அரும்பிய கனவு

அமரர் டி.வி. சுவாமிநாதன்
(காலத்தேர் கவிதைத் தொகுப்பிலிருந்து)

காவிரித் தாய்மடி மீதினிலே – தென்றல்
காவியம் வேய்ந்திடும் போதினிலே
கூவிடும் பூங்குயில் பாடகியே – நின்
கூச்சலுக் கேனிந்த லாகிரியோ!

ஆவியைத் தொட்டுப் பிடித்திழுக்கும் – ஏதோ
ஆசையில் நெஞ்சை நிலைகுலைக்கும்;
தாவிச் சுழன்றெழும்; வான்குளத்தில் – வளர்
தாமரைப் பூக்களைக் கொய்து வரும்.

நீலக் கடல்வெளி முக்குளித்தே – மனம்
நீந்திக் களித்துப் பெருந்திரளாய்
கோலச் சுடர் தரும் தாரகையின்
ஒரு கூட்டத்தைப் பற்றி எடுத்து வரும்.

பாலொத்த மேனிச் செழிப்பிருந்தால் – மதி
பௌர்ணமி என்று பெயர் பெறுவாள்;
காலத்துக் கொற்றவன் தேருருளும் – அந்தக்
கட்டழகின் உரு தேய்ந்துவிடும்.

மொட்டுக்குள்ளே மணம் சிறையிருக்கும் – வண்டு
முத்தமிட்டால் விடு பட்டு வரும்;
பட்டிதழ் மேனி சுருங்கி விழும் – அதன்
பக்கத்தில் ஓர் மொட்டு இதழ் விரியும்.

பாயும் மயக்கத்துப் பாதையிலே – சுவைப்
பண் தரும் மந்திர போதையிலே
தோயுண்டு பேரின்ப வேதனையில் – மனத்
தும்பி கிடந்து புரள்கிறது.

வாசல் கதவினைத் தட்டிடுவோம் – அதை
வந்து திறந்திடும் சுந்தரியின்
பாசத்தில் மூழ்கிச் சுகித்திருப்போம் – குயில்
பாட்டில் அரும்பிய திக்கனவு.

காவிரி யாறு துயில்கிறது – தென்றல்
காற்றில் சுகந்தம் கனக்கிறது.
ஓவியம் போல்மதி காய்கிறது – துளி
ஓய்வின்றிக் காலம் சுழல்கிறது.

About The Author