அலங்காரம் செய்து கொண்டு அழகுக்கு மெருகூட்டலாமா?

காலத்தின் கட்டாயக் கேள்வி!

நாளுக்கு நாள் நவீன நாரீமணிகள் அழகு நிலையங்களுக்கு அடிக்கடி போவது அதிகரித்து விட்டது. கல்லூரி மாணவிகளும், வேலைக்குச் செல்லும்பெண்களும் இளம் இல்லத்தரசிகளும் தங்களை மெருகூட்டிக் கொள்ள இப்படி ஃபேஷியலுக்காகவும் இதர அலங்காரங்களுக்காகவும் போவது மிடில் க்ளாஸ் பட்ஜெட்டை மிகவும் பாதிப்பதால் இதற்குக் குடும்பத்தில் எதிர்ப்பும் பலமாகவே இருக்கிறது.

‘இப்படித் தண்டச்செலவு செய்து அலங்காரம் செய்துகொள்ளாவிட்டால்தான் என்ன’ என்று அங்கலாய்ப்புகள் அதிகமாகி விட்ட இந்தக் காலத்தில் பெண்கள் அலங்காரம் செய்து கொண்டு அழகுக்கு மெருகூட்டலாமா என்ற காலத்தின் கட்டாயக் கேள்வி எழுந்து விட்டது. பதில் தெரிந்துதானே ஆக வேண்டும்!

கணம்தோறும் புதுமை காட்டுவதே அழகு

சௌந்தர்யம் என்றால் என்ன?

கணம் தோறும் கணம் தோறும் புதுமையைக் கொள்வது சௌந்தர்யம். (க்ஷணே க்ஷணே யத்ரவதாமுபைதி) கணம் தோறும் வியப்பு! கணம் தோறும் புதுமை. இதுவே சௌந்தர்யம்! இதை இயற்கை முறையில் எளிமையாக செலவின்றி நீங்களும் செய்து சௌந்தர்யவதி ஆகலாம்.

அலங்காரமா, அலங்கோலமா!

பெரும் தொகையைக் கொடுத்து ப்யூட்டி பார்லருக்கு வரும் இளம் பெண்களைப் பார்க்கும் போது பகீர் என்கிறது. அவர்களின் தாய்க்குலம் உள்ளிட்ட அனைவருக்கும் தான்!

நெற்றியில் திலகமே இல்லை. தொலைக்காட்சித் தொகுப்பாளினிகளின் பெயர்களில் தேவியின் திரு நாமம் தாண்டவமாடினாலும் அவர்கள் அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் நாட்டியப் பேரொளிகள் தாண்டவமாடினாலும் அவர்கள் முகத்தில் திலகம் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது!

நடிகர் திலகம் (சிவாஜி), நடிகையர் திலகம் (சாவித்திரி), மக்கள் திலகம் (எம்.ஜி.ஆர்) என்று நம் மதிப்பிற்குரிய பெரும் கலைஞர்களைத் திலகமாக்கி கௌரவப்படுத்தியதன் காரணம், உடலின் வனப்பிற்கு உயிராக திலகம் என்பதால் தானே!

இந்த திலகத்தை முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் மகாகவி கம்பனே! சீதையை ‘வனிதையர் திலகம்’ என்று வர்ணித்து (சுந்தரகாண்டம், காட்சிப்படலம் செய்யுள் 69) ‘வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ.. .. ஜனகர் தம் குலத்தையோ, யாதைச் சாற்றுகேன் என்று இவ்வாறு தனக்குத் தானே அனுமன் பேசிக் கொள்ளும் போது இந்த ‘திலகப்’ பட்டம் ஆரம்பமாகி விட்டது! ஆக இந்த திலகம் ஹிந்து நாகரிகத்தில் பெண்களின் உயிர்நாடி என்று ஆகிறது.

