ஆலமரம்

நெஞ்சாங்கூடு காட்டி
குத்தவச்ச பொக்கை
வீரர்களின் ஆடுபுலி ஆட்டம்
மாராப்பு விலகியும்
கவர்ச்சி பெறாத
அழகிக் கிழவிகளின் தாயம்
அத்தனைச் சாதி பாத்திரத்தையும்
உள் வாங்கி சுரைநீர்
நிரப்பும் பாட்டன் காலத்து
பொதுக் கிணறு.

ஆடுகளைக் காட்டில் கட்டவிழ்த்து
குட்டித் தூக்கமிடும் ஆயன்
ஊர்க் குழந்தை அத்தனையையும்
களிப்புக் கொள்ளச் செய்யும்
விழுதுத் தூளிகள்
எச்சங்களைத் தரையிலோ
மனிதத் தலையிலோ இட்டு
சபிக்கப்படும் பறவைகள்
எல்லாம் தொலைந்து போனது
ஒரு ஆலமரத்தின் கொலையில்.

About The Author

3 Comments

  1. கீதா

    ஒரு மரத்தின் கொலை, அதன்மீது கருணை கொண்ட மனத்தில் உருவாக்கும் துக்கத்தை இதனிலும் மேலான வரிகளால் இயம்பமுடியாது. கவிதை சொல்லும் கரு காலத்துக்கும் ஏற்கப்படவேண்டிய நிதர்சனம். பாராட்டுகள்.

  2. சோமா

    கீதா அவர்களுக்கு நன்றி. மேலும் எழுத ஊக்கம் கொள்கிறேன்.

  3. Priya

    அருமயான கவிதை…படித்ததும் மனதில் எஙொ ஒரு வலி….

Comments are closed.