அவள் சொன்னது (2)

அனுவுக்கும் நளினிக்கும் பத்து வயது வித்தியாசம். அனுவுக்குப் பனிரெண்டு வயதாகும் போது அவளுடைய ஆதர்ச கதாநாயகியாக நளினி இருந்தவள். அப்போது அவர்கள் தில்லியில் இருந்தார்கள். நளினி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தாள். பார்க்க வெடவெடவென்று ரொம்ப அழகாக இருப்பாள். மார்க்சிசம் பேசுவாள். வீட்டிற்கு வரும் அப்பாவின் முதலாளித்துவ நண்பர்களிடம் காரசாரமாக விவாதம் செய்வாள். அவள் பேசும்பொது அனுவின் நெஞ்சு பெருமிதத்தில் விம்மும். நளினியின் மார்க்சிசம் அம்மாவைக் கலவரப்படுத்தவில்லை. ஆனால், அவள் ஒரு பஞ்சாபி பையனுடன் சுற்றுகிறாள் என்ற தகவல் நிலைகுலைய வைத்தது. அனுவுக்கு அப்போது எல்லாமே அறைகுறை ஊகம்தான். முழுவிவரங்கள் தெரியாது. அம்மா ரொம்ப கெட்டிக்காரி, சத்தம் போட்டு வாக்குவாதம் செய்ய மாட்டாள். எல்லோரும் தூங்கினபிறகு நளினியிடம் அமர்ந்து இப்படிப்பட்ட ஆசாரமான வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த பெண், மார்க்சிசம் பேசுவது தவறில்லை. ஆனால், ஒரு பஞ்சாபியை மணம் செய்வது என்பது நடக்க முடியாத காரியம் என்று பல நாட்கள் பக்குவமாக உணர்த்தியதாக அனு பின்னால் தெரிந்து கொண்டாள். கதாநாயகி அம்மா, மடிசஞ்சி பாட்டிக்கு பெப்பே காட்டி விட்டு ரஞ்சித் அகர்வாலைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாள், பஞ்சாபி அத்திம்பேர் குதிரையில் ‘பராத்’ வருவார் என்று அனு கண்ட கனவு ஒரு நாள் சிதைந்தது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் வைஷ்ணவர்களுக்குப் பிறந்தவனும் அமெரிக்காவில் வேலை பார்க்கக் கிளம்பிக் கொண்டிருந்தவனுமான ஸ்ரீவேணுகோபாலனுக்கும் நளினிக்கும் கல்யாணம் என்று ஒருநாள் அவள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியதும் அம்மா சொன்னாள். பெரியவர்கள் பேச்சில் மூக்கை நுழைக்கக் கூடாது என்ற தீவிரக் கட்டுப்பாட்டை மறந்து,"அக்கா சரின்னுட்டாளா?" என்றாள்.

"சரிங்காம என்னடி?" என்று அம்மா அதட்டினாள்.

அனுவுக்கு ஏமாற்றப்பட்டது போல் இருந்தது. நளினியின் அறையில் எட்டிப் பார்த்த போது, நளினி குப்புறப்படுத்துக்கொண்டு ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். அழுதிருப்பாள் என்று தோன்றிற்று.

"அக்கா உனக்குக் கல்யாணமா?" என்றாள் அனு துக்க சேதி கேட்பவள் போல.

