ஆசிரியரே! ஆசிரியரே!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும், மாதா பிதா குரு தெய்வம் என்றும் ஆசிரியர்களைப் போற்றுவது நம் மரபு. ஆசிரியர் என்பதற்கு (ஆசு+இரியர்) குற்றங்களைபவர் என்று பொருள். நமக்கு அறிவூட்டி, நல்லொழுக்க வழி காட்டி, குணங் கண்டவிடத்து ஊக்கியும் பாராட்டியும், குற்றமுண்டாயின் கண்டித்தும் தண்டித்தும் நம்மை உருவாக்கிய நல்லாசிரியர்களை மறக்கவே கூடாது.

நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிற ஆசிரியர்களுள் இரண்டாம் வகுப்பில் போதித்த மரியாதைக்குரிய சுப்பிரமணிய அய்யர் ஒருவர். கட்டுக்குடுமியும் கடுக்கனும் கோட்டும் பஞ்சக்கச்சமுமாய் அவரது தோற்றமென் மனக்கண்ணில் தெளிவாகக் காட்சியளிக்கிறது.

வகுப்பில் எழுதுவதற்காக (class work) 40 பக்க நோட் ஒன்றை ஒவ்வொருவரும் அவரிடம் கொடுத்திருந்தோம். எழுதி முடித்த பின்பு வாங்கி வைத்துக் கொள்வார். ஒருநாள் சுவடிகளை அவர் வழங்கியதும் அவரவரும் தேதியைக் குறித்துக்கொண்டிருந்த போது ஓங்கி ஒலித்ததே ஒரு குரல்!

"சார், என் நோட்டில் ஒரு தாள் குறையுது!"

அவ்வளவுதான்! தாள் எண்ணுவதில் அனைவரும் மும்முரமாய் ஈடுபட்டோம். என்ன வியப்பு! ஒரு தாளைக் காணோம்!

"எனக்குங் குறையுது! எனக்குங் குறையுது!" அடுத்தடுத்து ஓலம்!

அப்புறம்? ஆசிரியர் என்ன பதில் சொன்னார்? எவ்வாறு மாணவர்கள் சமாதானம் அடைந்தோம்? நினைவில்லை.

ஆசிரியரின் மகன் வாசுதேவன் எங்களுடன் படித்தான்.

(அவன் பெயரை யாருஞ் சொல்லக்கூடாது, தம்பியென்றுதான் அழைக்க வேண்டும் எனத் தொடக்கத்திலேயே ஆசிரியர் கட்டளையிட்டிருந்தார்.)

ஒருநாள் தற்செயலாய் அவனது சுவடியைப் பார்த்தபோது தாள் வேறுபாட்டைக் கவனித்தேன். பளிச்சென்று வெள்ளைத்தாள், நிறம் மங்கிய பழுப்புத்தாள், மார்ஜின் போட்டது, போடாதது, வரிகளுக்கிடையே வெவ்வேறு அகலம் எனக் கலந்துகட்டி!

என் மூளைக்கு அப்போது விளங்கவில்லை, அந்தத் தாள்களுக்கும் எங்களுக்கும் இருந்த உறவு. மேலும் வளர்ந்த பின்புதான் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தபொழுது புரிந்துகொண்டேன். சுவடிகளிலிருந்து ஒவ்வொரு தாளை எடுத்து மகனுக்கு நோட் தைத்துத் தந்திருக்கிறார்.

சுவடிகளை வீட்டிற்கு எடுத்துப் போய் நூலை அறுத்துவிட்டு ஒரு தாளை உருவி மீண்டும் தைத்து! எவ்வளவு மெனக்கெட்ட வேலை! அவரே செய்தாரா அல்லது மனைவியை ஏவினாரா?

ஒரு சின்னஞ் சிறுவனுக்குத் தாளை எண்ணிப் பார்க்கவேண்டும் என்ற கெட்டிக்காரத்தனம் இருந்ததை எப்போது நினைத்தாலும் வியக்கிறேன். ஆசிரியரிடம் புகார் செய்ய அவனுக்கு எவ்வளவு துணிச்சலும் இருந்திருக்க வேண்டும்!

(அப்போதெல்லாம் ஆசிரியரிடம் பேசவே அச்சம்)

About The Author

5 Comments

  1. கலையரசி

    வகுப்பறை நினைவலைகள் மிகவும் சுவாரசியமாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

  2. Powell

    நமக்கு அறிவூட்டி, நல்லொழுக்க வழி காட்டி, குணங் கண்டவிடத்து ஊக்கியும் பாராட்டியும், குற்றமுண்டாயின் கண்டித்தும் தண்டித்தும் நம்மை உருவாக்கிய நல்லாசிரியர்களை மறக்கவே கூடாது” என்ற வாக்கியம் அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்மொழியாகும்.
    எனக்கு எழுத்தறிவித்த அனைத்து ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைவில் கொள்ளும் இத்தருணத்தில்
    வலிவலம் தேசிகர் பல்தொழில் நுட்பக்கழகத்தில் நான் பயின்ற காலத்தில் எங்கள்
    இயந்திரவியல் பிரிவின் தலைவராக இருந்த திரு. நடராசன் அய்யா அவர்களை மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

  3. S.Gnanasambandan

    பின்னூட்டம் தந்தவர்களுக்கு அகம் நிறை நன்றி.
    சொ.ஞானசம்பந்தன்

  4. DeviRajan

    உலகில் இருக்கும் எல்லா வேலைகளிலும் மிகுந்த மரியாதைக்குரியது ஆசிரியர் வேலைதான். ஆனால் ஒரு சில ஆசிரியர்களால் இதுவும் சமீப காலங்களில் தன் மதிப்பை இழந்து வருகிறது. நம் வாழ்நாளில் மறக்க முடியாத நபர்களில் நாம் பயின்ற ஆசிரியரும் ஒருவராக இருப்பார். இந்தக் கட்டுரையைப் படித்ததும் எல்லோருக்கும் அவரவர்களுடைய பள்ளிக்கூட ஞாபகங்கள் கட்டாயமாக வந்திருக்கும்… எனக்கும் வந்தது… ரொம்ப நன்றி திரு.ஞானசம்பந்தன் சார்.

  5. so.njaanasambanthan

    பாராட்டுக்கு மிக்க நன்றி
    சொ.ஞானசம்பந்தன்

Comments are closed.