இந்திய அரசியல் 2007 – ஒரு பறவைப் பார்வை

தேர்தல்கள்

மே மாதம் முடிவடைந்த உத்திரப்பிரதேசசட்டசபைத் தேர்தலில் ,மாயாவதி செய்த மாயாஜாலத்தால் பாஜக, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும் மெஜாரிட்டி கண்டு ஆட்சி அமைத்தது.  மற்ற கட்சிகள் குறிப்பிட்ட இனத்தவரின் ஓட்டுக்களைப் பெற முயற்சி செய்கையில் மாயாவதியின் அரசியல் சாணக்கியம் அனைத்து இனத்தவரையும் தன் பக்கம் ஈர்த்து வெற்றிவாகை சூட வைத்துள்ளது. அவரது அடுத்த இலக்கு ‘தில்லி சலோ’தான்.

அடுத்தபடியாகப் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது குஜராத் மாநிலத் தேர்தல்தான். வெளிவரும் தகவல்கள் மோடிக்கே வெற்றி வாய்ப்பு என்கின்றன. சோனியா மோடியை சாவு வியாபாரி என்று விமரிசிக்க, பரபரப்பு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இந்த இதழ் வரும்போது வெற்றி யார் பக்கம் என்பது தெரிந்திருக்கும்.

அரசியல் துரோகத்தின் உச்ச கட்டம் கர்நாடகாவில் தேவகவுடாவும் அவரது மகன் குமாரசாமியும் ஆடிய கபட நாடகம் தான். கேவலம் பதவிக்காக இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு முன்னாள் பிரதமர் நடந்து கொள்ள முடியுமா என்று ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்படும் அளவுக்கு நடந்து கொண்டவர் கவுடா. காங்கிரசுக்கு ஆதரவை விலக்கி, பா.ஜ.க.வோடு ஆட்சி அமைத்து, சொன்னபடி 20 மாதங்களுக்குப் பின் பா.ஜ.க.விடம் ஆட்சியை ஒப்படைக்கமல் நாடகமாடி, பின்னர், பா.ஜ.க.விற்கு ஆதரவு கொடுப்பதாகப் போக்குக் காட்டி, கடைசி நிமிடத்தில் பா.ஜ.க. மற்றும் ஜனநாயகத்தின் கழுத்தை அறுத்த மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் வேஷத்தை மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் நடந்த குளறுபடியைத் தொடர்ந்து, சென்னையின் 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போட, அதிர்ந்தது தமிழக அரசு (நீதிபதிகள் என்ன வானத்திலிருந்தா குதித்தார்கள்?) என்ற வீர வ(வி)சனத்துடன். சந்தர்ப்பத்தை சரியாகப் பயன் படுத்திக்கொள்ளத் தெரியாத ஜெயலலிதா, தேர்தலைப் புறக்கணிக்க, தி.மு.க. கூட்டணிக்கு வெற்றிமுகம் தான்!

நாட்டின் முதல் குடிமகனான இந்தியக் குடியரசுத் தலைவர் பொது வாழ்க்கையில் கறை படியாதவராகவும் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் படுபவராகவும் விளங்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் காங்கிரஸ் கூட்டணியிலேயே பலத்த சர்ச்சைக்குப் பிறகு பிரதீபா பாட்டில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்கு முன்னால் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமரிசிக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இவராகத்தான் இருக்கும். இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

நீதித்துறை

நாட்டின் பல நீதிமன்றங்களிலும் பல வழக்குகள் முடிவுறாமல் தேங்கி கிடக்கின்றன என்ற நிலை, தாமதிக்கப்பட்ட தீர்ப்புக்கள் மறுக்கப்பட்ட நீதிகளாகி விடக்கூடாதே என்ற கவலையைத் தொடர வைக்கிறது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தன் உறவினருக்கு சலுகை காட்டினார் என்ற செய்தியை வெளியிட்டு தலையங்கம் எழுதியது நீதிமன்ற அவமதிப்பு என்று இரு பத்திரிகையாளர்களுக்கு சிறைத் தண்டனை விதித்த சம்பவம் நீதிபதிகள் மீது உண்யைன தவறு இருந்தால் அதை சுட்டி காட்டுவது அவமதிப்பாகுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் நிர்வாக, சட்ட/பாராளுமன்ற துறைகளில் நீதிபதிகள் தலையிடக் கூடாது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியானால் மற்ற இரு துறைகளின் தவறான முடிவினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைத் தேடி எங்கே முறையிடுவது? பொதுநல வழக்குகளை ஏற்றுக் கொள்வது பற்றி புதிய வழிமுறைகள் இயற்றப்படும் என விளக்கமளித்திருக்கிறார்கள் நீதிபதிகள். நீதித்துறைக்கான லட்சுமண ரேகை எது என்பது பற்றிய விவாதம் தொடரும் எனத் தெரிகிறது.

