இசைத் தூண்

அம்பிகை சந்நதிக் கோடியிலே
ஆலயத்தின் ஒரு மூலையிலே
நம்பியவர் துயர் தீர்தருளும்
நாயகியின் கொலு தாங்கியதூண்

எண்ணை படிந்த மெழுகுக்கிடையே
எண்ணத்தை மிஞ்சிக் கவின்துலங்கும்;
பண்திறண் வல்ல விரல்வருட
பதநிஸ ஸரிகம பாடிவிடும்.

நூற்றுக்கு மேற்பட்ட தூண்களிலே
நுண்திறன் வல்லது; முன்பெனவோ
சோற்றுக் கவலைகள் அற்றவனாய்
சொந்த நினைவு துறந்தவனாய்

ஆற்றிய தோத்திரப் பனுவலென
ஆயிரம் ஆண்டுகள் தாண்டினும்
நேற்று மடிந்தவர் பெயர்கதையாய்
நேர்வதைக் கண்டு நிலைக்கிறது.

About The Author