அறிவியலும் தொழிநுட்பமும் (3)

வேதியலில் (chemistry) லிட்மஸ் தாளின் (litmus paper) பயன்பாடு

ஒரு நீர்மம் (liquid) அமிலமா (acid) அல்லது காரமா (alkaline) என்பதைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ள லிட்மஸ் தாள் பயன்படுத்தப்படுகிறது.

தண்ணீரில் கரைக்கப்படும் ஒரு பொருள் அமிலமா அல்லது காரமா என்பதை நிறங்காட்டிகளாகப் (indicators) பயன்படும் சாயங்கள் (dyes) விரைந்து காட்டுகின்றன. இத்தகைய சாயங்களில் ஒன்றுதான் லிட்மஸ் தாள். இந்த சாயத்தில் தோய்க்கப்பெற்ற தாளை, அதாவது லிட்மஸ் தாளை ஒரு திரவத்தினுள் அமிழ்த்தும்போது, அத்திரவம் அமிலமாக இருந்தால், அது சிகப்பாக மாறும்; அத்திரவம் காரமாக இருந்தால், லிட்மஸ் தாள் நீலமாக மாறும்.

லிட்மஸ்க்கான இத்தகைய சாயம் சிகப்புக் கேபேஜ், பீட்ரூட் போன்ற காய்கறிகளிலும் இருப்பதால்தான், அவற்றைச் சமைக்கும்போது அவை நிறம் மாறுகின்றன. குழாய் நீர் கடின நீராக அல்லது காரத் தன்மை கொண்டதாக இருந்தால், காய்கறிகளை அதில் நனைக்கும் போது பழுப்பு கலந்த நீல நிறமாக அவை மாறுவதக் காணலாம்.

தேனீக்களின் கொடுக்குகள் (bee stings) அமிலத் தன்மை உடையவை. காரம் ஒன்றினால் இத்தன்மை ஈடு செய்யப்படும் போது, தேனீக் கொடுக்கினால் கொட்டப்பட்டு அதனால் உண்டான வலி குறைகிறது. எடுத்துக்காட்டாக, சோப்பு காரத் தன்மை உடையது. இதனை உடலில் தேய்க்கும் போது, கொடுக்கினால் கொட்டப்பட்டு ஏற்பட்ட வலி குறைகிறது.

படிகங்களின் (crystals) உருவாக்கம்

கரைக்கப்பட்ட பொருட்களிலிருந்து அல்லது உருகிய பொருட்கள் மெதுவாகக் குளிர்ச்சி அடையும் போது படிக உருவங்கள் தோன்றுகின்றன. கரைசல் (solution) ஆவியாகும் (evaporate) போது அல்லது உருகிய பொருள் குளிர்ச்சி அடையும் போது, அப்பொருளின் அணுக்கள் நெருக்கமாக ஒன்றிணைவதால், படிகம் உண்டாகிறது. இச்செயல் தொடர்ந்து நடைபெறுகையில், படிகம் பெரிதாக மாறுகிறது. சில படிகங்கள் சிக்கல் நிறைந்த அழகான வடிவங்களில் அமைவதுண்டு; அவை மிகவும் வண்ண மயமாக ஒளிரும்.

படிகங்கள் திடப் பொருட்களாகும்; அவற்றின் அணுக்கள் ஒழுங்கான அமைப்புகளில் அமைந்திருக்கும். சரியான நிலைமைகளில் மிகவும் இயற்கைத் தன்மையுடன் உண்டாகும் பொருட்களே படிக வடிவில் அமைகின்றன; ஆனால் இது தெளிவாகப் புலப்படுவதில்லை.
உறைபனித் திவலைகள் (snow flakes) பல்லாயிரக் கணக்கான பனிப் படிகங்களால் உண்டானவை. நுண்ணோக்கியால் அவற்றைப் பார்க்கும் போது, ஒவ்வொன்றும் வேறு வேறு வடிவமைப்பில் இருப்பதைக் காணலாம்.

About The Author