ஆதலால் காதல் செய்வீர்! – இசை விமர்சனம்

ஆதலால் காதல் செய்வீர் என ஆலோசனை கூறும் தலைப்புடன் யுவனும் சுசீந்திரனும் கைகோத்துள்ளனர். மொத்தம் நான்கு பாடல்கள். அவற்றுள் மூன்றை யுகபாரதி எழுதியுள்ளார். 

மெல்லச் சிரித்தால் காதல்தான்

காதலைப் பற்றி விதவிதமாகக் காலம் காலமாகக் கவிஞர்கள் எழுதித் தீர்த்தாலும் இன்னும் அதன் ஈர்ப்பு என்னவோ குறையவே இல்லை! அந்த வகையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்கிறது. காதல் செய்தால் என்னவெல்லாம் உணரலாம் எனத் தனக்கே உரிய கவித்துவப் பாணியில் விவரிக்கிறார் யுகபாரதி! யுவனே இதைப் பாடியும் இருக்கிறார். 

"காதலித்துப் பார் நண்பனே! வாழத் தோன்றுமே நாளையும்,
தேவதைகளின் ஆசிதானே காதல் என்று கூறுகின்றேன்" – உணர்த்தும் வரிகள்!

அலைபாயும் நெஞ்சிலே

இதுவும் காதல் பாடல்தான். உதித் நாராயணன் பாடியிருக்கிறார். கேட்க நன்றாக இருந்தாலும் வழக்கம் போல், உதித்தின் தெளிவற்ற உச்சரிப்பு சற்று நெருடலாக உள்ளது! மற்றபடி குறை என ஏதும் இல்லை. இசையும் நன்றாக இருக்கிறது. நாயகனின் மன நிலையைக் காட்டும் விதத்தில், பாடலின் முதல் பாதி நட்பையும் மறு பாதி காதலையும் சொல்கிறது.

தப்புத் தண்டா பண்ணும் வயசு

ஜாவேத் அலி – பவதாரிணி குரல்களில் ஒரு துள்ளலான டூயட்! இசைக் கோர்ப்பு ரசிக்கும் ரகம்! காதலையும் அதில் உள்ள மெலிதான ஈர்ப்பையும் சரியாகக் கலந்து எழுதியிருக்கிறார் கவிஞர்! ஜாவேத் அலியின் வசீகரிக்கும் குரல் கூடுதல் ஈர்ப்பு! உடனடி வெற்றியை இந்தப் பாடலுக்கு எதிர்பார்க்கலாம்.

"உன் மின்னல் இடைக்கொரு
வண்ண உடை என
என்னை உடுத்திவிடு அன்பே!" – இளமை மின்னும் வரிகள்!

பூவும் பூவும் பேசும் நேரம்

இந்த ஒரு பாடலுக்கு மட்டும் பிரான்சிஸ் கிருபா பேனா பிடித்துள்ளார். இதுவும் டூயட் பாடல்தான். ஆனால், வார்த்தைகளில் அவ்வளவு கவிதை நயம்! முந்தைய பாடலிலிருந்து சற்றே மாறுபட்டு, மென்மையாகக் காற்றில் சிறகடிக்கிறது!

"உறங்காத இரவுகள் மேலே
அடங்காத கனவுகளாலே
மிதந்திடும் பனித்துளி போலே
புதிதாய்ப் பிறந்தேன்" – கவித்துவ வரிகள்!

ஆல்பத்தில் வழக்கமான யுவன் தெரியவில்லை என்றாலும் குறை எனச் சொல்ல ஏதும் இல்லை.

‘ஆதலால் காதல் செய்வீர்!’ (இசை) ஆலோசனை எல்லோர் செவியையும் சென்றடையும்!

About The Author