மாளவிகாக்னிமித்ரம் என்ற நூலில் மகாகவி காளிதாஸ் புருவங்களுக்கு இடையே இடும் திலகத்தை அற்புதமாக வர்ணிக்கிறார். இந்த திலகத்தில் சித்திரமும் வரையப்படுவது அந்தக் கால வழக்கம். இந்த நெற்றிச் சித்திரம் அழகுக்கு அழகூட்டும். இது மட்டுமல்ல. தமிழ் பெண்கள் தங்கள் மார்பகங்களில் வரையும் சித்திரங்களைத் தொய்யில் என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. காதம்பரியிலும் பெண்களின் இந்த அழகு வர்ணிக்கப்படுகிறது.

பதினாறு அலங்காரங்கள்

நெற்றித் திலகம் மட்டுமல்ல. பதினாறு வித அலங்கார (குண)ங்களைப் பெண்கள் கொண்டிருக்கவேண்டும் என்று நமது நூல்கள் அறிவுரையாகவும் அன்புரையாகவும் கூறுகின்றன.

வல்லபதேவர் எழுதிய சுபாஷிதாவளியில் இந்த பதினாறையும் காணலாம். அவை பின் வருமாறு:

1) ஸ்நானம், 2) அழகிய ஆடை, 3) நெற்றியில் திலகம், 4) கண்ணுக்கு மை, 5) காதணி, 6) மூக்கில் அணியும் அணி, 7) கூந்தல் அலங்காரம், 8) ரவிக்கை, 9) காலில் (சிலம்பு அல்லது வேறு) அணி, 10) உடலுக்கு நறுமணம் (செண்ட்), 11) வளையல், 12) பாதத்தில் செம்பஞ்சுக் குழம்பு, 13) மேகலை (இடுப்பில் அணியும் ஆபரணம்), 14) தாம்பூலம், 15) மோதிரம், 16) இவையும் இதர அலங்காரங்களையும் செய்து கொள்ளும் சாதுரியம்

நெற்றிக்குச் சாந்தும் கண்ணுக்கு மையும் வீட்டுக்கு வீடு செய்து கொண்டது அந்தக் காலம். அதைக் கற்றுத் தந்து கொண்டிருந்த பாட்டிகளே ப்யூட்டி பார்லர்களுக்குப் போவது இந்தக் காலம்! ஆகவே பத்திரிக்கைகளில் வரும் குறிப்புகளை ஊன்றிப் படித்து நிபுணர்களைக் கலந்தாலோசித்து நீங்களே உங்களுக்கு உகந்ததைத் தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொண்டால் வீட்டோரும் மகிழ்வர். குறைந்த செலவில் அனைவரும் அதைப் பயன்படுத்தி வாழ்த்துவர்! உங்கள் பகுதியில் நீங்கள் வனிதையர் திலகம் ஆகி விடலாம்!

பாரதப் பெண்களின் பெருமை

ஒரு சுவையான விஷயம் நம் பெண்மணிகள் அன்றாடம் ஸ்நானம் செய்வது தான்! நல்ல சுகந்த வாசனைப் பொடி சேர்த்த நீரில் காலை ஒரு முறையும், மறுபடியும் மாலை ஒரு முறையும் நம் நாட்டுப் பெண்கள் பல லட்சம் பேர் அன்றாடம் குளித்து உடல் சுகாதாரத்தைப் பேணி வருகின்றனர். நம் வாழ்க்கை முறையில் இது சாதாரணமான ஒன்று. இதில் என்ன சுவையான விஷயம் இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு அடுத்து வரும் விஷயம் கவனத்திற்கு உரியது!

வெள்ளையர் குளியல்

1943-ம் வருடம் வோக் (Vogue) என்ற பெண்களுக்கென்றே பிரத்யேகமாக இங்கிலாந்தில் பிரசுரிக்கப்பட்ட ஃபேஷன் பத்திரிக்கை ஒன்றில் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார். கேள்வி இது தான்:- "பொது மக்கள் எல்லோருமே இப்போது வாரத்திற்கு ஒரு முறை குளிக்க ஆரம்பித்து விட்ட இந்த நிலையில் கனவான்களை (Gentleman) எப்படித்தான் அடையாளம் காண்பதாம்?"