"இதப் பார், உனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லே. உன் வேலையைப் பார்த்துண்டு போ" என்று நளினி சீறி விழுந்த போது அனுவின் மனதில் இருந்த அவளுடைய கதாநாயகி ஸ்தானம் போயிற்று. கல்யாணமாகி இரண்டு மூன்று வருஷங்கள் நளினி குழப்பத்தில் தத்தளித்ததாக அவளுக்குச் சந்தேகம். கடைசியில் எப்படி சமாதானம் செய்து கொண்டாள் என்று இதுவரை புரியவில்லை. முன்பிருந்த பிரகாசம் இப்போது முகத்தில் இல்லை. மார்க்சிசத்தை இப்போது குக்கிங் ரேஞ்சுக்குள் முடக்கி விட்டாள் என்று தோன்றிற்று. கலிஃபோர்னியாவில், ஸ்ரீசூர்ணமும் ஜாதிக்கட்டுமாய் மணையில் புருஷனுடன் அமர்ந்து குழந்தைக்கு ஆயுஷோமம் செய்தாள். பிட்ஸ்பர்க் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று முடி இறக்குகிறாள். அசப்பில் அம்மாவைப் போலப் பேசுகிறாள். அவளிடம் போய் இவளுடைய அனுபவங்களை எப்படிச் சொல்வது? ‘ஒன்றேன் தோழி ஒன்றனானே’ என்கிற சங்கப் பாடல் தெரியுமோ? நான் காதலிக்கிறவனைத் தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன்னு தலைவி பாடற குறுந்தொகைப் பாடல் படிச்சிருக்கியா? ஜே.என்.யூ. புதர்களுக்குப் பின்னால் ரஞ்சித் அகர்வாலுடைய மடியில் படுத்தபடி சோஷலிஸக் கனவுகள் கண்டது நினைவிருக்கா என்ற கேள்விகள் கேட்பதே அவளது நிலையில் அநாகரிகமானவை என்று அனு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாள். ‘உனக்கு எப்போ கல்யாணம்’ என்று அனுவிடம் யாரும் இப்போது கேட்பதில்லை. "என்னைக் கேட்காமல் நீ யாரையாவது பாத்தே, நளினி செஞ்ச மாதிரி நான் கழுத்தை நீட்டுவேன்னு எதிர்பார்க்காதே" என்று ஒருமுறை நளினியின் எதிரில் ஊரில் கத்தியதற்குப் பிறகு யாரும் வாயைத் திறப்பதில்லை. வாயைத் திறந்தால், ‘இதோ இவன்தான் என் புருஷன்’ என்று ஒரு வெள்ளையனையோ, கருப்பனையோ, முஸ்லிமையோ, கிறிஸ்தவனையோ அடையாளம் காட்டி விடுவாளோ என்று பயந்தவர்களைப் போல… என்னவோ படிக்கச் சென்று படிப்பு முடிந்ததும் நாட்டிய அரங்கத்தை ஆரம்பித்து வெள்ளைக்காரன் மத்தியில் கொடிகட்டிப் பறக்கிறாள் என்ற தெளிவில்லாத பெருமையில் கல் விழுந்து விடும் என்று தயங்குபவர்கள் போல…
நேரமாகி விட்டது என்ற உணர்வில் அவள் அவசரமாக ஷவரில் குளித்து ஸாண்ட்விச்சைக் கொரித்தபடியே வெளியில் இருக்கும் பனிக்கு வேண்டிய கனமான உடுப்புகளை அணிந்து கொண்டு வெளியே சென்றாள். இன்று அவளுக்காகவே எல்லோரும் ஒத்திகைக்கு வருகிறார்கள் – எங்கெங்கோ பிறந்தவர்கள். என்னென்னவோ பாஷை பேசுபவர்கள் – ஒத்திகை இல்லாவிட்டால் ஞாயிற்றுக்கிழமையின் தனிமை அவளுக்குச் சோர்வைத் தரும் என்று சுரங்க ரயிலின் கதகதப்பில் பயணித்து மீண்டும் பனி போர்த்திய தெருக்களைக் கடந்து அவள் அரங்கத்தை அடைந்த போது அவர்கள் ஒத்திகையைத் துவங்கியிருந்தார்கள். அவளது கற்பனையில் உதித்த நடனம். தென்னிந்திய, அமெரிக்க நடன மரபுகளை இணைத்த பாலே நடனம். எல்லோரும் அவள் வந்ததைக் கூடக் கவனிக்காமல் அதில் ஒன்றியிருந்தார்கள். அவளும் அவனும் அவர்களும், தோழியும் பரத்தையும் பேசுவதை அனுபவித்துக் காட்டினார்கள். 2000 வருஷங்களுக்கு முன் பாடப் பெற்ற பாடல்களாக அவை தெரியவில்லை. நியூயார்க், மன்ஹாட்டன் தெருக்களில் நடக்கக்கூடிய விஷயமாகத் தோன்றிற்று.

