அறிவால் உயர்ந்த சகோதரர்கள்

அறிவால் உயர்ந்த சகோதரர்கள் – முன்பகுதி

"ஐயா! நாங்கள் எந்தக் குற்றம் செய்யவில்லை என்று முன்பே சொன்னோம். ஆகையால், குற்றவாளிகளைக் கேட்பது போல் எங்களைக் கேட்காதீர்கள்" என்று சொன்ன மூத்த சகோதரன் சிவா, "அந்தப் பெட்டியினுள் என்ன இருக்கிறதென்று சொல்கிறேன் கேளுங்கள்! அதில் ஒரு சிறு பந்து போன்ற பொருள் இருக்கிறது" என்றான்.

"அது மாங்கனி" என்று இரண்டாவது சகோதரன் ராமு சொன்னான்.

"இன்னும் பழுக்காத மாங்கனி" என்று கடைசி சகோதரன் சேகர் சொன்னான்.

அவர்கள் சொன்னதைக் கேட்ட நீதிபதி, பெட்டியை அருகே எடுத்து வரும்படி கட்டளையிட்டார். பெட்டி திறக்கப்பட்டது. அதன் உள்ளே எட்டிப் பார்த்த நீதிபதி ஒரு பழுக்காத மாங்கனி இருப்பதைக் கண்டு பிரமித்துப் போய்விட்டார். அவர் அதை வெளியே எடுத்து எல்லோரிடமும் காட்டினார். பிறகு குதிரை, மனைவி என்று எல்லாவற்றையும் தொலைத்து விட்டு வழக்குத் தொடுத்தவனிடம், இவர்கள் திருடர்கள் அல்லர் என்று நிரூபித்து விட்டார்கள். அதனால் நீ போய் அவர்களை வேறு எங்காவது தேடிப் பார்! நம் காவலர்கள் உனக்கு உதவுவார்கள்” என்று அனுப்பி வைத்தார்.

மூன்று சகோதரர்களின் அறிவுத் திறனையும், மதி நுட்பத்தையும் அங்கிருந்த எல்லோரும் வியந்து போற்றினர். எல்லோருக்கும் முதலாய் நீதிபதி அவர்களைப் புகழ்ந்தார். அவர்கள் நீண்ட தூரம் நடந்து களைத்துப் போய் இருப்பதை அறிந்த அவர், அவர்களுக்குப் பல வகையான உணவுகளை அளித்து உபசரித்தார்.

"நீங்கள் குற்றமற்றவர்கள். உங்கள் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால், போகுமுன் நீங்கள் எல்லாவற்றையும் அவை நடைபெற்ற அதே வரிசையில் கூற வேண்டும். அந்த ஆள் தனது குதிரையை இழந்துவிட்டு அதைத் தேடிக் கொண்டு வந்தான் என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது? அந்தக் குதிரையைப் பற்றி அத்தனை விவரங்களை எப்படி உங்களால் கூற முடிந்தது?" என்று கேட்டார்.

"புழுதியில் பதிந்திருந்த குளம்புத் தடங்கள் அந்தப் பக்கம் ஒரு குதிரை சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தன" என்று சிவா கூறினான். “மேலும், அவன் சுற்றிலும் திரும்பிப் பார்த்தவாறு சென்றதைக் கண்டதும் அவன் எதையோ தேடிச் செல்கிறான் என்பது உடனே எனக்கு விளங்கியது" என்று மேலும் கூறினான்.

"நன்றாகச் சொன்னாய்!" என்று பாராட்டிய நீதிபதி, "குதிரைக்கு இடது கண் தெரியாது என்பதைச் சொன்னது யார்?" என்று கேட்டார்.

ராமு எழுந்து நின்று, "நான்தான் சொன்னேன்" என்றான்.

"அது எப்படித் தெரிந்தது உனக்கு?" என்றார்.

