இடியன் பணிக்கர்

இடியன் பணிக்கர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அவுட்போஸ்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு
போகப் போகிறான் என்ற செய்தி கேட்டவுடனேயே லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு சந்தோஷம்.
அது மட்டுமல்ல. கைதி தானியேலின் நொந்துபோன இதயம் இடியன் பணிக்கரிடம் இப்படிச் சொன்னது: "போ..போ…நீ அப்படியே போயிடுவே."

ஓர் அரசு ஊழியனை அப்படி சபிக்கலாமா?

ஆனால் தானியேல் இடியன் பணிக்கரின் உருவத்தில் ஒரு முழு அரசாங்கத்தையும் அல்லவா பார்த்தான்! அப்படிப் பார்ப்பது சரியல்ல என்பது தானியேலுக்கு தெரியவில்லை.

அவனுக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் இருந்தார்கள். கொஞ்சமாக எழுதப் படிக்கத் தெரியும். வயிற்றுப் பிழைப்பிற்கென எந்த தொழிலும் தெரியாது. வெறும் கம்போஸிட்டர். ஒருநாள் அந்த வேலையும் போய்விட்டது.

வேலை போனபிறகு பத்து இருபது மைல் தொலைவில் இருந்த பட்டணத்திற்கு வந்து பல அச்சகங்களிலும் வேலை தேடினான். பயனில்லை.

அப்படி அலைந்து திரிந்தபோதுதான் இடியன் பணிக்கரிடம் சிக்கிக் கொண்டான். எந்த வேலையுமில்லாமல் அலைந்து திரிந்ததால் சந்தேகக் கேஸ். தானியேலை லாக்கப்பில் வைத்து இடியன் பணிக்கர் செம்மையாக அடித்து உதைத்தான்.

அந்த இடியன் பணிக்கர்தான் இப்போது இடம் மாறிப் போகிறான். லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு மட்டுமல்ல, உடன் பணியாற்றிய போலீஸ்காரர்களுக்குக்கூட சந்தோஷம்தான்.

இடியன் பணிக்கரை யாருக்கும் பிடிக்காது. இன்ஸ்பெக்டரை சந்தோஷப்படுத்த அவன் எதுவும் செய்வான். எதுவும் சொல்வான். மூச்சுக்கு முன்னூறு தடவை "ஆர்டர்..ஆர்டர்…" என்ற கர்ஜனை வேறு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அசிங்கமான வார்த்தைகள்.

எல்லோருடைய சாபத்திற்கும் இடியன் பணிக்கர் ஆளாகிப்போனது இப்படித்தான்.

தானியேலும் கைதிகளும் கம்பிகள் வழியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். இனிமேல் கொஞ்ச நாளைக்கு தாளம் தட்டுதலும், சலங்கைச் சத்தமும் கேட்டுக்கொண்டிருக்கும்.

இடியன் பணிக்கர் அடிப்பதும் உதைப்பதும் அதற்காகத்தான்.

"போயிட்டு வரேன் ரைட்டர் ஸார்…" என்று சொல்லியபடி இடியன் பணிக்கர் ரைட்டரின் மேசைக்கு
எதிரில் போய் நின்றான்.

நீண்டு மெலிந்த தேகம் அவனுக்கு. சுருட்டை முடி. சாந்தமான கண்கள். புன்சிரிப்புடன் கைதிகளையும் ஒரு பார்வை பார்த்தான்.

ஸ்டேஷன் ரைட்டர் சிரித்துக்கொண்டே அனுமதி கொடுத்தார்.

வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, இடது கையில் யூனிபார்ம் மூட்டை சகிதமாக இடியன் பணிக்கர் ஸ்டேஷனை விட்டு இறங்கிப் போனான்.

"அப்படியே போயிடுவே போ…" தானியேல் மறுபடியும் மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.

கொஞ்ச நாட்கள் கழிந்த பிறகு ஒரு துக்கச்செய்தி : இடியன் பணிக்கர் அவுட்போஸ்ட் போலீஸ்
ஸ்டேஷனில் தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப்போனான்.

அதற்கப்புறம் தானியேல் கேள்விப்பட்ட செய்தி இதுதான் :

இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும் அவுட்போஸ்ட் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனபோதுதான்
சடலத்தைப் பார்த்திருக்கிறார்கள். ஸ்டேஷனின் உள்ளே உத்திரத்தில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் சுவரோடு சேர்த்து ஒரு மேசை இருந்திருக்கிறது. மேசைமேல்
ஏறி உத்திரத்திற்குப் போயிருக்கிறான். அங்கிருந்து சுருக்குப் போட்டுக்கொண்டு தொங்கியிருக்கிறான்.

எனவே அது தற்கொலை என்று பதிவு செய்யப்பட்டது.