"வில்லேன் காலன கழலே,
வொடியோள் மெல்லடி
மேலவும் சிலம்பே,
நல்லோர் யார் சொல்?"

என்று சாலை வழியாகச் செல்லும் காதலர்களை சந்தோஷத்தோடு பார்க்கும் சங்ககாலத்து ஊர் ஜனங்கள் மன்ஹாட்டனிலும் இருந்தார்கள். ஒருநாள் அனுவுடன் படித்த சூசன்தான் அவளிடம் ராமானுஜனின் புத்தகத்தைக் கொண்டு வந்து காட்டினாள். "எத்தனை அற்புதமான காதல் பாட்டுக்கள் பார்" என்றாள். "2000 வருஷத்துக்கு முன் நீ பேசும் மொழியில் எழுதப்பட்டதாம்" என்று அதிசயித்தாள். "ஆச்சரியமாக இருக்கிறது அனு. அப்பொழுது அமெரிக்கா பிறக்கவேயில்லை. எத்தனை நாகரிக முன்னோர்கள் உனக்கு!" ஆங்கிலத்தைப் படித்த பிறகு தமிழ் மூலத்துக்கு ஆலாய்ப் பறந்தது நினைவில் இருக்கிறது. சூசனைப் போலவே அதிசயித்தது, பிறகு பரவசப்பட்டது, அதில் ஒன்றி அனுபவித்தது, மனித சரித்திரத்தின் எந்தக் கட்டத்தில் அற்புத முன்னோர்கள் காணாமல் போனார்கள் என்று பரிதவித்தது, எல்லாம் கடைசியில் நாட்டியத்தில் வெளிப்பட்டது. பரவசப்பட்டதற்குக் காரணம் இருந்தது. காதல் வசப்பட்ட நாட்கள் அவை. ஒவ்வொரு கட்டத்திலும் அவளது மனநிலையை விளக்க ஒரு பாடல் அகப்பட்டது. "அவனா, அவனையா நம்பறே?" என்று சூசன் ஒரு நாள் கேட்டபோது ரோஷத்துடன் அவள் சொன்ன பதிலை 2000 ஆண்டுகளுக்கு முன் ஒருத்தி சொல்லி இருந்தாள்:

நிலத்திலும் பெரிதே!
வானினும் உயர்ந்தன்னு
நீரினும் ஆர்அளவு இன்றே –
…..நாடனொடு நட்பே –

