இடிதெய்வத்தின் பரிசு

கருத்து கனத்த மேகங்களைப் பார்த்த விவசாயி தன் முஷ்டியைக் கோபத்துடன் அசைத்தான். பல நாட்களாக வானை மூடியிருந்தன அவை.

"போதும் போதுமென்றாகி விட்டது, இடி தெய்வமே!", என்று வெடித்தான் விவசாயி. "எத்தனை புயல்கள்! என் நாற்றெல்லாம் வளராமலே பாழாகி விட்டன. வெள்ளத்தில் அடித்தும் சென்றன."

விவசாயி தன் மகளையும் மகனையும் வீட்டுக்குள் தள்ளி விட்டான். கூரையில் ஒரு பெரிய இரும்புக் கூண்டைத் தொங்க விட்டான். "வா, வந்து சண்டை போடு", என்று கத்தினான்.

மேலுலகில் இடி தெய்வம் யோசித்தது. தன் பெயரைச் சொல்லி சவால் விடும் குரலைக் கேட்டது. தன் பிரமாண்ட கோடரி ஆயுதத்தை எடுத்துக் கொண்டு என்ன நடக்கிறது என்றறிய பூமியின் மீது பறந்திறங்கியது. மின்னலென, விவசாயி ஈட்டியுடன் இடி தெய்வத்தைத் தாக்கி இழுத்து கூண்டுக்குள் திணித்தான்.

"பிடித்து விட்டேனா!", என்று வெற்றிக் களிப்பிட்டான்.

இடி தெய்வம் அன்றிரவை மிகுந்த வருத்ததில் தன் புதிய சிறையில் கழித்தது. அடுத்த நாள் காலையில் மேகங்கள் மறைந்து கலைந்து வானம் தெளிந்தது. மழையின் சுவடுகளும் மறைந்து போயின. இடி தெய்வம் பிடிபட்டதில் விவசாயி மகிழ்ந்தான்.

"நான் போய் கொஞ்சம் மூலிகை வாங்கி வருகிறேன்", என்று சொல்லிவிட்டு அதையெல்லாம் இடி தெய்வத்துடன் சேர்த்து ஊறுகாய் போடப் போகிறேன். அதை காட்சிக்கும் வைப்பேன். இப்போது, இடி தெய்வத்துடன் பேச வேண்டாம். அவனைத் தொட வேண்டாம். முக்கியமாக மது கொடுக்க வேண்டாம்", என்று சொல்லிக் கிளம்பினான்.

விவசாயி போனதுமே அவனின் சின்ன மகளும் மகனும் மெதுவாக வெளியே வந்து இடி தெய்வத்தைப் பார்த்தனர். எத்தனை வருத்ததில் இருந்தது! குழந்தைகள் தூரத்திலிருந்தே பார்த்தனர். இடி தெய்வத்துக்கு எந்த மந்திர சக்தியும் இல்லை. நேரமாக ஆக இடி தெய்வம் சோகமாக மடங்கி உட்கார்ந்திருந்தது.

நண்பகலில் சிறுமி ஒரு யோசனை சொன்னாள். "தண்ணீர் அருந்தி விட்டு விளையாடப் போவோமா!"

மரத்தடியில் நிழலில் நின்று தண்ணீர் குடித்தார்கள். இடி தெய்வம் மிகப் பெரிய விழிகளைத் திறந்து திரும்பிப் பார்த்தது.

"கருணை காட்டுங்கள். எத்தனை வெயிலா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் கொடுங்களேன்."

"இல்லை, கொடுக்கக் கூடாது", என்று சிறுமி சொன்னாள். பேசக் கூடாது என்ற அப்பாவின் ஆணையை மீறியிருந்தாள்.

"உங்களை எதுவும் செய்ய மாட்டேன். சத்தியமா,.. ஒரு தெய்வம் தன் சத்தியத்தை மீறாது. தயவு செய்து கொஞ்சம் குடிக்க தண்ணீர்."

குழந்தைகளுக்கு கொஞ்சம் பரிதாபம் ஏற்பட்டது. நடுங்கிய படியே ஒரு சொட்டு நீரை கூண்டின் கம்பிகளினூடே கொடுத்தார்கள்.

இடி தெய்வம் தன் அனைத்து சக்தியையும் நீரிலிருந்து தான் எடுக்கிறது என்று அப்பா பிள்ளைகளிடம் சொல்ல மறந்து போனார்.

(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author