ஆள் பாதி ஆடை பாதி

DESIGUAL  என்ற ஸ்பானிய ஆடை விற்பனை நிறுவனத்தினருக்கு, ‘ஆள் பாதி ஆடை பாதி’ எனும் தமிழ்ப் பழமொழி தெரிந்திருக்கும் போல. ஆண்டுதோறும் புத்தாண்டுப் பிறப்புக்குப் பின் வரும் நாட்களில் இவர்கள் ‘ஆள் பாதி ஆடை பாதி’ முறையில் தமது ஆடைகளை விற்பனை செய்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.

அதாவது, ஆடை வாங்க வருபவர்கள், அரைகுறையாக உடுத்தி வர வேண்டும் என்பதுதான் இவர்கள் விதிக்கும் நிபந்தனை. இப்படி, முதலில் வரும் 100 பேருக்கு இவர்கள் அளிக்கும் சலுகை என்ன தெரியுமா? வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து வருபவர்கள், கடைக்குள் நுழைந்து அனுமதிச் சீட்டைப் பெற்றதும், தமக்கு விருப்பமான ஆடைகளை அணிந்து கொண்டு முழுமையாக வெளியே செல்லலாம்.

இந்த அரிய வாய்ப்பை விட்டு வைப்பார்களா இளவட்டங்கள்?

இந்த ஆண்டு இந்த விநோத நிகழ்வு அரங்கேறியது இத்தாலி நகரங்களான ரோம், ரியூரின் ஆகியவற்றில்! நிகழ்ந்தது கடந்த சனிக்கிழமை (04.01.14). விற்பனை நிலையம் காலை 8.00 மணிக்குத்தான் திறக்கப்படும். ஆனால், பந்தியில் முந்துபவர்களுக்குத்தான் இலை போடப்படும். அதனால், விடிகாலை 2.00 மணிக்கே காத்திருப்பு தொடங்கி விட்டது. (முன்பெல்லாம் ஆப்பிள் போன்களுக்கு விடிய விடியக் காத்திருந்தது போல).

ஆனால், விடிகாலை 3 மணிக்கு வந்தவர்களால் கூட ஆடைகளை இலவசமாக வாங்க முடியவில்லை. காரணம், காத்திருந்தவர்கள் எண்ணிக்கை விடிகாலை 3.00 மணிக்குள் நூற்றைத் தாண்டிவிட்டது. ஏனையோருக்கு, பல உடைகள் பாதி விலையில் விற்பனை செய்யப்பட்டன என்பது அவர்கள் மனதுக்கு ஆறுதல்.

இலண்டன் நகரிலும் இந்த நிறுவனம், இதே முறையில் தனது வாடிக்கையாளர்களைக் கவரத் தவறவில்லை.

இலண்டன் நகரில், விற்பனைக்கு முதல் நாள் இரவு 11.00 மணிக்கே காத்திருப்பு தொடங்கி விட்டது என்கிறது மெயில் ஆங்கில இதழ். இங்கு பிரபலமான REGENT`S STREET என்ற தெருவில் உள்ள இந்த விற்பனை நிலையத்தில் காத்து நின்றவர்கள் 300 பேர்! வழக்கம்போல் 100 பேருக்கான இலவச ஆடைகள் தீர்ந்ததும் ஏனையோருக்கு அரைவிலைச் சலுகை! இங்கே விற்பனை நிலையம் 9.00 மணிக்குத்தான் திறக்கப்பட்டுள்ளது. காத்து நின்றவர்களில் பலர் மாணவர்கள் என்கிறது மெயில் பத்திரிகை!
அரைகுறை ஆடைகளோடு காத்திருந்து, முழுமையாக உடை அணிந்து புன்னகைத்த 22 வயது இளம் பெண் ஒருவரைப் பத்திரிகையாளர் பேட்டி கண்டிருக்கின்றார்.

"விடியற்காலை 2.00 மணிக்கு இங்கு வந்துவிட்டேன். உள்ளாடைகள் மாத்திரம் அணிந்து குளிரில் நின்றது சற்று சிரமமாகத்தான் இருந்தது. என்றாலும், கிடைத்த இலவச ஆடைகள் என்னைச் சூடேற்றி விட்டன" என்று கூறியிருக்கின்றார் இந்த இளம்பெண்!
பெர்லின், ஸ்டொக்ஹோம், மட்ரிட், பிராக், டோக்கியோ, நியூயார்க் போன்ற நகரங்களிலும் இந்த மாதிரியான காத்திருப்புகளும், ஆடை அன்பளிப்புகளும் அரங்கேறியிருக்கின்றன.

2005-இலிருந்து இந்த நிறுவனம் இந்த விற்பனையை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. இதுவரையில் ஆண்களும் பெண்களுமாக, சுமார் 10,000 பேர் வரை இந்த விற்பனை நிகழ்வில் பங்கேற்றிருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.
அடுத்த வாரம், இதே நிகழ்வு பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. இங்கு வருபவர்கள் ஆள் பாதி ஆடை பாதியாக வருவதோடு மட்டுமின்றி, இவர்கள் நடத்தும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், உள்ளாடைகளோடு கலந்து கொள்ள வேண்டுமாம்!!!

About The Author