அறிவியலும் தொழில் நுட்பமும் (4)

மின் சுற்றுப் பலகைகள் (circuit boards):

எந்த ஒரு மின் சாதனமும் அது மிகச்சரியாகப் பணியாற்ற, அதற்குத் தேவையான எல்லா சிறு பகுதிகளையும் ஒன்றோடு ஒன்றை இணைப்பதற்கு உரிய மின் இணைப்புகள் தேவை. ஒரு காலத்தில் இந்த மின் இணைப்புகள், தந்திகளைச் (wires) சூட்டுக்கோலால் பற்ற வைத்து (soldering) உருவாக்க்கப்பட்டன. இப்போது, இந்தத் தந்திகளுக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட மின் சுற்றுப் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன; இவற்றில் தந்திகளின் இணைப்புகளுக்கான பாதைகள் வரையப்பட்டிருக்கும்.

இந்த வரைபடம் சிறப்பு வகைப் பலகை ஒன்றில் ஒளிப்படம் எடுக்கப்பட்டு மெல்லிய செப்பு உலோகத்தால் (copper) மூடப்படும். வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி மிக மென்மையான செப்புப் படலம் மட்டுமே தங்கி இருக்கும் வகையில் தேவையற்ற செப்பு கரைக்கப்படுவதுடன், இப்படலத்தில் எல்லா உறுப்புகளும் இணைக்கப்படுகின்றன. மின் சுற்றுப் பலகைகள் இலேசானவை, கையடக்கமானவை மற்றும் செலவு குறைவானவை.

மின்னணுச் சுற்றுகளைக் கொண்ட மின்னணுச் சாதனங்கள் மிகச் சிக்கலான செயல்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடியவை. தனி நபர் கணினி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மின் கோபுரங்கள் (pylons):

ஆற்றலை (energy) ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்ல மின்சாரம் (Electricity) ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரியை எரித்து, அதிலிருந்து ஆற்றலை உற்பத்தி செய்து, நம் வீட்டிற்கு மின்சாரம் கொண்டுவரப்படுகிறது. நம் வீடுகளில் பல்வகைச் செயல்பாடுகளுக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது; ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பயணம் செய்யவும் கூட மின்சாரம் பயன்படுகிறது. மிக உயரமான மின் கோபுரங்கள் நாடு முழுதும் நிறுவப்பட்டு சக்தி மிக்க மின் கம்பிகளால் (cables) அவை இணைக்கப்படுகின்றன. இக்கம்பிகளின் வாயிலாக மின் ஆற்றல் நொடிக்கு 250,000 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது; இந்த வேகம் ஏறக்குறைய ஒளியின் வேகத்திற்கு இணையானதாகும்.

மின்விளக்கு (electric bulb) ஒன்றில் மின்னோட்டம் மிக மெல்லிய உலோக இழையின் (metal filament) வாயிலாகச் செல்கிறது. இதனால் அவ்வுலோக இழை வெண்மை நிறத்துடன் வெப்பமடைந்து நமக்கு ஒளி வழங்குகிறது.

About The Author