக் காட்சியைக் காண பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

ஜல்சானந்தாவுக்கு பயங்கர anti climaxஸாய்ப் போய்விட்டது. ஆயுசு வேண்டாம், அந்தப்புரத்து 1348 இல் ரெண்டு மூணு கூட வேண்டாம், தன்னுடைய முதலைத் தோல் ஆசையைக் கூடப் பூர்த்தி செய்யாமல் போய்ச் சேர்ந்துவிட்டானே பாவி என்று “நேற்றைய கடவுளை” சபித்துக் கொண்டிருந்தார் ஜல்சானந்தா. முதலைத் தோல் மேலே உட்கார்ந்து தவம் செய்கிறதெல்லாம் சும்மா ஒரு சால்ஜாப்புதான். உண்மையில், முதலைத் தோலில் லங்கோடு தைத்துப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஜல்சானந்தாவின் தணியாத ஆசை.

12 மணிக்கு முதலைகள் இரையெடுக்கிற இலவசக் காட்சியைக் காணப் போகக்கூடப் பிடிக்கவில்லை.

ஆனால், அடுத்த நாள் காலையில், போஸ்டர் மேல் போஸ்டராய் ஒட்டப்பட்டிருந்த மூணாவது போஸ்டரில் ஜல்சானந்தாவுக்கு நல்ல செய்தி இருந்தது.

நேற்று, மன்னரின் பிணத்தைப் பங்கு போட்டுக் கொண்டு விழுங்கின முதலைகளில் மூன்று, food poinsoningகில் காலமாகிவிட்டன என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம். வீரமரணம் அடைந்த முதலைகளின் தோல் நாளைக் காலை, கோட்டை வாயிலில் ஏலத்தில் விடப்படும். இஷ்டப்பட்டவர்கள் ஏலம் கேட்கலாம்.

(‘நட்சத்திரங்கள் கருப்பு’ மின்னூலில் இருந்து)

About The Author