ஆதவன் – இசை விமர்சனம்

எத்தனை நாளாகிவிட்டது ஒரு கே.எஸ்.ரவிகுமாரின் திரைப்படத்தைப் பார்த்து! ,’தசாவதார’த்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, அது கமல் படம்தானே, ரவிகுமார் படம் கிடையாதே! அஜீத்துடன் இணைந்து காட்ஃபாதர் இயக்கிய பிறகு, இவர் சூர்யாவுடன் இணைந்திருக்கும் படம் – ஆதவன். கதாநாயகி நயன்தாரா. சரோஜாதேவியும் இப்படத்தில் நடிக்கிறாராம்! சூர்யாவுக்கு இரண்டு வேடங்கள் என்ற பேச்சு வேறு. சரி சரி.. விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்தைத் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று நினைப்போரை மனதில் கொண்டு கொஞ்சம் சஸ்பென்ஸ் விட்டு வைப்போம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் சென்ற மாதம் வெளிவந்த பாடல்களைக் கேட்போம்.

அன்பே மனம்

பாடலெங்கும் ஹாரிஸ் ஜெயராஜின் முத்திரை தெரிகிறது – அதாவது கேட்கிறது! ஆனால் இதே பாட்டை இவரின் இசையிலேயே வேறெங்கோ கேட்டது போலவே இருக்கிறது. பா.விஜயின் வரிகளில் காதலன்-காதலி இருவரும் துள்ளிக் குதிக்கும் கலாட்டா பாடல். பாடியிருப்பவர்கள் கார்த்திக் மற்றும் ஹரிணி. ஆங்காங்கே ராப் கொடுத்திருப்பவர்கள் பர்ன் மற்றும் மாயா. வெறும் ட்ரம்ஸ் – சிறுவர்கள் சொல்லும் ரைம்ஸ் போன்ற ட்யூன். அடுத்த பாடலைக் கேட்கலாமே!

ஏனோ ஏனோ பனித்துளி

இன்னும் ஒரு அக்மார்க் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல். கவிஞர் தாமரையின் காதல் வரிகளை சுதா ரகுநாதனுடன் இணைந்து ஷாஹில் ஹதாவும் ஆண்ட்ரியாவும் பாடியிருக்கிறார்கள். கிடாரையும் ட்ரம்ஸையும் மட்டும் நம்பி இசை அமைத்திருக்கிறார். இந்தப் பாட்டிலும் நிறைய ராப் உண்டு. சுதா ரகுநாதனையும் இப்படி எல்லாம் பாட வைத்துவிட்டார்களே!! ஐயகோ! ஆண்ட்ரியாவின் உச்சரிப்பு சகிக்கவில்லை. அவருடன் ஒப்பிடும் போது ஷாஹில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான். நெக்ஸ்ட் ப்ளீஸ்!

டமக்கு டமக்கு

சமீபத்தில் வந்த ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில், ,’மௌத் ஆர்கன்’ ஆரம்பம் அதிகம். சில பாடல்களில், அது மெட்டோடு ஒத்துப் போனாலும், இந்தப் பாடலில் சகிக்கவில்லை. அயன் படத்தின் பாடல்களை எல்லாம் கலந்து மிக்ஸியில் போட்டு அடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பாடல்! நா.முத்துகுமார் என்ன எழுதியிருக்கின்றார் என்று காது கொடுத்து கேட்கக் கூடத் தோன்றவில்லை. ஆங்காங்கு அட்வைஸ் செய்து, ஆங்காங்கு தத்துவம் பேசி, பென்னி தயாள் இப்பாடலைப் பாடியிருக்கின்றார். பாட்டு முடியும் சமயத்தில், ‘இது ஏதோ ஒரு மாடர்ன் டப்பாங்குத்து போல’ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

வாராயோ

பாடலின் ஆரம்பத்தில் வரும் பியோனோ நோட்ஸ் கேட்கும் பொழுதே தெரிந்து விடுகின்றது – இது ஒரு மெலடிதான் என்று! அதன் பிறகு கிடாரும் ஸாக்ஸும் சேர்ந்து கொள்கின்றன. கபிலனின் வரிகளில் அமைந்த இந்த மென்மையான காதல் பாடலை சின்மயியும் உன்னிகிருஷ்ணனும் பாடியிருக்கிறார்கள். தமிழ் நன்கறிந்த பாடகர்கள் பாடும்பொழுது கேட்பதற்கு எத்தனை அழகாக இருக்கின்றது!! ஹாரிஸ் இந்தப் பாடலுக்குக் கூட ராப்பை விட்டுவைக்கவில்லை. ஆங்காங்கு புரியாத வார்த்தைகள் வருகின்றன – குரல் மேகா! சரணங்களுக்கு நடுவில் வரும் வயலின் இசை மனதில் நிற்கிறது. கடைசியில் வரும் சுருதி மாற்றத்தைத் தவிர்த்திருக்கலாம்.

தேகோ தேகோ

இப்பாடலில் யாரோ இருவர் ஏதோ போட்டி போடுகின்றார்கள் போல. ஒருவர் தாம்-தூம் என்று பாட, இன்னொருவர் மென்மையான குரலில் பாடுகின்றார். ரொம்பவும் வித்தியாசமான பாடல். அதைவிட வித்தியாசமான வரிகள். தேகோ, யார்க்கோ, மார்க்கோ என்று ஹிந்தி-தமிழ்-ஆங்கிலம் யாருக்கு எதுகை எழுத வரும்! நம் வாலிதான். சுவி சுரேஷ், சந்தியா, ஸ்ரீசரண் மூவரும் இணைந்து பாடியிருக்கின்றார்கள். ட்ரம்ஸ்களுக்கு இடையே ஆங்காங்கே சிதார் இசையைக் கூட கேட்கலாம். ரொம்பவும் வித்தியாசமான முயற்சி.

மாசி மாசி

என்ன பாஷையோ இதெல்லாம்.. ச்சே! பாடலின் முதல் ஒரு நிமிடத்திற்கு என்ன பாடுகின்றார்கள் என்றே புரியவில்லை. அதன் பிறகு நமக்கு நன்கு பரிச்சயமான மனோவின் குரல். கேட்டு எத்தனை நாளாகிவிட்டது! பெண் குரல் மேகா! மெட்டு ஒன்றும் புதிதல்ல. ஏதோ காட்டுவாசிகள் பாடும் பாடல் போல இருக்கின்றது. இப்பாடலையும் எழுதியிருப்பவர் வாலிதான். குறிப்பாக வேறேதும் சொல்வதற்கில்லை.

சில பாடல்களைக் கேட்டால் ஹாரிஸ் தன் பழைய மெட்டுகளிலிருந்தே சுட்டிருப்பது போலத் தெரிகிறது. ஒன்றிரண்டு பாடல்கள் வித்தியாசமாக இருக்கின்றன. அதைத் தவிர, ஹாரிஸ் ஜெயராஜ் கொஞ்சம் ஏமாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். வாரணம் ஆயிரம், அயன் என்று சூரியாவிற்கு இரண்டு ஹிட் ஆல்பங்களைத் தந்துவிட்டதால், ஒரு வேளை எதிர்பார்ப்பு கூடிவிட்டதோ! யார் கண்டார் – இப்பாடல்களையே தியேட்டரில் பார்த்தால் நம்மை மெய்மறக்கச் செய்யுமோ என்னவோ!!

About The Author

1 Comment

Comments are closed.