ஆனால் தானியேலுக்கு நிம்மதியில்லை. இடியன் பணிக்கருக்கு மனைவியும் ஐந்து பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருந்த ஆதாரம் அழிந்து போயிற்றே!

தானியேல் கொடுத்த சாபத்தினால் மட்டும் இடியன் பணிக்கர் செத்துப் போகவில்லை.
இன்னும் எத்தனைபேர் சாபம் கொடுத்தார்களோ? இப்படிச் சொல்லி தானியேல்
சமாதானமடைந்து கொண்டான். அவன் செய்த கொடுமையான செயல்களே அவனுடைய மனசாட்சியை உறுத்தியிருக்க வேண்டும்.

போலீஸ்காரர்களும், கைதிகளும் பல சம்பவங்களைச் சொன்னார்கள். மிளகாயை அரைத்துத் தேய்த்து கொடுமைப்படுத்தியது; நிரபராதிப் பெண்ணிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியது; ஆண்குறியில் எண்ணெய்த் துணியைச் சுற்றி கொளுத்திக் கொன்றது. ஒரு அரசியல்வாதியைப் பிடித்து அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டது.

இப்படிப் பல கதைகள்.

"எல்லா போலீஸ்காரர்களும் இடியன் பணிக்கரைப் போலத்தான் இருப்பார்களா?"

இல்லை. இல்லை. எல்லா போலீஸ்காரர்களும் இடியன் பணிக்கரைப்போல அத்தனை கொடூரமானவர்கள் இல்லை.

இடியன் பணிக்கர் கொடூரக்காரனாக இருந்தாலும் அவனுடைய மனைவி அவனிடம்
நேசமாகத்தானே இருந்தாள். அவனுடைய குழந்தைகளும் அவனை நேசித்திருப்பார்கள் இல்லையா?

மனைவி அவனை ‘அத்தான்’ என்று தானே அழைத்திருக்க வேண்டும். குழந்தைகள் ‘அப்பா’ என்றுதானே அழைத்திருக்க வேண்டும். இப்போது அந்தக் குடும்பம் தலைவனில்லாத குடும்பமாகிப் போய்விட்டது.

தானியேல் கொடுத்த சாபத்தினால் மட்டுமா இப்படி நடந்துபோனது? தானியேல் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை.

இடியன் பணிக்கர் போனதற்கப்புறமும் தானியேலுக்கு அடியும் உதையும் விழுந்தன. உடம்பெல்லாம் சொறியும் சிரங்கும் நீடித்தது. ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு தானியேல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான்.

ஒருநாள் இரவு இடியன் பணிக்கரைப்பற்றி பேச்சு வந்தது.

ஒரு நாடகக்காரியை கொலை செய்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்த
வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவன் அங்கு இருந்தான். அம்மைத் தழும்பும்,
ஒற்றைக் கண்ணும், கறுத்த உடம்பும் கொண்ட ஒரு தடியன் அவன். ஒருநாள் ராத்திரி அவனுடைய சொந்தக் கதையில் அடங்கியிருந்த வீரப்பிரதாபங்களை கூட்டாளிகளுக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.

"எனக்கு யாரெல்லாம் தொந்தரவு கொடுத்தார்களோ அவர்களை நான் சும்மா விடமாட்டேன்.
நானும் அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பேன். ஒருத்தனை ஒரு தடவைதானே கொல்ல முடியும்?"

"யாரையாவது இரண்டு தடவை கொல்லவேண்டுமென்று தோன்றியிருந்ததா?" தானியேல் கேட்டான்.

"ஒருவனை மட்டும் கொன்றவிதம் திருப்தியாக இல்லை. துண்டு துண்டாக அறுத்துக் கொல்லவேண்டிய பரம துஷ்டன் அவன். ஒரே அடியில் செத்துப்போய்விட்டால் சப்பென்று போய்விடாதா நமக்கு?"

“நான் வெறுமனே தொட்டேன். அவ்வளவுதான். முகத்தில் ‘சப்’பென்று ஒரு அறை கொடுத்தேன். ஆள் செத்துக் கிடக்கிறான். வேறு யாரும் அங்கே இல்லை. அப்புறம் மேசையை சுவரோடு சேர்த்துப் போட்டேன். ஒரு கயிற்றை கழுத்தில் சுருக்குப்போட்டு அவனை உத்திரத்தில் தொங்கவிட்டேன்”

"யார் அவன்?’ தானியேலின் கேள்வி.

அந்த ஆயுள் கைதி சிரித்துக்கொண்டே சொன்னான். “ஒரு போலீஸ்காரன். பெயர் ‘இடியன் பணிக்கர்’”

(நன்றி :   மலையாளத்தில் – வைக்கம் முகம்மது பஷீர்)


About The Author