"அந்தப் பாதையில் வலப்பக்கம் இருந்த புற்கள் மட்டுமே மேயப்பட்டிருந்தன. இடது பக்கத்தில் இருந்த புற்கள் தீண்டப்படவில்லை. இதிலிருந்து அந்தக் குதிரைக்கு இடது கண்ணில் பார்வையில்லை என்று ஊகித்துக் கொண்டேன்" என்று ராமு விவரித்துக் கூறினான்.

"சபாஷ்!" என்றார் நீதிபதி. பிறகு "அந்தக் குதிரையில் ஒரு பெண்ணும். குழந்தையும் சென்றார்கள் என்பதை ஊகித்தது யார்?" என்று கேட்டார்.

"நான்தான்" என்றான் சேகர். "ஓரிடத்தில் புழுதியில் குதிரையின் குளம்புத் தடங்களின் அருகில் ஒரு பெண்ணின் காலணித் தடங்களும் சிறு குழந்தையின் கால் தடமும் இருந்தது, எனக்கு அந்தப் பெண்ணுடன் ஒரு குழந்தை இருந்ததைப் புலப்படுத்தின. அங்கிருந்து சென்ற குதிரையின் கால் தடங்கள் பின்னால் சென்ற சிறு சிறு நான்கு கால் தடங்கள் நாய் சென்றதையும் காட்டின" என்றான்.

"நல்லது. இப்பொழுது எனக்கு எல்லாம் புரிகிறது. ஆனால், அந்தப் பெட்டியில் பழுக்காத மாங்கனி இருந்ததை எப்படிக் கண்டுபிடித்தீர்கள். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே!" என்றார் நீதிபதி.

"பெட்டியை இருவர் தூக்கி வந்தபோதும், தூக்கி வந்த முறையிலிருந்தே அது கனமானதல்ல என்பது தெரிந்தது” என்று சிவா கூறினான். மேலும், “அவர்கள் அதைத் தரையில் வைத்தபோது அதிக எடையில்லாத உருண்டையான ஒன்று பெட்டியின் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்குக் கடகடவென உருண்டோடிய சப்தத்தைக் கேட்டேன்" என்றான்.

"பெட்டி இந்த வழக்காடு மன்றத்தின் தோட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்பதிலிருந்தும், அதனுள் உருண்டையான ஒரு பொருள் இருந்தது என்பதிலிருந்தும், அந்தப் பொருள் மாங்கனியாகவே இருக்குமென ஊகித்துக் கொண்டேன்” என்று ராமு கூறினான். “இங்கே தோட்டத்தில் ருமானி வகை மாமரங்களைத் தவிர, வேறு மரங்கள் இல்லாததைக் கவனித்திருந்தேன். எனவேதான் அவ்வாறு ஊகித்தேன்" என்றான்.

"பிரமாதம்!" என்று நீதிபதி புகழ்ந்தார்.

பிறகு, சேகர் பக்கம் திரும்பினார்.

"அந்த மாங்கனி பழுக்காதது என்பது எனக்கு எப்படித் தெரிந்தது என்றுதானே கேட்க வருகிறீர்கள்?" என்ற அவன், "ஆண்டின் இந்தச் சமயத்தில் மாங்கனிகள் பழுக்காமல்தானே இருக்கும். இன்னும் அதற்கான பருவகாலம் வரவில்லையல்லவா?" என்று சொல்ல, மூன்று சகோதரர்களின் கூர்மையான கண்களையும், கவனமான பார்வையையும், மதி நுட்பத்தையும் நீதிபதி வியந்து போற்றினார்.

"பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள்" என்று அவர்களைப் பாராட்டினார். பிறகு, அவர்களுடைய அறிவிற்கும் தகுதிக்கும் ஏற்ற வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மூன்று சகோதரர்களும் மகிழ்ச்சியடைந்தனர். வளமும் நலமும் பெருக நீடூழி வாழ்ந்தனர்!

About The Author

1 Comment

  1. வெற்றியரசன்

    அருமையான கருத்துள்ள கதை. அறிவு செல்வம் தான் சிறந்தது என நிரூபிக்க சிறந்த கதை. ஹேமாவுக்கு பாராட்டு

Comments are closed.