நிலம், வானம், நீர் எல்லாத்தையும் விடப் பெரியது எனது நட்பு என்று குறிஞ்சி மரங்கள் நிறைந்த மலை நாட்டுத் தலைவனுக்காக உடனே நாட்டியம் அமைத்து சூசனுக்கு ஆடிக் காண்பித்து நினைவில் இருக்கிறது. ஆடுகையில் நிஜமாகக் கன்னங்கள் சிவந்தன. காதலனின் அணைப்பின் நினைவில் மார்பகங்கள் பூரித்தன. ‘அபிநயிக்கும் போது ஒவ்வொரு வார்த்தையையும் நீயே உணர்ந்து அனுபவிக்கணும்’ என்று அவளது டான்ஸ் டீச்சர் சென்னையில் சொன்னதற்கு இப்போதுதான் பரிமாணம் சேர்ந்தது. பல நிற தோழிகளுடைய உறவுகளும், உணர்வுகளும், ஏமாற்றங்களும், கோபங்களும் அவற்றில் சங்கமித்த காலிடோஸ்காப்பர்ப் பாடல்கள் விரிந்தன. ஒத்திகை நடக்கும் இரவுகள் நீண்டு கொண்டே போகும்போது அவன் – சுனில் தாஸ் குப்தா – பொறுமையாகக் காத்திருப்பான் – அவளைப் போலவே இங்கே படிக்க வந்தவன் – கலைகளில் ஆர்வம் கொண்டவன் – அத்தனை ரசனை உள்ள ஒரு ஆணை அவள் அதுவரை சந்தித்ததில்லை. முதல் சந்திப்பிலேயே மனசு சுழண்டது. சங்கப் பாடலைப் புரிந்து கொள்வதற்காகத் தமிழ் கற்கச் சித்தமானபோது அது அவள் மீது அவன் கொண்ட காதல் நிரூபணம் என்று தோன்றிற்று. சல்லாபம் மிகுந்த இரவுகளைப் பாதி அவனது தமிழ் உச்சரிப்பைக் கண்டு கிளம்பிய சிரிப்பொலி நிறைக்கும். கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த போது அவன் இரண்டு மாதங்களுக்கு முன் இந்தியாவிற்குக் கிளம்பிச் சென்றான். அதற்குப் பிறகு அவனிடமிருந்து தகவலே இல்லை. இது பச்சைத் துரோகமா வேறு ஏதாவதா என்று எதுவும் விளங்கவில்லை. இந்தியாவில் அவன் தந்த விலாசங்களில் அவன் இல்லை.

"அவனை மறந்துவிடு" என்கிறார்கள் சூசனும் காரலினும். முடியவில்லை. அசட்டுத்தனமாக ‘இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ அவனை வரித்து விட்டது போல மனசு அடம் பிடிக்கிறது. சங்ககாலத்து நாயகியைப் போல அவனுக்குச் சென்ற இடத்தில் ஆபத்தோ என்று பரிதவிக்கிறது. ‘நெஞ்சே, கிளம்பு – அவன் விளங்காத மொழி பேசும் தேசத்தில் இருந்தாலும் கண்டுபிடிப்போம்’ என்று பதைக்கிறது. இதில் ‘ஏண்டி போன் செய்யலே’ என்ற அம்மாவின் கேள்வி நைந்து போகிறது. அம்மாவிடம் இதையெல்லாம் சொல்ல முடியாது.

"ஹாய் அனு!" என்று தோழிகள் அருகில் வந்து நின்றார்கள். ஆளுக்கு இதமாகக் கன்னத்தில் முத்தமிட்டார்கள். மீண்டும் துவங்கியது ஒத்திகை. காதலும் நாணமும் காமமும் புணர்வும் தவிப்பும் கோபமும் பிணைப்பும் காலத்தின் எல்லைகளைக் கடந்து உணர்வுகளில் சங்கமித்தன. களைப்பும் திருப்தியுமாக எல்லோரும் கலையும்போது சூசனும் கூடவே வந்தாள்.

"உன் வீடு வரை வரப் போகிறேன்" என்றாள். "இன்றிரவு உன்னோடு தங்கப் போகிறேன்."

"ஓ கிரேட்!" என்று சந்தோஷத்துடன் அனு சிரித்தாள். "இன்றைக்கு அம்மாவோடு இரவு பேச வேண்டும். ஞாபகப்படுத்து." சுரங்க ரயிலில் பயணித்து பிறகு நடுக்கும் குளிரைக் கடந்து வீடு வந்து சேரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. பனி உறைகளைக் களைந்து கணப்படுப்பின் எதிரில் சற்று காலை நீட்டிய பிறகு அனு சூடாகக் காபியைக் கலந்து கொண்டு வந்தாள்.
சூசன் என்னவோ சொல்லத் தவிக்கிறாள் என்று தோன்றிற்று.

"என்ன சூசன்?" என்றாள் அனு சந்தேகத்துடன்.