வெளிநாட்டு உறவுகள்

பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளுடனான உறவுகள் உரசல்களாகவே தொடர்கின்றன. பாகிஸ்தான் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுவரும் மாறுதல்கள் சுமுகமான உறவுகளைக் கேள்விக் குறியாகவே ஆக்கியிருக்கிறது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமும் உள்ளே, வெளியே என்று இடதுசாரிகளின் புண்ணியத்தால் அந்தரத்தில் நிற்கிறது. இந்த விளையாட்டை ஆரம்பித்த மன்மோகன் சிங், அமெரிக்காவையும் திருப்திப்படுத்த முடியாமல் கம்யூனிஸ்டுகளிடமும் மாட்டிக்கொண்டு திருதிருவென முழிக்கிறார்.

அரசியல் நிலவரம்

சேதுசமுத்திரம் கால்வாய்த் திட்டம் அரசியலோடு ஒரு மதசம்பந்தமான சர்ச்சையை உருவாக்கி, பூதாகாரமான பிரச்சினை ஆக்கப்பட்டுவிட்டது. அமைச்சர் 70 சதவிகிதம் வேலை முடிந்து விட்டது என்கிறார். ஆனால் உண்மையிலே இன்னும் 30 சதவிகித வேலைகூட முடியவில்லையாம். செலவழித்த பணமெல்லம் சமுத்திரத்தில் கரைத்த பெருங்காயம்தானோ?

மேற்கு வங்காளத்தில் சிங்கூரில் டாடா நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கியது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது என்றால் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க முயற்சித்த அரசின் முயற்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அநியாயமாக போலீஸ் மற்று போராளி கம்யூனிஸ்டுகளால் பல உயிர்கள் பிரிந்த சோக நிகழ்ச்சிகள், கொஞ்சம் யோசித்துச் செயல் பட்டிருந்தால் இழப்புக்களைத் தவிர்த்திருக்கலாமே என்று எண்ண வைக்கின்றன

வளர்ந்துவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அவசியம்தான். ஆனால் அரசு, மக்களின் உணர்ச்சிகளையும் அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்களையும் கணித்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்வுகள் கற்றுத் தரும் பாடம்.

டாடாவிற்கு டைட்டானியம் தொழிற்சாலை அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட தமிழக அரசுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. துணை நகரம் போன்ற சிறந்த திட்டங்களுக்குக்கூட அரசியல்வாதிகள் அணை போட்டுவிடுகிறார்கள்.

முல்லைப் பெரியார், பாலாறு சர்ச்சைகள் எல்லா வருடங்களிலும் தொடரும் தலைவலிகள்.

வாரிசு அரசியல் தில்லியிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. நேரு குடும்பத்தில் அடுத்த வாரிசு தயாராகிவிட்டது. லாலு தன் மனைவிக்குப் பிறகு தனது மகனையும் தயார் படுத்தி வருகிறார். ராமதாசுக்கு அன்புமணி, கருணாநிதியின் குடும்பத்தில் ஏகப்பட்ட வாரிசுகள். யாருக்கு என்ன பதவி கொடுக்கலாம், எப்படி மோதலைத் தவிர்ப்பது என்று யோசிப்பதிலேயே கருணாநிதியின் காலம் கழிகிறது.

இனிமேல் திருமணம் செய்துகொள்ளாதவர்கள், குடும்பம் இல்லாதவர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டுமென்ற விதிமுறையிருந்தால் தான் வாரிசு அரசியல் முடிவுக்கு வரும்.

இந்த வருஷம் ஜெயலலிதா தினம் ஒரு போராட்டம் என்று 365 நாளும் போராட்ட நாயகியாக வலம் வருகிறார். குழாயில் தண்ணீர் வரவில்லையென்றாலும், சாக்கடை அடைத்துக்கொண்டாலும் போராட்டம்தான்.

அடுத்த முதல்வருக்கு விஜய்காந்த்தும் சரத் குமாரும் போட்டி போடும்போது ராம்தாஸ் தனது கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தீவிரமாக நம்புகிறார். தி.மு.க. இப்போது அவருக்கு வேண்டாத மாமியார்.

தி.மு.க. நடத்திய இளைஞர் அணி மாநாட்டிற்குச் செலவு 40 கோடியாம். ஜெயலலிதாவின் தத்துப்பிள்ளை திருமணத்திற்குப் பிறகு இவ்வளவு ஆடம்பரமாக நடந்த நிகழ்ச்சி இதுதானாம். பொது மக்களின் வெறுப்பலையை தி.முக சம்பாதித்துக் கொண்டிருப்பதாகப் பேச்சு

நெல்லிக்காய் மூட்டையாகப் பல உதிரிக் கட்சிகள் சேர்ந்து அமைத்த மூன்றாவது அணிக்கு வழக்கம்போல் ஜெயலலிதா கூட இருந்தே குழி பறித்துவிட்டார்.

***

About The Author