இங்கிலாந்தில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் கனவான்கள் மட்டுமே வாரத்திற்கு ஒரு முறை குளிப்பது வழக்கம்! சாமானியர்கள் குளிப்பதில்லை. குளிக்கக் கூடாது!! அப்போதுதானே வாரந்தோறும் குளிப்பவர்கள் ஜென்டில்மேனாக இருக்க முடியும்!!! பொது மக்களும் வாரத்திற்கு ஒரு முறை குளிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் செல்வச் சீமான்களின் அந்தஸ்து போவதைச் சகிக்க முடியாத ஒருவர் எழுப்பிய கேள்வி தான் இது!

இது போன்ற பல சம்பவங்களை எழுதப் புகுந்தால் ஒரு நூலே எழுத வேண்டி வரும். நமது பாரதப் பெண்களின் பாரம்பரியமிக்க பெருமையைச் சுட்டிக்காட்டி விளக்குவதற்காக!

வித்யாவும், கலையும்

வித்யாவிற்கும் கலைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை நமது நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. பேச்சின் மூலம் உள்ள செயல்கள் அனைத்துமே வித்யா! பேச முடியாத ஊமைகள் கூட செய்ய முடியும் செயல்கள் கலை! இப்படி 64 கலைகள் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக உள்ளன! அவை அனைத்தையும் கற்று நிபுணத்துவம் பெறவேண்டியது பாரதத்தில் பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்!

அன்றாட ஸ்நானம் செய்து, அழகிய ஆடை அணிந்து, நெற்றியில் சித்திரம் கூடிய திலகம் இட்டு, கண்ணுக்கு மை ‘எழுதி’, காதணி பூட்டி, மூக்கணி புனைந்து, கூந்தலைச் சீவி சிங்காரித்து மலர் சூடி, அழகுற ரவிக்கை அணிந்து (குஷ்பு போல டிசைனர் ‘ரவிக்’ இல்லாவிட்டாலும் சிம்பிளாகவாவது!) கால் ஆபரணம் அணிந்து, உடலுக்கு சுகந்த வாசனை சேர்த்து, அழகிய வளையல்களை அணிந்து, பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி, மேகலை அணிந்து, வாய் சிவக்க தாம்பூலம் தரித்து, மோதிர விரலில் மோதிரம் அணிந்து, சாதுரியத்துடன் இதர அலங்கார வகைகளையும் செய்து கொண்டு இல்லத்திற்கு நலம் சேர்ப்பவளே பெண் என்று நம் நூல்கள் பெருமையுறக் கூறுகின்றன! இதை முதற்படியாகக் கொண்டு பின்னர் கலைகளில் நிபுணத்துவம் அடைய முயல்வது நம் பண்டைய பெண்களின் வழக்கம்.

அழகு ஆன்மாவின் குணம். ஆன்மாவிற்கு மெருகூட்டும் போது உடலில் ஒளி பெருகும். குடும்ப பட்ஜெட்டுக்கு உகந்த வீட்டிலேயே தயாரிக்கப்படும் அழகு சாதனங்களைத் தயாரிக்கும் பண்டைய முறைக்குத் திரும்பி அனைத்துப் பெண்களும் அலங்காரம் செய்து கொண்டு அழகுக்கு மெருகூட்டலாமே! 

About The Author

4 Comments

  1. ram

    மிகவும் உன்மையான கருத்துக்கல். இந்த யோசனை பாராட்டுக்கு உரியது. ரொம்ப
    அருமை.

    இப்படிக்கு
    தமிழ் ஆர்வலன்

  2. RAja

    இது நல்ல பக்கம் பெண் அழகா இருந்தா நமக்கு பெருமை.

  3. Girijamanaalan

    அடுத்த பெண்ணிடமிருந்து நல்ல குணங்களைக் கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, காலத்துக்குத் தக்க மாறும் ஆடை அணிகல நாகரீகத்தை பெண்கள் கற்றுக்கொள்கிறார்கள். அந்த நவீன நாகரீக மோகம் தீர இக்கட்டுரை அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். > கிரிஜா மணாளன், திருச்சி.

  4. janet

    இது ரொம்ப யோசிக்கவென்டிய கருது. உனர்ந்து படித்தால் உன்மை புரியும்

Comments are closed.