"அந்த சுனில் தாஸ் குப்தாவை நீ மறந்துடனும்" என்றாள் சூசன். லேசான கோபத்துடன். "அவன் ஒரு ஏமாத்துக்காரன்".
அனுவுக்கு ரத்தம் சுண்டிற்று.

"எப்படிச் சொல்கிறாய்?"

"அவன் நியூயார்க்கில்தான் இருக்கிறான். இந்தியாவிலிருந்து திரும்பி வந்து ஒரு மாசமாகிறது."

"நான் நம்ப மாட்டேன்."

அடிபட்ட பட்சி போல் குரல் விரிசல் கண்டது. "அதுதான் உண்மை அனு" என்றாள் சூசன் அனுதாபத்துடன். "வேறு ஒருத்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான் ஜூக்ஸன் ஹைட்ஸில்."

"யாரு?"

"அது முக்கியமா?"

"ஆமாம்"

"இந்தியாவிலே கல்யாணம் செய்து கொண்டு வந்திருக்கிறான். அவன் மொழி பேசும் பெண்ணை. வங்காளத்துப் பெண்ணை, உனக்காகத் தமிழ் கற்றுக் கொண்டானே போக்கிரி."

அனு சற்று நேரம் அதிர்ந்த நிலையில் இருந்தாள், நம்ப முடியவில்லை. சுனிலின் உஷ்ணமான மூச்சுக் காற்றை இப்பவும் தேகமெங்கும் உணர முடிந்தது. சூசன் அவளருகில் வந்து நின்று அவளுடைய தோளை அணைத்தாள்.

"அவனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் போல் இருக்கிறது."

ரஞ்சித் அகர்வால் நளினியைப் பற்றி அப்படித்தான் சொல்லியிருப்பான் என்று திடீரென்று அனுவுக்குத் தோன்றிற்று.
"சங்கக் கவிதையில் மனசைப் பறிகொடுத்தவன் போல் நடித்தானே!"

அனுவுக்கு இப்பொழுது சிரிப்பு வந்தது. "நீ சொல்வது சரிதான். அதை அவன் கவிதையாகப் பார்த்தான். வாழ்வாகப் பார்க்கவில்லை. அதற்கும் ஒரு பக்குவம் வேண்டும் சூசன்."

சூசனின் முகத்தில் இன்னும் கோபம் தெரிந்தது. அவளைத் தான் இப்போது சமாதானப்படுத்த வேண்டும் போல் இருந்தது. கடந்த 2000 வருஷங்களில் அது எங்கோ காணாமற் போய்விட்டது என்பதன் சமூகவியல் காரணங்களை இவளுக்கு விளக்க வேண்டும்.
எங்கேயோ ஒரு சர்ச்சிலிருந்து மணியடித்தது. அம்மாவுக்கு டெலிபோன் செய்ய வேண்டும் என்று ஞாபகம் வந்தது. நிதானமாக சென்னை எண்ணைச் சுழற்றியதும் மணி ஒலிக்க அம்மாவின் குரல் கேட்டது. "ஹலோ?"

"அம்மா, அனு பேசறேன். உன் லெட்டர் கிடைச்சது, பாட்டி எப்படிம்மா இருக்கா?"

"சொல்லி வெச்ச மாதிரி போன் பண்றியேடி. இன்னிக்கு விடிகாலமே அவ ஆயுசு முடிஞ்சுது. கடைசி வரைக்கும் தன் ஆசாரத்தை விடாம ஒப்பேத்திண்டா – புண்யவதி"

சூசன் ஓசைப்படுத்தாமல் வெளியேறுவதை அவள் கவனித்தாள். ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தபோது இருளில் நியூயார்க் நகரம் ஜகஜ்ஜோதியாய் தெரிந்தது. அம்மா வேறு யுகத்திலிருந்து பேசுவது போல் இருந்தது.

(வாஸந்தி சிறுகதைகள் தொகுப்பில் இருந்து)

About The Author